பத்தனம்திட்டா :கேரளாவில், 'சோலார் பேனல்' ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயருக்கும், கூட்டாளி பிஜு ராதாகிருஷ்ணனுக்கும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோலார் பேனல் தயாரிக்கும், 'டீம் சோலார்' நிறுவனத்தில் பங்கு தருவதாகவும், இயக்குனர் பதவி தருவதாகவும் கூறி, வெளிநாடு வாழ் இந்தியர் பாபுராஜிடம், சரிதா நாயரும், அவரது கூட்டாளி பிஜு ராதாகிருஷ்ணனும், 1.19 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, ஜுடிஷியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்ததை அடுத்து, மாஜிஸ்திரேட் ஜெயகிருஷ்ணன்அளித்த தீர்ப்பு:சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணனுக்கு எதிரான, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் இருவருக்கும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், சரிதா நாயருக்கு, 45 லட்சம் ரூபாய் அபராதமும், ராதாகிருஷ்ணனுக்கு, 75 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.