uratha sindhanai | பார்வையை பறித்த பட்டாசு! | Dinamalar

பார்வையை பறித்த பட்டாசு!

Added : ஜூன் 20, 2015 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பார்வையை பறித்த பட்டாசு!

சமீபத்தில் ஒரு பணக்கார வீட்டு திருமணம். மாப்பிள்ளை அழைப்பு கோலாகலமாக நடந்தது. எவ்வித பாதுகாப்புமின்றி சாலையில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதிலிருந்து பறந்து வந்த மண் கட்டிகளில் ஒன்று, சாலை ஓரத்தில் நின்றிருந்த, 7 வயது சிறுமியின் வலது கண்ணை தாக்கி துளைத்து, கண்ணுக்குள் புகுந்து விட்டது. அந்த சிறுமியின் கண் முழுமையாக சேதமடைந்துவிட்டது.

ஒரு குடும்பத்தினரின் ஆடம்பரமான பொறுப்பற்ற கொண்டாட்டத்தின் விளைவாக, ஒரு அப்பாவி ஏழை சிறுமியின் கண் பார்வை பறிக்கப்பட்டது. இந்த குழந்தைக்கு ஏற்பட்ட இழப்பு, அந்த திருமண வீட்டினருக்கு தெரிந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.இதேபோன்ற பல்வேறுபட்ட இழப்புகள் வெளிச்சத்திற்கு வராமலேயே அங்கங்கே தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த நிகழ்வுக்கு யார் பொறுப்பாளி? அந்த திருமண வீட்டுக்காரர்களா அல்லது ஆபத்தான வகையில் சாலையில் வெடிகளை வெடிக்க அனுமதித்த காவல்துறையா அல்லது இது குறித்த கடுமையான சட்டங்களை, விதிகளை வகுத்து நடைமுறைப்படுத்த தவறிய அரசு இயந்திரமா?மக்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு, தங்களுக்கும், பிறருக்கும் பாதுகாப்பான வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று கண்டிப்புடன் அறிவுறுத்துவது தான் இன்றைய தேவை.

தங்களுடைய மகிழ்ச்சியும் அதைச் சார்ந்த கொண்டாட்டங்களும் பிறருக்கு துன்பமோ, ஆபத்தோ விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படை சமூக உணர்வு கூட, இதுபோன்ற செயல்களை செய்பவர்களுக்கு இல்லை என்பதே யதார்த்தம். மகிழ்ச்சியை கொண்டாட பட்டாசு வெடிப்பது என்பது போய், எந்தெந்த சூழல்களில் பட்டாசு வெடிக்கலாம் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அரசியல்வாதிகளும், அவர்களின் ஆதரவாளர்களும், - ஜெயிலுக்கு போனாலும், விடுதலையானாலும், பயணம் மேற்கொண்டாலும், வேட்பு மனு தாக்கல் செய்தாலும், பிறந்தநாள் கொண்டாடினாலும், வெடிகளை வெடித்து, கொண்டாடுவதை ஒரு ஆபத்தான கலாசாரமாகவே வளர்ந்து வந்திருக்கின்றனர்.
சினிமாக்காரர்களும், நடிக, நடிகையரின் ரசிக பெருமக்களும் இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை. படவெளியீடு, நடிகரின் பிறந்தநாள் என்று எல்லாவற்றிற்கும் தெருவில் பட்டாசு வெடிப்பது மட்டுமில்லாமல், போக்குவரத்தையே அவர்கள் கைவசம் எடுத்து, சற்றும் கவலையே படாமல் பொதுமக்களை துன்புறுத்தி இடையூறு செய்வர்.

அன்றும் இன்றும்:
கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே பட்டாசு வெடிக்கப்படும். பின் அது கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்திலும் விரிவடைந்தது. காலப்போக்கில் அதுவே பொங்கல், கார்த்திகை, ஆயுத பூஜை என்று எல்லா பண்டிகைகளிலும் பட்டாசு வெடிப்பது வழக்கமாயிற்று. இன்றோ, அனுதினமும் பட்டாசு வெடிக்கப்படுகிறது.மகிழ்ச்சியை கொண்டாட பட்டாசு வெடிப்பதைக் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மரணம் நிகழ்ந்த வீட்டிலும், இறுதி ஊர்வலத்தின் போதும் கூட பட்டாசு வெடிப்பது, மிகவும் நெருடலாக இருக்கிறது. அவர் உயிரோடு இருந்த போது அவர் மகிழ்ச்சிக்காக இவர்கள் ஏதாவது செய்தனரா அல்லது அனுமதித்தனரா என்பதே பெரிய கேள்வி. தீபாவளி பண்டிகையின் போது இரண்டு தினங்களில் மட்டும் தமிழகத்தில் பல நுாறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள பட்டாசுகள் வெடித்து கரியாக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு, சுவாசிப்பதற்கே தகுதியற்றதாக காற்று போய்விடுகிறது என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

பட்டாசு உற்பத்தியின் பின்னணியில், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அடங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எனினும் அங்கும் பாதுகாப்பின்மை, விதிமீறல்கள் போன்றவை மலிந்திருப்பதை அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் நன்கு உணர்த்துகின்றன. ஆகவே, எந்த கோணத்தில் பார்த்தாலும் இந்த உயிரிழப்புகளின் மூலம், மக்கள் கோலாகலமாக பண்டிகைகளை கொண்டாட, நாம் கொடுக்கும் விலை மிக மிக அதிகம் என்பதை, மனித நேயம் கொண்டோர் யாரும் மறுக்க இயலாது.அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி, சரியான பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்து, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மூலமாக நடைமுறைப்படுத்தி, இதுபோன்ற இழப்புகள் ஏற்படாவண்ணம் தடுக்க வேண்டும். விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் இதுபோன்ற இழப்புகள் ஏற்பட்டால், குறிப்பிட்ட நிகழ்ச்சி நடத்துபவர்களை பொறுப்பாளியாக்கி, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வழி வகை செய்ய வேண்டும்.
*பட்டாசு உற்பத்தியிலேயே கடுமையான சட்டங்களும், பாதுகாப்பு விதிமுறைகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உயிரிழப்புகள் அல்லாமல் உறுதி செய்ய வேண்டும்.
*விற்பனையில் பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டு தீவிபத்துகள் தடுக்கப்படவேண்டும்.
*விதிமுறைகளை மீறி ஆபத்தான பொது இடங்களில் பட்டாசு வெடிப்பவர்களுக்கு தகுந்த தண்டனை, அபராதம் போன்றவை விதிக்க வேண்டும். இதில் தீவிர கண்காணிப்பு வேண்டும்.
*பொது விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் பட்டாசு வெடிப்பது அல்லது வாணவேடிக்கை போன்றவற்றை அருகில் உள்ள வெற்று திடல்கள், மைதானங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில் நடத்த அறிவுறுத்த வேண்டும்.மிகவும் முக்கியமாக, பெரியவர்கள் அல்லது பெற்றோர் கண்காணிப்பு இல்லாமல் சிறார்கள் பட்டாசு வெடிப்பதை அனுமதிக்கக் கூடாது.இவைகளையெல்லாம் அலட்சியப்படுத்தினாலோ அல்லது நடைமுறைப்படுத்த முடியாமல் போனாலோ, கண் பார்வையிழப்பு போன்ற கடும் விளைவுகள் தொடர்வதை தடுக்க முடியாது.இது யாரோ ஒரு கதியில்லாத ஏழைச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமை என்று நம்மில் யாரும் நினைக்க தேவையில்லை. சாலையில் பயணிக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இதுபோன்று நிகழலாம். 'இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்த நாளும் காப்போம்!'
இ-மெயில்:ahanathapillai@gmail.com

டாக்டர் எஸ். ஏகநாத பிள்ளை,
மருத்துவக்கல்லூரி பேராசிரியர்,
பணிநிறைவு

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ப்ரௌன் பேரட்.... - Chennai,இந்தியா
23-ஜூன்-201508:04:43 IST Report Abuse
ப்ரௌன் பேரட்.... சாலையை கடக்கும் பல அப்பாவிகள் வாகனத்தில் அடிபடுகிறார்கள், ரயில்வே விபத்தில் ஆண்டுக்கு பல ஆயிரம் அப்பாவிகள் மரணமடைகிறார்கள், ஏன் சைக்கிள் கற்றுகொள்ளும் சிறுவர், சிறுமியர் கூட கீழே விழ வேண்டி வருகிறது எல்லாவற்றையும் தடை செய்துவிடலாமா? நடந்தது விபத்து இதில் பணக்காரன் என்ன ஏழை என்ன, இதே ஒரு ஏழை வெடித்த வெடியினால் காரை திருப்ப முயன்று விபத்தில் ஒரு பணக்காரர் இறந்தால் பரவாயில்லையா? கட்டுரையில் நல்ல கருத்துதான் உள்ளது, ஆனால் அதை வெளிப்படுத்தும் முறையில் தமிழ் சினிமா கலாச்சாரம்தான் தெரிகிறது. அது பணக்காரன் என்றால் கெட்டவன்.
Rate this:
Share this comment
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூன்-201514:47:04 IST Report Abuse
வாழ்க​ பாரதம்"மெய்ப்பொருள் காண்பதறிவு". பட்டாசு மக்களுக்கு நன்மை அளிப்பதில்லை. கஞ்சா, சாராயம், போதை பொருட்களை ஊக்குவிதால்கூட அதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் ( நன்கு ) நன்மையடைவார்கள் என்பதால் அதை ஊக்குவிக்க முடியுமா? நம் சமுதாயம் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் கல்விக்கூடங்களை நிர்வாகம் செய்வதைவிட சாராயக்கடைகளை நடத்துவதிலேதான் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முகலாயர்கலையோ அல்லது ஆங்கிலேயர்களையோ குற்றம் சொல்ல முடியாது. நம்மில் சிலர்தான் இதில் ஈடுபட்டு நம் சமூகத்தை நாசகார பாதையில் இழுத்து செல்கின்றனர் நம் விருப்பத்துடன் / ஒத்துழைப்புடன்................
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
22-ஜூன்-201507:37:00 IST Report Abuse
kundalakesi அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில், பொது இட்ங்களில் தனியார் பட்டாசு மத்தாப்பு கொளுத்த அனுமதியில்லை. மீறினால் போலிஸ் பிடிதான். அரேபியாவில் அந்த பழக்கமே இல்லையென நினைக்கிறேன். ஆபிரிக்காவில் பட்டாசு சத்தமே மக்களை அலறிக்கொண்டு ஓடி ஒளிய வைக்கும் அளவு நித்திய பயம். சத்த மிகு பட்டாசு இரவில் எச்சரிக்கையின்றி வெடிப்பதால், இதய நோயாளிகள் மிக்க அவதிக்கு உள்ளாகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
karthik - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூன்-201511:56:31 IST Report Abuse
karthik சட்டம் எழுத்தளவில் மட்டுமே உள்ளது ,செயல் படுத்தவும் மதித்து நடக்கின்றவர்கள் ஒரு சிலரே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X