என்பார்வை| Dinamalar

என்பார்வை

Added : ஜூலை 06, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
என்பார்வை

காலையில் வயிறு காலியா?
பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில், நேரமில்லை எனும் காரணம் காட்டி பல மாணவர்கள் காலை உணவைச் சாப்பிடுவதே இல்லை. பெரும்பாலான தினங்களில் காலி வயிற்றுடன் தான் பள்ளிக்குச் செல்லுகின்றனர். இது பல ஆரோக்கியக் கேடுகளுக்கு வழி வகுக்கிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளி விடுகிறோம். இதனால் உடலில் சக்தி குறைகிறது. இந்த சக்தியைப் பெறுவதற்குக் காலையில் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான சக்தியை தருகிறது.
என்ன பிரச்னை ஏற்படும்? : காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு விரைவிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் காலை வகுப்புகளில் அவர்களால் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை. துாக்கம், களைப்பு, தலைவலி வருகிறது. அவை கற்றல் திறனைப் பாதிக்கின்றன.இவர்கள் மதிய உணவுக்கு முன்பாக வரும் இடைவேளை நேரத்தில் பசி காரணமாக ஏதாவது ஒரு நொறுக்குத் தீனியை வயிறு நிறைய சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மதிய உணவு சாப்பிடுவதும் குறைந்து போகிறது. நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதால் உடல் பருமன் வருகிறது. இதன் விளைவால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
மேலும், தொடர்ந்து காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு, இரைப்பையில் சுரக்கின்ற அமிலச் சுரப்பு இரைப்பைத் திசுக்களை அரித்துப் புண்ணாக்கிவிடுகிறது. இது பசியைக் குறைத்து விடுகிறது. செரிமானக் கோளாறு தொல்லை தருகிறது. எனவே இவர்களால் அடுத்த வேளை உணவையும் சரியாகச் சாப்பிட முடிவதில்லை. இது ஊட்டச்சத்துக் குறைபாட்டை இன்னமும் அதிகரிக்கச் செய்கிறது. இது உடல் வளர்ச்சியைப் பாதிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது. இவர்கள் உடலளவிலும், மன அளவிலும் பலவீனமாக இருக்கிறார்கள். இதனால் பொறுமை குறைந்து கோபம், எரிச்சல் அதிகமாக வருகிறது.
ஆரோக்கிய உணவு:காலை உணவு என்பது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து கலந்த சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த காலை உணவு மந்த நிலையை உருவாக்கும். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். வழக்கமான அரிசியில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை, சாதம் என்று ஒரே வகை உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக பல மாற்று உணவுகளைச் சாப்பிடும் வழக்கத்தை கைகொள்ள வேண்டும்.உதாரணமாக கேழ்வரகு இட்லியுடன், நிலக்கடலை சட்னி, ஒரு வாழைப்பழம், கார்ன் பிளேக்ஸ் கலந்த பால் சாப்பிடலாம். வேகவைத்த காய்கறிகள் சேர்த்த கோதுமை ரவா உப்புமாவுடன், வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.
அவசரத்துக்கு 'பிரட் சான்ட்விச்' அல்லது வெண்ணெய் தடவிய 'பிரட்' மற்றும் 'ஆம்லெட்' சாப்பிடலாம். சப்பாத்தியுடன், 100 மி.லி., பால், அரை ஆப்பிள் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும் போது ஆரோக்கியத்துக்குத் தேவையான எல்லாச்சத்துகளும் கிடைத்து விடும். அரிசி தோசை ஒருநாள் என்றால், சம்பா தோசை ஒருநாள் சாப்பிடலாம். காலை உணவில் ஒரு பழம் அவசியம். சாமை, வரகு, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது.
காலை உணவைச் சரியாகச் சாப்பிடும் குழந்தைகள், நல்ல உடல் நலனுடனும் ஊக்கத்துடனும் செயல்படுகிறார்கள் என்பதும்; இவர்களுக்குச் சிந்திக்கும் திறன், அறிவுத்திறன் போன்றவை அதிகமாக உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்காமல் சமச்சீர் உணவைச் சாப்பிட்டு ஆரோக்கியத்தைக் காக்க முன் வரவேண்டும்.
மதிய உணவு என்ன : மாணவர்கள் மதிய உணவுக்கு எடுத்துச் செல்வதில் சாதம், சாம்பார் அல்லது பருப்பு, கீரை, கூட்டு, தயிர் இருக்க வேண்டும். இதில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்புச்சத்து, நார்ச்சத்து என எல்லாச்சத்துகளும் அடங்கிவிடும். மதியம் பழம் வேண்டாம். மாலையில் அல்லது இரவில் ஒரு பழம் சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்த பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிலர் தக்காளிச்சாதம், லெமன் சாதம், புளிசாதம் என ஏதாவது ஒருசாதம் மட்டும் டிபன்பாக்சில் கொண்டு செல்வார்கள். இவற்றில் தேவையான அளவுக்குக் காய் கறிகள் இருப்பதில்லை என்பதால் இரும்புச்சத்து, வைட்டமின்கள் நார்ச்சத்து ஆகியவை குறைவாகவே இருக்கும். இவற்றில் கிடைக்கிற கலோரிகளும் குறைவு. எனவே, சாதம் மட்டும் கொண்டு செல்பவர்கள் கூடவே, பருப்புக்கூட்டு, கீரை சேர்ந்த உருளைக் கிழங்கு பொரியல், வெங்காயமும், வெள்ளரியும் கலந்த தயிர்பச்சடி கொண்டு செல்ல வேண்டும். இப்படிச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்து விடுவதால் களைப்பு தெரியாது. மாலை நேரத்தில் விளையாடுவதற்குத் தேவையான சக்தியும் கிடைத்துவிடும்.
ஞாபக சக்தி அதிகரிக்க வாரம் இரண்டு நாட்களுக்கு மதிய உணவில் பிரண்டைத் துவையல், வல்லாரைத் துவையல் சேர்த்து வந்தால் செரிமானத்துக்கும், ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் உதவும். மாலை நேரத்தில் பிட்சா, பர்கர், கேக், பிஸ்கட், சான்ட்விச், சிப்ஸ், சேவு, சீவல், வடை, பஜ்ஜி என நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதற்குப் பதிலாக சுண்டல், பயறு, பொட்டுக்கடலை, வெல்லமிட்டாய்,கடலைமிட்டாய், அதிரசம், எள்ளுருண்டை, காய்கறியும் பழங்களும் கலந்த சாலட் சாப்பிட்டால், டீ, காபிக்குப் பதிலாக பழச்சாறு குடித்தால், உடல் பருமன் வருவது தடுக்கப்படும். மேலும் இவற்றில் ஊட்டச் சத்துகள் அதிகம் என்பதால், இரவில் பாடங்களைப் படிப்பதற்குத் தேவையான ஆற்றலையும் பெறமுடியும்.
-டாக்டர். கு. கணேசன், பொதுநல மருத்துவர், ராஜபாளையம். gganesan95@gmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை