3 மாதத்தில் குரூப் --2 தேர்வு நடத்த திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

3 மாதத்தில் குரூப் --2 தேர்வு நடத்த திட்டம்

Added : ஜூலை 07, 2015
Advertisement

போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் உதவி கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில், 70 காலியிடங்களுக்கான குரூப் - 2 தேர்வு, இன்னும், இரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வை, மூன்று மாதங்களுக்குள் நடத்தாமல், படிப்பதற்கு கூடுதல் அவகாசம் தர, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வணிகவரி உதவி கமிஷனர்:தமிழக அரசு துறைகளில், போலீஸ் டி.எஸ்.பி., உதவி கலெக்டர், வணிகவரி உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கு, 70 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் போட்டித் தேர்வு அறிவிப்பை, இன்னும், இரு தினங்களில் வெளியிட, டி.என்.பி.எஸ்.சி., திட்டமிட்டுள்ளது. அக்., 18ம் தேதி அல்லது அதே மாதத்தில், வேறு தினங்களில் தேர்வை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பட்டதாரிகள் சிலர் கூறியதாவது:வழக்கமாக அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து, குறைந்த பட்சம், ஆறு மாத கால இடைவெளியில், தேர்வுகள் நடக்கும். இந்த இடைவெளியில் தான், தேர்வர்கள் சிறப்பு பயிற்சி பெற்று, தங்களை தயார் செய்து கொள்வார்கள்.
ஆறு மாத காலம்:ஆனால், மூன்று மாதங்களுக்குள் தேர்வை நடத்த டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளதால், தேர்வர்கள் தயாராக போதிய கால அவகாசம் இல்லை. அக்.,18ம் தேதி மத்திய பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி.,யும் போட்டித் தேர்வு நடத்த உள்ளதால், குழப்பம் ஏற்படும்.எனவே, டி.என்.பி.எஸ்.சி.,க்காக தயார் செய்வோருக்கு அறிவிப்பு வெளியிட்டதில் இருந்து குறைந்தது, ஆறு மாத கால அவகாசத்துடன் தேர்வை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.-நமது நிருபர்-

Advertisement