திருவள்ளுவராண்டு தந்த திருமகன் நாளை மறைமலை அடிகள் பிறந்த நாள் | Dinamalar

திருவள்ளுவராண்டு தந்த திருமகன் நாளை மறைமலை அடிகள் பிறந்த நாள்

Added : ஜூலை 14, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
திருவள்ளுவராண்டு தந்த திருமகன் நாளை மறைமலை அடிகள் பிறந்த நாள்

குழந்தையை பெற்றெடுத்தபோது தந்தை சொக்கநாத பிள்ளையின் அகவை அறுபது. தாய் சின்னம்மையின் வயதோ 48. ஊருக்கெல்லாம் மருத்துவம் பார்க்கும் சொக்கநாதபிள்ளைக்கு குழந்தை இல்லை. திருக்கழுக்குன்றம் கோயிலில் இறைவனை நினைத்து நாற்பது நாட்கள் தம்பதியினர் நோன்பு நோற்க, அழகான ஆண் குழந்தை 1876 ஜூலை 15ல் பிறந்தது. அக்குழந்தை பெயர் வேதாசலம்.'வேதாசலம்' எனப் பெற்றோர் வைத்த பெயரை, தனித்தமிழில் 'மறைமலை' என மாற்றி அமைத்து கொண்ட தமிழ் மொழிப் பேராளர் அவர். தீவிர சைவ சமயம் சார்ந்த குடும்பம் வேதாசலத்தின் குடும்பம். அவரின் இல்லச் சூழலிருந்து சைவ சமயக் கருத்துக்களையும், கிறிஸ்தவப்பள்ளியில் கல்வி பயின்றதால் கிறிஸ்தவ சமய கருத்துக்களையும் இளம் வயதிலேயே வேதாசலம் தெரிந்து கொண்டார்.தமிழாசிரியர் சிறு வயதில் தந்தை இறந்து போக, பாசப்பிள்ளை தகப்பனில்லாது தவிப்பதைக் கண்ட தாய் சின்னம்மையின் மனதில் வைராக்கியம் உண்டானது. நாகைப் பெரியவர்களின் பொருள் துணையோடு மகனின் கல்விப் பயணத்தை தொடரச் செய்தார். 'தந்தையோடு கல்விபோம்' என்ற வாக்கினை உண்மையற்றதாக்கினார் சின்னம்மை. நாகையில் நாராயணசாமிப்பிள்ளை என்பவர் புத்தகக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவர் தமிழாசிரியர். வேதாசலத்தின் கல்வித் துடிப்பை அறிந்து, அவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தார்.'மனோன்மணியம்' எனும் நாடக நுாலை எழுதிய சுந்தரனாரும், இளவயதில் நாராயணசாமிப்பிள்ளையிடம் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தாகம் எடுத்தவன் தண்ணீரைக் கண்ட பொழுதெல்லாம் விரும்பிக் குடிப்பது போல், வேதாசலம் தமிழ்ப் பெரியோர்களைக் காண நேர்ந்த பொழுதெல்லாம், அவர்களிடம் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டினார். ஒருமுறை 'சண்ட மாருதர் சோமசுந்தர நாயகர்' எனும் பெரியவர் சமயச் சொற்பொழிவு ஆற்றிட நாகபட்டினம் வந்த பொழுது அவரிடம் வேதாசலம் சமய நுால்களைக் கற்றார். வேதாசலத்தின் ஆற்றலைக் கண்டு வியந்த சோமசுந்தர நாயகர் 'துகளறு போதம்' எனும் சமயநுாலுக்கு உரை எழுதப் பணிக்க, அப்பணியை விரும்பி ஏற்று, விரைவில் செய்து முடித்தார்.சுந்தரனாரின் 'மனோன்மணியம்' எனும் நாடக நுாலைப்படித்து விட்டு அவருக்கு ஒரு கடிதம் எழுதினார் வேதாசலம். நாடக நுாலின் சிறப்புக்களைக் குறிப்பிட்டு எழுதியதோடு, தங்களிருவரின் ஆசிரியராகிய நாராயணசாமிப்பிள்ளையின், கல்வி ஆற்றலையும், அவரின் சிறப்புமிகுப் பண்புகளையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். வேதாசலத்தின் கடிதம் மூலம், அவரின் சிறப்பை அறிந்து கொண்ட சுந்தரனார், திருவனந்தபுரத்தில் இயங்கி வந்த ஓர் ஆங்கிலப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் அமர்த்தினார். மதுரையில் பாண்டித்துரைத்தேவர் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவினார். அச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா 1904 மே 24ல் கொண்டாடப்பட்டது. வேதாசலம் கலந்து கொண்டு இரு நாட்கள் தொடர்ந்து உரையாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழா உ.வே.சா., தலைமையில் நடைபெற்ற விழாவிலும் வேதாசலம் உரையாற்றினார். வேதாசலத்தின் பேச்சில் மெய்மறந்து போனதாக கூறி உ.வே.சா., பாராட்டினார். அருட்பா, மருட்பா ராமலிங்க அடிகளாரின் பாடல் தொகுதிகள் 'அருட்பா' அல்ல 'மருட்பா' என்றும், இல்லை... இல்லை... அது 'அருட்பா' தான் என்றும் வாதம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. புலவர்கள் இரு அணிகளாகப் பிரிந்து நின்று வாதிட்டனர். வள்ளலாரின் மீது பேரன்பு கொண்ட வேதாசலம், சென்னை சிந்தாரிப்பேட்டையில் 1903 செப்., 20ல் பொதுமேடையில், கதிர்வேற்பிள்ளையோடு நேருக்கு நேர் நின்று பல சான்றுகளை வலிமையோடு அடுக்கி 'அருட்பா'தான் 'மருட்பா' அல்ல என்று வாதிட்டார். பெற்ற பிள்ளையும் குருவாக உருவாகும் என்பது வேதாசலத்தின் வாழ்க்கையில் நடைபெற்றது. தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கக் காரணமாக இருந்தது வேதாசலத்தின் புதல்வி நீலாம்பிகை ஆவார்.பிறமொழிச் சொற்கள் தமிழில் கலப்பதால் தமிழின் இனிமை குறைந்து, சொற்கள் மறைந்து வருவதாகத் தன் அருமை மகள் நீலாம்பிகையிடம் வருத்தத்துடன் கூறி கொண்டிருந்தார் வேதாசலம். கூர்ந்து கேட்ட நீலாம்பிகை, ''அப்படியானால் நாம் இனிமேல் அயல்மொழி வார்த்தைகளை அறவே அகற்றி துாய தமிழில் எழுதினால் என்ன?,'' என்று கேட்க அவ்விதமே செய்ய முடிவு செய்தார் வேதாசலம். அதன் முதல்கட்டப் பணியாகத் தன் பெயரை 'மறைமலை' என்று மாற்றிக் கொண்டார்.ஆராய்ச்சிகள் மறைமலை அடிகளார் புதினம், கவிதை, நாடகம், ஆய்வு, அறிவியல் கட்டுரைகள், வரலாறு என ஐம்பத்து நான்கு நுால்கள் எழுதியுள்ளார். முல்லைப்பாட்டு - ஆராய்ச்சி உரை, பட்டினப்பாலை - ஆராய்ச்சி உரை, திருக்குறள் - ஆராய்ச்சிகள் ஆகிய ஆய்வு நுால்கள் குறிப்பிடத்தக்கதவை. 'சாகுந்தலா நாடகம்' என்ற நுாலை சமஸ்கிருதத்திலிருந்து மொழி பெயர்த்து எழுதியுள்ளார். பிற்காலத்தில் 'சாகுந்தலா நாடக ஆராய்ச்சி' என்ற நுாலையும் எழுதினார். தமிழ் கவிதைகள், தமிழ் - ஆரியர் திருமணங்கள் குறித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தம்முடைய எழுத்துப்பணிகள் குறித்து மறைமலை அடிகள், ''நான் சென்ற ஐம்பது ஆண்டு காலமாக ஆராய்ந்து கண்ட முடிவுகளைத்தான் நுால்களாக எழுதியுள்ளேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்கப்பட்டது போல் உண்மை காணும் முயற்சியினால் நடுநின்று ஆராய்ந்திருக்கிறேன். எல்லோரும் தமிழிலக்கியங்கள் அனைத்தையும் நன்கு கற்றுத் தெளிவடைய வேண்டியதில்லை. அவைகளையெல்லாம் நான் தெளிவாக கற்று எழுதி வைத்துள்ளேன். நான் கற்ற எல்லா நுால்களிலும் உள்ள சிறந்த உண்மைகளையெல்லாம் 'பிழிசாறாக' வடித்துள்ளேன். ஆகவே என் நுால்களையெல்லாம் கசடறக் கற்றால் போதும்,'' என்று உறுதிபடக் கூறியுள்ளார் மறைமலை அடிகள். நக்கீரர் இவர் தமிழர் இல்லங்களில் நடைபெறும் திருமணம், சடங்குகள் யாவும் தமிழிலும், தமிழ் முறையிலுமாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வந்தார் மறைமலை அடிகள். எல்லா நிகழ்வுகளிலும் தமிழ் முறைதான் பின்பற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி 1940 அக்., 10ல் பச்சையப்பன் மண்டபத்தில் தமிழ் மாநாடு ஒன்றை நடத்தினார். தமிழர்களுக்கு என்று தனி ஆண்டு வர வேண்டும் என்று விரும்பி பெருமுயற்சி கொண்டு திருவள்ளுவர் பெயரால் 'திருவள்ளுவராண்டு' எனக் கொண்டு வந்த வெற்றி பெற்றார்.''அற்றை நக்கீரனாரும், பிற்றைச் சிவஞான முனிவரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யான் அவரை சொல்லாலும், எழுத்தாலும் போற்றுவதுண்டு,'' என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. பெருமைபடக் கூறியுள்ளார். இறைப்பணி, தமிழ்ப்பணி என்று தன்னை சமுதாயத்திற்கு என்று ஆக்கிக்கொண்ட மறைலை அடிகளார் இப்பூவுலகை 1950 செப்.,15ல் நிறைவு செய்தார்.- முனைவர் உ. அனார்கலி,மதுரை. 98424 23391

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - San Francisco,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201506:40:24 IST Report Abuse
Krishna ஆங்கிலம் இன்று உலக மொழி. மிக வளமான, செம்மையான மொழி. எதைப்பற்றி வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் படிக்கலாம், எழுதலாம், இலக்கியம்,மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல் எல்லாவற்றுக்கும் ஏற்ற மொழி. ஆனால் தொன்மையான மொழியல்ல கடந்த 500 ஆண்டுக்குள் வளர்ந்த மொழி. ஆங்கிலத்தில் 20 விழுக்காடுகூட ஆங்கில சொற்கள் இல்லை எல்லாம் பிற மொழிகளில் இருந்து வந்தவை. இன்றும், ஆண்டுதோறும் புதிய சொற்கள் ஏற்கப்படுகின்றன. யாரும் தட்டிப்பார்த்து இவை ஆங்கில சொற்கள் இல்லை என்று ஓதிக்கிவிடுவதில்லை 'தூய' ஆங்கில புரட்சி இல்லை. ஆகவே ஆங்கில மொழி வளர்ந்து கொண்டே போகிறது. தூய தமிழ், செந்தமிழ் என்று குண்டுச்சட்டியில் குதிரை ஒட்டி, தமிழை வளரவிடாமல் அடித்துவிட்டோம். தமிழ் வளரவேண்டுமானால் வழக்கில் உள்ள பிறமொழிச்சொற்களை மட்டுமல்லாது, புதிதாகவும் பிறமொழிச்சொர்களையும், குறிப்பாக ஆங்கில சொற்களையும் தமிழில் உபயோகப்படுத்தவேண்டும். அப்போதுதான் தமிழ் இலக்கிய மொழியாக மட்டும் இல்லாமல், விஞ்ஞான மொழியாகவும் முன்னேறும். இந்திய மொழிகளிலேயே தமிழ் மட்டும்தான் phonetically weak. மலையாளம், தெலுங்கு, கன்னடம் யாவும் தமிழை விட phonetically strong. ஆகவே அதற்கேற்ற சில எழுத்து சீர்திருத்தமும் தேவை - ஸ, ஜ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ, முதலிய வழக்கத்தில் உள்ள கிரந்த எழுத்துக்களை தமிழாகக் கருதவேண்டும். மேலும் க, ச, த, த, ப ஒலிகளுக்கு வல்லினம் மட்டுமே இருக்கிறது. இவைகளுக்கும் மெல்லினமும் மிகவும் தேவை. உதாரணமாக போன்ற குறிகளால் மெல்லினம் குறிப்பிடலாம். க(ga), ச( Ja ), ட( da ), த(tha ) , ப(pa ) வை மெல்லினன ஒலிகளாக வைத்துக்கொள்ளலாம். ( க, க ச, ச ட, ட த, த ப, ப - ர, ற வில் வல்லினம் மெல்லினம் இருப்பதுபோல். இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான வளமான தமிழாக இருக்க, நாம் குறிகிய மனப்பான்மையை விட்டுவிடல் தேவை. இல்லையேல், தமிழ் சிறுது சிறிதாக அழிந்திடும் அபாயம் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை