நஞ்சைக் கலந்து... புழு பூச்சிகளை ஒழித்து... பளபள காய்கள்! என்பார்வை| Dinamalar

நஞ்சைக் கலந்து... புழு பூச்சிகளை ஒழித்து... பளபள காய்கள்! என்பார்வை

Added : ஜூலை 30, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 நஞ்சைக் கலந்து... புழு பூச்சிகளை ஒழித்து... பளபள காய்கள்! என்பார்வை

இந்த பூமி நமது கரங்களில் ஒரு நீல முத்தென வழங்கப்பட்டிருக்கிறது. காற்றும், வெப்பமும், நீருமாக வியாபித்திருக்கும் இப்பூமி நம் சந்ததிக்கான வாழ்வுப் பிரதேசம். இன்று நாம் எவ்வாறான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் சுற்றுப்புறமும், பயன்படுத்தும் பொருட்களும் பாதுகாப்பானதாக உள்ளதா, நாம் வாழும் இப்புவியை எவ்வளவு அனுசரணையுடன் அணுகுகிறோம் என்பது நம் முன் உள்ள கேள்வி.பவானியும், நொய்யலும், பாலாறும், வைகையும் கழிவுகளால் அழிந்து போயிருக்கின்றன. நாம் வினையாற்றிய செயல்கள் இன்று நம்மையே கொல்லும் பொருளாக பிளாஸ்டிக், பூச்சிக் கொல்லி என விஸ்வரூபம் எடுத்துள்ளன.
பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்று அனைத்திலும் நிறைந்து பெருகி உள்ளது. பிளாஸ்டிக் பைகளை அதிக அளவில் பயன்படுத்தும் நமது செயல், நிலத்தினை நஞ்சாக்கி, நிலத்தடி நீரை
அழிக்கிறது.பல்வேறு வடிவங்களில், நாம் உணவுப்பொருளை அடைத்து வைக்க, பிளாஸ்டிக் டப்பாக்களையே பயன்படுத்துகிறோம். இன்றைய வாழ்வு முறையில் நாம் அனைவருமே மதிய உணவினை இத்தகைய ஸ்டைலான டப்பாக்களையே உபயோகிக்கிறோம். மிகச்சூடாக உணவுப் பதார்த்தங்களை அதில் அடைத்து பிளாஸ்டிக்கின் சுவையோடு நம்மை அறியாமலே உண்ணப் பழகியிருக்கிறோம்.
உயிர் கொல்லும் பிளாஸ்டிக்
நீர் முதற்கொண்டு அனைத்து உணவுப் பொருட்களையும் பிளாஸ்டிக் கவர் மற்றும் பாட்டில்களில் அடைத்து வைக்கிறோம். இப்புவியையும் உபயோகமற்றதாக்கி, நம் உடலையும் மெல்லக் கொல்லும் விஷமாக உருவெடுத்துள்ளது பிளாஸ்டிக். 'உபயோகித்த பின் துாக்கி எறியவும்' என்பதாகக் கூறி விற்பனை செய்யப்படும் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை, கிராமப்புற மக்களும் பயன்படுத்துகின்றனர். உபயோகிப்பதற்கே லாயக்கற்ற பிளாஸ்டிக்கில் உணவினையும், நீரினையும் அடைத்து, மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பிளாஸ்டிக்கில் உள்ள வேதியியல் நச்சு சிறிது சிறிதாக நம் உடலைச்சிதைக்கத் துவங்குகிறது.
இன்று பெரும்பான்மையான மக்கள் (நாளொன்றுக்கு இந்தியாவில் மட்டும் சுமார் 1800 பேர்) புற்று நோய்க்கு உள்ளாவதற்கு பிளாஸ்டிக்கும், பூச்சி கொல்லியும் முக்கிய காரணம் என்பது மறுக்க இயலாதது.
வாழ்வைச் சிதைக்கும் பூச்சி கொல்லி
நமது இயல்பான வாழ்க்கையில் மிகவும் பிரயத்தனப்பட்டு மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாகப் பல பொருட்களை அறிகிறோம். அவற்றுக்கு ஆட்பட்டு வாழ்வை நகர்த்துகிறோம். அவற்றுள் ஒன்றென, நம் உணவையே நமக்கு எதிரானதாக மாற்றிக் கொண்டிருக்கிறது பூச்சி கொல்லி மருந்து.
கேரட், முள்ளங்கி, முட்டை கோஸ், உருளைக்கிழங்கு என சகல காய்கறிகளிலும், திராட்சை உள்ளிட்ட பழங்களிலும் பூச்சி மருந்துகளை அதிகமாக பயன்படுத்துகிறோம். முழுமையான சத்துக்களைத்தர வேண்டிய காய்கறிகளும், பழங்களும் சக்கையாகக் காணப்படுகின்றன.
நஞ்சைக் கலந்து, புழு பூச்சிகளை ஒழித்து, பூச்சியற்று நாம் உருவாக்கிய பளபளப்பான காய்கறிகள் மெல்ல, நம் உயிர் குடித்துக் கொண்டிருக்கின்றன என்பது அதிர்ச்சியாக இருக்கலாம். உடல் ஆரோக்கியத்தை பெற்றுத் தரும் என்று நம்பி உண்ணும் உணவுப் பொருட்கள் கொடிய உடல் தீங்குகளை ஏற்படுத்தியபடி இருக்கின்றன.
காடு, நிலம், நீரினை, நம்மிடம் ஒப்படைந்த இந்த இயற்கையை, அதன் இளமையை நம் சுயநலத்திற்காகக் கொன்று கொண்டிருக்கிறோம்.
விளைவுகள்
'வளரும் நாடுகளில், பூச்சி கொல்லிகள் காரணமாக 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்' என உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது. மேலும் 'இதனால் 2,20,000 பேர் உயிரிழக்கும் அபாயத்தை எட்டியுள்ளனர்' எனவும் குறிப்பிடுகிறது. பூச்சி கொல்லிகள் குழந்தைகளிடம் மிகக்கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறைபாட்டுடன் குழந்தைப்பிறப்பு, உடல் வளர்ச்சி குன்றுதல், மூளை, தண்டுவட பாதிப்புகளை குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது.
ஞாபக சக்தி குறைவு, நரம்பு மண்டலப் பாதிப்புகள், மந்தமான செயல்பாடு போன்றவையும் ஏற்படக் காரணமாகிறது. களைக் கொல்லி காற்றிலும் நீரிலும் மிக எளிதாகப் பரவுகிறது. விவசாயிகள், பூச்சி கொல்லிகளை தாவரங்கள் வளர உதவும் பொருளாகக் காண்கின்றனர். பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்தும் வழிமுறைகள் தெரியாத விவசாயிகளே அதிகம்.
தேவை, மாற்று வழிகள்
பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்தும் கையில், சரியான பாதுகாப்புக் கவசங்களையும், முகமூடிகளையும் பயன்படுத்த வேண்டும். தோல் மற்றும் நாசியின் வழியாக உடலில் ஊடுருவும் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் கொல்லும். புற்றுநோய், கல்லீரல் நோய்கள், இனப்பெருக்கக் குறைபாடு மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளில் தேவையற்ற விளைவுகளைத் தோற்றுவிக்கிறது.
நம் நாட்டில் 145 வகையான பூச்சி மருந்துகள் மட்டுமே அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. 85,000 டன்கள் அளவு பூச்சி கொல்லிகள் ஓர்ஆண்டில் தயாரிக்கப்படுகின்றன. 1958ல் கேரளாவில் கோதுமை மாவில் கலந்திருந்த பூச்சி கொல்லிமருந்தால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையிலும், இதன் உபயோகத்தைக் குறைக்கவோ, மாற்று வழிகள் மூலம் விவசாயத்தைப் பெருக்கவோ நாம் ஏன் தயங்கி நிற்கிறோம்?
இந்தியாவில் 51 சதவீதம் உணவுப் பண்டங்கள் பூச்சி கொல்லியின் எச்சங்களை உள்ளடக்கியே தயாராகின்றன. உலக அளவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் 20 சதவீதம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பூச்சி மருந்து அளவினை உள்ளடக்கியதாக உள்ளது.
விவசாயிகளே இயற்கையான செயல்முறையில் அமைந்த பூச்சி கொல்லிகளைக் கண்டு
பிடியுங்கள். பூச்சிமருந்துகளையும் பயன்படுத்தும் பாதுகாப்பு முறைகளையும் அறிந்து உபயோகியுங்கள். இனியாவது பசுவின் கோமியம், வேப்ப எண்ணெய் போன்றவற்றில் இருந்து பெறப்படும் மருந்துகளை உபயோகிக்கவும், தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் செய்வோம்.
இயற்கையான மண்புழு உரத் தயாரிப்பை பரவலாக்குதல், பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை குறைத்து, கேடற்ற பொருளை அதற்கு மாற்றாகக் கண்டுபிடித்தல், தன்மைக்கேற்ப இயற்கை மருந்து ஆராயச்சிகளை முன்னெடுத்துச் செல்வதும் அவசியமாகிறது. இயற்கை ஆர்வலர்களும் அனைத்து மக்களும், விவசாயிகளும், தன்னார்வலர்களும் இத்தகைய பணிகளை முனைப்புடன் செயல்படுத்த முயன்றால் மட்டுமே சிறிதளவாவது நம்மையும், நம்மிடமிருந்து இப்புவியையும் காக்க இயலும்.- அ. ரோஸ்லின், ஆசிரியை,அரசு மேல்நிலைப் பள்ளி,
தா.வாடிப்பட்டி kaviroselina997@gmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nandhagopal N - Kapurthala, Punjab.,இந்தியா
31-ஜூலை-201514:24:32 IST Report Abuse
Nandhagopal N தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி, அம்மையார் ரோஸ்லின் அவர்களே. அனைவரிடமும் விழிப்புணர்வு தேவை. இயற்கை விவசாயத்தை வளர்ப்போம். வளமான வாழ்வை பெறுவோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை