கரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை| Dinamalar

கரலாக்கட்டையும் கழுத்து வலியும் : என் பார்வை

Added : ஆக 06, 2015 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 கரலாக்கட்டையும்   கழுத்து வலியும் : என் பார்வை

காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்த எனது தந்தை தினமும் அதிகாலையில்
கரலாகட்டை சுற்றுவது வழக்கம். இதற்காக மூன்று விதமான தேக்கு கரலாக்கட்டைகளை தினமும் காலையில் பளபளவென பாலீஷ் போட்டு வைத்திருப்பார். ஆனால், இன்றோ ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய கரலாக்கட்டை அடுப்புக்கு போய் சாம்பலாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கு பதிலாக பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து, விதவிதமாக உடற்பயிற்சி கருவிகளை வாங்கி காட்சிக்கு வைத்திருக்கும் அவலமே காணப்படுகிறது. அது மட்டுமன்றி எழுதினால் கை வலி, திரும்பினால் கழுத்து வலி, குனிந்தால் முதுகு வலி, படுத்து எழுந்தால் எல்லாமே வலி என ஓடிக்கொண்டிருக்கும் அவசர வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கு நேரமில்லாமல் போய்விட்டது.ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு உடற்பயிற்சி கருவி தான் கரலாக்கட்டை. மக்கள் திலகம்
எம்.ஜி.ஆரை நினைக்கும் போதெல்லாம் கரலாக்கட்டை தான் ஞாபகத்திற்கு வரும். வெள்ளை நிறக் கைலியை அணிந்து அதிகாலை 4 மணிக்கு அரைமணி நேரம் கரலாக்கட்டை சுற்றும் உடற்பயிற்சி தான் தனது அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு காரணம் என்று எம்.ஜி.ஆர் சொன்னது தெரியுமா? துப்பாக்கியால் சுடப்பட்ட போது அவரது கழுத்து தசைகள் பலமாக இருந்ததால் தான் குண்டு வெளியேறாமல் தொண்டையிலேயே தங்கி அவர் உயிரை காப்பாற்றியது. ஆம், அந்த அளவிற்கு கை, கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகு தசைகளை கல்லைப் போல் வலிமையாக மாற்றும் ஆற்றல் கரலாக்கட்டைக்கு உண்டு.
சித்த மருத்துவத்தில்
கரலாக்கட்டைக்கும் சித்த மருத்துவத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. ஒவ்வொரு சித்த மருத்துவமனையிலும் கரலாக்கட்டையை உடற்பயிற்சி கருவியாக வைத்து, அனைத்து நோயாளிகளும் அந்தப் பயிற்சியை செய்ய வேண்டும் என சித்த மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தேசிய தர மேம்பாட்டு நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரரின் நோய் தீர்க்கும் கோயிலில் அமைந்துள்ள கல் தூண் ஒன்று கரலாக்கட்டை சித்தரின் சமாதியாக வணங்கப்படுகிறது. கரலாக்கட்டை நமது பாரம்பரிய உடற்பயிற்சியின் அடையாளம். பீமர், அனுமார் போன்ற
கடவுள்களும் கரலாக்கட்டை வடிவிலான ஆயுதங்களை சுமந்து வந்ததை புராணம் மூலம் அறியலாம்.
கழுத்து வலி ஏன்
நமது தலை மற்றும் உடலை இணைக்கும் கழுத்துப் பகுதி பலமற்ற சாதாரண எலும்புகளால் ஆனது. ஆனால் இந்தப் பகுதிகளை சூழ்ந்துள்ள தசைகளின் வலிமையால் தான் நம்மால் ஆரோக்கியமாக இயங்க முடிகிறது. மூளைக்கு போகும் ரத்த ஓட்டத்தை பாதுகாத்தல், காதுகளின் சமநிலையை நிலை நிறுத்துதல், கை, கால்களுக்கு பலம் மற்றும் அசைவை உண்டாக்குதல் மற்றும் மார்பு தசைகளை சீராக இயக்க கழுத்து மட்டுமன்றி, மேல் முதுகு, தோள்பட்டை, கை மற்றும் மார்பு பகுதிகளிலும் வலியுண்டாகிறது. கழுத்து எலும்புகள் மற்றும் தசைகள் தங்கள் இடத்தைவிட்டு சில மில்லி மீட்டர்கள் இடம் பெயர்ந்தாலே தலைச்சுற்றல், தசை இறுக்கம், விரல்களால் வேலை செய்ய சிரமம் என பல உபாதைகள் ஏற்படுகின்றன.
தவறான முறையில் படுத்து தூங்குதல், உயரமான தலையணை வைத்திருத்தல், அளவுக்கு அதிகமாக தலையை நிமிர்த்தி கொண்டு நடத்தல், தோள்பட்டையை உயர்த்தாமல் தலையை மேலும், கீழும் அடிக்கடி அசைத்தல், கைகளை தோலுக்கு மேல் உயர்த்தாமல் குனிந்தவாறே வேலை பார்த்தல் போன்ற பல காரணங்களால் நமக்கு வலி ஏற்படுகிறது.கழுத்து வலி ஏற்பட' ஸ்டெர்னோ கிளிடோமாஸ்டாய்டு' என்ற தசையின் இறுக்கமே முதற்காரணம். கரலாக்கட்டை பயிற்சி செய்வதால் டென்ஷன், தலைவலி, டென்னிஸ் எல்போ, 'ப்ரோசன் சோல்டர்',' கார்பல்டனல் சின்ரோம்' போன்ற நோய்கள் வருவது தடுக்கப்படும். தினமும் அரைமணி நேரம் கரலாக்கட்டை பயிற்சி செய்வதால் இதயத் தசைகளுக்கு கிடைக்கும் வலிமையானது தினமும் ஒரு மணி நேரம் நடப்பதற்கு சமமானது. எடை குறைவான, விலை மலிவான, எளிதல் எடுத்துச் செல்லக்கூடிய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய கரலாக்கட்டை ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம். எப்படி பயிற்சி செய்வது இந்தியன் கிளப் என்றழைக்கப்படும் கரலாக்கட்டை பயிற்சி மிகவும் ஆரோக்கியமானது. 18ம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் புகுந்த ஆங்கிலேய படை வீரர்கள் இந்தியர்களின் வீரத்தைப் பார்த்து வியந்து, அவர்களிடமிருந்து கரலாக்கட்டை பயிற்சியை கற்றுக் கொண்டனர். மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களும் தசைகளை பலப்படுத்திக் கொள்ள பயிற்சிக்கு முன்பாக கரலாக்கட்டை சுற்றி தயாராவது வழக்கம்.
கருங்காலி, தேக்கு, எட்டி மற்றும் பீச் போன்ற கடினமான மரங்களால்
கரலாக்கட்டை செய்யப்பட்டன. கரலாக்கட்டைகளின் அடியானது பருத்தும், நுனியானது சிறுத்தும் கைப்பிடி நழுவாமல் இருப்பதற்கு வளைய பிடியுடன் காணப்படுகிறது. இரண்டு கிலோ முதல் நான்கு கிலோ எடையுள்ள கரலாக்கட்டைகளை பெண்களும், நான்கு முதல் எட்டு கிலோ எடையுள்ள கரலாக்கட்டைகளை ஆண்களும் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம். பயிற்சியின் ஆரம்பகட்டத்தில் ஒன்று அல்லது ஒன்றரை கிலோ கரலாக்கட்டைகளை பயன்படுத்தினாலே போதுமானது. இரண்டு கைகளிலும் தனித்தனியே கரலாக்கட்டை சுற்றி பயிற்சி செய்வது நல்லது. கடிகார பெண்டுலம் போல் இடம் வலம், முன் பின், மேல் கீழ் என சுழற்றி பயிற்சி செய்யலாம்.நின்று கொண்டு, உட்கார்ந்து கொண்டு, ஒரு கையை பின்னால் மடக்கி, கால்களை அகட்டி, ஒரு காலை மடக்கி இவ்வாறு தொடர்ந்து மாற்றி, மாற்றி கரலாக்கட்டை பயிற்சி செய்யலாம். பயிற்சியின் போது பிறர் மேல் கரலாக்கட்டை பட்டுவிடாமல் இருக்க முன் பின், இடம் வலம் என குறைந்தது ஆறு அடி இடைவெளி விட்டு பயிற்சி செய்வது நல்லது. கரலாக்கட்டை பயிற்சி நமது பாரம்பரிய உடற்பயிற்சி. வீரத்தமிழர்களின் உடல் வலிமைக்கு கரலாக்கட்டையே காரணம். நாமும் தினமும் கரலாக்கட்டையை பிடிப்போம்!-டாக்டர். ஜெ.ஜெயவெங்கடேஷ்,சித்த மருத்துவர்,மதுரை. 98421 67567

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
07-ஆக-201500:16:09 IST Report Abuse
chakra "பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து, விதவிதமாக உடற்பயிற்சி கருவிகளை வாங்கி காட்சிக்கு வைத்திருக்கும் அவலமே காணப்படுகிறது." படிக்காத ஆட்கள் போல பேச கூடாது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு தசைக்கும் பல விதமான பயிற்சிகள் உள்ளன . கரலாக்கட்டை பயிற்சி நம் தோள்களையும் கரங்களையும் பலபடுத்தும் அவ்வளவுதான் . கால்களையோ நெஞ்சையோ அல்ல. கரலாக்கட்டை பயிற்சி முழுமையான உடலுக்கும் பயிற்சி அல்ல
Rate this:
Share this comment
Cancel
aravinthkumar - tamilnadu,இந்தியா
06-ஆக-201511:43:38 IST Report Abuse
aravinthkumar உண்மையை உலகுக்கு உரக்க சொல்லுங்கள்,நன்றி .
Rate this:
Share this comment
Cancel
mukundan - chennai,இந்தியா
06-ஆக-201510:46:02 IST Report Abuse
mukundan அனைவரும் ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்வது உகந்தது, அதை விட்டு விட்டு கர்லாக்கட்டை தான் சுத்த வேண்டும் என்று டாக்டர் சொல்வது சிரிப்பு தான் வருது. காலம் மாற நாம் உபயோகிக்கும் பொருளும் மாறும். மாற்றம் ஒன்றே மாறாதது. டாக்டர் இப்போவும் அவர் வீட்டில் என்னை விளக்கை தான் ஏற்றுகிறார? இல்லை தானே. பள பள வென்று tubelight தானே எரிகிறது அதே போல் தான் இதுவும். அவரது தந்தை தினமும் உடற்பயிற்சி செய்தார் அதனால் ஆரோக்யமாக இருந்தார், நாம் இல்லை அவளவே....
Rate this:
Share this comment
Cancel
Jayakumar Santhanam - chennai,இந்தியா
06-ஆக-201509:23:26 IST Report Abuse
Jayakumar Santhanam கழுத்து வலி இருப்பவர்கள் சுற்றினால் அதிகமாகி விடும். கழுத்து வலி இல்லாதவர்கள் செய்து பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
06-ஆக-201506:11:17 IST Report Abuse
Sanny உண்மை தான் MGR இறக்கும் சில நாள்களுக்கு முன்பு ஒரு கரலாகட்டையை, தானே தூக்கி வந்து நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு கொடுத்ததாக ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
Siva Panchalingam - Toronto,கனடா
06-ஆக-201503:00:32 IST Report Abuse
Siva Panchalingam நன்றி டாக்டர். உங்களின் இந்த தகவல் கட்டுரை நல்ல ஒரு தேவையான வழி காட்டல்.தொடர்ந்து எழுதுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை