சினிமா சூழ் தமிழுலகு : என் பார்வை| Dinamalar

சினிமா சூழ் தமிழுலகு : என் பார்வை

Added : ஆக 07, 2015 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
சினிமா சூழ்  தமிழுலகு : என் பார்வை

காட்சி ஊடகங்களில் மிக முக்கிய
அங்கமாக திகழ்வது சினிமா. ஆம், சுதந்திர போராட்ட காலம் தொட்டு இன்றுவரை பல்வேறு விஷயங்களில் மக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் திரைப்
படங்கள் பெரும்பங்கு வகித்துள்ளன.
சினிமா எந்த அளவிற்கு தமிழக மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு, அது தமிழகத்திற்கு கொடுத்திருக்கும் இத்தனை முதலமைச்சர்களே உதாரணம். மிக இளம் வயதில், முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ள அருண்ராஜ், கடந்த வாரம் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நேர்முகத் தேர்வுக்கு போகும் முன், இளைஞர்கள் அரசியல் மற்றும் அதிகார பணிக்கு செல்வது போன்ற நிறைய திரைப்படங்களை பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
நல்லதோ கெட்டதோ, நமது அன்றாட வாழ்க்கையில் நடந்தேறும் ஒவ்வொரு நிகழ்விற்கும் வள்ளுவனிடம் இருந்து படிப்பினைகளை தேடிய நாம் இன்று வடிவேலுவின் வசனங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம்.
இது இருண்டகாலம்
தமிழ் சினிமாவிற்கென்று இருண்டகாலம் ஒன்று உண்டெனில் அது நிகழ்காலமாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் நிகழ்கால திரைப்படங்களில், அவற்றை வெற்றியடையச் செய்ய ஒரு சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது. அது என்னவெனில், திரைப்படத்தில் பெண்களை மோசமாகத் திட்டி ஒரு பாடல் இருக்கவேண்டும். பின்னர் தவறாமல் சாராயக்கடையில் நண்பர்களோடு, குடித்துக்கொண்டும் புகைத்துக் கொண்டும் ஆடிப்பாடும் காட்சி இடம்பெற வேண்டும். சில சினிமாக்களில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகள் அல்லது உறவுகளை மிக மோசமாக சித்தரிக்கும் காட்சிகளும் இடம்பெறுகிறது. இவையெல்லாம் ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் பட்சத்தில், அந்த சினிமா வெற்றியடைத் தேவையான எல்லா தகுதிகளை பெற்றுவிட்டதாகக் கருதப்படுகிறது. எல்லா சினிமாக்களிலும் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், ஓரளவு ரசிகர் வட்டத்தைக் கொண்டுள்ள பெரும்பாலான நடிகர்களின் திரைப்படங்கள் இதுபோன்ற காட்சிகளைக் கொண்டே வெளிவருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
கெட்டவன் கதாநாயகன்
திரைப்படத்தில் கதாநாயகர்களை நல்லவர்களாகக் காட்டி, சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் எதிரிகளை அவர்கள் அழிப்பது போல காட்சிகளை அமைத்து வந்த காலம்போய், “நான் கெட்டவன், அனைத்து கெட்ட செயல்களையும் செய்வேன்” என்பதை கதாநாயகன் பெருமையாக கூறுவதை போன்ற திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அது அதனை பார்க்கும் இளைஞர்கள் மத்தியில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருவதை கண்கூடக் காண்கின்றோம். மேலும் அவ்வப்போது குறிப்பிட்ட ஜாதிகளை துாக்கிபிடிக்கும் விதமாக வெளிவரும் திரைப்படங்கள் சமூகத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியதை கண்டிருக்கிறோம். இதுபோல சமூக அக்கறையில்லாத நபர்கள், தாங்கள் வெளியிடும் திரைப்படங்களினால் ஏற்படும் விளைவினை கருத்தில் கொள்ளாமல் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது வேதனையான ஒன்று.
எங்களது பணி நடிப்பது மட்டுமே. நாங்கள் ஏன் மக்களைப்பற்றி கவலைப்பட வேண்டும் என்று கேட்கலாம். அதற்கு காரணமிருக்கிறது. அது 2006-ல் கொண்டுவரப்பட்ட ஒரு அரசாணை. அதன்படி தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்படும். மற்றபடி படத்திற்குள் என்னென்ன விஷயங்கள் இருந்தாலும் பரவாயில்லை. ஒரு திரைப்படத்திற்கு கேளிக்கை வரி ரத்து செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் கிடைக்கும் வசூல் தொகையில் அரசுக்கு செலுத்தவேண்டிய 30% வரிப்பணத்தை செலுத்த தேவையில்லை. அரசின் இந்த முடிவினால் ஜூலை 2006 முதல் டிசம்பர் 2010 வரை மட்டும் தமிழக அரசிற்கு தோராயமாக 300 கோடி இழப்பு ஏற்பட்டதாக 'கோயம்புத்தூர் கன்சூமர் காஸ்' என்ற அமைப்பு கூறுகிறது.
அரசின் பதில் என்ன
இந்த அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னால் அரசு எவ்வளவு வருமானம் ஈட்டியது என்பதனை அறிய, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி நான் கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு அளித்த பதிலில், 2003 முதல் 2006 வரை மட்டும் அரசுக்கு 177.73 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக கூறியுள்ளது.
அக்காலகட்டத்தில் வெளிவந்த திரைப்படங்களின் தோராய எண்ணிக்கை 309. இந்த கணக்கின்படி பார்த்தால் இன்றுவரை அரசிற்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு பல நுாறு கோடிகளை தாண்டியிருக்கும். உதாரணத்திற்கு 01.01.2011—லிருந்து 05.12.2014 வரை 343 திரைப்படங்கள் வரிவிலக்கு பெற்றுள்ளதாக தமிழக அரசு பதிலளித்துள்ளது. தற்போதைய விலையேற்றத்தின் படி பார்த்தால் கடந்த நான்கு வருடங்களில் தோராயமாக அரசுக்கு 300 கோடியாவது இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். அது அவ்வளவும் மக்களின் பணம்.
2006-ல் வெளியான அரசாணையில் திருத்தம் செய்து 2011-ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அரசாணையின்படி கேளிக்கைவரி விலக்கு பெற ஒரு திரைப்படத்தின் பெயர் தமிழில் இருந்தால் மட்டும் போதாது. அத்திரைப்படம் 'யு' சான்றிதழ் பெற்றிருப்பதோடு தமிழ் பண்பாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கவேண்டும். மேலும் வசனங்களில் முடிந்தவரை பிற
மொழிகளை தவிர்த்து, வன்முறை, ஆபாச காட்சிகள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது அந்த அரசாணை. தற்காலத்தில் கேளிக்கை வரிவிலக்கு பெற்று வெளிவரும் திரைப்படங்கள் மேற்கூறிய நிபந்தனைகளை பூர்த்திசெய்துதான் கேளிக்கை வரிவிலக்கு பெறுகிறதா? படங்களை பார்க்கும் நீங்களே புரிந்து கொள்ளலாம்.
குடிக்கச் சொல்லாதீர்
ஈரானிய இயக்குனரான மக்மால்பப் தனது 'ஆப்கன் ஆல்பபட்' என்ற ஆவணப்படத்தின் மூலம், ஆப்கானிய நாட்டு அகதி குழந்தைகளுக்கு ஈரானில் கல்வி மறுக்கப்படும் விதமாக அமைந்த ஈரானிய சட்டத்தையே மாற்றும்படி செய்தார். அவரின் செயலினால் ஐந்து லட்சம் ஆப்கானிய குழந்தைகள் பள்ளி சென்று பயின்றனர்.
அதற்காக தமிழக இயக்குனர்களையும் அவரைப்போல ஆவணப்படம் எடுத்து சட்டத்தை மாற்ற சொல்லவில்லை. சட்டத்தை மீறுவதுதான் இளைஞர்களுக்கு அழகு என்று அவர்கள் மனதில் பதியவைப்பதையாவது நிறுத்துங்கள். நீங்கள் படிக்கச்சொல்லி கொடுக்கவேண்டாம். ஆனால் குடிக்கச் சொல்லி துாண்டாமலிருந்தால் அதுவே போதும். பெண்மையை போற்றாவிட்டாலும் பரவாயில்லை தயவுசெய்து துாற்றாதீர்கள்.
இறுதியில் நாட்டு நடப்பினைத்தான் சினிமாவாக எடுக்கின்றோம் என்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு நியாயம் கற்பிக்காதீர்கள். சினிமா ஒரு வலுவான காட்சி ஊடகம். அது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய அம்பு போன்றது. அதனை சமூகத்தின் தரப்பில் இருந்து
தீவினைகளை எதிர்த்து எய்யுங்கள். சமூகத்தின் மீதே எய்ய வேண்டாம்.
-தினகரன் ராஜாமணிஎழுத்தாளர், திருநெல்வேலி097388 19444

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chozhan - melbourne,ஆஸ்திரேலியா
29-ஆக-201512:22:44 IST Report Abuse
chozhan மிக அருமையான கட்டுரை. .பூனைக்கு யார் மணி கட்டுவது என்று கவலைப்பட்டு கொண்டிருந்தபோது வந்துள்ள கட்டுரை நகைச்சுவை என்பது நாகேஷ் மற்றும் வடிவேலுவுடன் முடிந்துவிட்டது .நிஜ வாழ்கையின் பதிபளிப்பு நகைச்சுவைதான் . எங்கேயும் ஹீரோ கிடைக்கமாட்டார் . நம்முள்ளே நகைசுவைனடிகரின் விஷயம் இருக்கும் . காண்டாமணி & சந்தானம் இவர்களின் நகைச்சுவை என்ற கோமாளித்தனம் சமூகத்தையே கெடுகிறது . மரியாதை இல்லாமல் பேசுவது ,செஇஷ்டைகல் கஷ்டம் . அதற்குமேல் இந்த சரக்கு போடறது. டாஸ்மாக் கு எடுரபோரடரவங்க கொஞ்சம் இந்த பயலுகலூகு எதிர பண்ணினால் 75% விற்பனை குறையும் . இந்த மாத்ரி விழயங்களை மருத்துவர் கூறுகிறார் . என்ன கஷ்டகாலம் என்றால் அவரை நம்ப முடியாது மற்றும் ஜாதி கட்சி கலர் . மருத்துவர் இல்ல ப ம க , ஜி கே வாசன் போன்றோர் இதை பத்தி பேசினால் நல்லா இருக்கும் . இல்லையேல் இந்த மாத்ரி கட்டுரை படித்து கருத்து சொல்லி சந்தொசபட்டுகொள்ளவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Antoni Raj - Uthamapalayam,இந்தியா
17-ஆக-201511:53:06 IST Report Abuse
Antoni Raj நல்ல கட்டுரை. இன்று வரும் ஒரு தமிழ் சினிமா கூட குழந்தைகளுடன் அல்லது குடும்பத்துடன் பார்க்க தகுதி இல்லாதவையே. பாடல்கள் மற்றும் வசனங்கள் ஆபாசம் கலந்து முகம் சுளிக்க வைக்கின்றன. காமெடி என்ற பெயரில் நடக்கும் காட்சிகள் பார்க்க சகிக்கவில்லை. திரை கூத்தாடிகளுக்கு பணம் ஒன்றே குறிக்கோள் என்று ஆன பின் தரத்தை பற்றி யார் கவலை படுகிறார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
saravanan - Bangalore,இந்தியா
13-ஆக-201507:16:43 IST Report Abuse
saravanan நல்ல பதிவு. வியாபார நோக்குடன் தயாரிக்கப்படும் இன்றைய திரைப்படங்கள் பெரும்பாலானவை சமுதாய சீர்கேடுக்குத்தான் வழி செய்கிறது. வாழ்க்கையின் அத்தியாவசிய விஷயங்களின் தரம் உயர்ந்தாலும், மக்களின் மனவளம் உயரவில்லை. இன்றைய சினிமா மக்களின் மனதில் மோகத்தையும் கவர்ச்சியையும் விதைத்து, சிந்திக்கும் திறனை மழுங்கச் செய்திருக்கிறது. வாழ்கையை வளப்படுத்தும் கல்வி, உடற்பயிற்சி, ஆன்மிகம், இலக்கியம், மொழி ஆகியவற்றைக்கூட கவர்ச்சிகரமான, வியாபார விஷயங்களாக மாற்றியிருக்கிறது. நல்ல கருத்தைப் பதிவு செய்த உங்களுக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
10-ஆக-201514:20:25 IST Report Abuse
vasan உண்மையிலேயே சினிமா என்பது ஒரு மாய உலகம் இந்த மாயயில் மக்கள் சிக்கி நிகழ்காலத்தை மறந்து வாழ்கையில் வீணாகி போனது தான் மிச்சம்.......எந்த அளவுக்கு கேவலமா எடுக்க முடியுமோ அந்த ளவுக்கு கேவலம்....காமெடி என்ற பெயரில் குடித்துவிட்டு கூத்தடிப்பது , செக்ஸ், வன்முறை இது மட்டும் தான் இன்றைய சினிமா கேட்டால் நல்ல படத்திற்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள் என்ற நொண்டி சாக்கு வேற நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க மக்களின் வாழ்கையில் விளையாடுகிறீர்கள் ............எல்லா திரை உலகும் இப்படி தான் படம் எடுக்க வேண்டும் என்று அரசு ஆணையை கடுமை ஆக்கினால் போதும்.............இப்போது நிகழும் எல்லா குற்றங்களுக்கும் சினிமா , மது, டிவி சீரியல் தான் காரணம் டிவி சீரியல்கள் எந்த அளவுக்கு எதிர்மறை எண்ணங்களை மக்களின் மனதில் வளர்க்க முடியுமோ அந்த அளவுக்கு விஷத்தை வளர்க்கிறது............ .நம் வேதாத்ரி மகரிஷி எவ்வளவோ பயிற்சிகள் ,தவம்,தியானம்,யோகாசனம் போன்ற நல்ல பயிற்சிகளை கொடுத்து நம் பாவபதிவுகளையும், புண்ணியத்தை தேடி அதன் மூலம் வாழ்கை சிக்கல்களில் இருந்து விடு பட்டு பேரின்பமாக வாழ வழி செய்து உள்ளார் அதை நம் பிள்ளைகளுக்கும் நாமும் பின்பற்றி சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்...வாழ்க வளமுடன்...
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
07-ஆக-201518:59:31 IST Report Abuse
Rangiem N Annamalai டிவி யின் தாக்கம் அதிகம் என்று நான் நினைக்கிறேன்.நல்ல கட்டுரை .கஷ்டம் என்றாலும் குடிக்கிறார்கள்.சந்தோசம் என்றாலும் குடிக்கிறார்கள் .சும்மா இருந்தாலும் குடிக்கிறார்கள் .குழந்தைகளுடன் டிவி பார்க்க முடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
07-ஆக-201516:43:56 IST Report Abuse
அம்பி ஐயர் “நீங்க என்னதான் கரடியாய்க் கத்தினாலும் நாங்க கேட்க மாட்டோம்..... எங்கள் பணி குடித்துவிட்டுக் கூத்தாடுவதே.....” என்றுதான் இன்றைய திரையுலகம் உள்ளது....கேளிக்கைவரியை ரத்து செய்யத்தான் வேண்டும்.... ஆனால் செவிடன் காதில் போய் சங்கு ஊதுவதால் என்ன பிரயோசனம்....அம்மையாரும் சினிமாக்காரர்..... அய்யாவோ கேட்கவே வேண்டாம்.... அவர் குடும்ப பிசினஸ் படுத்துவிடும்..... அதனால் யாரும் கேளிக்கை வரியை ரத்துசெய்ய மாட்டார்கள்..... நீதிமன்றம் சென்று பார்க்கலாம்.....
Rate this:
Share this comment
Cancel
Sathiyamoorthi Madhavan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஆக-201513:48:53 IST Report Abuse
Sathiyamoorthi Madhavan Mikavum arumaiyana pathivu
Rate this:
Share this comment
Cancel
Karthik - tirunelveli,இந்தியா
07-ஆக-201512:10:14 IST Report Abuse
Karthik உங்கள் பணி தொடர உங்கள் தம்பி கார்த்திக் இன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Karthik - tirunelveli,இந்தியா
07-ஆக-201512:09:00 IST Report Abuse
Karthik வாழ்த்துக்கள் அண்ணா
Rate this:
Share this comment
Cancel
manitha neyan - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஆக-201512:00:17 IST Report Abuse
manitha neyan அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை