வாழ்க... வளமுடன்! நாளை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி பிறந்த நாள்| Dinamalar

வாழ்க... வளமுடன்! நாளை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி பிறந்த நாள்

Added : ஆக 13, 2015 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 வாழ்க... வளமுடன்! நாளை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி பிறந்த நாள்

'ஆழியாறு' எனும் அமைதி தவழும் மலை; மயிலாடும் பாறைகள்; குயில் கூவும் சோலைகள்; சலசல எனும் நீரோடைகள்; அழகுடன் திகழும் அணைக்கட்டு; இவற்றுக்கு மத்தியில்
அருட்பெருஞ்ஜோதிநகர். அதனுள் அறிவுத்திருக்கோயில். இங்கே தான், ''தமக்கென்று வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த'' வேதாத்திரி மகரிஷி தொண்டாற்றி வந்தார்.சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரியில், வரதப்பர் - சின்னம்மாள்
தம்பதிக்கு எட்டாவது மகனாக வேதாத்திரி மகரிஷி, 1911 ஆக., 14ல் பிறந்தார். ஏழ்மை காரணமாக மூன்றாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தி கொண்டார். ஆனால் அறிவின் தேடலில் ஈடுபாடு கொண்டார்.
ஏழ்மை என்றால் என்ன?கடவுள் யார்?உயிர் என்றால் என்ன?
என்ற கேள்விகள் அவரிடம் அடிக்கடி எழுந்தன. திருமூலர், வள்ளலார், திருவள்ளுவர் ஆகியோரின் பாடல்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். வைத்திய பூபதி கிருஷ்ணாராவ், பாலகிருஷ்ணநாயக்கர், ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகான் ஆகியோரிடம் தவமும், தத்துவ சிந்தனைகளும் கற்றார்.
தத்துவஞானி
தத்துவத்தில் அத்வைதத்தையும் யோகத்திலே ராஜயோகத்தையும் பாமர மக்களும் உணர்ந்து கொள்ளும் வகையிலே, அவர் கற்பிக்கும் உளப்பயிற்சி முறைகள் அமைந்திருக்கின்ற காரணத்தால் 'பாமர மக்களின் தத்துவ ஞானி' என போற்றப்படுகிறார்.
தன் சகோதரியின் மகளான லோகாம்பாளை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக குழந்தை பேறு இன்மையால் லோகாம்பாளின் வற்புறுத்தலினால், லட்சுமி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.
போஸ்டல், ஆடிட், அலுவலகப்பணி, பற்பொடி தயாரித்தல், பால் வியாபாரம், ஜவுளி தயாரிப்பு, திண்ணை பள்ளி ஆசிரியர் என பல்வேறு பணிகளை செய்தார். தன் சுய முயற்சியால் வணிகத்தில் முன்னேறி பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றார். 2000 பேருக்கு வேலை தரக்கூடிய வகையில் நெசவுத் தொழிலை விரிவுபடுத்தினார். நெசவாளர்கள் நலன் கருதி 1944ல் லாபத்தில் 25 சதவீதம்
ஊக்கத்தொகை வழங்கினார்.
பாமரனும் இல்லத்தரசிகளும் மெய்ஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் உணர்ந்து சிந்திக்கும் அளவிற்கு அவற்றை எளிமையாக்கியவர் வேதாத்திரி மகரிஷி.
உலக சமுதாய சேவா சங்கம்
1958 ல் உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவினார். இதன் கிளைகள் இந்தியாவில் மட்டுமின்றி, வெளி நாடுகளிலும் உள்ளன.
உடல் நலத்திற்கு உடற்பயிற்சி, உயிர் வளத்திற்கு காயகல்பம், மனவளத்திற்கு தியானம் கற்று கொடுத்தார். இப்போது அவர் வகுத்து கொடுத்த மனவளக்கலையை, 'யோகமும் மனித மாண்பும்' என்ற தலைப்பில் பல பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைக் கழகங்கள் பாடமாகக் கற்று கொடுக்கின்றன.
'அணு விஷம்' என்ற நாடக நுாலையும், 50 உரை நடை நுால்களையும், 2000 கவிதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய கவிதைகள் 'ஞானக்களஞ்சியம்' எனும் தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. நாடு, இனம், மொழி என்ற பேதங்களை கடந்து, எக்காலத்திற்கும் ஏற்றவையாக இருப்பதால், இவரது கவிதைகள் அமரத்துவம் பெற்று இலக்கியத்திற்கு இலக்கணமாகின்றன.
இவரது உலக சமாதானம் என்ற கவிதை நுாலைப்படித்த கிருபானந்த வாரியார்,''உலக சமாதான உத்தம நுாலைஅளவிலா அன்பால் அளித்தான் பலகலைகள்கற்ற வேதாத்திரி காசில் திருமுனிவன்நற்றவரும் போற்ற நயந்து'' என்று பாடியுள்ளார்.
ஈ.வெ.ரா. பெரியார், ''நீங்கள் எழுதின உலக சமாதான நுாலை பார்த்தேன். நீங்கள் அதையே செய்யுங்கள். ஒரு நாள் அது தான் வரப்போகுது,'' என்ற பாராட்டியுள்ளார்.
உலக அமைதி தினம்
மகரிஷி தன் பிறந்த நாளை உலக அமைதி தின விழாவாக கொண்டாடுமாறு கூறியுள்ளார். உலக அமைதிக்கு சமுதாய அமைதி தேவை என்றும், சமுதாய அமைதிக்கு தனி மனித அமைதி தேவை என்றும், தனி
மனித அமைதிக்கு தன்னிலை விளக்கமே சரியான தீர்வு என்றும், அதனை தருவது மனவளக்கலையே என்றும் மகரிஷி கூறினார். அவர் 22 முறை அமெரிக்கா சென்று வந்துள்ளார்.
ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்த போது, ''நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்?,'' என்று அமெரிக்கக்காரர் ஒருவர் கேட்டார். அவர், ''இந்து மதத்தில் உள்ள 'நம்பிக்கை', இஸ்லாம் மதத்தில் உள்ள 'தொழுகை', கிறிஸ்தவ மதத்தில் உள்ள 'தொண்டு', சைன மதத்தில் உள்ள 'ஜீவகாருண்யம்', புத்த மதத்தில் உள்ள 'ஆராய்ச்சி', இவை அனைத்தும் சேர்ந்ததே எனது மதம் (வேதாத்திரியம்) என்றார்.
இலக்கியப்பணி 'மொழிக்கு ஒழுக்கம் கூறும் நுால் இலக்கணம்,வாழ்க்கைக்கு ஒழுக்கம் கூறும் நுால் இலக்கியம்'இவ்வாறு, இலக்கணத்திற்கும், இலக்கியத்திற்கும் மகரிஷி தரும் விளக்கம் முன்னைப் பழமைக்குப் பழமையாகவும், பின்னைப் புதுமைக்குப் புதுமையாகவும் அமைந்திருப்பது இன்புறத்தக்கது. எனவே மகரிஷியின் இலக்கியம், வாழ்க்கைக்கு ஒழுக்கம் கூறும் நுால் என்பதில் சிறிதும் ஐயமில்லை. மகரிஷியின் இலக்கியத்தை கவிதை இலக்கியம், உரைநடை இலக்கியம் என இரு வகைப்படுத்தலாம். இரு வகைகளையும் மகரிஷி, இரு கண்களாகவே மதிக்கிறார். இரண்டிலும் அவர் காண விரும்புவது 'உலக அமைதி' ஒன்றே.
அன்று பெண் வயிற்றில் உருவாகிப் பெண்பால் உண்டு வளர்ந்தோம்; இன்று பெண் துணையால் வாழுகின்றோம். நாளையாவது பெண்ணின் பெருமையை உணர வேண்டுமென்று முக்காலம் உணர்ந்த ஞானியாகிய மகரிஷி பின் வருமாறு கவிமாரி பொழிகின்றார்.
''பெண் வயிற்றில் உருவாகிப்பெண்பால் உண்டே வளர்ந்தாய்பெண் துணையால் வாழ்கின்றாய்பெண்ணின் பெருமை உணர்,'' என பாடினார்.
மனைவி நல வேட்பு விழா அன்னையர் தினம், தந்தையர் தினம் கொண்டாடப்படுவதை அறிந்த மகரிஷி, மனைவிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் மனைவி நல வேட்பு விழாக் கொண்டாட நினைத்தார். ஏறத்தாழ 20 ஆண்டு காலமாக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை, பிறந்தகத்தை, உறவினர்களை, பிறந்த ஊரை விட்டுப்பிரிந்து, தன்னை நம்பி இல்லறம் ஆற்ற வந்த மனைவியை, ஒவ்வொரு கணவனும் என்றென்றும் போற்ற வேண்டும் என்று
மகரிஷி தம் மனைவி லோகம்பாளின் பிறந்த நாள் ஆகஸ்ட் 30 ஐ 'மனைவி நல வேட்பு நாள்' விழாவாக அறிவித்தார்.மனைவி நல வேட்பு முதலாம் விழா 1994 ஆக., 30ல் கூடுவாஞ்சேரியில் கொண்டாடப்பட்டது. அன்னை லோகாம்பாளின் இரக்கத்தையும், தியாகத்தையும் மகரிஷி எடுத்துக்கூறி அருகே அமர்ந்திருந்த அவரை பூரிப்படைய செய்து கவி பாடினார்.
தன் இறுதி மூச்சு உள்ளவரை, உலக அமைதியையே வலியுறுத்தி வந்தார். 'வாழ்க வையகம் வாழ்க வளமுடன்' என்ற தாரக மந்திரத்தை வழங்கிய வேதாத்திரி
மகரிஷி, 2006 மார்ச் 28 ல் இறைநிலை பெற்றார். அவரது சீடர்கள் அந்த நாளை ஆண்டு தோறும் 'வேதாத்திரி வேள்வி தினமாக' நடத்தி வருகிறார்கள்.- ப.வெள்ளை, மனவளக்கலைப் பேராசிரியர்,ஸ்ரீவில்லிப்புத்துார்,99762 77979

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SINGA RAJA - MADURAI,இந்தியா
13-ஆக-201521:49:29 IST Report Abuse
SINGA RAJA எங்களின் ஊனோடும், உயிரோடும் கலந்திருக்கும் மகா குருவாம், உலக சமாதானத்தை உலகெங்கிலும் முழங்கி, அதனை வாழ்வியல் தத்துவமாகக் கொண்டு அனைவரும் நடந்திட, ஆன்மீகத்தை எளிய முறையில், அனைவரும் ஏற்கும் வகையில், பிணக்கின்றி வழி வகுத்துக் கொடுத்த எங்களின் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் புகழ், என்றென்றும் எட்டுத்திக்கும் பரவி ஒலிக்கட்டும். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
C.B. Raju - Chennai,இந்தியா
13-ஆக-201518:49:12 IST Report Abuse
C.B. Raju வாழ்க வளமுடன் என்ற பொன்னான வார்த்தைக்கு சொந்தக்காரர். அவரிடம் வந்தவர்களை எல்லாம் வாழ வைத்த தெய்வம்.
Rate this:
Share this comment
Cancel
seenivasan - singapore,சிங்கப்பூர்
13-ஆக-201512:48:53 IST Report Abuse
seenivasan வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
iyarkai - SGP,சிங்கப்பூர்
13-ஆக-201512:11:30 IST Report Abuse
iyarkai வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Purushothaman.N,Kuwait. - Salmiya,குவைத்
13-ஆக-201510:16:46 IST Report Abuse
Purushothaman.N,Kuwait. வாழ்க... வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Ramesh E - kuwait,குவைத்
13-ஆக-201509:45:42 IST Report Abuse
Ramesh E மகரிஷியை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் ஓங்குக அவர் புகழ் - பற்றுக அவர் நெறி - பணத்தை துச்சமென நினைத்த மகான் - எளிமை அவர் குறிக்கோள் - அவரது தொண்டர்கள் அனைவரும் அந்த எளிமையை கடைபிடிப்பதை பார்த்திருக்கிறேன் - இனி அவர் வழியில் உலகம் மாறும் - நன்றி.
Rate this:
Share this comment
Yogi Prabhu - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஆக-201515:56:56 IST Report Abuse
Yogi Prabhuவாழ்க வேதாத்திரியம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை