மாவட்டத்தில் 3 தாலுகா உதயம்: மக்கள் மகிழ்ச்சி| Dinamalar

தமிழ்நாடு

மாவட்டத்தில் 3 தாலுகா உதயம்: மக்கள் மகிழ்ச்சி

Added : செப் 01, 2015 | கருத்துகள் (1)

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், மூன்று புதிய தாலுகாக்கள் உதயமாகி உள்ளன. மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்த அறிவிப்புக்கு, அரசு அலுவலர்கள் கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
தமிழக சட்டசபையில் நேற்று, ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய மூன்று தாலுகாக்கள் புதிதாக உதயமாகின்றன, என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஏற்கனவே, ஈரோடு தாலுகாவில், கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகள் இருந்தன. இதே போல் சத்தியமங்கலம் தாலுகாவில், தாளவாடி இருந்தது. புதிதாக உதயமாகி உள்ள கொடுமுடி தாலுகாவில், கொடுமுடி, சிவகிரி, கிளாம்பாடி ஆகிய உள் வட்டங்களும், மொடக்குறிச்சி தாலுகாவில் மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை ஆகிய உள் வட்டங்களும், ஈரோடு தாலுகாவில் ஈரோடு கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய உள் வட்டங்களும் வருகின்றன. இதே போல் தாளவாடி யூனியனுக்கு உட்பட்ட பகுதிகள் தனி தாலுகாவாக செயல்படும்.

இதுகுறித்து, ஈரோடு கலெக்டர் பிரபாகர் கூறியதாவது: கோபி கோட்டத்தில் தற்போது கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, பவானி, அந்தியூர் ஆகிய தாலுகாக்கள் வருகின்றன. சப்-கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., எல்லை அதிகரித்துள்ளது. பவானியில் ஆர்.டி.ஓ., நிலை அலுவலகம் அமைக்க வேண்டும் என்று, அரசுக்கு பரிந்துரை அனுப்பி இருந்தோம். அடுத்தாண்டு இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இம்மாவட்டத்துக்கு, மூன்று தாலுகா அறிவிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியான தகவல், என்றார்.

மக்கள் குறை தீர் கூட்டத்தில் அலுவலர்களிடையே பேசும் போது டி.ஆர்.ஓ., சதீஷ் கூறியதாவது: மூன்று புதிய தாலுகாக்கள் உதயமாகி உள்ளது. தமிழக அரசுக்கும், முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு, அவர் பேசினார். அப்போது அரசு அலுவலர்கள் கைதட்டி அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

பின்னர், டி.ஆர்.ஓ., நிருபர்களிடம் கூறியதாவது: அரசாணை வெளியாக வேண்டும். 15 அல்லது, 20 நாளில் அரசாணை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது கிடைத்தவுடன் தாலுகா அலுவலகம் செயல்பட துவங்கும். தனியார் அல்லது காலியாக உள்ள அரசு கட்டிடத்தில் முதற்கட்டமாக செயல்படும். இதன் மூலம் மக்கள் எளிதாக சான்றிதழ் பெறலாம். வளர்ச்சி பணிகள் விரைந்து மக்களுக்கு கிடைக்கும். இ-சேவை மையம், புதிதாக துவக்கப்பட்ட தாலுகாவில் செயல்படும். இதனால் மக்கள் அலைக்கழிப்புக்கு தீர்வு கிடைத்துள்ளது, என்றார்.

அலைச்சல் குறையும்; மலைவாழ் மக்கள்: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி, தமிழக - கர்நாடக மாநில எல்லை பகுதியாகும். தாளவாடி யூனியனில் உள்ள, 15 பஞ்.,கள் சத்தி தாலுகா அலுவலகத்தில் செயல்படுகிறது. இக்கிராமத்தினர், 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை வழியாக, 60 கி.மீ., தூரத்தில் உள்ள சத்தியமங்கலத்துக்கு வரவேண்டிய நிலை உள்ளது. தாளவாடி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டதால், இச்சிரமம் குறைந்துள்ளது.

இதுபற்றி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் திருதணிகாசலம் கூறியதாவது: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இந்த அறிவிப்பை விரைவாக செயல்படுத்தி, தாலுகா அலுவலக செயல்பாட்டை முடுக்கிவிட வேண்டும். மலை வாழ் மக்களின் அலைச்சல் குறைந்துளளது. புதிய தாலுகா அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்தால், அத்தனை மலைவாழ் மக்களும் பயன்பெறுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X