புத்தகம் எழுத என்ன செய்ய வேண்டும்? | Dinamalar

புத்தகம் எழுத என்ன செய்ய வேண்டும்?

Updated : செப் 02, 2015 | Added : செப் 02, 2015 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 புத்தகம் எழுத என்ன செய்ய வேண்டும்?

ஆய்வும் பதிப்பும் தொகுப்புமாக 121 நுால்களை வெளியிட்ட நிலையில், என் முதல் நுால் எழுத நேர்ந்த சூழலை நினைத்துப் பார்க்கிறேன். 1973ல் வெளிவந்த 'டாக்டர் மு.வ.வின் நாவல்கள்' என்பது என் முதல் நுால். அப்போது எனக்கு வயது 23. உண்மையில் நடந்தது என்ன என்றால், மு.வ.வின் நாவல்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற வேண்டும் என விரும்பினேன்.
எவ்வளவோ போராடியும் அது நிறைவேறவில்லை. எனினும், சோர்ந்து விடவில்லை நான். 'வாழ நினைத்தால் வாழலாம் - வழியா இல்லை பூமியில்' என்ற கண்ணதாசனின் மொழிகள் அந்த நெருக்கடியான நேரத்தில் எனக்கு வழிகாட்டின.'தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி' என்னும் மாணிக்கவாசகரின் வாக்கு என் வாழ்க்கையில் உண்மை ஆயிற்று. முனைவர் பட்ட ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொள்ள முடியாமல் போய்விட்டால் என்ன, அந்தப் பொருளிலேயே ஒரு நுாலை எழுதி வெளியிட்டு விடலாம் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.
நிதியை பெற்றது எப்படி :நுால் வெளியீட்டிற்கு வேண்டிய நிதியை எப்படிப் பெறுவது, என்ற சிக்கல் எழுந்தது. அப்போது ஆராய்ச்சி மாணவருக்கான உதவித் தொகையாக பல்கலைக்கழகம் வழங்கியது 250 ரூபாய் தான். அதற்குள் நுாலை வெளியிட எப்படி முடியும்? பேராசிரியர் ஒருவரிடம் நிதி வேண்டினேன். அவரோ கையை விரித்து விட்டார். செய்வதறியாது திகைத்து நின்ற வேளையில் பிறிதொரு நண்பர் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெறலாம் என்று வழிகாட்டினார். இவ்வளவு போதாதா?
வங்கிக்கு சென்று அதிகாரியிடம், என் விருப்பத்தை வெளியிட்டேன். இயல்பாகவே எழுத்திலும் - குறிப்பாக மு.வ.வின் நாவல்களிலும் - அவருக்கு ஈடுபாடு இருந்தது, எனக்கு நல்லதாயிற்று.
கடன் கிடைத்தது.:இவ்வளவு வேதனைகளையும் சோதனைகளையும் தாண்டித் தான் என் முதல் நுாலான 'டாக்டர் மு.வ.வின் நாவல்கள்' வெளிவந்தது. நுால் வெளியீட்டு விழா மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நிகழ்ந்தது; ஞான பீட விருது பெற்ற அகிலன் வாழ்த்துரை வழங்கினார். இரு நிலைகளில் என் முதல் நுால் குறப்பிடத்தக்கதாக அமைந்தது.
1. ஆய்வு மாணவரும் நுால் எழுதி வெளியிடலாம் என்ற புதிய போக்கினை அது உருவாக்கியது.2. ஒரு நாவலாசிரியரைப் பல கோணங்களில் அலசி ஆராயும் முதல் முயற்சியாக அமைந்து எழுத்துலகில் அந்நுால் தடம் பதித்தது. அதன் பின்னரே வாழும் படைப்பாளியை ஆய்வு செய்து நுால் எழுதும் போக்கு தொடர்ந்தது.
நுாலின் 1200 பிரதிகளும் ஓர் ஆண்டிற்குள் விற்றுத் தீர்ந்தன. தமிழ் கூறும் நல்லுகம் என்னை 'மு.வ. மோகன்' என்றும், 'மு.வ.வின் செல்லப் பிள்ளை' என்றும் குறிப்பிடத் தொடங்கியது.டில்லி சாகித்திய அகாடமி, ஓரியண்ட் லாங்மேன், வானதி பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், மீனாட்சி புத்தக நிலையம், சர்வோதய இலக்கியப் பண்ணை முதலான முன்னணிப் பதிப்பகங்கள் என் நுால்களை வெளியிட்டுள்ளன. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தன்னாட்சிக் கல்லுாரிகளிலும் பாட நுால்களாகவும் இடம் பெற்றுள்ளன.இதை குறிப்பிடக்காரணம், முயற்சி இருந்தால் உங்களாலும் புத்தகம் எழுத முடியும்.
அறிவுரை என்ன :என் நெடிய வாழ்க்கை அனுபவத்தில் இளம் எழுத்தாளர்களுக்கு நான் கூறும் அன்பான அறிவுரை இதுதான்:
1. 'ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு குழந்தையாவது பெற்றிருக்க வேண்டும்; ஒரு வீடாவது கட்டி இருக்க வேண்டும்; ஒரு நுாலாவது எழுதி இருக்க வேண்டும்' என்பார்கள். எனவே, நண்பர்களே, வாழ்நாளில் எப்பாடு பட்டாவது ஒரு நுாலாவது எழுதி வெளியிட்டு விடுவது என்னும் உறுதிமொழியை இன்றே - இக்கணமே - எடுத்துக் கொள்ளுங்கள்.2. சாதனை படைத்த அனைவருமே வேதனையையும், சோதனையையும் தாங்கியும் தாண்டியும் தான் வெற்றியாளராக உயர்ந்திருக்கிறார்கள். எழுத்துலகில் இமாலய வெற்றி பெற்ற பேராசிரியர் மு.வரதராசனாரும், 'செந்தாமரை' என்னும் முதல் நாவலைத் துணைவியாரின் நகையை அடகு வைத்துப் பணம் பெற்றுத் தான் வெளியிட்டிருக்கிறார். எனவே நுால் வெளியீட்டு முயற்சியில் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்காகவும் போராட்டங்களுக்காகவும் மனம் தளர்ந்து விடாதீர்கள்.'முயற்சி திருவினை ஆக்கும்' என்னும் வள்ளுவரின் மணிமொழியைக் கருத்தில் கொண்டு ஊக்கத்தோடு செயல்படுங்கள், ஆக்கம் தானாக உங்கள் இல்ல முகவரியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வந்து சேரும்!
ஏன் எழுதவில்லை
3. 'நீங்கள் இதுவரை ஏன் நுால் எழுதவில்லை?' என்று பத்துப் பேரைக் கேட்டுப் பாருங்கள். அவர்களுள் பாதிப் பேர், 'யார் படிப்பார்கள்?' என்பார்கள்; மீதிப் பேர், 'யார் வெளியிடுவார்கள்?' என்பார்கள். வாழ்க்கையின் வெற்றியே எதிர்பாரா செயலை எதிர்கொள்வதிலும், முடிவு எடுப்பதிலும் தான் அடங்கி உள்ளது என மேலாண்மை இயலில் கூறுவார்கள். காலத்திற்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்து, அதைக் கொடுக்கிற விதத்தில் கொடுத்தால் வெற்றி நிச்சயம்.
4. 'சித்திரமும் கைப் பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது போல், எழுத்தும் உங்களுக்கு வசப்படுவது பழக்கத்தால் தான்; முறையான பயிற்சியும் இடைவிடாத முயற்சியுமே துணை நிற்கும். நாள்தோறும் குறைந்தது பத்துப் பக்கங்களாவது படிப்பது, ஐந்து பக்கங்களாவது எழுதுவது என்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்; அதுவே பின்னாளில் வாடிக்கையாகி, வாழ்க்கை ஆகிவிடும்!
“காலை எழுந்தவுடன் படிப்பு - பின்புகனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமாலை முழுவதும் விளையாட்டு - என்றுவழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா!”என்னும் பாரதியின் வாக்கு, வளரும் பாப்பாவுக்கு மட்டும் அல்ல, வளர்ந்த நமக்கும் பொருந்தி வருவது தான்! எதையும் வழக்கப்படுத்திக் கொள்ளுதலில் தான் வாழ்க்கையின் வெற்றியே அடங்கியுள்ளது.
துறையை தேர்வு செய்க :5. தொடக்க நிலையில் எவரும் உங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்; எந்தப் பதிப்பகத்தாரும் உங்கள் எழுத்தை வரவேற்று ஆராதிக்க மாட்டார்கள். கவலைப்படாதீர்கள், 'தோன்றின் புகழோடு தோன்றுக!' என்னும் வள்ளுவரின் வாய்மொழிக்கு இணங்க, புனைகதை, கவிதை, நாடகம், கட்டுரை, தன்முன்னேற்றச் சிந்தனை என எந்தத் துறையில் நீங்கள் காலடி எடுத்து வைத்தால் சாதிக்க முடியும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ, அந்தத் துறையில் முழுமையாக, நுாற்றுக்கு நுாறு முனைப்புடன் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்; இமைப்பொழுதும் ேசராது பாடுபட்டு எழுதுங்கள். பிறகு 'நான், நீ' என்று முன்னணிப் பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு தாமாகவே உங்களைத் தேடி வரும்; உங்கள் நுால்களை வெளியிடும்.6. 'எத்தனை நந்திகள் வழி மறித்துத் தடுத்தாலும்; நல்ல எழுத்து என்பது உரிய இடத்தை ஒரு நாள் அடைந்தே தீரும்' என்பார் எழுத்தாளர் புதுமைப்பித்தன். நம்பிக்கையுடனும் தொலைநோக்குடனும் நன்கு திட்டமிட்டு எழுத்துலகில் சீராக நடை பயின்றால், உங்களுக்கு ஆன அங்கீகாரம் உடனடியாக இல்லை என்றாலும், உரிய நாளில் கிடைத்தே தீரும்!7. நிறைவாக, பேராசிரியர் மு.வ. ஒரு முறை எனக்கு எழுதியதைப் போல, “ தமிழ் உன்னை வளர்த்தது; தமிழை நீயும் வளர்க்க வேண்டும்!”- முனைவர் இரா.மோகன்எழுத்தாளர், பேச்சாளர்.94434 68286

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
maramande - Pardesi,இந்தியா
03-செப்-201502:54:47 IST Report Abuse
maramande அருமையான கட்டுரை
Rate this:
Share this comment
Cancel
Dr. D.Muneeswaran - Kavasakottai, Madurai,இந்தியா
02-செப்-201515:08:13 IST Report Abuse
Dr. D.Muneeswaran புதுமைய கருத்து எல்லோரும் நேசிப்பார் நன்றி
Rate this:
Share this comment
Cancel
Dr. D.Muneeswaran - Kavasakottai, Madurai,இந்தியா
02-செப்-201514:59:55 IST Report Abuse
Dr. D.Muneeswaran sir super i do like your written the essay
Rate this:
Share this comment
Cancel
Anbazhagan Ganesan - Chennai,இந்தியா
02-செப்-201509:49:26 IST Report Abuse
Anbazhagan Ganesan திரு. மோகன் அவர்களின் அலைபேசி எண் தவறு. சரியான அலைபேசி எண்ணை தரவும்.
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
02-செப்-201508:08:03 IST Report Abuse
Rangiem N Annamalai மிக்க நன்றி அய்யா .இது நல்ல உத்வேகம் /ஊக்கம் அளிக்கும் கட்டுரை.ஆனால் தமிழ் தாய் எழுத்தாளர்கள் அனைவரையும்(திரை இசை பிரிவை தவிர்த்து ) கடன் ,கஷ்டம் என்றே வைத்துள்ளார் .(பாரதி ,கம்பன் ,கண்ணதாசன் என ).கண்ணதாசன் இறப்புக்கு பின் அர்த்தமுள்ள இந்துமதம் விற்பனையில் சாதனை புரிந்து அவர்கள் வாரிசுகள் வளமுடன் வாழ வலி செய்தது வேறு .இருக்கும் பொது சரியான பொருள் கிட்டவில்லை என்று நான் நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை