குறைந்துவரும் குரு பக்தி!| Dinamalar

குறைந்துவரும் குரு பக்தி!

Updated : செப் 10, 2015 | Added : செப் 10, 2015 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
குறைந்துவரும் குரு பக்தி!

மாதா, பிதா, குரு, தெய்வம் என நம் முன்னோர் வகைப்படுத்தியதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அன்று குருவை வணங்காத, போற்றாத மாணவர்கள் இல்லை. ஆனால், இன்றைய நிலையில் 'குரு பக்தி என்றால் கிலோ என்ன விலை?' என்று கேட்கின்றனர்.
"கல்வி போதிப்பவர் மட்டுமே குருவல்ல. கல்வியுடன் வாழ்க்கை கல்வியையும், ஒழுக்கத்தையும் ஒருசேர கற்றுத் தருபவரே குரு. ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக மாற்றிக்கொள்ள யாரால் முடியுமோ அவர் தான் உண்மையான ஆசிரியர்" என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
மகாத்மா காந்தியோ ஆசிரியர்களை மற்றொரு கோணத்தில் பார்க்கிறார். "ஆசிரியர் என்பவர் மாணவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் மனதில் ஒன்றிணையும்போது, அவர் கற்பிப்பதை விட மாணவர்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்பவரே ஆசிரியர். எதையும் கற்றுக்கொள்ளாதவர் ஆசிரியருக்கு தகுதியற்றவர்" என்கிறார்.

யார் சிறந்த குரு :
இப்படி ஒவ்வொருவரும் தங்களது கோணத்தில் ஆசிரியர்களுக்குத் தேவையான குண நலன்களை வரையறுத்து கூறியுள்ளனர். ஏன் ஆசிரியர் குணநலன்களை வரையறுக்க வேண்டும்? எதற்காக ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்?
அந்த காலத்தில் தன்னிடம் பயிலும் மாணவர்களை, தங்கள் குழந்தைகளாக பாவித்து கல்வி போதித்தனர். குரு என்ற ஸ்தானத்தில் மாணவர்களின் மனங்களை செம்மைப்படுத்தும் கடமையும் அவர்களுக்கு இருந்தது. அப்பொழுதெல்லாம், ஆசிரியருக்கு குக்கிராமம் முதல் நகர்ப்புறங்கள் வரை முதல் மரியாதை கொடுக்கப்பட்டது. குருவின் வாக்கை, வழிகாட்டலை தேவவாக்காக பின்பற்றினர் மாணவர்கள்.
ஆசிரியரின் வழிகாட்டலை பின்பற்றியவர்களே உன்னத நிலையை எட்டியுள்ளனர். இன்றும் தனது ஆசிரியர்களின் போட்டோவை பூஜை அறையில் வைத்து பூஜிப்பவர்களும் உண்டு. இன்றைக்கு குரு பக்தி குறைகிறது ஏன்? சற்று சிந்திக்க வேண்டும்.
குழந்தையின் முதல் ஆசிரியர் அம்மா. அம்மாவின் கால்களை சுற்றித் திரிந்த குழந்தை பள்ளிக்கு சென்றவுடன் ஆசிரியரிடமும் அதே அன்பையும், அரவணைப்பையும் எதிர்பார்க்கிறது. ஆயிரம் குழந்தைகளுக்கு ஒருவர் அம்மா ஆக முடியுமா? முடியும்.
சுவாமி விவேகானந்தர் சொன்னது போல் நொடியில் தம்மை குழந்தைகளின் குணத்திற்கேற்ப மாற்றிக்கொள்கிறார்கள் ஆசிரியர்கள். அந்த வித்தையை அறிந்தவர்கள் அவர்கள் மட்டுமே. ஏதோ கல்வி கற்றுவிட்டால் மட்டும் ஒருவர் குருவாகிவிட முடியாது என்பதே அறிஞர்கள் வாதம்.
இயந்திரத் தனம் :
சீத்தலை சாத்தனார் வாழ்ந்த நாடு தானே இது? அவர் தனது மாணவர்கள் தவறு இழைக்கும் போதெல்லாம் தனக்கே தண்டனை கொடுத்துக்கொண்டவர். இன்றைய ஆசிரியர்கள் எல்லோரும் அப்படியெல்லாம் நடக்க முடியாது. ஆனால் மாணவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
குருகுல முறை மறைந்து விட்டது. குலக்கல்வியும் ஒழிந்து விட்டது. இன்றைய கல்வியின் நிலை, பாடத்திட்டம், தேர்வு தேர்ச்சி சதவீதம் என்று இயந்திரத்தனமாக மாறிவிட்டது. ஆனால் குழந்தைகளோ பள்ளியில் மிகச் சிறிய வயதில் கிடைத்த அன்பையும், அரவணைப்பையும் தொடர்ந்து பெற முயல்கின்றனர். காலத்தின் கட்டாயம், கல்விச் சுமையும், கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டிய ஆசிரியரின் போக்கும் இருவரிடையே விரிசலை உண்டாக்குகிறது.
கூட்டுக்குடும்பங்கள் அறவே இல்லை. அதனால் பெரியவர்களுடன் வாழக்கூடிய சந்தர்ப்பங்களும் கிடைப்பது இல்லை. அநேக வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலை பார்க்கின்றனர். உடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
பெற்றோரும் குழந்தைகளுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுக்கின்றனர். ஆசைகள் நிறைவேறினால் மகிழ்ச்சி அடையும் குழந்தைகள், எதிர்பார்ப்பு பொய்க்கும்போது பிடிவாதம் பிடிக்கின்றனர். ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனநிலை, அவர்களிடம் ஏற்படுவதில்லை. ஆகையால் ஆசிரியர்களும் தங்களிடம் விட்டுக் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதுவே ஆசிரியர்- மாணவர் உறவின் சமநிலை பாதிப்புக்கான துவக்கம்.

குற்றமாகும் கண்டிப்பு :
முன்பெல்லாம் ஆசிரியர் நடந்துசெல்லும்போது எதிரே வருவதற்கு, மரியாதை நிமித்தமாக மாணவர்கள் தயங்குவர். சந்திக்க நேரும் சமயத்தில் ஆசிரியருக்கு பணிவுடன் தவறாமல் வணக்கம் செலுத்துவர். இன்றைக்கும் ஆசிரியர் நடக்கும் தெருவில் வர, மாணவர்கள் தயங்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமே என்று!
தவறிழைக்கும் மாணவர்களை கண்டிக்க முடிவதில்லை. கண்டித்தால் ஆசிரியர்கள் குற்றவாளியாகின்றனர். மாணவர் மன்னிப்பு கேட்பது மறைந்து வருகிறது. ஆசிரியர்களே மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஆகையால் ஒரு சமயத்தில் ஆசிரியர் பணி, அறப்பணி என்பதை மறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தம் பணியை மட்டும் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்ற மனப்பான்மை ஏற்படுகிறது. கடமையை சரிவர ஆற்றாமல் ஆசிரியர்கள் ஏனோதானோ என்று பணிபுரியத் தொடங்கினால் சமுதாயச் சீரழிவே ஏற்படும்.

எண்ணங்கள் மாறவேண்டும்:
மகாபாரத அர்ச்சுனன் முதல் இன்றைய அப்துல்கலாம் வரை ஆசிரியர்கள் மீது வைத்திருந்த பக்தியை குழந்தைகளிடம் ஊட்டி வளர்க்க வேண்டும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஆசிரியருக்கு மடங்காத பிள்ளை எவரையும் நாளை மதிக்காமல் போகலாம். அதனால் தான் முதியோர் இல்லங்கள் அதிகரிக்கின்றன. சட்டங்களை கொண்டே எதையும் சரிசெய்ய முடியாது. ஆசிரியர் மீது குற்றம் மட்டுமே காணும் பண்பை அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக எல்லா ஆசிரிய பெருமக்களும் நல்லவர்கள் என வாதிடவில்லை. சில இடங்களில் சில தவறுகள் நடந்திருக்கலாம். இதனை களைய அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
உலகிற்கே வழிகாட்ட வேண்டிய ஆசிரியப்பெருமக்கள் மீது எவ்வித கரும்புள்ளியும் ஏற்பட அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு அரணாகத்தான் விளங்க வேண்டும். தமது சொந்த பிரச்னைகளை மாணவர்களிடம் திணிக்க கூடாது.
தவறு செய்யும் மாணவரை ஆசிரியர் கண்டிக்கும் உரிமை தரப்பட வேண்டும். ஆசிரியர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து கடமையாற்ற வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்- மாணவர் உறவு மேம்படுவதுடன் சமுதாயத்திற்கு நல்ல இளைஞர்களை கொடுக்க முடியும்.
அனைவரும் இணைந்து ஆசிரியர்களின் அடியொற்றி நடக்க முயற்சிக்க வேண்டும். ஆசிரியர்கள் அறிவாளிகளை மட்டுமல்ல நல்ல ஆன்மாக்களையும் உருவாக்குவார்கள்!
- வெ.சந்திரகலா, முதுகலை ஆசிரியை, மதுரை. 77082 18378.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
21-செப்-201507:21:18 IST Report Abuse
மதுரை விருமாண்டி மாதா, பிதா அப்புறம் தான் குருன்னு வரிசைப்படுத்தினாங்க.. வீடுகளில் மாதா, பிதாவுக்கும் கொடுக்கப்படும் மரியாதை இரண்டு தலைமுறைகளில் தலைகீழாக மாறி விட்டது.. அதன் எதிரொலி தான் எங்கும் கேட்கிறது.. குடும்பத்தை உடைத்து வந்து, செல்லம் கொடுத்து பிள்ளைகளை கெடுத்த கூட்டம் நாம்.. சுயநலக் கிருமிகளாக குழந்தைகளை வளர்த்த பெற்றோர்கள் நாம்.. ஒரு தலைமுறையை சகிப்புத் தன்மையே இல்லாமல் வளர்த்து விட்டுள்ளோம்.. இரு தலைமுறை தறுதலைகள் போக இன்னும் ரெண்டு மூன்று தலைமுறைகள் கடக்க வேண்டும்.. இன்னும் மோசமாவதும், சரியான பாதைக்கு திரும்புவதும் நாம் பெத்துப் போட்டு தருதலைகளாக்கிய இன்றைய தலைமுறையின் கையில் தான் இருக்கு..
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
10-செப்-201516:55:07 IST Report Abuse
LAX 'முன்பெல்லாம் ஆசிரியர் நடந்துசெல்லும்போது எதிரே வருவதற்கு, மரியாதை நிமித்தமாக மாணவர்கள் தயங்குவர். சந்திக்க நேரும் சமயத்தில் ஆசிரியருக்கு பணிவுடன் தவறாமல் வணக்கம் செலுத்துவர்.' - இன்றும் நான் அப்படியே செய்கிறேன்.. பள்ளி/கல்லூரி படிக்கும் காலத்திலும் வகுப்பெடுத்த சில ஆசிரியைகளுடன் தோழி (தோழமை) முறையிலும் பழகியிருக்கிறேன்.. அவர்களின் (பாடம் சம்பந்தமாக அல்லாது) வீட்டுக்கே சென்று பழகியிருக்கிறேன்.. கல்லூரியில் ஆசிரியைகள் சிலரிடம் (வயதுக்கே உரித்தான) தோழிகளுடன் சேர்ந்து கிண்டல்/வம்பும் செய்திருக்கிறேன்.. ஆனால் படித்து முடித்து வெளியில் வரும்போது அனைவரிடமும் பேசிக்கொண்டு நல்ல முறையிலேயே விடைபெற்றேன்.. இன்றும் அவர்களை எங்கு சந்திக்க நேர்ந்தாலும் பேசத் தவறுவதே இல்லை..
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
21-செப்-201507:25:52 IST Report Abuse
மதுரை விருமாண்டிமாதா, பிதா குரு தெய்வம்.. அம்மா என்கிற மனதுக்கினிய, நல்வார்த்தையை அசிங்கப்படுத்தி நாட்டையே நாசமாக்கும் சாராய மொத்த வியாபாரியை தெருவுக்குத் தெரு "அம்மம்மா"ன்னு அடிமைகள் நாமமிட்டு கெடுத்து வைத்து இருக்கிறார்கள். இது போன்ற அசிங்கமான அரசியலால் அர்த்தங்கள் அனர்த்தங்களாகி அகிலமெங்கும் அவதிப்படுகிறது இந்த சமுதாயம்....
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
10-செப்-201516:49:06 IST Report Abuse
LAX குழந்தைகளை (மாணவர்களை) அடிக்கக்கூடாது என்று என்றைக்கு சட்டம் வந்ததோ அன்றிலிருந்தே ஆரம்பித்துவிட்டது சாபக்கேடு.. இப்போ எல்லாமே உல்டா புல்டாதான்.. // அதனால்தான் நிஜமான கடமை உணர்வுடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியப்பெருமக்கள் கூட நமக்கேன் வம்பு என்று இருந்துவிடுகின்றனர்.. // சிலப்பல தனியார் பள்ளிகளில் ஆசிரியப்பெருமக்களின் நிலைமை இன்னுமே மோசம்.. (விற்பனைப் பிரதிநிதிகளைவிட மோசம்..) டார்கெட் வைத்து டார்கெட் செய்யப்படுகின்றனர்.. அங்குதான் வசதி படைத்த மாணாக்கர்களின் பாடு கொண்டாட்டம்/அலட்சியப் போக்கு அதிகரித்து காணப்படுகின்றது..
Rate this:
Share this comment
Cancel
archanakrishanan - thiruvannamalai,இந்தியா
10-செப்-201515:31:07 IST Report Abuse
archanakrishanan சூப்பர் வெரி வெரி சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
G. BALASUBRAMANIAN - New Delhi,இந்தியா
10-செப்-201514:08:18 IST Report Abuse
G. BALASUBRAMANIAN முதுகலை ஆசிரியை வெ. சந்திரகலாவின் இனிமையானதும் நியாயமானதும் ஆனா எண்ணங்கள் படிப்படியாக நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வணங்கி அருள் வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
K Naganathan - Chennai,இந்தியா
10-செப்-201513:45:16 IST Report Abuse
K Naganathan முன்பு அம்மா, அப்பா, குரு, தெய்வம் என்று இருந்தது... நேர்மை மாறா சமுதாயம் குருடர்கள் காட்டிய வழியில் பயணித்து, தெய்வத்தின் மகிமையை மறந்தது... தெய்வத்தின் மகிமையை மறந்த கயவர்களின் கயமை தனமான கொள்கையால், குருவின் மதிப்பு குறைந்தது... சினிமா எனும் மாயையில் நகைச்சுவை என்ற போர்வையில் தந்தையின் ஸ்தானத்தை கேவலபடுத்தி ஆகிவிட்டது... அன்னை எனும் மந்திர சொல்லை கொண்டு தகுதி இல்லாதவர்களை அழைத்து அதையும் கெடுத்தாகி விட்டது. இட ஒதுக்கீடு எனும் கேவலத்தை கொண்டு சமுதாயத்தை கெடுதாகி விட்டது... சிறுபான்மையினர் என்ற சொல்லால் பெரும்பான்மையினரை ஏமாற்றியாகி விட்டது.. விவசாயத்தை ஒழித்தாகி விட்டது... கல்வியின் தரத்தை கெடுதாகிவிட்டது.. சுயமரியாதை என்ற பெயரில் பெரியவர்களுக்கு அளிக்கும் மரியாதையை கெடுத்தாகி விட்டது... போதும் போதும்... என்று திருந்தும் இந்த சூழ்நிலை....
Rate this:
Share this comment
Cancel
Janarthanan mohan - Thanjavur,இந்தியா
10-செப்-201511:01:55 IST Report Abuse
Janarthanan mohan தவறு செய்யும் மாணவரை ஆசிரியர் கண்டிக்கும் உரிமை தரப்பட வேண்டும் என்பது உண்மைதான். அதே சமயம் ஆசிரியர் தன் கடமையை செய்ய பிறரை துன்புறுத்த கூடாது. தற்போது இவ் மனப்பான்மை ஆசிரியரிடம் குறைத்த அளவா உள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-செப்-201508:32:30 IST Report Abuse
Lion Drsekar தற்போது சுயமரியாதை மட்டுமே இருக்கிறது, தானே தலைவன், மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாது, இவன் கூறி நான் என்ன கேட்பது, ஆசரியர் என்றால் என்ன பெரிய கொம்பனா> அவன் என்ன ஜாதி, மதம், ஏதாவது கேட்டால் உடனே நீதிமன்றம், அவருக்கு வேலை இழப்பு, அடி, உதை, இதுதான் இன்றைய நிலை, இதற்குத்தானே நம்மவர்கள் ஆசைப்பாட்டார்கள், கிடைத்து விட்டது , அனுபவிப்போம், இனி யாராலும் இந்த புற்று நோயைக் குணப்படுத்தவே முடியாது, நீங்கள் வீட்டிற்குள் ஆசிரியரை மதித்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினாலும், வீட்டு வாசலில் வந்து கூட்டம் போட்டு, வீட்டில் உள்ளவர்களை அடித்து , நொறுக்கி, நீதிமன்றம் சென்று ,,,, இப்படி போய்விட்டது நாடு, எனவே பெரியோர்களை மற்றும் ஆசரியர்களை மதிக்கக்கூட பயப்பட வேண்டிய காலமாகிவிட்டது, எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்று முன்பு படித்தோம், இப்போது இறைவனே இல்லை என்று ஆகிவிட்டது, அப்போது ஆசிரியரும் இல்லை, வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
10-செப்-201507:54:56 IST Report Abuse
Natarajan Ramanathan தவறு செய்யும் மாணவரை ஆசிரியர் கண்டிக்கும் உரிமை தரப்பட வேண்டும். நான் எனது மகன்கள் படிக்கும் பள்ளிக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சென்று எனது மகன்கள் முன்னிலையிலேயே அவர்களது ஆசிரியர்களை சந்தித்து, எனது மகன்களை கண்டிக்கும் முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு என்பதை தெளிவுபடுத்துவேன். இதனால் அவர்கள் ஒழுக்கமும் அறிவும் பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை