மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி| Dinamalar

மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி

Updated : அக் 12, 2015 | Added : அக் 12, 2015 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி

இன்றைய தினம் பொது மருத்துவரிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் மூன்றில் ஒருவர் மூட்டுவலி காரணமாகவே வருகிறார். இந்தியாவில் மட்டும் 15 கோடிப் பேர், ஏதாவது ஒரு மூட்டுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் நோயாக இருந்தது. இப்போதோ இளைஞர்களையும் பருவப் பெண்களையும் பாதிக்கின்ற நோயாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
என்ன காரணம்
உடல் உழைப்பு குறைந்து வருவதும், உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கியக் காரணங்கள். நாட்டில் கணினித்துறை பெருவளர்ச்சி பெற்ற பிறகு, 35 சதவீத இளைஞர்கள், யுவதிகள் அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு மூட்டுத்தசை இறுகி மூட்டுவலி வந்துவிடுகிறது. மாறிவரும் உணவுமுறை மூட்டுவலியை ஏற்படுத்துகின்ற அடுத்த காரணம். இன்றைய இளைய தலைமுறையினர் நம் பாரம்பரிய உணவு முறையை ஓரங்கட்டி விட்டு, மேற்கத்திய கலாசாரத்துக்கு மாறிவிட்டார்கள். இதனால் சிறு வயதிலேயே உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள் வந்து அவதிப்படுகிறார்கள். இது நாளடைவில் மூட்டுவலிக்கும் வழி அமைத்துத் தருகிறது.
முழங்கால் மூட்டுவலி :மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான் என்றாலும் முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலியைத்தான் 'மூட்டுவலி' என்று பொதுவாகச் சொல்கிறோம். உடற்பருமன், முதுமையில் அடிபடுதல், மூட்டுச் ஜவ்வு கிழிதல், யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுகளில் படிவது, பாக்டீரியாக் கிருமித்தொற்று, ருமாட்டிக் நோய், காசநோய், கால்வளைவு போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள். மூட்டுவலி வந்துள்ள முழங்காலுக்கு அதிக வேலை கொடுத்தால் மூட்டில் நீர் கோர்த்து வீங்கி மூட்டுவலியை அதிகப்படுத்தும்.
எலும்பு வலுவிழப்பு நோய் :பொதுவாக ஒவ்வோர் எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். பழைய செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் உருவாகும். முதுமை நெருங்கும்போது இது தாமதமாகும். பழைய செல்லுக்குப் பதில் புதிய செல்கள் உருவாகாமல் போகும். இதனால் அங்கு சிறு சிறு துவாரங்கள் ஏற்பட்டு எலும்பு வலிமை இழக்கும். இதற்கு 'எலும்பு வலுவிழப்பு நோய்' என்று பெயர். இந்த நோய் முழங்காலைப் பாதிக்குமானால் குருத்தெலும்புகள் வலுவிழந்து மூட்டுவலியை ஏற்படுத்தும்.
வயதாக ஆக குருத்தெலும்பு தேய்ந்து அழற்சி உண்டாவது இயற்கை. இதை 'முதுமை மூட்டழற்சி' என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்பு, வழுவழுப்பாக இருக்கும். 'கொலாஜன்' எனும் புரதப்பொருள் இந்த வழுவழுப்புத் தன்மையைப் பாதுகாக்கிறது; குருத்தெலும்பை வலுவாக வைத்துக்கொள்கிறது. முதுமை நெருங்கும்போது இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்துவிடும்.
இதன் விளைவால், எண்ணெய் இல்லாத சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவது போல முழங்கால் மூட்டுகள் உரசிக்கொள்ளும்போது மூட்டுவலி ஏற்படுகிறது. அழற்சி ஏற்பட்டுள்ள குருத்தெலும்புத் திசுக்களில், சிறிது சிறிதாக 'எலும்பு முடிச்சுகள்' முளைப்பதாலும் மூட்டுவலி கடுமையாகிறது.
தேய்மானத்தை எப்படி அறிவது :சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நில்லுங்கள். மூட்டு பிடிப்பதுபோல் இருக்கிறதா? கொஞ்ச துாரம் நடந்து செல்லுங்கள். அந்தப் பிடிப்பு விட்டது போல் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு மூட்டுத் தேய்மானம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.
எலும்பு தேய்மானத்தால் மூட்டுவலி ஏற்படுபவர்களுக்கு, ஆரம்பத்தில் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிவாரணம் பெற முடியும். தொடை தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் மூட்டுவலி குறையும். சிலருக்கு முழங்கால் மூட்டுக்குள் ஸ்டீராய்டு ஊசி இட்டால் சில மாதங்களுக்கு வலி இருக்காது. இன்னும் சிலருக்கு 'ஆர்த்ராஸ்கோப்' மூலம் மூட்டின் உள்பகுதி சுத்தம் செய்யப்படும்.
இதன் பலனால் 6 மாதமோ ஒரு வருடத்துக்கோ மூட்டுவலி இல்லாமல் இருக்க முடியும். மூட்டில் தேய்மானம் மிக அதிகமாக இருந்தால் இந்த சிகிச்சைகள் எல்லாம் திருப்தி தராது. 'செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை'தான் சரியான தீர்வு.
தடுப்பது எப்படி :நமக்கு வயதாவதை எப்படித் தடுக்க முடியாதோ அப்படித்தான் மூட்டுத் தேய்மானமும். இதை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால் வேகமாகத் தேய்மானம் ஆவதை தடுக்கலாம்; தள்ளிப்போடலாம். அதற்கு என்ன செய்வது? இளம் வயதிலிருந்தே புரதச் சத்து நிறைந்த பால், பால் பொருள்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.அடர் பச்சைநிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள புரதச்சத்து மூட்டுகளில் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதால், அங்குள்ள குருத்தெலும்பு தேய்மானம் ஆவது தடுக்கப்படுகிறது.
தினமும் சிறிது நேரம் உடலில் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும். சூரிய ஒளி படுவதன் மூலம் தோலின் அடிப்பாகத்தில் வைட்டமின் - டி தயாராகிறது. இது எலும்புக்கு பலம் தரக்கூடியது.
சிறு வயதிலிருந்தே நடைப் பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். மூட்டுத் தேய்மானம் ஆவது தள்ளிப்போகும். முழங்கால் மூட்டுக்கு வலிமை தருகின்ற யோகாசனங்களும் இருக்கின்றன. அவற்றை முறைப்படி செய்துவந்தால் மூட்டுவலியை நிச்சயம் தள்ளிப்போட முடியும்.
உடல் எடையை வயதுக்கு ஏற்றபடி பராமரிக்க வேண்டியது கட்டாயம். நடக்கும்போது, நம் உடல் எடையைப்போல இரண்டு மடங்கு எடையை கால் மூட்டு தாங்குகிறது. உடல் எடை அதிகரித்தால் மூட்டுக்கு அதிகப்படியான வேலை உண்டாகிறது. இதனால் மூட்டு சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது. எனவே உடல் எடை சரியாக இருந்தால் மட்டுமே மூட்டுவலியைத் தவிர்க்க முடியும்.
- டாக்டர் கு.கணேசன்பொதுநல மருத்துவர்ராஜபாளையம்.gganesan95@gmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
12-அக்-201521:31:34 IST Report Abuse
fire agniputhran நல்ல குறிப்புகளை அளித்துள்ள மருத்துவர். கணேசன் அவர்களுக்கு நன்றிகள் பல. உழைப்பு குறைந்து விட்டது என்றால் இடது சாரிகள் கோபித்து கொள்ள போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Murukesan Kannankulam - Kannankulam,இந்தியா
12-அக்-201518:02:22 IST Report Abuse
Murukesan Kannankulam நன்றி ஐயா. உபயோகமான மருத்துவ குறிப்புகள். நல்ல விளக்கம்
Rate this:
Share this comment
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) அருமையான விளக்கம் கொடுத்த டாக்டர் கு.கணேசன்பொதுநல மருத்துவர் அவர்களுக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
12-அக்-201516:01:51 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அந்த காலத்துலே நம்ப அம்மா பாட்டி எல்லாம் உக்காந்து சமைப்பாங்க. உக்காந்து அம்மிலே, யந்த்ரத்துலே திரிப்பாக. கல்லுரலில் இட்லி தோசைக்கு அரைப்பாங்க. மாக்சிமம் 20 தரம் உக்காந்து எழுவாங்க. தரையிலே பாயிலேதான் படுப்பாங்க. காலையிலே கிணற்றிலே நீர் இறைத்து வாசலில் பசும்சானிய கரைச்சு கழுவி சுத்தம் செய்து கோலம் போட்டு வேலை துவங்கினால் மத்தியானம் வரை வேலைகள் இருக்கும். வேலைக்குப்போன ஆம்பளைகள் வீட்டுக்கு மதிய உணவுக்கு வருவாக. புருஷா எல்லாம் சாப்டதும் லேடிஸ் சாப்பிடுவாக , பள்ளிலேந்து குழந்தைகள் வந்ததும் அவாளுக்கு உணவு தந்து கவனிப்பாங்க. இரவு உணவுக்கு தோசையோ இட்லியோ தான் குழந்தைகலுக்கு. அநேகமா மோர்சாதம் தான் போடுவாக. மிச்சம் மீதத்தை தான் தின்று அடுக்களை எல்லாம் கழுவி சாணம் போட்டு மெழுகி கோலம் போட்டு போயி படுக்க இரவு 9, 10 ஆயிறும் இவ்ளோ வேலைகள் செய்து நன்னாவே தூங்குவாக. இன்று எல்லாத்துக்கும் மெஷின். காஸ் அடுப்பிலே நின்னுண்டே சமையல். உக்காந்தே இருக்காக. டிவி முன்னாடி பாதிநாள். ஹோட்டலுக்கு போவா, கண்டதை துன்ரா. வீட்டுலே நா 4/5 தோசை தின்னுவா, ஹோட்டல்ல போனா ஒரே ஒரு தோசைக்கு தேவுடு காத்து கரமுரன்னு ஒருதோசை துன்னுட்டு கேஸ் ப்ராப்ளம் வந்து டாக்டருக்கு 1000/ரூ க்குமேல தருவாக. ஏன் வராது மூட்டுவலி இடுப்புவலி எல்லாம்
Rate this:
Share this comment
Cancel
Thailam Govindarasu - Manama,பஹ்ரைன்
12-அக்-201515:40:43 IST Report Abuse
Thailam Govindarasu நன்றி ஐயா.
Rate this:
Share this comment
Cancel
Sankaran S - chennai,இந்தியா
12-அக்-201512:51:44 IST Report Abuse
Sankaran S உபயோகமான மருத்துவ குறிப்புகள். மூட்டு வலி உள்ளவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளலாமா என்பதை குறித்து தெரிவிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
BALAJI THORAPADI KOTHANDARAMAN - VELLORE,இந்தியா
12-அக்-201509:50:28 IST Report Abuse
BALAJI THORAPADI KOTHANDARAMAN சித்தா மற்றும் வர்மம் மருத்துவம் மூலம் வலியற்ற நிரந்தர சிகிச்சை பெறலாம். வர்மம் தமிழ் நாட்டின் மிகவும் தொன்மியான சிகிச்சை முறை ஆகும். நோயின் தன்மைக்கு ஏற்ப 1 வாரம் 12 வாரம் வரையில் பக்க விளைவுகள் இல்லாத வலிஅற்ற முறையில் செய்யப்படும் மருத்துவம். அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்க பட்டவர்களும் இந்த சிகிச்சை பெறலாம். நல்ல அனுபவம் உள்ள மருத்துவர்களை தேடி நலம் பெற வாழ்த்துக்கள். அனுபவத்தில் கண்டு கொண்டதை பகிர்கிறேன். வீணாக pain கில்லர் மாத்திரைகளும் அறுவை சிகிச்சைகளையும் கூடுமான அளவு தவிர்க்கவும். அவை உடல் நலதிருக்கு கேடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை