இன்று புதிதாய் பிறந்தோம்:| Dinamalar

இன்று புதிதாய் பிறந்தோம்:

Added : டிச 10, 2015 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 இன்று புதிதாய் பிறந்தோம்:


இருபதாம் நுாற்றாண்டின் விடியலில் தமிழ்க் கவிதை வானில் 'நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராது இருத்தல்' என்னும் எழுச்சிமிகு வாக்குமூலத்துடன் வலம் வந்தவர் பாரதியார்.
வாழ்வை பொறுத்த வரையில் அவர் விரும்பியது 'தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பம் மிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரை கூடிக் கிழப்
பருவம் எய்தி, கொடுங்கூற்றுக்கு இரை எனப் பின் மாயும் வேடிக்கை வாழ்வை அன்று; உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும் வாடிக்கை வாழ்வையும் அன்று. சுடர்மிகு அறிவு கொண்டு மண்ணில் நல்ல வண்ணம் வாழும் உயர்
வாழ்வினையே, -வையத்துள் வாழ்வாங்கு வாழும் தெய்வ வாழ்வினையே, - அவர் கவிதைகளில் பெரிதும் போற்றினார்.
மனிதன் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாக பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள பத்துக் கட்டளைகளை காண்போம்.
1. கவலையற்றிருங்கள்
கவலைப்படுவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறான் மனிதன். இங்ஙனம் எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பவனைப் 'பாவி' எனச் சாடுகின்றார் கவிஞர். வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டும் அவனது கவலை தீர்ந்துவிடாது. எனவே,
“நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கிஅஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை”
என்கிறார் பாரதியார். அவரது கருத்தில் கவலைப்படுதலே கருநரகம்; கவலையற்று இருத்தலே முக்தி.
2. அச்சம் தவிருங்கள் 'அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே' எனத் தற்கால பாரத மக்களின் நிலைமையைப் பற்றி நெஞ்சு பொறுக்காமல் வெதும்பிப் பாடியவர் பாரதி. 'அறம் செய விரும்பு!' என ஆத்திசூடியைத் தொடங்கிய அவ்வைக்கு மாற்றாக, 'அச்சம் தவிர்!' என ஆத்திசூடியைத் தொடங்கிப் புதுமை படைத்தவர் அவர்.
“யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்;எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்”
என்பதே அச்ச உணர்வைப் போக்கி வீர உணர்வைக் கைக்கொள்வதற்கு அவர் படைக்கும் தாரக மந்திரம்.
3. சஞ்சலமின்றி இருங்கள் நிறைவான - வாழ்வுக்கு, மனம் சஞ்சலம் இல்லாமல் - சலனம் இல்லாமல் - இருக்க வேண்டும்.
'தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே; ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு, பராசக்தி உளத்தின் படி உலகம் நிகழும்' என அறிவுறுத்துகின்றார் பாரதியார். 'திருவைப் பணிந்து, நித்தம் செம்மைத் தொழில் புரிந்து, வருவது வருக என்றே மகிழ்வுற்று இருக்க வேண்டும்' என்பதே அவரது அடிப்படையான வாழ்வியல் சிந்தனை.
4. போனதற்கு வருந்துதல் வேண்டா நடந்து போனதை நினைத்து வருந்துவதும், நடக்கப் போவதை எண்ணி மயங்குவதுமே சாதாரண மனிதனின் இயல்புகள். இவ்விரு இயல்புகளிலிருந்து விடுபட்டு, 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்ற - நம்பிக்கையோடு - வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த வேண்டும்.
“சென்றதுஇனி மீளாது... நீர்இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டுதின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்”என்பது அவர் அறிவுறுத்தும் வாழ்வியல் பாடம். 5. கோபத்தை வென்றிடுங்கள்
'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்பது வள்ளுவம். இதனை அடியொற்றி சினத்தின் கேட்டினையும் பொறுமையின் பெருமையினையும் பாரதியார் பாடியுள்ளார்.
“சினங் கொள்வார் தமைத்தாமே தீயாற்சுட்டுச்செத்திடுவார் ஒப்பாவார்...கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்...கொடுங் கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறிய தாகும்...”
6. அன்பு செய்யுங்கள் 'அன்பே சிவம்' என்பது திருமூலர் வாக்கு. 'வையகத்தில், அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார், இன்புற்று வாழ்தல் இயல்பு' என்பது பாரதி உணர்த்தும் வாழ்க்கை நெறி. சுருங்கக் கூறின், அன்பே அவரது மதம்.
7. தன்னை வென்றாளும் திறமையைப் பெறுங்கள் ஒருவன் வாழ்க்கையில் உயர முக்கியமானது அவன் தன்னை அறிதல்; - தன்னை ஆளல்; - தன்னை வெல்லல். 'தனைத்தான் ஆளுந்தன்மை நான் பெற்றிடில், எல்லாப் பயன்களுமே தாமே எய்தும்' என 'விநாயகர் நான்மணி மாலை'யில் பாடுவார். 'ஆத்ம ஜயம்' என்ற வேதாந்தப்பாடலில், “தன்னை வென்றாளும் திறமை பெறாதுஇங்கு
தாழ்வுற்று நிற்போமா?” என்றார். 8.விமானத்தைப் போல் ஒரு நல்ல மனத்தைப் பெறுங்கள் மனத் துாய்மையின் இன்றியமையாமையை நன்கு உணர்ந்த கவியரசர் பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே மனத்திற்குப் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
“ முன்றிலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று,மூன்றுலகும் சூழ்ந்தேநன்று திரியும் விமானத்தைப் போல் ஒருநல்ல மனம் படைத்தோம்” என்பது மனத்தை வாழ்த்திக் கவிஞர் பாடியிருக்கும் பாட்டு.
மனிதன் 'பன்றியைப் போல் இங்கு மண்ணிடைச் சேற்றிற் படுத்துப் புரளும்' மனதினை வேண்டாது, 'விமானத்தைப் போல் விண்ணில் பறந்து வாழும்' மனத்தினைப் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்.
“மனத்தைக் குழந்தை மனம் போலே வைத்துக் கொள்ளுங்கள். கபடமின்றி இருங்கள் என்று பாரதியார் ஓயாமல் உபதேசிப்பார்” என அவரது துணைவியரான செல்லம்மா பாரதி குறிப்பிடுவார்.
9. தெய்வம் காக்கும் என நம்புங்கள்
நம் வாழ்வில் வரும் சோதனைகள், - நெருக்கடிகள், - துன்பங்கள், - தொல்லைகள் எல்லாவற்றையும் 'மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே' - 'எல்லாம் புரக்கும் இறை நம்மையும் காக்கும்' என்ற நம்பிக்கையாலே - வெற்றி கொள்ளலாம் என ஆழமாக நம்புகின்றார் பாரதியார்.
தேடி இறைவனைச் சரணடைந்தால், கேடதனை நீக்கி, கேட்ட வரம் தருவான் என்கிறார்.
“ நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!”
10. அமரத் தன்மை எய்துங்கள்
'அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி. அகத்திலே அன்பினோர் வெள்ளம். பொழுதெலாம் இறைவனது பேரருளின் நெறியிலே நாட்டம், கரும யோகத்தில் நிலைத்திடல்' என்னும் இப் பண்புகளையே அருளுமாறு எல்லாம் வல்ல
பரம்பொருளிடம் வேண்டுகோள் விடுக்கிறார் பாரதியார். அவர் சுட்டும் இப் பண்புகள் எல்லாம் ஒரு மனிதனின் வாழ்வில் - ஆளுமையில் - படியுமாயின், அவன் மண்ணிலேயே விண்ணைக் காண்பான்; அமரத் தன்மையை அடைவான் என்பது உறுதி.
பாரதியார் வலியுறுத்திப் பாடியுள்ள இப் 'பத்துக் கட்டளை'களைக் கசடறக் கற்று, அவற்றின் வழி நிற்கும் மனிதனின் வாழ்வு நிறைந்த வாழ்வாக விளங்கும். இம் மண்ணுலக வாழ்விலேயே தெய்வநிலை மனிதனுக்கு வந்து சேரும்!
- பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர்,- பேச்சாளர்.94434 58286

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun Muthuswamy - Chennai,இந்தியா
12-டிச-201520:41:56 IST Report Abuse
Arun Muthuswamy இந்த மழையினால் மக்கள் தினம் தினம் படும் கஷ்டங்களை செய்திகளில் பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. தரமான சாலைகளும், முறையான நீர் வடிகால்களும் இருந்து இருந்தால் சென்னை மக்கள் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்து இருங்க மாட்டார்கள். நல்ல அகலமான சாலைகள், சாலையின் இரு புரங்களிலும் 30/40 அடிக்கு ஒரு மழைநீர் தொட்டி அமைத்து சாலை நீர் அவற்றில் சேரும் படி செய்ய வேண்டும். ஒரு முறை சாலை போட்டால், அதை தோண்ட அனுமதிக்க கூடாது, அப்படியே அனுமதித்தாலும், அந்த சாலையை அவர்களே குறிப்பிட்ட காலத்திற்குள் போட்டுத் தர வேண்டும். ஏரி குளங்களை தூர்வாரி அகலபடுத்த வேண்டும். ஆக்ரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். வீடுகளிலும், தெருக்களிலும் மழை நீர் வடிகால்கள், மரங்கள் வைக்க வேண்டும். தெருக்களில் வைக்கப்படும் குப்பை தொட்டிகளை அகற்றிவிட்டு, தினமும் வண்டிகளில் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்தால், சாலைகளும் தெருக்களும் சுத்தமாக இருக்கும். பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும். அரசியல்வாதிகளே, ஒரு சராசரி மனிதனுக்கு இருக்க இடமும், மூன்று வேளை உணவும், உடுக்க உடையும் இருந்தால் போதும். இவையெல்லாம் அளவுக்கு அதிகமாகவே உங்களுக்கு கிடைக்கிறது. இன்னும் எவ்வளவுதான் கொள்ளை அடிப்பீர்கள்? எங்களுக்கு எந்த இலவசமும் வேண்டாம், இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தால் போதும். தற்போது பல தரப்பிலிருந்து பல ஆயிரம் கோடிகள் நிவாரண நிதியாக கிடைத்து வருகிறது, இனியாவது அரசு, தகுந்த வள்ளுனர்களின் உதவியுடன் முறையான திட்டம் தீட்டி செய்ல்பட வேண்டும். எப்பொழுதுதான் மக்களுக்காக நல்லது செய்வீர்கள்? எப்பொழுது தமிழகம் முன்னேறும்? இந்த கேள்விக்குறி எப்பொழுது ஆச்சரியக் குறியாக மாறும்?
Rate this:
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
11-டிச-201514:18:53 IST Report Abuse
mrsethuraman  பாரதியாரின் சிந்தனைகள் இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிகவும் தேவைபடுகிறது
Rate this:
Share this comment
Cancel
Dr. D.Muneeswaran - Kavasakottai, Madurai,இந்தியா
11-டிச-201512:51:31 IST Report Abuse
Dr. D.Muneeswaran நன்று மிக அருமையான கட்டுரை
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
11-டிச-201511:48:25 IST Report Abuse
N.Purushothaman பாரதியார் பிறந்த இந்த நன்னாளை மகா சக்தி தினமாக கொண்டாட வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
11-டிச-201511:47:35 IST Report Abuse
N.Purushothaman எட்டையபுரம் கண்டெடுத்த சமூக சீர்திருத்த ஜோதிச்சுடர் தான் இந்த பாரதியார்.....அவரின் வார்த்தைகளில் ஈர்ப்பு கொள்ளாதோர் என்பதே தமிழகத்தில் இல்லை என்று கூறலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை