உள்ளம்மகிழ இல்லந்தோறும் நூலகம்| Dinamalar

உள்ளம்மகிழ இல்லந்தோறும் நூலகம்

Updated : டிச 21, 2015 | Added : டிச 20, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
உள்ளம்மகிழ இல்லந்தோறும் நூலகம்

'புத்தகங்கள் பொக்கிஷங்கள், புத்தகம் வாங்கிப் புத்தகம்( வீடு) பெறுவோம், ஏடுகள் வாங்கின் கேடுகள் நீங்கும், நுாலறிவே ஆகுமாம் நுண்ணறிவு, நுால் பல கல், கற்றது கையளவு கல்லாதது உலகளவு' போன்ற தொடர்கள் புத்தகங்களின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றன.நமது வீட்டில் பூஜையறை, சமையலறை, உணவறை, படுக்கையறை, உடற்பயிற்சியறை இருப்பதை போன்று புத்தகங்களுக்கென தனியறை ஒதுக்கி, வீட்டிலேயே அறிவுத் திருக்கோயிலாம் நுாலகத்தை ஏற்படுத்த வேண்டும்.

'கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற எண்ணம் இன்று உருவாகி வருகிறது. 'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பதைப் போல, 'நுாலகம் இல்லா வீட்டின் அழகு' பாழாகிக் கிடக்கிறது.புத்தகங்கள் எனப்படுபவை, ஒரு கணிசமாான உலகம். பரிசுத்தமான நல்ல உலகம். 'உடலுக்கு உடற்பயிற்சி எப்படியோ, அப்படித்தான் மனதிற்கு பயிற்சி புத்தகங்களை வாசிப்பது' என்றார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் வீடுகளில் இருபது முதல் முப்பது நுால்களைக் கொண்ட சிறிய நுாலகங்களை ஏற்படுத்தி, தினமும் ஒரு மணி நேரமாவது வாசித்தால், தானாகவே குழந்தைகளுக்கும் வாசிக்கும் பழக்கம் உருவாகும்.
புத்தகங்கள்தான் ஒருவரை முழு மனிதனாக மாற்றும்' என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். 'புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத இருட்டறை போன்றது' என்ற கூற்று மிகவும் சரியே.


அறிவுத்தேடல்:

ஒவ்வொருவரும் தனக்கான ஊதியத்தில் ஒரு சிறு தொகையை நுால்கள் வாங்க முதலீடு செய்ய வேண்டும். நுால்கள் வாங்கச் செலவு செய்வது, செலவு அல்ல; அது நம் அறிவுத் தேடலுக்கான வரவு. ஒரு மாதத்திற்கான மளிகை, பால், மின் கட்டணம், குடிநீர் கட்டணம், எரிவாயுக் கட்டணம், செய்முறை செலவுகள் போன்று நுால்கள் வாங்க ஒரு சிறு தொகை ஒதுக்கீடு செய்து, நம் வீட்டிலேயே சிறு நுாலகம் ஒன்றை உருவாக்கலாம். அதன் மூலம் நமது குடும்பமே வாசித்து,
அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள் அறிவு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், இனிய பண்புள்ளவர்களாகவும், வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் விளங்குவார்கள்.
நல்ல புத்தகங்களைப் படித்துக் கெட்டுப்போனதாக இந்த உலகில் நாம் யாரையும் கூறிவிட முடியாது. புத்தகம் படிப்பதைக் கடமையாகக் கொண்டவர்களாகவும், வாசிப்பதை உயிர் என மதித்தவர்களும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள்.


நல்ல நண்பன்:

ஒவ்வொரு நண்பனும் ஒரு புத்தகத்திற்கு சமமானவன் என்பதைப் போல, ஒவ்வொரு புத்தகமும் ஒரு நண்பனுக்குச் சமமானது. புத்தகம் பெற்றோரைப் போல அறிவுரை வழங்கும். உற்ற நண்பனைப் போல ஆலோசனை வழங்கும். அதனால்தான் அறிஞர் ரஸ்கின், 'புத்தகங்களைப் போன்ற சிறந்த கருவூலம் வேறு எதுவும் மனிதனுக்கு இருக்க முடியாது' என்றார். 'ஒரு நுாலகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது' என்றார் பேரறிஞர் விக்டர் ஹியுகோ.
புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பதின் மூலம் பெற்றோர்களால் செய்ய முடியாத எத்தனையோ நல்ல காரியங்களை அந்த புத்தகங்கள் செய்துவிடும்.குழந்தைகளுக்கான நுால்கள்: ஆத்திச்சூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போது தமிழில் கற்கப்படும் முதல்நுால். 'ஆத்திச்சூடி கொன்றைவேந்தன்' ஆகிய நுால்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களைக் காணலாம்.
பஞ்சதந்திரக் கதைகள், மாயா ஜாலக் கதைகள், நீதிக்கதைகள், மரியாதை ராமன் கதைகள், பரமார்த்த குரு கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்யன் கதைகள், அக்பர்-பீர்பால் கதைகள், ராயர்-அப்பாஜி கதைகள், முல்லாவின் வேடிக்கைக் கதைகள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், திருக்குறள், கவிமணி பாடல்கள், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல்கள், புதிர்கள், படக்கதைகள், தினமலர்- சிறுவர்மலர், அம்புலிமாமா, பூந்தளிர், அரும்பு போன்ற சிறுவர் இதழ்களையும், புத்தகங்களையும் நம் வீட்டு நுாலகத்தில் வாங்கி வைக்கலாம்.


நுாலகங்களால் உயர்ந்தோர்:

நுாலகங்களைப் பயன்படுத்தித் தங்கள் வாழ்வில் உயர்ந்த அறிஞர் பெருமக்களை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர், நுாலகம் திறக்கும்போது முதல் ஆளாகச் சென்று கடைசி ஆளாகத் திரும்புவாராம். ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய தனியார் நுாலகத்தை அமைத்த பெருமை அவரைச் சேரும்.
'அடிமைகளின் சூரியன்' எனப் போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன், புத்தகங்களைப் படித்தே அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்தவர். லண்டன் நுாலகத்தில் அரிய நுால்களைப் படித்து ஆய்வு செய்த காரல்மார்க்ஸ், உலகின் பொதுவுடைமைத் தந்தையாக உயர்ந்தார்.காஞ்சிபுரத்திலிருந்து, முதுகலைப் பட்டதாரியான ஓர் இளைஞன்,சென்னை நோக்கிச் சென்றான். முடிவில் தமிழகத்தின் முதல்வராகத் திரும்பினான் என்று பேரறிஞர் அண்ணாவைப் புகழ்வார்கள். அவர், சென்னை கன்னிமாரா நுாலகத்திலுள்ள அனைத்து நுால்களையும் படித்தவர். இவர்கள் ஒரு சிறு உதாரண புருஷர்கள் மட்டும்தான்.


நுாலகச்சுற்றுலா:

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உறவினர்களை அறிமுகம் செய்து வைப்பதைப்போல, நுால்களையும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். பூங்காக்களில் பூக்களைப் பார்த்து மகிழ்வதைப் போல, நுாலகங்களில் புத்தகங்களைப் பார்த்து குழந்தைகள் மகிழ்வார்கள். சிறுவர் இதழ்கள், படக்கதைகள், நன்நெறிக் கதைகள் போன்றவற்றைப் பார்க்கும்போது, தனக்கான உலகத்தினுள் உலவுவதாக நினைப்பார்கள்.
வீட்டுச் சிறைக்குள் அடைபடாமல், ஒரு சிட்டுக்குருவியைப் போல, சுதந்திர வானில் சுற்றித்திரிய வீட்டுக்கருகே உள்ள நுாலகத்திற்கு அழைச்சென்று, நுால்களோடு ஒரு நட்புறவை உருவாக்கப் பெற்றோர் முயல வேண்டும்.
கோயில் திருவிழாக்களுக்கு அழைத்துச் சென்று, நமது பாரம்பரியத்தைச் சொல்லிக் கொடுப்பதைப் போன்று, ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். புத்தகங்களின் மணம், குழந்தைகளின் மனதிற்குள் ஊடுருவி, நல்ல மாற்றத்தை ஏற்படுத்தித்தரும்.
எந்த குழந்தை அதிர்ஷ்டசாலி: 'அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி' என்றார் கான்மெக்கலே. 'மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள்' என்கிறது சீனப்பழமொழி. 'எந்த வீட்டில் நுாலகம் உள்ளதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது' என்றார் பிளாட்டோ. வாழ்க்கையில் படிப்படியாய் உயர, சிறு பருவத்திலிருந்தே நுால்களை படிக்கும் எண்ணத்தை விதைப்போம்.
மேதைகள் பலரை மேன்மையடையச் செய்த புத்தகம், நம் பிள்ளைகளையும் உயர்த்த, இல்லந்தோறும் நுாலகம் அமைத்து உள்ளம் மகிழ்வோம்.
- மு. மகேந்திரபாபு, தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இளமனுார். 9786141410

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju - Chidambaram,இந்தியா
21-டிச-201509:05:59 IST Report Abuse
Raju மிகவும் அருமையான தகவல் நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை