உணவே மருந்து 4| Dinamalar

சிறப்பு பகுதிகள்

உணவே மருந்து

உணவே மருந்து 4

Added : டிச 31, 2015
Advertisement

இந்த மருத்துவ தொடரில் அவசியம் கருதி ஒரு சரித்திரக்கதை... ஒருமுறை மன்னர் கிருஷ்ண தேவராயர் மந்திரிகளை பார்த்து ஒரு கேள்வியை முன்வைத்தாராம் நமது நாட்டில் மக்கள் எந்த தொழிலை அதிகம் பேர் செய்கிறார்கள்...? என்று. அதற்கு பல மந்திரிகளும் பலவிதமான தொழில்களை சொன்னார்களாம்.

பீர்பால் மட்டும் , நமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வைத்திய தொழிலை தான் செய்கிறார்கள் என்றாராம்.


அவரது பதிலை வெறும் வேடிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்ட மன்னர் நகர்ந்துவிட்டாராம். தம்முடைய பதிலில் இருக்கும் உண்மையை மன்னருக்கு உணர்த்த விரும்பிய பீர்பால் மறுநாள் அரசவைக்கு வரவில்லையாம். மிக முக்கியமான சில ஆலோசனை கூட்டத்தில் பீர்பாலும் இருந்தால் நல்லது என நினைத்த மன்னர் பீர்பாலை அழைத்து வர சொல்லி ஆள் அனுப்பினாராம். அந்த ஆள் திரும்ப வந்து மன்னா... பீர்பால் கடுமையான காய்ச்சலில் படுத்திருக்கிறார், இப்போது வர இயலவில்லை என்று வருத்தம் தெரிவிக்கச் சொன்னார் என்று சொன்னாராம். மன்னரோ ”அட.... சுக்கு, மிளகு, சீரகம், சித்தரத்தை தட்டிபோட்டு ஒரு கஷாயத்தை குடித்துவிட்டு உடனே வரச்சொல்...” என்று அந்த காவலாளியை அனுப்பினாராம்.


சற்று நேரத்தில் கடும் குளிரில் நடுங்கியபடி உடலில் பெரும் போர்வையை சுற்றிக்கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தாராம் பீர்பால். அவரை பார்த்த மன்னர், அட உனக்கு குளிர் காய்ச்சலா... அப்படியானால் அந்த கஷாயத்தில் கொஞ்சம் மிளகு கூடுதலாக போட்டு குடித்திருக்க வேண்டும் என்று சொன்னாராம்...


போர்வையை உதறியபடி... "அறுபத்து ஏழு...” என்றாராம் பீர்பால்...


மன்னருக்கு ஆச்சர்யம். இதுவரை குளிரில் நடுங்கியபடி இருந்த பீர்பால் என்ன திடீரென அறுபத்தேழு, என சொல்கிறார் என்ற ஆச்சர்யம்.


பீர்பாலே அதற்கு பதில் சொன்னாராம். மன்னா ''எனக்கு காய்ச்சல் என்ற உடன் அக்கம் பக்கம் இருந்தவர்கள், வரும் வழியில் பார்த்தவர்கள், வாயில் காவலாளி உட்பட அறுபத்தாறு பேர் வைத்தியம் சொல்லி விட்டார்கள். இப்போது நீங்களும் மன்னர் வேலையை விடுத்து வைத்தியம் சொல்கிறீர்கள். என் காய்ச்சலுக்கு மருந்து சொன்ன நீங்கள் அறுபத்தேழாவது வைத்தியர். இதை தான் நான் நேற்று சொன்னேன், நம் நாட்டில் பெரும்பாலானோர் வைத்தியர் வேலைதான் பார்க்கிறார்கள், என்றாராம்.


இப்படி நடந்ததா இல்லையா என்பது நமக்கு தெரியாதென்றாலும், கதையில் இருக்கும் உண்மையை நிச்சயம் நாம் ஒவ்வொருவரும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.


நமது முன்னோர்கள் காலத்தில் ஒவ்வொருவருமே வைத்தியர்தான். அவர்களில் பெரும்பாலானோர் மூலிகைகளை பற்றி அறிந்தும், அதன் பலன்களை புரிந்தும், அன்றாட வாழ்க்கையில் உபயோகித்தும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் உபயோகித்த மூலிகை மருந்துகள் தினசரி சமையலில் கூட உபயோகமாக இருந்தது. எந்த விதமான பக்க விளைவுகளையும் கொண்டுவராததாக இருந்தது.


ஆனால், இன்றைய காலகட்டத்தில் வாழ்பவர்களும் அப்படி வைத்தியர் வேலைகளை செய்கிறார்கள். ஆனால், இவர்களின் மருந்துகளோ, உள்ளூர் பெட்டிக்கடையில் அனாசின், சாரிடான், நோவாஜின் என பேர் சொல்லி வாங்குவது முதல், உள்ளூர் ஆங்கில மருந்துக் கடைகளில் ரத்த அழுத்தம், வாயு பிரச்னைகள், நெஞ்சு எரிச்சல்கள் போன்றவற்றிற்கான அதிக ரசாயனங்கள் கொண்ட மருந்துகளை பெயர் சொல்லி வாங்குவது வரை செய்கிறார்கள்.


ஆனால், தற்கால திடீர் மருத்துவர்கள் வாங்கிக் கொடுக்கும் /உட்கொள்ளும் மருந்துகளோ எத்தைகைய பக்க விளைவுகளை கொண்டு வந்து ஆரோக்கியத்தை சீரழிக்கும் என்பதை அறியாமல் இருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்..


ஆகவே, எங்கோ விளம்பரங்களில் பார்ப்பதையும், யாரோ சொல்வதையும் செயல்படுத்த முனைந்து ஒரு சாதாரண உடல்நலக்குறைவை சரிசெய்கிறேன் என்று வேறொரு பேராபத்தை வாங்காமல், கூடுமானவரை இயற்கை மருந்துகளை, அதுபற்றி நன்கு தெரிந்தவர்களின் ஆலோசனையுடன் உட்கொண்டு பக்கவிளைவுகளற்ற நிரந்தர ஆரோக்கியம் கிடைக்க வேண்டும்.. அதற்கான அடிப்படை புரிதல்களை, சிறு சிறு தகவல்களை, நாமே சுய ஆரோக்கியத்திற்கு செய்யும் சிறு சிறு பயிற்ச்சிகளை இனி வரும் கட்டுரைகளில் காணலாம்.


-ஈஸ்வரி, பீனிக்ஸ் ஹெல்த் கேர், அக்குபஞ்சர் மற்றும் உணவு மருத்துவம், 92/10, நூறடி சாலை, வடபழனி, சென்னை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X