அன்பே சிவம்...
இந்த விஷயம் நடந்து முடிந்த போது சந்தோஷப்படுவதா? கவலைப்படுவதா? எனத்தெரியவில்லை
படித்து முடித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்
கடந்த சில நாட்களுக்ககு முன் ஈரோடு முத்துவேலப்பர் வீதியில் பிறந்து சில நாட்களேயான நாய்குட்டி ஓன்று எப்படியோ பிரிந்து தத்தக்கபித்தக்கா நடையோடு வந்தபோது அந்த தெருவில் இருந்த இதர நாய்கள் குட்டியை குலைத்து மிரட்டி விரட்டிக்கொண்டு இருந்தன.
அந்த சமயம் யாரும் எதிர்பாரதவிதமாக ஒரு மரத்தில் இருந்து குதித்த பெரிய ஆண் குரங்கு ஒன்று பெரிய நாய்களை விரட்டிவிட்டு குட்டி நாயை பாதுகாப்பாக துாக்கிக்கொண்டு ஒடியது.
கொஞ்ச நேரத்தில் அல்லது கொஞ்ச துாரத்தில் குரங்கு நாயை விட்டுவிடும் என்று பார்த்தால் பொழுது இருட்டும் வரை விடாமல் வைத்திருந்தது.
இருட்டியபிறகு அந்த பகுதியில் இருந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
பொதுவாக நாய்க்கும் குரங்குக்கும் ஆகவே ஆகாது என்பார்கள் ஆனால் இங்கே நேர்மாறாக இருக்கிறேதே.குரங்கு குட்டி நாயை வைத்துக்கொண்டு என்ன செய்யும் குட்டிநாய்தான் குரங்கோடு எப்படி இருக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக குட்டி நாயின் பசி தாகத்திற்கு என்ன தீர்வு என்பதற்கான விடை கிடைக்காமல் அன்றைய இரவை கழித்த அந்த பகுதி மக்கள் விடிந்ததும் தேடியது இந்த இரண்டு ஜீவன்களைத்தான்.
எதிர்பார்த்தது போலவே ஒரு கையில் நாயை துாக்கிக்கொண்டு இன்னோரு கையால் மரத்திற்கு மரம் தாவியபடி வந்த குரங்கு, ஒரு சுவற்றில் உட்கார்ந்து நாயை கிழே இறக்கிவிட்டது.நாயும் கத்திக்கொண்டே கொஞ்ச துாரம் போனது உடனே குரங்கு ஒடிப்போய் குட்டியை துாக்கிக்கொண்டுவந்து பக்கத்தில் வைத்துக்கொண்டது இப்படியே பொழுது கொஞ்சநேரம் சென்றது.
இதைப்பார்த்த மக்கள் குரங்குக்கு பழம் பிஸ்கட் போன்றவையையும், நாய்குட்டிக்கு பாத்திரத்தில் பாலையும் ஊற்றி வைத்தனர்.
பழம்,பிஸ்கட்,பாலை இரண்டும் பங்கிட்டு சாப்பிடவே நாய் பட்டினியாக கிடக்குமோ என்ற சந்தேகத்திற்கு விடை கிடைத்தது.
இரண்டாம் நாள் பொழுது இப்படியே கழிந்தது.
மூன்றாம் நாள் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்புடன் மக்கள் விடியலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
பொழுதும் விடிந்தது,குரங்கு மற்றும் குட்டிநாயின் தரிசனமும் கிடைத்தது.நாய்குட்டி இப்போது குரங்கோடு சிநேகத்துடன் இருந்தது.
இருந்தாலும் இது இயற்கைக்கு முரணாக இருக்கிறது குரங்கிடம் இருந்து குட்டியை பிரி்த்தால்தான் அதன் உயிருக்கு உத்திரவாதம் என்று முடிவெடுத்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் வருவதற்குள் குரங்கு குட்டியுடன் பல இடங்களுக்கு மாறி மாறி செல்ல மூன்றாம் நாளும் முடிவுற்றது.
நான்காம் நாள் வனத்துறையின் குரங்கு பிடிக்கும் கூண்டை ரெடி செய்து வைத்திருந்தனர். கூண்டினுள் குரங்குக்கு பிடித்த பழங்கள் உணவாக வைக்கப்பட்டிருக்கும் ,பழத்திற்கு ஆசைப்பட்டு கூண்டிற்குள் போனால் திரும்பவரமுடியாது.அப்படி அந்த கூண்டிற்குள் குரங்கு போய்விட்டால் குட்டியை எளிதில் மீண்டுவிடலாம் என்பது வனத்துறையினர் எண்ணம்.ஆனால் குரங்கு கூண்டை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை.
ஆனால் இந்த நான்கு நாட்களில் குரங்குக்கும் நாய்குட்டிக்கும் சிநேகம் அதிகரித்துவிட்டது என்றே கூறவேண்டும்.குட்டியை துாக்கி கொஞ்சுவதும்,அதற்கு பேன் பார்த்துவிட்டு சிரிப்பதும்,யாராவது வந்தால் துாக்கிக்கொண்டு பாதுகாப்பான உயரத்திற்கு செல்வதுமாக இருந்தது.
குரங்கு குட்டியாக இருந்தால் அது தன் தாயின் வயிற்றை இறுகபிடித்துக்கொள்ளும் பழக்கம் இருக்கும், அதனால் தாய் குரங்கு மரத்திற்கு மரம் தாவினாலும் விழுந்துவிடாது இருக்கும், ஆனால் நாய்குட்டிக்கு அந்த பழக்கம் இல்லை அது குரங்குக்கும் தெரியும் என்பதால் ஒரு கையிலேயே மரத்தில் ஏறுவதும் பின் தாவுவதுமாக இருந்தது,நாய் எங்கே தவறி விழுந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ குரங்கு முடிந்தவரை சமதளத்திலேயே சென்றது. இப்படி தான் குட்டி மீது கொண்ட பாசத்திற்காக குரங்கு பல சிரமங்களை ஏற்றுக்கொண்டிருந்தது.
பின்னர் குரங்கின் குணமறிந்து அதற்கு பயிற்சிதரும் ஒருவர் அழைத்துவரப்பட்டார்.அவர் வந்து மிகப்பெரிய கண்ணாடியை அதன் முன் வைத்தார் கண்ணாடியை பார்த்ததும் குரங்கு மற்ற விஷயங்களை மறந்துவிட்டு கண்ணாடியில் மட்டுமே சிறிது நேரம் கவனம் செலுத்தும் என்பது பயிற்சியாளர் காலம் காலமாக கண்டுவந்த குரங்கின் நடத்தை ஆனால் இந்த முறை கண்ணாடியை வைத்ததும் கண்ணாடியை பார்த்துவிட்டு ஈ என்று இளித்துவிட்டு கண்ணாடியை தள்ளிவிட்டு ஒடிவிட நான்காம் நாளும் முடிவுக்கு வந்தது.
ஐந்தாம் நாளான்று குரங்கு பயிற்சியாளர் ஒரு பக்கம்,வனத்துறையினர் இன்னோரு பக்கம், பொதுமக்கள் ஒரு பக்கம்,போலீசார் ஒரு பக்கம் என சூழ்ந்து கொண்டனர்.பயிற்சியாளர் குரங்கின் கழுத்தில் திடீரென சுருக்கு கயிறை போட்டு சுண்டி இழுக்க ஒரு கணம் தடுமாறிய குரங்கு நாயை தவறவிட்டது.
இதுதான் சமயம் என வனத்துறையினர் நாயை பாய்ந்து எடுத்துக்கொண்டனர்.பின்னர் கால்நடை மருத்துவரிடம் கொண்டுபோய் காண்பிக்க அவர் மருத்துவ பரிசோதனைகள் சில செய்துவிட்டு நாய் நன்றாக இருப்பதாக சான்றிதழ் கொடு்த்தார்.அந்த நாயை தான் வளர்ப்பதாக ஒரு இளைஞர் பாசத்துடன் முன்வர வனத்துறையினர் அவரிடம் நாயை ஓப்படைத்தனர்.
இப்போது சுருக்கு கயிறில் சிக்கிய குரங்கிடம் வருவோம்,அதுதான் நாயை விடுவித்தாகிவிட்டதே இனி எதற்கு குரங்கு என்று அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.அந்த குரங்கோ தானும் குட்டியும் நடமாடிய இடங்களுக்கு எல்லாம் தாறுமாறாக தாவிக்குதித்து ஒடிஒடி குட்டியை தேடுகிறது...வழியில் மக்களால் வைக்கப்பட்ட பழம்,பிஸ்கட்டை எல்லாம் தள்ளிவி்ட்டபடி குட்டியை கண்டுபிடிக்கும் வேகத்துடன் இன்னும் சொல்லப்போனால் ஒரு வெறியுடன் தேடிக்கொண்டே இருக்கிறது...ஒடிக்கொண்டே இருக்கிறது.
இப்போது சொல்லுங்கள் நாயை நினைத்து சந்தோஷப்படுவதா?...இல்லை குரங்கை நினைத்து வருத்தப்படுவதா?...
-எல்.முருகராஜ்.
murugaraj@dinamalar.in