கதை கதையாம் காரணமாம்! | Dinamalar

கதை கதையாம் காரணமாம்!

Added : ஜன 05, 2016 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 கதை கதையாம் காரணமாம்!

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்குச் செல்லும் போதெல்லாம், பெரும்பாறை ஒன்றின் மீது குறைந்த விளக்கொளியின் பரவலில் கம்பீரமாய் எழுந்து நிற்கும் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தைப் பார்க்கும் போதெல்லாம் 'எப்படி சாத்தியமானது?' என்ற கேள்வி என்னுள் எழுந்து நிற்கும்.இன்று, கரைக்கும் மண்டபத்திற்குமான துாரம் குறைந்து விட்டது. கடலில் மூன்றில் ஒரு பகுதி நடந்து செல்லும் பாதையாகி விட்டது. மீதப்பகுதியை சிறிய கப்பல் போன்ற படகில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து ஐந்து நிமிடத்திற்குள் கடந்து விடலாம். ஆனால் பயணம் செய்யும் அந்த சின்னப் பொழுதில், கடல் அலைகளின் எழுச்சியும், காற்றின் வீச்சும் நம்மைப் பயமுறுத்தத்தான் செய்கிறது.
ஆனால் 113 வருடங்களுக்கு முன்னால், அதிக ஆள் அரவமற்ற இந்தக் கடற்கரையில், இருள் கவிழும் பொழுதில், ஆரவாரத்துடன் அலைகள் எழுந்து குமுறும் கடலில், இக்கரையில் இருந்து அப்பால் உள்ள பாறைக்கு சுவாமி விவேகானந்தர் தன்னந்தனியாக நீந்திச் சென்றிருக்கிறார்!
வானமே கூரையாக அமைந்த அப்பாறை மீது மூன்று நாட்கள் தனிமையில் அமர்ந்து, தாகத்திற்கும் பசிக்கும் ஆதாரமின்றி, தன்னைப் பிழிந்த தவத்தால் ஞான வெளிச்சம் பெற்றிருக்கிறார்! மீண்டும் இக்கரைக்கு நீந்தி வந்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது?
இதற்கான வீரமும் துணிச்சலும் அவருக்கு எப்படி கிடைத்தது?
கதைகள் தந்த வீரம்!
சுவாமி விவேகானந்தரின் பால்ய பருவம். நரேந்திரனாய் ஓடியாடி விளையாடிய சின்ன வயசு. நரேந்திரனுக்கு தாய் புவனேஸ்வரியிடம் கதை கேட்பதில் அதிக ஆர்வம். புராண, இதிகாச கதைகளையே தாய் அதிகம் கூறுவார். மகாபாரத பீமன், ராமாயண அனுமன் இருவரது பராக்கிரமங்களைக் கூறும்போது நரேந்திரன் அதிக ஆர்வமாகி விடுவான். திரும்பத் திரும்ப பீமனையும், அனுமனையும் அவனுக்குச் சொல்லியாக வேண்டும்.
பள்ளி வளாகத்தில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பர். ஆனால் நரேந்திரனோ பெரிய மரத்தில் ஏறி, அதன் கிளையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பான். எச்சரிப்பவர்களிடம், “நான் அனுமனாகப் போகிறேன்” என்பான்.
“வருங்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய்?” என்று யாராவது கேட்டால், “நான் பீமன் ஆகப்போகிறேன்! பயில்வானாகப் போகிறேன்!” என்று நெஞ்சை நிமிர்த்தியவாறு பதில் சொல்லி இருக்கிறான். தீரத்தோடு அவர் தனிமையில் குமரி கடலில் நீந்தியதற்கு காரணம், சின்ன வயதில் தாயிடம் கதை கேட்டு வளர்ந்த அனுபவம் வளர்த்த துணிச்சல்!
கதை சொல்லிகள்!
தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மூத்தோர் என வீடுகளில், வீட்டுத் திண்ணைகளில் அன்று நிறைய கதை சொல்லிகள் இருந்தனர். படிப்பு, விளையாட்டு என ஓடியாடி ஓய்ந்த பொழுதுகளில் குழந்தைகளை அவர்கள் கதை உலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
கதைகள் மூலம் குழந்தைகளுக்கு புராண, இதிகாசங்கள் அறிமுகமாயின. ராஜாக்களும், வீரர்களும் வீரம் தந்தனர். வள்ளல்களும், நல்லவர்களும் மனவிலாசம் தந்தனர். நீதிகளும், நல்ல விஷயங்களும் இளம் சிந்தை வயலில் விதைகளாயின.
அதுமட்டுமல்ல, மூத்த தலைமுறை மூலம்தான் வளரும் தலைமுறைக்கு ஊர்ப் பெருமைகளும், குடும்பப் பாரம்பரியமும், உறவின் உன்னதங்களும் போய்ச் சேர்ந்தது. ஆனால் இன்று வீடுகளில் கதை சொல்லிகள் இல்லை. முதியோர் இருந்தாலும் அவர்களோடு ஒட்ட, உறவாட பிள்ளைகளுக்கு நேரமில்லை. நேரமிருந்தால், தாத்தா பாட்டிகளும், பேரக் குழந்தைகளும் தொலைக்காட்சி முன் கிடக்கிறார்கள்.
முன்பெல்லாம் தொடக்க வகுப்புகளில் ஆசிரியர்கள் நிறைய கதை சொல்வார்கள். ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியை வகுப்புகளில் கலையோடு கதைகளும் நிறைந்திருக்கும். ஆனால் இன்று எல்.கே.ஜி. படிக்கும் குழந்தையின் முதுகில் 10 கே.ஜி! படிப்பு, மதிப்பெண், ரேங்க் என்ற ஓட்டத்தில் வகுப்பறைகளிலும் கதைகள் காணாமல் போயின. இதில் பெரிய இழப்பு எதுவென்றால், கலை இலக்கியப் படைப்பாளிகள் குறைந்து வருவதுதான். கதை கேட்கும் போது கற்பனைத் திறன் அதிகரிக்கும். இந்தக் கற்பனைத் திறன்தான் படைப்பாற்றலை வளர்க்கும்.
பால்ய கதைகள்என் பால்ய வயதில் எங்கள் வீட்டுக்கு (கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு சூரன்குடி கிராமம்) ஒரு பாட்டி வருவார்.வீட்டு வாசலுக்கு வரும்போதே “வெத்தல தட்ட எடுத்துட்டு வாங்க மக்களே!” என்று அறிவிப்பு. பாட்டியின் குரல் சின்னப்பிள்ளைகளான எங்களைப் பரவசப்படுத்தும். காரணம், பாட்டி அற்புதமாகக் கதை சொல்வாள்.
வெற்றிலையை மென்றவாறு பாட்டி கதையை ஆரம்பிப்பாள். ''ஒரு ஊர்ல ஒரு மகாராசா இருந்தாரா! அந்த மகாராசாவுக்கு வடிவான ஒரு பொண்ணு... அந்தப் பொண்ணுக்கு கல்யாணம். மகாராசா வீட்டுக் கல்யாணமாச்சே! அதனால, ஏழு ஊருக்கு பந்தல் போட்டு, பெரிய விருந்து வைக்கணும். விருந்து சமைக்க விறகு சேகரிக்க ரெண்டாயிரம் மாட்டு வண்டிகளை மந்திரி அனுப்புனாரு. அந்த வண்டிக ரெண்டு ஊரு நீளத்துக்கு ஜல்ஜல்லுணு ஊர்வலமா போச்சு...'' என்று பாட்டியின் கதை நீளும்.
அந்த பாட்டி காவிப் பற்கள் தெரிய வாய்விட்டுச் சிரிக்க... நாங்களும் ஓ.. என்று கத்தியவாறு சிரிக்க.... அங்கு மகிழ்ச்சி சூழும். இன்பம் நிறையும். ஒற்றுமையுணர்வு ஓங்கும்.
கற்பனை வளர்த்த கதை உலகம் பாட்டி சொன்னது வெறும் கதையா? இல்லை! கதை சொல்லியான அந்த பாட்டி, எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு கற்பனை உலகத்துக்கு அழைத்துச் சென்றாள்.
'ஜல் ஜல் என்ற மணி ஓசையுடன் இரண்டாயிரம் மாட்டு வண்டிகளின் அணிவகுப்பு'- எங்கள் கற்பனைக் காட்சியில் விரிந்தது. 'வெள்ளை வெளேர்னு யானை போன்ற குச்சிவீட்டுப் பூனை'- என்று அவர் சொன்னது எங்கள் கற்பனைக்குள் எழுந்து வியப்பைத் தந்தது. கதையின் பூதங்கள் எங்கள் கற்பனையில் தோன்றி மிரட்டியது. இந்த கற்பனை உருவாக்கம்தான் கதை கேட்டல் ஏற்படுத்தும் மகத்துவம்.
இன்று டைனோசர், பூதம் எல்லாவற்றையும் கார்ட்டூன் சேனல்களில், திரைப்படங்களில் கிராபிக்சில் கொண்டு வந்து காட்டி, குழந்தைகள் கற்பனை செய்து பார்ப்பதற்கு வாய்ப்பு தராமல் செய்து
விடுகின்றனர்.கதை கேட்கும் போது குழந்தைகளிடம் ஏற்படும் கற்பனைச் சித்திரங்களும், மனம் உருவகிக்கும் காட்சிகளும் தான் பிற்காலத்தில் அவர்களை ஒரு ஓவியனாகவோ, கலைஞனாகவோ,
கவிஞனாகவோ, கதை ஆசிரியனாகவோ உருவாக்குகிறது. கதைகள் உருவாக்கும் படைப்பாற்றல், குழந்தைகளிடம் புதியன உருவாக்குவதற்கான சிந்தனைப் புலத்தை வளர்க்கிறது.
எனவே பெற்றோர்களே! பிள்ளைகளுக்கு நிறைய கதைகளைச் சொல்லுங்கள். தாத்தா, பாட்டிகளுடன் நேரம் செலவிட பிள்ளைகளை அனுமதியுங்கள். அவர்களிடம் கதைகள் கேட்கும் சுந்தரப் பொழுதுகளை தொலைகாட்சி உலகமும், ஆன்ட்ராய்டு உலகமும் அபகரித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் ஒரு படைப்பாளி
உருவாகட்டும்.-முனைவர்.மு.அப்துல் சமது,தமிழ்த்துறைப் பேராசிரியர்ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி,உத்தமபாளையம் -93642 66001

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Boomi - Mumbai,இந்தியா
06-ஜன-201617:55:38 IST Report Abuse
Boomi கேட்கிறவன் கேனையன் என்றால் சொல்றவன் வெண்ணெயில் தேன் வடியுதென்பானாம்... நல்ல nathai..........?
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜன-201615:30:58 IST Report Abuse
Swaminathan Nath இப்பொது குழந்தைகள் அதிகம் பேசுவது இல்லை, தொலைகாட்சி உலகமும், ஆன்ட்ராய்டு உலகமும் அபகரித்துக் கொண்டு விட்டன., நல்ல கட்டுரை பெற்றோர்கள் படிக்கச் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
06-ஜன-201614:53:23 IST Report Abuse
JeevaKiran கிடைக்கும் கொஞ்ச நேரமும் இந்த TV கெடுத்து விடுகிறது?
Rate this:
Share this comment
Cancel
Sabarinathan - tamilnadu,இந்தியா
06-ஜன-201612:08:22 IST Report Abuse
Sabarinathan அருமையாக சொனீர்கள் .. இன்று கதை சொல்ல பாட்டிகள் இல்லை.. பிள்ளைகளும் கேட்க விரும்பவில்லை .. கிராமங்களின் அழிவால் பாடிகளும் அழிகின்றனர்.. :-( பாட்டிகள் கதை சொல்வார்கள் என்பதையே இனி வரும் பிள்ளைகளுக்கு கதையாக கூற நேரிடும்...
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
06-ஜன-201611:27:02 IST Report Abuse
Amanullah அருமையான பதிவு. இளம் பிராயத்தில் குழந்தைகள் கேட்கும் கதைகளும் அதனால் கிடைக்கும் நீதி போதனைகள் அவர்களை நல்வழிப் படுத்தி வாழ்க்கையில் நல்ல மனிதனாக உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை. ஆனால் தற்போதைய வாழ்க்கை சூழலில் பல குடும்பங்களில் கதை சொல்லவும் மூத்தவர்கள் இல்லை கதை கேட்கவும் குழந்தைகளுக்கு நேரமில்லை. குழந்தைகளின் நேரத்தை ஊடகங்கள் பிடிங்கிக் கொள்வதோடு வக்கிரத்தையம் வளர்க்கிறது.
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
06-ஜன-201610:06:14 IST Report Abuse
நக்கீரன் சபாஷ். இந்த கட்டுரை ஆசிரியருக்கு. எல்லோருக்கும் உரைக்கும்படி சொன்னதற்கு.
Rate this:
Share this comment
Cancel
R.Srinivasan - Theni,இந்தியா
06-ஜன-201608:19:12 IST Report Abuse
R.Srinivasan அந்தக் காலத்தில் ...நானும் பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தவன்தான்.....ஆனால் ....இன்று என் பிள்ளைகளுக்கு என்னிடம் பேசக் கூட நேரம் இல்லை.....கட்டுரையில் குறிப்பிட்ட கதை சொல்லிகள் அன்று தேவைப் பட்டதால் அன்று முதியோர் இல்லங்கள் இல்லை......முதியோர் தங்கள் இல்லங்களிலேயே மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்....அன்பு..பாசம்....கூட்டுக் குடும்பம் என்ற அழகான வாழ்க்கை அமைந்தது.....இன்று முதியோரும் கண்டுகொள்ளப்பட வில்லை....அவர்களின் கதைகளும் அவர்களுடனேயே மண்ணில் புதையப் போகின்றன.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை