நிமிர்ந்து நில்! நூல்களை ஆவணப்படுத்தும் தொழில்நுட்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிமிர்ந்து நில்! நூல்களை ஆவணப்படுத்தும் தொழில்நுட்பம்

Added : ஜன 06, 2016 | கருத்துகள் (1)
Advertisement

பண்பாடு, கலாசாரம், நாகரிகம் என்பவை எல்லாம், தொல்லியல் எச்சங்கள், கட்டடங்கள், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் மூலமே பெரும்பாலும் அறியப்படுகின்றன. அச்சுக்கலை வந்தபின், ஓலைச் சுவடிகள் நுால்களாயின. நுால்கள், கணினி கலாசாரம் வந்தபின், டிஜிட்டல் என்னும் எண்ம தொழில் நுட்பத்துக்குள் புகுந்து விட்டன. தொழில்நுட்பங்கள் அனைத்தும், இடத்தை குறைத்து, ஆவணங்களின் சாரத்தின் ஆயுளை நீட்டிப்பதற்கான வழிமுறைகளே ஆகும். எனினும், ஆவணங்களை அவற்றின் உருவம் மாறாமல், அப்படியே பாதுகாக்க வேண்டியதும், ஆவணப்படுத்தலின் முக்கிய கூறு தான். அந்த வகையில், கிராமபோன் ரெக்கார்டர்களில் பயன்படுத்தப்பட்ட, காலத்தால் அழியாத ஒலித்தட்டுகள், 1790களில் பதிப்பிக்கப்பட்ட நுால்கள், பழைய நாளிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின் ஆயுளை நீட்டிப்பதற்காக, இந்தியாவிலேயே முதல்முறையாக, புதிய தொழில்நுட்பக் கருவிகளுடன் களம் இறங்கி உள்ளது, தரமணியில் உள்ள, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம். விஷத்தன்மைஅந்நுாலகத்தின் இயக்குனர், ஜி.சுந்தரிடம் பேசியதில் இருந்து: நம் நாட்டில், நுாலகங்களில் உள்ள நுால்களை பாதுகாக்க, பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. குறிப்பாக, இற்றுப்போதல், பூச்சி அரித்தல் உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாக்க பெரும்பாலும், வேதிப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவை பெரும்பாலும், விஷத்தன்மை உள்ளவையாக இருக்கின்றன. அதனால், நுால்களை, வேதிப் பொருட்கள் இல்லாமல் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து வந்தோம். சமீபத்தில், எங்கள் நுாலகத்திற்கு, 'டாட்டா அறக்கட்டளை' சார்பில் கிடைத்த நிதியை கொண்டு, போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து, சுமார், 37 லட்சம் ரூபாயில் 'நைட்ரஜன் சேம்பர்' என்னும் இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளோம். அதாவது, நுால்களுக்குள் இருக்கும் பூச்சி முதலிய உயிரிகள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்சிஜனை நிறுத்தி, நைட்ரஜனை செலுத்துவதன் மூலம், நுால்களில் உள்ள பூச்சிகள், லார்வாக்கள், முட்டைகள் உள்ளிட்டவற்றை சாகடிக்கும் தொழில் நுட்பத்தை, அந்த இயந்திரம் வழங்குகிறது. அந்த இயந்திரத்தில், ஒரு அழுத்தி, நைட்ரஜன் தயாரிப்பான், நுால் கலன் உள்ளிட்டவை இருக்கின்றன. அழுத்தி (கம்ப்ரசர்), காற்றை உறிஞ்சி, நைட்ரஜனை மட்டும் கிரகிப்பதில் தயாரிப்பான் செயல்படுகிறது. நைட்ரஜன், நுால்கள் உள்ள 'பீரோ' போன்ற கலனுக்கு அனுப்பப்படுகிறது. அந்த கலனில், நைட்ரஜன் வாயு, சுமார், மூன்று வாரங்கள் இருக்கும். பின், உயிர்களற்ற நுால்கள் வெளியில் எடுக்கப்படுகின்றன. கலனில், சுமார் 1,500 நுால்கள் வரை வைக்கலாம். மூன்று வாரங்களுக்கு பின், பூச்சிகளற்ற நுால்களை வெளியில் எடுத்து, நுால்களின் தன்மைக்கேற்ப, அமிலத்தன்மையற்ற பல்வேறு கலவைகளை கொண்டு, புதிய தொழில்நுட்பங்களை கொண்டு, துாய்மையாக்குகின்றனர். பின், அவை நிழலில் உலர்த்தப்படுகின்றன. அவற்றை, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, ஒளி ஊடுருவக்கூடிய, நார் தன்மையுள்ள காகிதம் கொண்டு ஒட்டுகின்றனர். இந்த காகிதத்தை தேவைப்பட்டால், நுாலின் காகிதத்திலிருந்து, அதற்கு பாதிப்பில்லாமல் பிரித்துக் கொள்ளலாம்.நிதி இல்லைபின், அவற்றை கத்தை களாக பிரித்து, 'செக் ஷன் பைண்டிக்' முறையில், தேவைக்கேற்ப, அட்டை, துணி, காகிதங்கள் கொண்டு தைக்கப்பட்டு, மாவு, சர்க்கரை பொருள் இல்லாத பசை கொண்டு ஒட்டப்படுகிறது. அவ்வாறு, பதப்படுத்தப்பட்ட நுால்களின் ஆயுள், நுாறில் இருந்து, இருநுாறு ஆண்டுகள் வரை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த தொழில்நுட்பம், இந்தியாவிலேயே, ரோஜா முத்தையா நுாலகத்தில் தான், முதன்முதலாக கையாளப்படுகிறது. சுமார் நுாறாண்டு பழமையான பல்வேறு ஒலிவடிவங்களை, சேமிக்க துவங்கி உள்ளோம். ஆனாலும், எங்கள் நுாலகத்தில், பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் இருக்கும் அளவுக்கு, நிதி இல்லை. அதனால், ஆவணப்படுத்தும் பணியை, போதிய அளவு செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh Ram - Chennai,இந்தியா
06-ஜன-201605:24:54 IST Report Abuse
Rajesh Ram உடனடியாக செய்ய வேண்டிய தலையாய பணி இது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு செய்யும் முதல் பணி இது வே . நம்முடைய அறிவு வளர்ச்சியின் அடையாளம் இது. ஆனால் இது வே லேட். இந்நேரத்துக்கு முடிந்து இருக்க வேண்டும் டிஜிட்டல் மயம் இல்லாத ஒரு புத்தகம் கூட வெளியில் இருக்கக் கூ டாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை