TV debate | தலைநகர் டில்லியின் புதிய போக்குவரத்து முறை வெற்றி பெறுமா| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டிவி விவாத மேடை

தலைநகர் டில்லியின் புதிய போக்குவரத்து முறை வெற்றி பெறுமா

Added : ஜன 12, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
தலைநகர் டில்லியின் புதிய போக்குவரத்து முறை வெற்றி பெறுமா

இந்திய தலைநகர் டில்லியில் ஜன.1 முதல் புதிய போக்குவரத்து முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1ம் தேதி ஒற்றை இலக்கத்தில் முடியும் எண் கொண்ட கார்கள் மட்டுமே சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். இரண்டாம் தேதி இரட்டை இலக்க எண் கார்கள் செல்லலாம். மாறி சென்றால் அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறை காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் குறையும். எரிபொருளையும் சிக்கனப்படுத்தலாம். அதிகப்படியான மக்கள் பொதுபோக்குவரத்து முறையான பஸ், மெட்ரோ ரயில், ஆட்டோ ரிக்ஷாக்களை பயன்படுத்துவர். இந்த போக்குவரத்து நடைமுறை மக்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெறுமா என்று ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலில் விவாதம் நடந்தது.நிகழ்ச்சியை மாயா மிர்சந்தனி தொகுத்து வழங்கினார். ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் ராகவ் சந்தா, மூத்த பத்திரிகையாளர் பத்மா ராவ் சுந்தர்ஜி, பா.ஜ.,வைச் சேர்ந்த சம்பித் பத்ரா மற்றும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தை சேர்ந்த விவேக் சட்டோபாத்யாய் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்றனர்.
தொகுப்பாளர் மாயா மிர்சந்தினி: தலைநகர் டில்லியில் காற்றின் மாசுபாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏதாவது செய்து குறைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. புதிய போக்குவரத்து நடைமுறையால் வாகனங்களின் எண்ணிக்கை பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா தரப்பு மக்களும் இதனை வரவேற்கவே செய்கிறார்கள். இந்த ஒற்றை, இரட்டை இலக்க போக்குவரத்து நடைமுறை வெற்றி பெறுமா.
ஆம் ஆத்மி செய்தித்தொடர்பாளர் ராகவ் சந்தா: டில்லியில் மாற்றத்தை கொண்டு வரவே ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் சிறப்பான திட்டங்களை டில்லி அரசு நிறைவேற்றி வருகிறது. அதற்கு இந்த போக்குவரத்து திட்டம் ஒரு உதாரணம். இந்த திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறும் என முதல் கட்ட அறிக்கை தெரிவிக்கிறது. காற்றில் மாசுபாடு அளக்கப்பட்டு, முந்தைய நாட்களை குறைவாக உள்ளது என தெரிய வந்துள்ளது. போக்குவரத்திலும் இத்திட்டம் சிறப்பான பலனைக் கொடுக்கும்.
மூத்த பத்திரிகையாளர் பத்மா ராவ் சுந்தர்ஜி: சோதனை முறையில் புதிய போக்குவரத்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு திட்டத்தையும் சோதனை முறையில் கொண்டு வருவது நல்லது. இதனால் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை எளிதில் களைய முடியும். காற்று மாசுபாடு, வாகன பரிசோதனை, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றுக்கு இன்னும் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அப்போது தான் நாம் வாழும் பூமியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
பா.ஜ.,வைச் சேர்ந்த சம்பித் பத்ரா: டில்லி அரசு கொண்டு வந்துள்ள திட்டம் மேற்கத்திய நாடுகள் பலவற்றில் அமலில் உள்ளன. இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை அலசி ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது. காற்று மாசுபாடு குறைந்தால் இத்திட்டத்தை வரவேற்கலாம். அதே சமயம் ஒருவரே இரண்டு கார்களை வாங்கும் நிலையும் ஏற்படும். அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் தலைநகரின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தை சேர்ந்த விவேக் சட்டோபாத்யாய்: காற்று மாசுபாட்டை குறைக்க மேலும் பல திட்டங்களை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. காற்றை மாசுபடுத்தும் அனைத்து காரணிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக வந்துள்ள இத்திட்டத்தை வரவேற்போம். மேலும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பல திட்டங்களை கொண்டு வந்து பூமியை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X