வேர்களை இழந்து விட வேண்டாம்! என் பார்வை| Dinamalar

வேர்களை இழந்து விட வேண்டாம்! என் பார்வை

Added : ஜன 19, 2016 | கருத்துகள் (6)
Advertisement
 வேர்களை இழந்து விட வேண்டாம்! என் பார்வை

காமராஜரின் இல்லத்தில் ஈ.வி.கே.சம்பத், குமரி அனந்தன் இருவரும் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது காமராஜர், “ஏம்பா...இந்த கோயில் கோபுரங்களை எல்லாம் ஏன் உசரமா கட்டியிருக்காங்க?” என்று கேட்டார். ஒருவர் சொல்லின் செல்வர், மற்றொருவர் இலக்கியச் செல்வர். கேட்கவா வேண்டும்...“அது நமது ஆன்மிக, கலை, கலாசாரப் பண்பாட்டுப் பெருமை, அழகு, அடையாளம்” என இருவரும் காரணங்களை அடுக்குகின்றனர்.
“அட... அதுக்கெல்லாம் இல்லைப்பா” என்று மறுத்த காமராஜர் கூறினார், “அந்த காலத்தில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போகணும்னா நடந்துதான் போகணும், சாலை வசதி, வாகன வசதியெல்லாம் கிடையாது. அப்படி போகிறவர்கள் தாகத்தோடும், பசியோடும் போவார்கள். எங்காவது கோபுரம் கண்ணுல தென்பட்டதுண்ணா... கோபுரம் இருந்தா கோயில் இருக்கும், கோயில் இருந்தா மக்கள் இருப்பார்கள், மக்கள் இருந்தால் நம் பசியும், தாகமும் தீர்வதற்கு வழி பிறக்கும் என்பதை அடையாளப்படுத்தத்தான் கோயில் கோபுரத்தை உசரமா கட்டியிருக்காங்க!” என்று பதில் அளித்தாராம்.
எனக்கும், உங்களுக்கும் கோயில் கோபுரத்தைப் பார்க்கும் போது இந்த எண்ணம் தோன்றியதுண்டா? பெருந்தலைவருக்கு மட்டும் தோன்றியது என்றால் என்ன காரணம்? அவர் எப்பொழுதும் மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த தலைவர் என்பதால்தான்.
மேற்கண்ட தகவல், தமிழகப்பண்பாட்டின் உச்சத்தைத் தொட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. விருந்து முதலான நம் பாரம்பரிய மரபுகள் அனைத்தும் மனிதத்துவம் சார்ந்தவை. இத்தகைய நம் பாரம்பரிய பண்பாடுகள் பலவற்றை இன்று நாம் இழந்து வருவதோடு,
இலக்கிய வாசிப்பின்மையால் அது குறித்த சிந்தனைகளையும் இழந்து வருகிறோம்.கவிதை சொல்லும் சேதி பூதை தேசிகன் பாடிய கவிதை ஒன்று.
'என் பாட்டியின் மாமியார்
என் பாட்டியிடம் சொன்னாளாம்...
இந்தப் பானையில் அரிசி
இருக்கிறது
இந்தப் பானையில் உளுந்து இருக்கிறது
இந்தப் பானையில் புளி இருக்கிறது'
என்பாட்டி என் அம்மாவிடம் சொன்னாளாம்...
'இது அரிசி இருந்த பானை
இது உளுந்து இருந்த பானை
இது புளி இருந்த பானை'
இப்போது என் அம்மா
என் மனைவியிடம் சொல்கிறாள்...
இது அரிசிப்பானை இருந்த இடம்
இது உளுந்துப் பானை இருந்த இடம்
இது புளிப்பானை இருந்த இடம்'
அரிசி போய், அரிசி பானை போய், அரிசி பானை இருந்த இடம் மட்டும் இன்று காலியாக இருக்கிறது. இந்தக் கவிதை, நமது பாரம்பரிய பண்பாட்டுச் சரிவை மிகச் சரியாக அடையாளப்படுத்தி உள்ளது.
விரிந்து கிடந்த திண்ணைகள்
ஒரு காலத்தில் திறந்த மனசு போல வீட்டு வாசல் கதவு திறந்திருக்க... வருகின்றவர்களை அரவணைப்பதற்கு விரியும் கரங்கள் போல வீட்டின் முன் இருபக்கமும் திண்ணைகள் விரிந்து கிடந்தன. ஒரு யாசகனோ, வழிப் போக்கனோ அதில் அமர்ந்தால் தாகமும், பசியும் நீங்கிச் செல்வதற்கு உத்தரவாதம் இருந்தது. இன்று கிராமங்களில் கூட வீடுகளின் முன் திண்ணைகளைக் காண முடியவில்லை.
அதனால்தான், “அன்றைக்குத் தமிழர்கள், முன்பின் தெரியாத மனுசாள உபசரிக்க, வீடுகளுக்கு முன்னால் திண்ணைகளைக் கட்டி வைத்தார்கள். இன்றைக்கோ நாய்களைக் கட்டி வைக்கிறார்கள்” என்றார் திருமுருக கிருபானந்த வாரியார்.
வேர்களை இழந்துவிட்டு விழுதுகளின் பலத்தில், நிழல் தேடும் சமூகமாக நாம் மாறிவருகிறோம். நமது பண்பாடு வளர்த்தெடுத்த அர்த்தமுள்ள வாழ்வியல் மரபுகளை, மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மாறிய காட்சிகள் அதிகாலையில் வீடுகளுக்கு முன்னால் சாணம் மெழுகி, தண்ணீர் தெளித்து, மாக்கோலம் இட்ட காட்சிகளை இன்று கிராமங்களில் மட்டுமே காணமுடிகிறது. நகரியப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அடைபட்டுக் கொண்ட தமிழர்கள் ஸ்டிக்கர் கோலம், பெயின்ட் கோலத்தில் திருப்தி அடைந்து விடுகின்றனர். மண் முற்றத்திற்கு எங்கே செல்வது?
வீடுகளுக்கு முன்னால் அடுப்பு கூட்டி, கரும்புகள் நட்டு, அறுவடை நெல்லின் புத்தரிசியை புதுப்பானையில் சர்க்கரையுடன் இட்டு, முந்திரி, ஏலம் மணக்கப் பொங்கலிட்டனர். பொங்கி வழியும் வெண்நுரையில் வாழ்வின் வசந்த அபிவிருத்தியைக் கண்டு, 'பொங்கலோ! பொங்கல்!' என்று ஆனந்தக் குரல் எழுப்பினர். இத்தகைய குடும்பங்களில் ஒருவராக இருக்கும் பேறு, இன்று எத்தனைத் தமிழர்களின் வாரிசுகளுக்கு வாய்த்திருக்கிறது?
எங்கள் வீட்டில் புது மண்பானையில் புது அரிசிப் பொங்கலிட்டது உண்டு. மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி அவற்றை போசித்தது உண்டு. இன்று வீட்டில் மாடுகளும் இல்லை, பொங்கலைக் கொண்டாடிய மூத்த தலைமுறையின் மனசும் இல்லை.
இன்றும் பொங்கல் பானையின் தலையில் வெண்நுரை பொங்கி நிற்கும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம், என் பாட்டன், தமிழ் அடையாளத்துடன் தலையில் தொப்பியோ, தலைப்பாகையோ அணிந்திருந்த கம்பீரத் தோற்றம்தான் நினைவிற்கு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, தமிழர்களை ஒருங்கிணைத்த கூடிக் குதுாகலிக்கச் செய்த பொங்கல் விளையாட்டுக்களும் அருகிவிட்டனவே. பொங்கலின் கொண்டாட்டங்களான உறி அடித்தல், சடுகுடு, மாடு பிடித்தல், சிலம்பம் போன்ற வீர விளையாட்டுக்களை அரிதாகவே சில கிராமங்களில் நடந்ததை பார்க்க முடிந்தது. இந்த வீர விளையாட்டுக்கள் எல்லாம், கிராமங்களின் அசல் முகம் என்பதற்கு இனி திரைப்படங்களின் பதிவுகள் மட்டுமே சாட்சிகளாகி விடுமோ?
தேசபாதுகாப்பு என்னவாகும் ஜல்லிக்கட்டு கூட இன்று விமர்சனத்துக்கும், சட்ட ரீதியான தடைக்கும் உள்ளாகி நிற்கிறது. ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்களைத் தடை செய்து விட்டால், தேசத்தின் வருங்காலப் பாதுகாப்பே கேள்விக் குறியாகி விடும்! தேசப் பாதுகாப்பிற்காக ராணுவத்திற்கு ஆள் எடுத்தால், நம் கிராமங்களில் இருந்து தான் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் செல்வார்கள். ஏனென்றால், இயல்பான ஆற்றலை, முனை முகத்து நிற்கும் துணிச்சலை வீர விளையாட்டுக்கள் மூலம் அவர்கள் பெற்றுள்ளதுதான் காரணம்.
ஜல்லிக்கட்டு போன்றவை தடை செய்யப்பட்டால், வீரம் சார்ந்த விளையாட்டுக்கள் முக்கியத்துவம் இழந்தால், அது தேசத்தின் பாதுகாப்பையே உறுதியில்லாமல் ஆக்கிவிடாதா?
எனவே இயற்கையைப் போற்றல்! வேளாண்மையைக் கொண்டாடுதல்! உழவுக்கும் தொழிலுக்கும் உடன் உழைக்கும் ஜீவன் மாடுகளைச் சிறப்பித்தல்! வீரத்தை விளையாட்டுக்கள் மூலம் வளர்த்தெடுத்து அதனை சமூகப் பாதுகாப்புக்கு உரியதாக்கல்! ஜாதி, சமய அடையாளங்களைக் கடந்து, பண்டிகைகள் மூலம் ஒன்றுபடுதல் என தமிழனது பண்பாட்டு மரபுகளைப் போற்றுவோம்!
-பேராசிரியர்.மு.அப்துல்சமது,தமிழ்த்துறை, ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லுாரி,உத்தமபாளையம்.93642 66001

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X