பொழிச்சலூர், கவுல்பஜார் மூழ்கியது ஏன்?| Dinamalar

பொழிச்சலூர், கவுல்பஜார் மூழ்கியது ஏன்?

Added : ஜன 20, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

சமீபத்திய வெள்ளத்தில், பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலுார், கவுல்பஜார் ஊராட்சி பகுதிகள், முழுமையாக மூழ்கின. அடையாற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்த பிறகே, அந்த ஊராட்சிகளில், மெல்ல மெல்ல, மழைநீர் வடிந்தது. இதுவரை இப்படி ஒரு பாதிப்பை சந்திக்காத அந்த ஊராட்சிகளில், இந்த மழைக்கு மட்டும் வெள்ளம் தேங்க என்ன காரணம்?

பொழிச்சலுார் ஊராட்சி :
பல்லாவரம் சட்டசபை தொகுதியில் உள்ள பொழிச்சலுார் ஊராட்சி, பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளை ஒட்டி அமைந்துள்ளது. தாழ்வான பகுதி; ௫௦,௦௦௦ பேர் வசிக்கின்றனர். போதிய நிதி இல்லாததால், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் வசதி செய்யப்படவில்லை.ஒவ்வொரு மழையின் போதும், சில இடங்களில் வெள்ளம் தேங்கும். வடிவதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால், இந்த முறை ஊராட்சி அதிக பாதிப்பை சந்தித்தது.l பல்லாவரம், பம்மல் பகுதி மழைநீர், பொழிச்சலுார் வெங்கடேஸ்வரா நகர், மூவர் நகர் வழியாக, சென்னை விமான நிலையத்திற்குள் உள்ள கால்வாயில் சென்று, கவுல்பஜாரை அடைந்து, அங்கிருந்து, அடையாற்றுக்கு செல்லும். விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை உயர்த்திக் கட்டியதால், சமீபத்திய கனமழையில், மழைநீர் செல்ல வழியின்றி, ஆண்டாள் நகர், மூவர் நகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த காரணத்தால், லேசான மழை பெய்தாலே அந்த பகுதிகளில் வெள்ளம் தேங்குகிறது.l செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால், அடையாற்றில் அளவுக்கு அதிகமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால், ஆற்றை ஒட்டிஉள்ள தாங்கல், விநாயகா நகர், சண்முகா நகர், பாலாஜி நகர், சி.சி.டி.வி., நகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பகுதிகளில் சில, ஆக்கிரமிப்பு என, கூறப்படுகிறது. l வெள்ளப் பெருக்கு அதிகரிக்க அதிகரிக்க, ஆற்றை ஒட்டியுள்ள மல்லிமா நகர், பவானி நகர், லட்சுமி நகர், ராஜேஸ்வரி நகர், ராமலிங்கம் நகர், ராமச்சந்திரா நகர்களிலும் வெள்ளம் புகுந்தது. l பொழிச்சலுார் ஊராட்சி எல்லை வழியாக செல்லும் அடையாற்றில், கட்டட இடிபாடுகள், குப்பை, ரசாயன கழிவுகளை, குவியல் குவியலாக கொட்டி வைப்பதும், குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததற்கு ஒரு காரணம். ௨௦௧௫, டிச., முதல் தேதி முதல், 10ம் தேதி வரை வெள்ளம் வடியவில்லை.
என்ன செய்ய வேண்டும்?அடையாற்றை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆற்றின் அகலத்தை விரிவுபடுத்தி, கரையை பலப்படுத்த வேண்டும். பம்மல் பகுதி மழைநீர், அடையாற்றுக்கு செல்லும் வகையில், மூவர் நகர், ஆண்டாள் நகர் வழியாக, புதிதாக மழைநீர் வடிகால் கட்டப்பட வேண்டும். இவற்றைச் செய்தால் மட்டுமே, வரும் மழைக்காலத்தில் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து பொழிச்சலுார் ஊராட்சியை காப்பாற்ற முடியும்.

கவுல்பஜார் ஊராட்சி :
ஆலந்துார் சட்டசபை தொகுதியில் அடங்கிய, கவுல்பஜார் ஊராட்சி, ஆறு வார்டுகளையும், நான்காயிரம் மக்கள் தொகையையும் கொண்டது. சென்னை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள அந்த ஊராட்சி, அடையாற்றை ஒட்டி அமைந்துள்ளது. அடையாற்றில் வெள்ளம் வரும்போது, கவுல்பஜார் - கொளப்பாக்கத்தை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்படும். மற்றொரு புறம், அனகாபுத்துார், பம்மல் நகராட்சிகளில் இருந்து வரும் மழைநீர், தெற்கு பகுதியில் உள்ள பகுதிகளை சூழ்ந்து விடும். பல்லாவரம், அனகாபுத்துார், பம்மல் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர், பொழிச்சலுார் பகுதிகளில் தேங்கும். வெள்ளம் அதிகமாகும் பட்சத்தில், பொழிச்சலுாரில் இருந்து வரும் மழைநீர், கவுல்பஜார் ஊராட்சிக்கு உட்பட்ட அப்துல் கலாம் நகர், மணிவண்ணன் நகர், டில்லிபாபு தெரு, யசோதா நகர் வழியாக, சென்னை விமான நிலையத்தை ஒட்டிச் செல்லும் கால்வாயில் ஓடி, கொளப்பாக்கம் - மணப்பாக்கம் அருகே அடையாற்றில் கலக்கும்.l இந்த முறை எப்போதும் இல்லாத வகையில் வெள்ளம் வந்ததால், சென்னை விமான நிலைய சுற்றுச்சுவரை ஒட்டி செல்லும் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல வழியின்றி, அப்துல் கலாம் நகர், மணிவண்ணன் நகர், டில்லிபாபு, யசோதா நகர் பகுதிகள், கீழ்தளம் வரை வெள்ளத்தில் மூழ்கின. l இதற்கு முன் அடையாற்றில் என்னதான் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும், சில மீ., துாரம் வரை மட்டுமே அதன் பாதிப்பு இருக்கும். l இந்த மழையில் யாரும் எதிர்பாராத அளவிற்கு அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வெள்ளம் தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து, பகுதிவாசிகள், ஏதோ விபரீதம் ஏற்பட உள்ளது என்பதை உணர்ந்தனர். டிசம்பர் முதல் தேதி இரவு, ஊருக்குள் லேசாக தலைகாட்டிய வெள்ளம், அதிகரித்து எம்.ஜி.ஆர்., தெரு, மாரியம்மன் கோவில் தெரு, அண்ணா தெரு, பஜனை கோவில் தெருக்களில், கீழ்தளம் வரை மூழ்கியது.l அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, பொழிச்சலுாரில் இருந்து வந்த வெள்ளம் ஆகிய காரணங்களால், இதுவரை இல்லாத வகையில், ஊராட்சியே மூழ்கியது. 150 ஏக்கரில் நடப்பட்டிருந்த மல்லி, முல்லை பூச்செடிகள்; கத்தரி, வெண்டை, பாகற்காய் செடிகள் வெள்ளத்தில் சிக்கி, அழுகின.l இதற்கு முன், கவுல்பஜார் ஊராட்சி இப்படி ஒரு பாதிப்பை சந்தித்ததில்லை. 2004ம் ஆண்டு பெய்த மழையின்போது, ஊராட்சியைச் சுற்றி வெள்ளம் தேங்கியது. ஊருக்குள் வெள்ளம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்ய வேண்டும்?சென்னை விமான நிலையத்தை ஒட்டி செல்லும், 30 அடி அகலம் கொண்ட கால்வாயை துார்வாரி, ஆழப்படுத்தினால், எதிர்காலத்தில், வெள்ளபாதிப்பில் இருந்து, அந்த ஊராட்சியை காப்பாற்ற முடியும்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X