அழுது உழும் உழவன் வாழ்வு உயர வேண்டும்!| Dinamalar

அழுது உழும் உழவன் வாழ்வு உயர வேண்டும்!

Updated : ஜன 21, 2016 | Added : ஜன 20, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அழுது உழும் உழவன் வாழ்வு உயர வேண்டும்!

உண்பது நாழி; உடுப்பது இரண்டே என்ற நிலையில் நிம்மதியாக வாழ்பவர்கள். தினையளவு இருந்தாலும் பனையளவாகக் கருதி பகிர்ந்து உண்ணும் பாட்டாளி மக்கள். வெற்றிலை போட்டக் காவிப் பல்லிலும் அவர்களின் கடமை உணர்ச்சி தெரியும். உழைப்பின் களைப்பால் காப்புக் காய்ச்சுப் போன கைகளை உடையவர்கள், வெள்ளை உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள்.
பங்காளிச் சண்டையிலும் தங்கள் பங்களிப்பு என்ன என்பதை பறைசாற்றும் போராளிகள். எளிமையே அவர்களிடம் இனிமையாகக் குடியிருக்கும்.தகப்பன்- மகன் உறவில் தெரியும் வீரம். பெண் குழந்தை பிறப்பில் குலதெய்வம் கண்ட குதுாகலம் இருக்கும். அவர்கள், அடிமனதில் ஆழப் பதிந்து போன வறுமைக்கு, வாக்கப்பட்டவர்கள். என்றாலும் சங்கடங்களை எல்லாம்
சாதனையாக மாற்றி விடுவர்.உலகில் வாழும் மக்களுக்கு எல்லாம் உணவளிக்கும் உத்தமர்கள். எதையும் நாசுக்காகப் பேசும் நயவஞ்சகமில்லா நாக்கிற்குச் சொந்தக்காரர்கள். இவற்றிற்கெல்லாம் சொந்தக்காரர்கள் கிராமங்களில் வசிக்கும் விவசாயப் பெருமக்களே! அவர்கள் மண்வாசனை மாறாது. மனதிற்கு இனிய கதைகள், பாடல்கள் மூலம் நல்ல விஷயங்களை நாட்டிற்குக் கூறிய புத்தி
சாலிகள்.சிந்தனை துாண்டுபவர்கள் பகலெல்லாம் உடல் உழைப்பு; மாலையில் உடல் ஓய்வெடுக்க, அறிவு செயல்பட ஆரம்பிக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு சிறுசிறு விளையாட்டுக்களைச் சொல்லிக் கொடுத்து மகிழ்வர். அந்தவகையில் நாட்டுப்புற விவசாய பெருமக்கள் கூறும் அழிப்பாங்கதைகள் (விடுகதைகள்) சிந்தனைகளைத் துாண்டக்கூடியது. குழந்தைகள் யோசித்து பதில் சொல்லும் போது, தானாகவே அவர்கள் மூளைக்கு ஒரு பயிற்சி கொடுக்கப்படுகிறது.
தோட்டத்தில் வேலை செய்யும் பெண்ணைப் பார்த்து ஒரு வழிப்போக்கன் கேட்கிறான்.'பூ மேலே பூ வைத்துப் போற பெண்ணே மானாமதுரைக்குப் போற வழி எது?'இவன் நம் குறையை அல்லவா சுட்டிக்காட்டுகின்றான் என்று, அப்பெண்ணிற்கு கோபம் வருகிறது. உடனே அவன் பாணியிலே அவள் வழி சொல்கிறாள்.
'அட பட்ட மரத்தில போறகெட்ட மனுசா! இது தான் மானாமதுரைக்குப் போற வழி'எவ்வளவு அழகான விடுகதை. அதற்கான விடையைப் படியுங்களேன். அவர்கள் அதிமேதாவியா? அல்லது படித்த நாமா? என்பது புரிந்து விடும். தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு கண்ணின் கருவிழி கொஞ்சம் வெள்ளையாக
இருக்கிறது. அதனைக் கிராமத்தில் கண்ணுல பூ விழுந்திருக்கு என்று கூறுவர். அதைக் குறையாகக் கூறாது. மாரியாத்தா மகிமை; ராசிக்காரப் பொண்ணு என்று குறையை நிறைவாகக் கூறுவர்.
அதை இந்தவழிப்போக்கன் கேலி செய்கிறான். கண்ணில் பூ விழுந்திருக்கு; தலையில் பூச்சூடி இருக்கின்றாள். அதைத் தான் (கண்ணில்) பூ; மேலே (தலையில்) பூ வைத்திருக்கும் பெண்ணே என்கிறான். அதற்கு அவள் கூறும் பதில்.
அவனுடைய கால் ஊனம். கட்டை மாட்டியிருக்கின்றான். அதனைக் கட்டக்கால் என்பர். அதைப் பார்த்துத்தான் அவள் கட்டையில போற கெட்ட மனுஷா (என்னைக் கேலி செய்பவனே) இது தான் வழி என்று கூறுவதாக
இவ்விடுகதை அமைகிறது. இது போல இன்னும் எத்தனை? எத்தனை?நாக்கு பயிற்சி விடுகதை 'கோணல் மாணல் (வளைந்த நெளிந்த) புளியங்கா கொங்கு நாட்டுப் புளியங்கா. எங்க நாட்டுல இருந்து உங்க நாட்டுக்கு வருகின்றது'என்று பாதையைப் (வழி) பற்றிக் கூறும் விடுகதை. அடுத்ததாக நாக்கிற்கு பயிற்சி கொடுக்கும் பாங்கு அனைவரும் அறிந்ததே.
'நாலு சோளத்துக்கு ஏழு சோளத் தோசைஅதில ஒரு தோசை தீஞ்ச (கருகிப் போனது) தோசை”(இதை விரைவாகச் சொல்லனும்)ஆறு அரளி விளாருல
ஒரு அரளி விளாருஒடஞ்ச விளாரு - (இதை விரைவாகவும் சரியாகவும் சொல்ல வேண்டும்)இப்படி பயிற்சியளிக்கும் பொழுதாக அன்றைய மாலைப் பொழுது, கிராமத்து விவசாயிக்கு அமைந்தது.வெள்ளந்தி மனிதர்கள் சில நேரங்களில் முகத்துக்கு முன்னால், பல நேரங்களில் முதுகுக்குப் பின்னால், வார்த்தை விமர்சனங்கள் வெடித்தாலும் எதையும் கண்டுகொள்ளாத வெள்ளந்தி மனிதர்கள். ஒரு நேரம் கூர்மையான விமர்சனமாகவும், மற்றொரு நேரம் கெட்டிதட்டிப் போன விரத்தியாகவும், இருமுகங்களோடு மறுப்பும் எதிர்ப்புமாகிப் போன வாழ்க்கையில் உறுதியோடு மனதிடமாக வாழ்க்கையைச் சந்திப்பவர்கள். சொலவடைகளால் வாழ்க்கையை சுகமாக்கிக் கொண்டவர்கள்.
'குத்துப்பட்டவன் துாங்கினாலும் கொற வயித்துக்காரன் துாங்கமாட்டான்''ஆடுகுட்டி இல்லாதவன்அடைமழைக்கு ராஜா; புள்ள குட்டி இல்லாதவன் பஞ்சத்துக்கு ராஜா'இப்படி எல்லாம் பேசி சமாதானமாகி விடுபவர்கள். பொருள் ஏவலுக்கேற்றாற் போல் வீட்டுக்குள்ளே ஒரு வியாக்கியானத்தைநடத்துபவர்கள் அவர்கள். இயற்கை பொய்த்துப் போனாலும் தன் மண்ணோடு மல்லுக்கட்டி பூமித்தாயை வளமாக்குபவர்கள் விவசாயிகள்.அழிந்த ஆவணங்கள் 'சுழன்றும் ஏர் பின்னது உலகம்” என்றார் வள்ளுவர். இந்த மகானுடையவாக்கு, நாட்டை ஆண்ட, ஆளும் மகான்களுக்குத் தெரியவில்லை. இன்று விவசாயம் மெல்ல மெல்ல அழிய, விவசாயியின் சிந்தனைத்திறனும் குறைந்து போயிற்று. அன்றாட வாழ்விற்காக விவசாயி போராடுகின்ற நிலை. விவசாயம் மட்டும் அழியவில்லை.

அவர்களுடைய வாழ்வியலோடு கலந்த கலாசாரமும், அவர்கள் நமக்குத் தந்து விட்டுப் போன அறிவு சார்ந்த ஆவணங்களும் அழிந்து கொண்டே வருகின்றன.
அவற்றை இனியாவது பாதுகாப்பது நம் கடமை. நம் முயற்சிகள் எல்லாம் அவர்கள் வாழ்வில் சுடராகி வெளிச்சம் தர வேண்டும். உழவன் அழுதாலும் உழுது கொண்டு இருப்பவன். அவன் வாழ்வு உயர வேண்டும். விவசாயத்தை காப்போம்; விவசாயியை காப்போம்! நம் பழம் பெருமையை மீட்டெடுப்போம்!'அறிவின் உழைப்பால் அகிலம் உயரும்உடல் உழைப்பால் ஆரோக்கியம் வளரும்”.-முனைவர் கே.செல்லத்தாய்தமிழ்த்துறை தலைவர்எஸ்.பி.கே. கல்லுாரி,
அருப்புக்கோட்டை94420 61060

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Berlioz - paris,பிரான்ஸ்
21-ஜன-201613:20:59 IST Report Abuse
Berlioz அருமையான விளக்க கட்டுரை பணத்தையும் பதவி மோகத்திலும் நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்களின் காதில் இந்த சொற்கள் விழ போவதில்லை ,அவர்கள் கருமமே கண்ணாயினார் போன்று தன் மனைவி மக்களுக்காக பாடு பட பிறந்தவர்கள் , ஊதற சங்க ஊதி வைச்சா விடியிற பொழுது தானா விடியும் என்று ஆதாங்க பட்டுகொள்ளவேண்டியது தான் நம் வேலை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஜன-201609:01:27 IST Report Abuse
Srinivasan Kannaiya உழவன் அழுதாலும் உழுது கொண்டு இருப்பவன். அவன் வாழ்வு உயர வேண்டும். விவசாயத்தை காப்போம் விவசாயியை காப்போம் நம் பழம் பெருமையை மீட்டெடுப்போம்'அறிவின் உழைப்பால் அகிலம் உயரும்உடல் உழைப்பால் ஆரோக்கியம் வளரும்”.- இதை எல்லா அரசியல்வாதிகள் காதில் படும் படி உரக்க சொல்லுங்கள்.. அப்போழுதுனாலும் விவசாயத்தை வளர்கிரார்கலா என்று பார்ப்போம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X