நியூயார்க்:இந்த ஆண்டு, சினிமா துறைக்கு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை அளித்து சாதனை படைத்ததற்கான விருதுக்கு, கோவையை சேர்ந்த கோட்டலாங்கோ லியோன் என்ற பொறியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படம், நடிப்பு போன்றவற்றுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகளுக்கு முன், சினிமா துறைக்கு அறிவியல், பொறியியல் போன்ற தொழில்நுட்பத்தில் சிறந்த கண்டுபிடிப்புகளை தந்ததற்காக விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த விருதுகளுக்கு இந்த ஆண்டு இந்தியாவை தாயகமாகக் கொண்ட ராகுல் தாக்கர், ''அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனை'க்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார். முதலில் இந்த தகவல் மட்டுமே வௌியே வந்தது. தற்போது இவருடன் இன்னொரு இந்தியரும் விருது பெறும் தகவல் தெரிய வந்துள்ளது.
அவர் பெயர் கோட்டலாங்கோ லியோன் . கோவையை பூர்வீகமாகக் கொண்டவர். 'டிசைன், பொறியியல், தொடர் மேம்பாடு'' விருதுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் கலிபோர்னியாவில் கல்வர் சிட்டியில் மனைவி, குழந்தைகளுடன் வசிக்கிறார் இவர். ஆஸ்கார் அறிவியல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதை அறிந்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாராம் இவர்.
இதுபற்றி தனது முகநுால் பக்கத்தில் எழுதும்போது அவர், ''நான் வழக்கம்போல் எனது வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது இத்தகவல் கிடைத்தது. மகிழ்ச்சியை என்னால் அடக்கவே முடியவில்லை. இதற்காக என் மேல் அக்கறை கொண்ட என் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வௌிச்சத்திற்கு வருவதை நான் விரும்புவதில்லை. இருப்பினும் என் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
அடுத்த மாதம் 13ம் தேதி ஆஸ்கர் தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட உள்ளன. மற்ற முக்கிய விருதுகள் அடுத்த மாதம் 28ம் தேதி வழங்கப்படும்.