கால்வாய் மீது வீடு கட்டிவிட்டு வெள்ளம் வந்ததும் புலம்புவதேனோ? | Dinamalar

கால்வாய் மீது வீடு கட்டிவிட்டு வெள்ளம் வந்ததும் புலம்புவதேனோ?

Added : ஜன 23, 2016 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மழைநீர் செல்லும் கால்வாய்களின் மீது வீடுகளைக் கட்டிவிட்டு, அவற்றை ஆக்கிரமிக்க அனுமதித்து விட்டு, பின் வெள்ளம் வந்து விட்டது என புலம்புவது, என்ன நியாயம்; ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் இதுதான் நடக்கிறது. ஆண்டுதோறும் மழையால் பாதிக்கப்பட்டும், நிரந்தர தீர்வுக்கான வழியைத் தேடாமல் ஊராட்சி நிர்வாகம், தூங்குகிறது.

சென்னைக்கு மிக அருகில், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி உள்ளது. மொத்தம், 15 வார்டுகள் கொண்ட அந்த ஊராட்சியில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.


அங்கு, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை வசதி இல்லை. ஒவ்வொரு ஆண்டு மழைக்கும், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி முழுவதும் பாதிக்கப்படும். கடந்த, 2015 நவ., - டிச., மாதங்களில் பெய்த மழையில், ஊராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும், 4 அடி உயரத்திற்கு மழைநீர் வெள்ளம் தேங்கியது. அதில், கழிவுநீரும் கலந்தது இன்னொரு சோகம். சாதாரண மழைக்கு, ௧௦ முதல் ௧௫ நாட்களில் வடிந்து விடும் மழைநீர், இந்த முறை, வடிவதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது.எங்கே செல்கின்றன?ஐயப்பன்தாங்கல் ஊராட்சி, போரூர் ஏரியின் மிக அருகில் உள்ளது. தாழ்வான பகுதியும் கூட. மழைக்காலங்களில், மாங்காடு, பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர், கால்வாய்கள் மூலம், போரூர் ஏரிக்குச் செல்லும்.


அந்த கால்வாய்கள் அனைத்தும், ஐயப்பன்தாங்கல் வழியாக சென்றன. இன்று அவை அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில், வீடாகவோ, சாலையாகவோ மாறிவிட்டன. பல கால்வாய்களின் துவக்கம் மட்டுமே உள்ளது. எங்கு செல்கின்றன, எங்கு முடிகின்றன என்பதைக் கண்டறிய முடியவில்லை.


பரணிபுத்தூர் ஊராட்சி, ஆர்.ஆர்.நகர் 2வது தெருவில், காட்டுப்பாக்கத்தில் இருந்து வரும் கால்வாய் ஒன்று செல்கிறது. தற்போது, அந்த கால்வாயின் சிறுபாலம் மட்டுமே மிஞ்சி உள்ளது. அதை வைத்துத் தான் அதை கால்வாய் என, கண்டறிய முடிகிறது.உரியவர் "ஓகே"; ஊராட்சியோ "நோ":பரணிபுத்தூர் பிரதான சாலை என, அழைக்கப்படும் குன்றத்தூர் - காட்டுப்பாக்கம் சாலையில், செந்தமிழ் நகர் அருகே, மாங்காட்டில் இருந்து, போரூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் ஒன்று உள்ளது. அந்த கால்வாய் தனியார் நிலம் வழியாக செல்வதால், தற்போது, செயலற்ற நிலையில் உள்ளது.


அந்த கால்வாயை அகலப்படுத்த, வட்டாட்சியர் முன்வந்தபோது, நிலத்தின் உரிமையாளரும் ஒப்புக்கொண்டார். ஆனால், ஐயப்பன்தாங்கல் ஊராட்சித் தலைவர் அனுமதிக்காததால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.


விளைவு, செந்தமிழ் நகர், முத்தமிழ் நகர், சிவராமகிருஷ்ணன் நகர், இ.வி.பி., பிரபு அவென்யூ மற்றும் விரிவாக்கம் - 1,2, அண்ணா நகர், அருணாச்சலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.பாலம் மட்டுமே மிச்சம்அந்த கால்வாயில் இருந்து, விஜயலட்சுமி அவென்யூ அருகே இன்னொரு கால்வாய் பிரிந்து, போரூர் ஏரிக்கு செல்கிறது. விஜயலட்சுமி நகரில் துவங்கி, சிவராமகிருஷ்ணன் நகர், கேசவர்த்தினி நகர் வழியாக போரூர் ஏரி செல்லும் அந்த கால்வாய், 18 அடி அகலம் கொண்டது. அந்த கால்வாயின், துவக்கத்தில் உள்ள, சிறுபாலம் மட்டுமே மிஞ்சி உள்ளது. மற்ற பகுதிகள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவிட்டன.


பரணிபுத்தூர் பிரதான சாலையில், நடுக்குளம் உள்ளது. அதன் பரப்பளவு, 2.70 ஏக்கர். ஆனால், தற்போது ஆக்கிரமிப்பால் குளத்தில், 30 சதவீதமே எஞ்சி உள்ளது. மீதி உள்ள குளத்தில், குழந்தைகள் மையம், ரேஷன் கடைகள், ஐயப்பன் கோவில் ஆகியவை உள்ளன. மேலும், ௨௦௦௮ல், சென்னை புறவழிச் சாலை அமைக்கப்பட்ட போது, கையகப்படுத்தப்பட்ட பட்டா நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட, 18 குடும்பங்களுக்கு, வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இதுவரை பட்டா கொடுக்கப்படவில்லை என்பது வேறு பிரச்னை.கால்வாய்கள் மாயம்நடுக்குளத்திற்கான, வரத்து மற்றும் போக்குக்கால்வாய்கள் முற்றிலும் மாயமாகி விட்டன. குளம் நிரம்பி, மறுகால் பாயும் இடத்தில் கலங்கல் இருந்ததாக, பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். அதன் அருகே தற்போதுள்ள, சிறுபாலம் மூலம் தான், கால்வாயை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது. கால்வாயின் மற்ற பகுதிகள், தனியார் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன.


அந்த கால்வாய், தனியார் நிறுவன வளாகத்தில் உள்ளே உள்ள மற்றொரு குளத்திற்கு செல்கிறது. அந்த குளத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை.தந்தி கால்வாய்செம்பரம்பாக்கத்தில் இருந்து போரூர் ஏரிக்குச் செல்வது, தந்தி கால்வாய். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, கொழுமுனிவாக்கம், மாங்காடு, பட்டு கூட்ரோடு, கெருகம்பாக்கம், ஐயப்பன்தாங்கல் வழியாக, அந்த கால்வாய் போரூர் ஏரியை அடைகிறது.


மொத்தம், 12 கி.மீ., நீளமுள்ள இந்த கால்வாய், ௪ மீ., அகலம் கொண்டது. ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில், ஆக்கிரமிப்பால், ௨ மீ., ஆக கால்வாய் சுருங்கி விடுகிறது. கால்வாயில் பல வீடுகள் முளைத்துள்ளன. கால்வாயை தூர்வாரி மண்ணைக் கொட்டக் கூட இடம் கிடையாது.


சமீபத்திய மழையில், தந்தி கால்வாய் நிரம்பி வழிந்தது. கால்வாயின் கரையை தாண்டி, வெள்ளம் இருபுறமும் பரவியது.


தந்தி கால்வாயில் இருந்து, இ.வி.பி., பிரபு அவென்யூவின் காந்தி தெருவில் இன்னொரு கால்வாய் பிரிகிறது. அந்த கால்வாய், காந்தி தெரு, பாரதியார் தெரு, முத்து நகர் வழியாக போரூர் ஏரிக்கு செல்கிறது. காந்தி தெரு, பாரதியார் தெருக்களில், கால்வாயின் மீது, குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஐயப்பன்தாங்கலில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து, வெள்ள நிவாரண சிறப்பு குழு அதிகாரி, அமுதா ஐ.ஏ.எஸ்., தலைமையிலான பொதுப்பணி துறையினர், கடந்த டிச., மாதம் ஆய்வு செய்தனர். அதில், தந்தி கால்வாயில் இருந்து பிரியும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.என்ன செய்ய வேண்டும்:ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை மீட்கவேண்டும். நடுக்குளம் மற்றும் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி மழை நீரை சேமிப்பதற்கு வழி செய்ய வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே, அடுத்த மழை மட்டுமல்ல, எந்த மழைக்குமே பாதிப்பு ஏற்படாமல், தப்பிக்க முடியும்.


- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-பிப்-201602:46:49 IST Report Abuse
தமிழ்வேல் இதற்கெல்லாம் ஒரு விடிவே கிடையாதா ?
Rate this:
Share this comment
Cancel
sundar - Pdy,இந்தியா
24-ஜன-201610:05:19 IST Report Abuse
sundar இன்னும் எட்டு மாதங்களே உள்ளது அடுத்த மழை பருவத்திற்கு. முன்பே உலக வல்லுனர்கள் வரும் வருடங்களில் மழையின் அளவு அதுகமாக இருக்குமென்று கூறியுள்ளார்கள். தமிழக அதிகாரிகள் இப்பொழுதிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அடுத்த மழையிலும் தமிழகம் மிதக்கும். இவர்கள் இதை ஏதும் செய்யாதபட்சத்தில் மறுபடியும் மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மத்திய அரசானது எந்தவிதமான நிதிஉதவியும் செய்யக்கூடாது, காரணம் மாநில அரசின் தவறே...........................................
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஜன-201608:48:35 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசியல் வாதிகள் அன்றன்றைக்கு பணம் வந்ததா என்றுதான் பார்த்தார்கள்... ஆனால் மக்கள் வேண்டும் என்றால் அவர்களை எதிர்க்க பயந்து சும்மா இருப்பார்கள் ...ஆனால் இயற்க்கை மக்களை தண்டித்து விட்டது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X