இஸ்ரேல் தொழில் நுட்பத்தில்: பசுமை குடில் காய்கறி நாற்றங்கால்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இஸ்ரேல் தொழில் நுட்பத்தில்: பசுமை குடில் காய்கறி நாற்றங்கால்

Added : ஜன 27, 2016
Advertisement

இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் குழிதட்டு காய்கறி நாற்றுகளால்30 சதவீத மகசூல் அதிகரித்துள் ளது. இதன்படி தேனி அருகே பசுமை குடிலில் ஒரே இடத்தில் 6 லட்சம் நாற்றுகள் தயார்
தேனி:தேனி மாவட்டம் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் மாநில அளவில் பெயர் பெற்றது. இங்கு விளையும் காய்கறிகள் சென்னை, மதுரை உட்பட பிற மாவட்டங்களுக்கும், கேரள காய்கறி தேவையில் 50 சதவீதத்தையும் பூர்த்தி செய்து வருகிறது. 30 ஆயிரம் ஏக்கரில் காய்கறி சாகுபடி நடைபெறுகிறது.
காய்கறி உற்பத்தி அதிகரிப்பால் போதிய விலை இல்லை. நோய் பாதிப்பால் இழப்பு ஏற்பட்டாலும் விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி உற்பத்தி பெருக்கத்தில் விவசாயிகள் ஆர்வம் குறையவில்லை . தேனி அரண்மனைபுதூரில் இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் உயர்தர காய்கறி நாற்று பண்ணையை விவசாயி சவுந்தராஜன் நடத்தி வருகிறார். இங்குள்ள பசுமை குடிலில் ஒரே நேரத்தில் 6 லட்சம் நாற்றுக்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார். பழைய முறை: விவசாயிகள் சாகுபடிக்கு தேவையான நாற்றுக்களை தங்கள் நிலத்தில் நாற்றங்கால் ஏற்படுத்தி 30 நாட்களுக்குள் நாற்று எடுத்து நடவு செய்வார்கள். இம் முறையில் பெறும் நாற்றுக்களில் 50 சதவீதம் சேதமாகும்.
புதிய தொழில் நுட்பம்: இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் பசுமை குடில் அமைத்து அதில் குழிதட்டுகளில் ஓசூர், பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட "கொகோபிட்' எனும் நுண்ணிய தென்னை நார் துகளுடன் ( 90 முதல் 110 பி.எச். நுட்ப அளவு) இயற்கை உரம் கலந்து குழிக்கு ஒரு விதை வீதம் வைத்து பராமரிக்கின்றனர். தக்காளி, கத்தரி 4 நாட்களிலும், மிளகாய் உள்ளிட்ட காய்கறி விதைகள் 5 நாளில் முளைகட்டி நாற்று வெளிப்படும். ஒரு டிரேயில் 98 நாற்றுகள் வளரும். நிலத்தில் நாற்று முளைக்க ஒருவாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகும். அறிவியல் ரீதியான வளர்ப்பு: குழிதட்டு நாற்றுகளில் தண்டு,வேர் அழுகாமல் இருக்க சூடோமோனாஸ், விரிடி, வேர்வளர்ச்சியை துண்டும் மருந்து தெளித்து முறையாக பராமரிக்கின்றனர். 15 சென்டில் நாற்று வளர்க்க 500 லிட்டர் நீர் போதும். குறைந்தளவு நீர், பனி, மிதமான வெயில், காற்று என காலச்சூழ்நிலைக்கு ஏற்ப குழந்தையை பராமரிப்பது போல் வளர்க்கின்றனர். 21 முதல் 30 நாட்களில் நாற்றுகள் வளர்ந்து நடவு செய்யலாம். பாதிப்பு இல்லாத நாற்று: இத் தொழில் நுட்பத்தில் வளர்ந்த நாற்றுக்களை மண்ணில் எடுத்து நடவு செய்தால் சல்லிவேர், ஆணிவேர் சேதமடையாமல் முழுவேர் மண்ணில் பதியும். இதனால் நடவு செய்த மறுநாளே நாற்று துளிர் விட்டதுபோல் எழுந்து நிற்கும். செலவு மிச்சம்: வீரிய ஒட்டுரக தக்காளி விதை 10 கிராம் ரூ.350. இதில் 3 ஆயிரம் விதை இருக்கும். பழைய முறையில் நாற்று தயார் செய்தால் 1,000 முதல் 1,200 விதை முளைக்கும். ஏக்கருக்கு 8 ஆயிரம் நாற்று தேவைப்படும். 40 சதவீத அளவிற்கு முளைக்கும். விதை, பராமரிப்பு என விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.
குழித்தட்டு முறையில் 98 சதவீத நாற்று முளைக்கும். ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் செலவு மட்டுமே. விவசாயிகளுக்கு செலவு மிச்சமாகும். திறந்தவெளி நாற்றங்காலில் வண்ணத்துபூச்சிகள் முட்டையிட்டு பூச்சி தாக்குதலை ஏற்படுத்தும். பசுமை குடிலில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
சத்யசாய் உயர்நாற்று பண்ணை விவசாயி சவுந்தராஜன், "பெங்களூருவில் நர்சரியில் வேலை செய்த அனுபவத்தை பயன்படுத்தி ரெட்டியார் சத்திரத்தில் இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் நர்சரி பண்ணை அமைத்துள்ளேன். விவசாயிகளிடம் கிடைத்த வரவேற்பால் தேனி மாவட்டத்திலும் அறிமுகம் செய்துள்ளோம். ஒரு "டிரே' தக்காளி நாற்று ரூ.50, கத்தரி ரூ.40, மிளகாய் ரூ.65 என அனைத்து வகை காய்கறி நாற்றுக்களும், பூ செடி, முருங்கை வளர்த்து தருகிறோம்.
விதைகளின் விலைக்கு ஏற்ப நாற்றுக்கு விலை இருக்கும். விவசாயிகள் விதையை கொடுத் தால் அதையும் பசுமை குடிலில் வளர்த்து கொடுப்போம். ஒரு "டிரே' க்கு ரூ.30 கூலி. புதிய தொழில் நுட்ப நாற்றுகளில் மகசூல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது, என்றார். இவரிடம் 95853 83031 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் பெறலாம்.
15 சென்டில் நாற்று வளர்க்க 500 லிட்டர் நீரே போதும்.
ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X