அடையாற்று வெள்ளத்தால் நிலைகுலைந்த வரதராஜபுரம்; ஆக்கிரமிப்புகள் உருவானது எப்படி? கண்டுகொள்ளாதது ஏன்?| Dinamalar

அடையாற்று வெள்ளத்தால் நிலைகுலைந்த வரதராஜபுரம்; ஆக்கிரமிப்புகள் உருவானது எப்படி? கண்டுகொள்ளாதது ஏன்?

Added : பிப் 08, 2016 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தில் சிக்கி, சர்வதேச அளவில் பிரபலமான ஒரு சிறிய கிராமம் வரதராஜபுரம். காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் இருந்து தான், ஓடையாக இருந்து அடையாறு ஆறு, ஒரு ஆறாக உருமாறி பயணிக்கிறது.

ஒரே இடத்தில் இல்லாமல், ஆங்காங்கே சிதறிய நிலப்பரப்பாக அமைந்துள்ள வரதராஜபுரம் கிராமம், அடையாற்று வெள்ளத்தால், 100 சதவீதம் முழுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து துண்டிப்பு; ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்; வெள்ளத்தில் சிக்கியோர் ஹெலிகாப்டரில் மீட்பு; மீட்பு பணியில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் படையே மும்முரம் என, கடந்த வடகிழக்கு பருவமழைக்கு, படுபிசியாகவும், பிரபலமாகவும் காட்டப்பட்டது தான், வரதராஜபுரம் கிராமம். வெள்ளத்தில் சிக்க என்ன தான் காரணம் என, நமது நிருபர்குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், வரதராஜபுரம் கிராமம், இயற்கையாகவே கடல் மட்டத்தில் இருந்து, தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. இருப்பினும், வரலாற்றில் இடம் பிடிக்கும் அளவு வெள்ளத்தில் சிக்கியதற்கு, மனிதத் தவறுகளே மிக முக்கிய காரணம் என, தெரியவந்துள்ளது.
இந்த கிராமத்தின் வழியாக பயணிக்கும் அடையாறு ஆறு, மழைநீர், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்து உபரிநீரை கொண்டு வந்து சேர்க்கும் போக்கு கால்வாய்கள் ஆகியவற்றை கபளீகரம் செய்து ஆக்கிரமித்தது தான், இந்த பேரழிவிற்கு காரணம். இதை துல்லியமாக கண்டுபிடித்த, வெள்ள நிவாரண பணி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அமுதா, ஆனந்த், கஜலட்சுமி ஆகியோர், தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரதராஜபுரத்திற்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில், வருவாய் துறையை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர். அதன் முதல்கட்டம் தான் தற்போதைய ஆக்கிரமிப்பாளர்களை பயோமெட்ரிக் சர்வே எடுக்கும் பணி துவக்கம்.

வெள்ளம் வந்தது எப்படி?ஆதனுாரில் இருந்து துவங்கும் அடையாறு ஆறு, தொடர்ந்து பயணிக்கும், 4வது கி.மீ., துாரத்தில் வரதராஜபுரம் எல்லை துவங்குகிறது. வரதராஜபுரத்தில், 800 மீட்டர் முதல் ஒரு கி.மீ., துாரம் வரை அடையாறு ஆறு பயணிக்கிறது.இந்த பகுதியில் இருந்து, அடையாறு ஆறு, 10 மீட்டர் அகலத்தில் இருந்து 20 மீட்டராக, அதாவது இரண்டு மடங்காக அகலமாகிறது. ஆனால், வரதராஜபுரம் எல்லை துவங்கும் இடம் வரை, அடையாறு ஆறு கடத்தும் உபரிநீரை விட, அதற்கு பிறகு கடத்தி செல்லும் உபரி நீர், நான்கு மடங்கு அதிகமாகும்.மலைப்பட்டு ஏரி நிரம்பி, உபரிநீர், மணிமங்கலம் ஏரிக்கும், மணிமங்கலம் ஏரியில் இருந்து வழியும் உபரிநீர், பொதுப்பணித்துறை போக்கு கால்வாய் மூலம், கரசங்கால் கிராமம் வழியாக, மண்ணிவாக்கம் - முடிச்சூர் கிராமங்களின் எல்லையில் அடையாற்றுடன் இணைகிறது.
ஒரத்துார் ஓடை வழியாக படப்பை, அதை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வரும் உபரிநீரும், வரதராஜபுரம் எல்லையில் அடையாறு ஆற்றுடன் கலக்கிறது. அதிகப்படியான வெள்ளத்தை கடத்திச் செல்லும் அடையாறு ஆற்றில், வரதராஜபுரம் பகுதியில் தான், அதிகமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. குறிப்பாக, வரதராஜபுரம், புவனேஸ்வரி நகர், சாந்தி நிகேதன் காலனி, ஸ்ரீராம் நகர் விரிவாக்கம், அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட நகர்களில் 186 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த வீடுகள் சமீபத்தில் உருவானவை அல்ல; கடந்த 20 ஆண்டு களுக்கு மேலாக இருந்து வருகின்றன. அவற்றை இவ்வளவு நாளாக கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை, தற்போதைய பெருமழை வெள்ள பாதிப்பிற்கு பிறகு, அகற்ற முன் வந்துள்ளது. அதேபோல, மணிமங்கலம் - முடிச்சூர் சாலையில் உள்ள வரதராஜபுரம், பி.டி.சி., குவாட்டர்ஸ், அதை சுற்றியுள்ள ஏழு நகர்கள் வெள்ளத்தில் மூழ்கின. அதற்கு மணிமங்கலம் ஏரியில் இருந்து ஓடைகள் வழியாக வந்த உபரிநீர், அடையாற்றில் கலக்க வசதியாக இருந்த போக்கு கால்வாய், முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டது தான் காரணம்.
பதில் இல்லைஇந்த கால்வாயை ஆக்கிரமித்திருந்த சுற்றுச்சுவர், கோவில், அடுக்குமாடி குடியிருப்பு, கடை ஆகியவற்றை, வருவாய்த் துறை அதிகாரிகள் சமீபத்தில் அகற்றினர். இன்னும் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளும், துார்வாரும் பணிகளும், பாலங்கள் அமைக்கும் பணிகளும் முடியவில்லை.நீர்வழித் தடங்களை ஒட்டி, பெரிய அளவில் சி.எம்.டி.ஏ., அனுமதியுடன் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், குறைந்தபட்சம் 10 மீட்டர் இடைவெளி விட வேண்டும் என்பது விதி. ஆனால், சி,எம்.டி.ஏ., அனுமதியுடன், முடிச்சூர் - மணிமங்கலம் சாலையில், அடையாறு ஆற்றை ஒட்டி கட்டப்பட்ட ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு, அடையாறு ஆற்றின் நீரோட்ட பகுதியை ஆக்கிரமித்தே கட்டப்பட்டது.அதையும் பெருமழை வெள்ளத்திற்கு பிறகே, அடையாளம் கண்டு அதிகாரிகள் அகற்றினர்.
இந்த குடியிருப்பு கட்டியபோது, அனுமதி அளித்தது யார்? அதை கண்காணித்தது யார்? கட்டுமான நிறைவு சான்றிதழ் அளித்தது யார்? கட்டுமானத்தை ஆய்வு செய்தார்களா? இல்லையா? தவறு செய்த அதிகாரிகள் மீது, இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, எந்த கேள்விக்கும் பதில் இல்லை.இவ்வாறு நீர்வழித் தடங்கள் கபளீகரம் செய்யப்பட்டது தான், வரதராஜபுரம், மிக மோசமான அளவிற்கு வெள்ளத்தில் சிக்க காரணமாக அமைந்தது.
என்ன செய்ய வேண்டும்?* மண்ணிவாக்கத்தில் இருந்து அடையாறு ஆற்றில் உபரிநீர் அதிகளவில் கடத்தப்படுவதால், ஆற்றை அகலப்படுத்த வேண்டும். தற்போது, 20 மீட்டர் அகலத்தில் உள்ள ஆற்றை குறைந்தபட்சம், 50 மீட்டர் அகலத்திற்கு மாற்ற வேண்டும். அதற்கு தனியார் நிலத்தை கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அரசு புறம்போக்கு நிலமே, ஆற்றை ஒட்டி உள்ளது. இந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும்.* அடையாறு ஆற்றுடன் இணை யும், மணிமங்கலம் கால்வாய், வரதராஜபுரம் ஓடை ஆகியவற்றை துார்வாரி, அகலப்படுத்தி, ஆற்றுடன் இணைக்க வேண்டும்.* இந்த கால்வாய்களில் இருந்து வெள்ளநீர், ஊருக்குள் புகாமல் இருக்க, பக்கவாட்டில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்.* இனி பி.டி.சி., குவாட்டர்ஸ் உட்பட வரதராஜபுரம் பகுதியில் கட்ட அனுமதி அளிக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கு, வடிகால் வசதி செய்தல் உட்பட வெள்ளத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthiban Pandian - Chennai,இந்தியா
10-பிப்-201611:33:35 IST Report Abuse
Parthiban Pandian தினமலரின் இக்கட்டுரை பாராட்டுக்குரியது. மிக நுணுக்கமாக கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஆவணமாக பதுகக்கப்படவேண்டிய ஒரு கட்டுரை. மிக்க நன்றி
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
09-பிப்-201613:10:28 IST Report Abuse
Agni Shiva "இந்த குடியிருப்பு கட்டியபோது, அனுமதி அளித்தது யார்? அதை கண்காணித்தது யார்? கட்டுமான நிறைவு சான்றிதழ் அளித்தது யார்? கட்டுமானத்தை ஆய்வு செய்தார்களா? இல்லையா? தவறு செய்த அதிகாரிகள் மீது, இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என, எந்த கேள்விக்கும் பதில் இல்லை. இந்த கேள்விகள் பதில் இல்லாத கேள்விகளாகவே இருந்து விடக்கூடாது . மாறாக தினமலர் அவற்றிக்கான பதில்களை' அந்த கருப்பு ஆடுகளை மக்கள் மன்றத்தின் முன் தொலிஉரித்து காட்டவேண்டும். இதன் மூலம் மீண்டும் இந்த தவறுகள் செய்வதற்கு சிறிது பயம் ஏற்படுமாறு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
J.Sathish Kumar - Chennai,இந்தியா
09-பிப்-201612:28:31 IST Report Abuse
J.Sathish Kumar நான் ஆதனூரில் உள்ள திருமுருகன் நகரில் வசிக்கிறேன். கட்டுரையில் குறிப்பிட்ட ஆதனூர் ஏரியில் தொடங்கும் அடையாறு ஓடையாக நான் வசிக்கும் வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் செல்கிறது. 100 அடி அகலம் கொண்ட அந்த ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 10 அடிக்கும் குறைவான அகலமே உள்ளது, இதன் காரணமாக கடந்த மழையின் பொது சிறுகசிறுக சேமித்த பணத்தில் வாங்கிய எங்கள் விடுகளில் கழுத்தளவு தண்ணீர் புகுந்து வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் நாசமாகியது. நான்கு நாட்கள் நாங்கள் பட்ட துன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இராணுவமே நான்கு நாட்கள் கழித்துதான் எங்கள் பகுதிக்கு வரமுடிந்தது என்றால் பார்த்துகொள்ளுங்கள். ஆனால் இன்றுவரை ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X