ஓய்வின்றி ஓட்டாதே வாகனத்தை!| Dinamalar

ஓய்வின்றி ஓட்டாதே வாகனத்தை!

Updated : பிப் 15, 2016 | Added : பிப் 15, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 ஓய்வின்றி ஓட்டாதே வாகனத்தை!

மதுரை மாவட்டம் டி.கல்லுப் பட்டி அருகே அரசு பஸ்சும், சிமென்ட் லாரியும் பிப்.,6ல் மோதி கொண்ட விபத்தில் 16 பேர் பலியானதை எண்ணும்போது நெஞ்சம் பதை பதைக்கிறது. ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரத்தில் சாலைப்பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அப்போது மட்டும் விபத்தை தவிர்ப்பது குறித்து பிரசாரம் செய்து விட்டால் போதுமென அரசு துறைகளும், போக்குவரத்து நிர்வாகங்களும் கருதி விடுகின்றன. ஆனால் வாகன எண்ணிக்கைகள் மிக அதிகமாகி, விபத்துக்கள் அதிகரித்து வரும் சூழலில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் என்பது அவசியமாகிறது.
காலத்தின் தேவை:சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் இயற்றிய மோட்டார் வாகன சட்ட 1939ன் படி, இரவு 11.00 மணிக்கு மேல் அதிகாலை 4.00 மணிக்குள் பணி துவங்குவது போல் கால அட்டவணை அமையக்கூடாது. அப்படி அமைந்தால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி சீட்டு அனுமதிக்க மாட்டார்கள் என இருந்தது.
பிற்காலத்தில் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு அனுமதியுடன், 24 மணி நேரமும் இயக்கம் என்பது மோ.வா.சட்டம் 1988ல் அனுமதிக்கப்பட்டது. மனிதன் சாதாரணமாக அசதி அடையும் நேரம் என்பது முன்பு கவனத்தில் கொள்ளப்பட்டது. சிறப்பு அனுமதியில் அந்த நேரம் கவனத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை.தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தில், 120 கி.மீ., தொலைவு வரை தான் தனியார் பயணிகள் பஸ்கள் இயக்க முடியும். போக்குவரத்துக்கழகங்கள் தங்களுக்குள் 250 கி.மீ., வரை புறநகர் கழகங்கள் இயக்குவது எனவும், அதற்கு மேற்படும் வழித்தடங்களை அரசு விரைவு போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என எல்லை வகுத்து கொண்டது.
ஏனென்றால், அரசு விரைவு கழகத்திடம் பல மாவட்டங்களில் பணி மாற்றம் செய்யும் டிரைவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. ஆனால் போட்டிகளும், தேவைகளும் அதிகரிக்க தற்போது புறநகர் கழகங்களே நெடுந்துார தடங்களை, ஒரே ஓட்டுனரை கொண்டு இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் - ஈரோடு, மதுரை - ஓசூரு, திருப்பூர் - நாகர்கோவில், திருநெல்வேலி - குமுளி என ஒரு நடைக்கு 9.00 முதல் 10.00 மணி நேரம் இயங்கி, ஓரிரு மணி நேரம் கழித்து மீண்டும், அதே டிரைவர், அந்த தடத்தில் திரும்பி வரும் நிலை இருக்கிறது. விபத்தை தவிர்க்க நெடுந்துார தடங்களுக்கு இரண்டு டிரைவர்கள் நியமிக்கும் நடை முறையை உருவாக்க வேண்டும்.
தவறான கணிப்பு :புறநகர் சாலைகள் பல நான்கு வழிச்சாலைகளாகவும், மாவட்ட சாலைகள் அகலப்படுத்தப்பட்டும் விட்டது. பஸ்களில் தற்போது 'பவர் ஸ்டியரிங்' பயன்படுத்தப்படுகிறது. இயந்திரங்கள் நவீனமயமாகி விட்டன. எனவே ஒரு டிரைவரே இயக்கலாம் என போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த அனுமானம் தவறானது.
உயிரியல் கூறுகள், ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் 6.00 மணி நேரமாவது சரியான துாக்கம் கட்டாயம் என்கிறது. முன்பு சாலைகள், நிறைய வளைவுகளுடன் இருக்கும், அப்போது டிரைவர் தொடர்ந்து கவனமுடன் பணியாற்றுவார். தற்போது வளைவுகளை நேர்படுத்தி நெடுந்துாரத்திற்கு அகலப்படுத்தி இருப்பதால், அசதியில் இருக்கும் டிரைவர், நிற்கும் வாகனத்தில் சென்று மோதி விபத்து ஏற்படுத்துகிறார்.
கூடுதல் பணி :முகூர்த்த நாள் போன்றவற்றில் வழக்கத்திற்கு அதிகமாக டிரைவர்கள் விடுமுறையில் சென்று விடுகின்றனர். பணி முடிந்து வீட்டிற்கு செல்ல முற்படும் எஞ்சிய டிரைவரை, கட்டாயப்படுத்தி மீண்டும் வேறு தடத்திற்கு அனுப்பும் நிலை உள்ளது. அதுபோன்ற சமயங்களில் குறைந்த பட்சம் 3.00 மணி நேரமாவது பணி முடித்த டிரைவரை துாங்க அனுமதிக்க வேண்டும். பின் பணிக்கு அனுப்புவதே பொருத்தமாக இருக்கும். டிரைவர்களும் தன்னால் இயலவில்லை என்கிற நிலையிருந்தால், கண்டிப்பாக அந்த பணிக்கு செல்லக்கூடாது. ஒரு விபத்து நேரிட்ட பின் இப்படி செய்திருக்கலாம், என சிந்திப்பதற்கு முன் விலை மதிப்பற்ற உயிரினை இழந்திருப்போம் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
ஓய்வில்லா பணி நிலை லாரி, டிரக் போன்ற வாகனங்கள் துறைமுகங்களில், சிவில் சப்ளைஸ் அலுவலகங்களில் பாரம் ஏற்ற 6.00 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் ஓய்வாக உறங்க முடியாது. அடுத்தடுத்து லாரிகளை நகர்த்தி கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு லோடு ஏற்றிய தகவல் முதலாளிக்கு சென்றவுடன், ''உடனே புறப்படு,'' என அவரிடம் இருந்து டிரைவருக்கு உத்தரவு வந்துவிடும். நிர்பந்தத்தில் வேகமாக ஓட்டும் டிரைவர் விபத்தை சந்திக்கிறார். வெவ்வேறு நேரங்களில் உணவு உண்பது, புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவதால் உடல் நலமும் பாதிக்கிறது. உடல் பாதிப்பால் வாகனம் ஓட்டுகிறார்கள்.
சட்ட ஆணைய பரிந்துரை :நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையிலான 234வது சட்ட ஆணையம் சாலை விபத்துக்கள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை ஆகஸ்ட் 2009 ல் சமர்ப்பித்து, சாலை விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியம், சாலை பராமரிப்பில் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தெரிவித்தது.
உ.பி. மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள வி.வி.கிரி தேசிய தொழிலாளர் பயிற்று நிறுவன இயக்குனர் எம்.எம்.ரெஹ்மான், டிரைவர்களின் பணி நிலை குறித்து விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார். டிரைவர்களின் உணவு பழக்க வழக்கத்திலிருந்து, ஓய்வில்லாத இயக்கம், போதை பொருட்கள் உபயோகத்தால் வரும் தீங்குகள் என பலவற்றை விவரித்து ஓய்வின் அவசியத்தை வலிறுத்துகிறார்.
50 கி.மீ., துாரத்திற்கு ஒரு முறை வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுப்பதற்கான பக்கவாட்டு சாலை அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார். போதிய பராமரிப்பின்றி வாகனம் இயக்கப்பட்டால் விபத்தின் போது ஏற்படும் சேதத்தின் அளவும் அதிகரிப்பது குறித்து அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பிரசாரம் அவசியம் :நெடுஞ்சாலை வாகன பணியில் ஓரிரு நிமிட அயர்வு என்பதினால் எண்ணற்ற விலை மதிப்பில்லா உயிரிழப்புகள் நேரிட்டு விடுகிறது. டிரைவர்கள் தங்களின் அயர்வு, சோர்வை உணரும் சந்தர்ப்பங்களில் கண்டிப்பாக சில மணிகளாவது உறங்கிவிட்டு மீண்டும் பணியை தொடர பழகி கொள்ள வேண்டும்.
அரசு, கழக நிர்வாகங்கள் நெடுந்துார வழித்தடங்களுக்கு இரண்டு டிரைவர்களை நியமிப்பது, அத்தியாவசிய பராமரிப்புகளை அவ்வப்போது மேற் கொள்வது போன்ற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விலை மதிப்பில்லா உயிரிழப்பை தவிர்க்க தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பிரசாரங்களும் அவசியம்.
- எஸ். சம்பத்மாநில நிர்வாகி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனம், மதுரை94420 36044

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-பிப்-201608:10:20 IST Report Abuse
Srinivasan Kannaiya காசு முக்கியம் இல்லை உயிர்தான் முக்கியம் என்று அனைவரும் உணரவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை