நாட்டுக் கால்வாய் ஆக்கிரமிப்பால் மிதந்த திருநீர்மலை; மாயமான கடப்பேரி கால்வாய் மீட்கப்படுமா?| Dinamalar

நாட்டுக் கால்வாய் ஆக்கிரமிப்பால் மிதந்த திருநீர்மலை; மாயமான கடப்பேரி கால்வாய் மீட்கப்படுமா?

Added : பிப் 17, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

சமீபத்திய பெருமழை வெள்ளத்தில், பல்லாவரத்தை ஒட்டியுள்ள திருநீர்மலை பேரூராட்சி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அந்த பேரூராட்சி, 18 வார்டுகளை கொண்டது. அடையாற்றை ஒட்டியுள்ள பேரூராட்சி வெள்ளத்தில் மூழ்க என்ன காரணம்?
நமது நிருபர் குழு ஆய்வில் பல உண்மைகள் தெரியவந்தன. அவற்றின் விவரம்: * திருநீர்மலைக்கு, தாம்பரம் கடப்பேரி, வீரராகவன் ஏரி, திருநீர்மலை ஏரி ஆகியவற்றின் உபரிநீர், முடிச்சூர், பெருங்களத்துார் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் என, நான்கு வழிகளில் இருந்து மழைநீர் வருகிறது.* கடப்பேரியில் இருந்து தண்ணீர், கடப்பேரி - திருநீர்மலை சாலையை ஒட்டியுள்ள கால்வாய் வழியாக திருநீர்மலைக்கு வரும். அங்கிருந்து, சித்தேரியை அடைந்து, சென்னை புறவழிச்சாலை அணுகுசாலை கால்வாய் வழியாக, நாட்டுக் கால்வாயை அடைந்து, அடையாற்றில் கலக்கும்.* வீரராகவன் ஏரி உபரி நீர், திருநீர்மலை பெரிய ஏரிக்கு செல்லும். அங்கிருந்து கலங்கல் வழியாக வெளியேறும் தண்ணீர் நாட்டுக் கால்வாய் வழியாக, ஒன்றாவது வார்டு ரங்கா நகர், சுப்புராயன் நகர், சரஸ்வதிபுரம் வழியாக, சென்னை புறவழிச் சாலையின் கீழ் செல்லும் சிறுபாலத்தைக் கடந்து, பம்மல் நகாரட்சி குப்பைக் கிடங்கை ஒட்டி செல்லும் கால்வாய் வழியாக அடையாற்றில் சேரும்.* முடிச்சூர், பெருங்களத்துார் பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் பாப்பான் கால்வாய் வழியாக, திருமங்கையாழ்வார்புரம் மலை வழியாக திருநீர்மலையை அடைந்து, அடையாற்றில் சேரும்.
நடந்தது என்ன?* கடப்பேரியில் இருந்து வரும் மழைநீர் செல்லும் கால்வாய், கடப்பேரி, திருநீர்மலை பகுதிகளில் காணாமல் போய்விட்டது. அதேபோல், புறவழிச்சாலை அணுகுசாலை கால்வாயும் சுருங்கி விட்டது. இந்த காரணத்தால், மழைநீர் செல்ல வழியின்றி திருநீர்மலை, பஜனை கோவில் தெரு, அறிஞர் அண்ணா தெருக்களை வெள்ளம் சூழ்ந்தது. * திருநீர்மலை ஏரியில் இருந்து புறப்படும் நாட்டுக் கால்வாய், 40 அடி அகலம் கொண்டது. இந்த கால்வாய் போகப்போக அகலம் குறைந்து, புறவழிச்சாலையை கடந்து, அடையாற்றில் சேர்கிறது. மழைக்கு முன்னர், இந்த கால்வாயை துார்வாரி சீரமைக்காத காரணத்தாலும், கால்வாய் செல்லும் இடத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள், கால்வாயின் அகலம் குறைந்து விட்டதாலும், கனமழையில் ஒன்றாவது வார்டு பகுதிகளான ரங்கா நகர், சுப்புராயன் நகர், பார்வதிபுரம், காசி கார்டன், சரஸ்வதிபுரம் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பொதுவாக, இந்த பகுதிகள் தாழ்வானவை என்பதால், ஒவ்வொரு மழையின் போதும் மழைநீர் தேங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதிகளில், முதல் மாடி வரை வெள்ளம் தேங்கியது.* அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அதை ஒட்டியுள்ள வி.ஜி.என்., நகர் முதலில் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருநீர்மலை பகுதிகள், வேம்புலியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, மல்லிமா வீதி பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

என்ன செய்ய வேண்டும்?* பம்மல், நாகல்கேணி பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து, சுத்திகரிக்கப்படாமல் , நாட்டுக் கால்வாயில் ரசாயன கழிவுகள் விடப்படுவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும். * தாம்பரம் - கடப்பேரியில் இருந்து வரும் மழைநீர், திருநீர்மலை சித்தேரிக்குச் செல்லும் மாயமான கால்வாயை மீட்டு, வரைமுறைப்படுத்த வேண்டும். * திருநீர்மலை பெரிய ஏரியின் கலங்கல் பகுதியில் இருந்து செல்லும் நாட்டுக் கால்வாயை, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, வரைமுறைப்படுத்துவதோடு, துார்வாரி, ஆழப்படுத்தி இருபுறமும் கரையை பலப்படுத்த வேண்டும். * சென்னை புறவழிச்சாலையின் கீழ் செல்லும் கால்வாயை அகலப்படுத்த வேண்டும்.* வீரராகவன், திருநீர்மலை ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிக் கரையை பலப்படுத்த வேண்டும். ஏரியில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்றி, துார்வாரி, ஆழப்படுத்த வேண்டும். * திருநீர்மலை கலங்கல் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வேண்டும்.
பம்மல் - திருநீர்மலை எல்லை கால்வாய்களை பராமரிப்பது யார்? பம்மல் - திருநீர்மலை உள்ளாட்சிகளின் எல்லையான, டாக்டர் சவுந்தரம்மாள் தெரு வழியாக செல்லும் கால்வாய், திருநீர்மலை நாட்டுக் கால்வாயை அடைகிறது. பம்மல், நாகல்கேணியில் தொழிற்சாலை கழிவு, பல்லாவரம் நகராட்சி பகுதியில் இருந்து கழிவு நீர் ஆகியவை இந்த கால்வாயில் கலந்து, நாட்டுக் கால்வாய் வழியாக அடையாற்றுக்கு செல்கிறது.சமீபகாலமாக, இந்த கால்வாயை பராமரிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சவுந்தரம்மாள் தெருவின் கிழக்கு பகுதியில் கால்வாய் துார்வாரப்பட்டு, சிமென்ட் சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மேற்கு பகுதியில் உள்ள கால்வாயை யார் பராமரிப்பது என்பது தெரியாத காரணத்தால், குப்பை, கழிவு கொட்டப்பட்டு துார்ந்து போய்விட்டது. அருகேயுள்ள தொழிற்சாலைகளின் கழிவும் அங்கு கொட்டப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி, அருகேயுள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவை சுத்திகரிப்பு செய்யாமல், துார்ந்து போயுள்ள கால்வாய்களில் நேரிடையாக கலக்கின்றனர். அதனால், அந்த இடத்தில் தாங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.பிரதான சாலையாக விளங்கும், டாக்டர் சவுந்தரம்மாள் தெரு வழியாக, தினசரி பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என, ஏராளமானோர் சென்று வருகின்றனர். மின்வாரிய அலுவலகம் இருப்பதால், நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கால்வாயில் விடப்படும் தோல் கழிவுகளால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கால்வாயை துார்வாரி பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.
நாட்டுக் கால்வாயில் மீண்டும் ஆக்கிரமிப்புதிருநீர்மலை ஏரியில் இருந்து, சுப்புராயன் நகர் வழியாக அடையாற்றுக்கு செல்லும் நாட்டுக் கால்வாயில், திருநீர்மலை பிரதான சாலையைக் கடக்கும் இடத்தில் இருந்த நான்கு ஆக்கிரமிப்பு கட்டடங்களை, பொதுப்பணி துறையினரும், வருவாய் துறையினரும் இணைந்து அகற்றினர். கால்வாயை ஒட்டியுள்ள பல கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிய பிறகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், நாட்டுக் கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில், பகுதிவாசிகள் சிலர், மீண்டும் இரவோடு இரவாக மண்ணைக் கொட்டி ஆக்கிரமித்துள்ளனர். தற்போது, அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு மீண்டும் கட்டடம் முளைக்கும் முன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - coimbatore,இந்தியா
22-பிப்-201614:42:51 IST Report Abuse
Tamilselvan தினமலரின் இந்த செயல்பாட்டுக்கு நன்றி ... நடவடிக்கை எடுத்து மேற்கும் வரை போராட வேண்டும்.. இளஞர்கள் ஆதரவு உண்டு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X