காங்கிரஸ் தான் அப்படி... பா.ஜ.,வுமா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

காங்கிரஸ் தான் அப்படி... பா.ஜ.,வுமா?

Added : மே 22, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 காங்கிரஸ் தான் அப்படி... பா.ஜ.,வுமா?


காங்கிரஸ் தான் அப்படி இருந்தது என்றால், பா.ஜ.,வும் அப்படி தான்
இருக்கிறது, கடுகு விஷயத்தில்.
பின்னே என்ன... மரபணு கடுகு ஆய்வு குறித்த தகவலை, மரபணு மாற்றுப் பயிருக்கு எதிரான கூட்டமைப்பைச் சேர்ந்த, கவிதா குருகன்டி, தகவல் உரிமை சட்டம் வாயிலாக, மரபீனிப் பொறியியல் ஒப்புறுதிக் குழுவிடம் கேட்டார். அக்குழு கொடுக்க மறுத்து விட்டது. தலைமை தகவல் உரிமை கமிஷனிடம் மேல் முறையீடு செய்தார்.
அந்த கமிஷன், சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும், மரபீனிப் பொறியியல் ஒப்புறுதிக் குழுவையும், 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கி விட்டது. 'ஏப்ரல் 30ம் தேதிக்குள் அனைத்து தரவுகளையும் பொது மக்கள் பார்க்கும் வண்ணம் வைக்க வேண்டும்' என கூறியது. ஆனால், அது நடக்காமல் போனது வேறு விஷயம். இதோ, மே மாதம் முடியப் போகிறது.
விவகாரம் இது தான்.
நம்பத்தகாதது, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதது, மற்ற ரகங்களை பாதிக்கவல்லது, பாதுகாப்பற்றது, பல கேடுகளை விளைவிக்கக் கூடியது என்றிருந்தும், நம் தட்டில் இந்த விஷம் விழத் தயாராகிறது.
உலகளவில் பல தரவுகள்,
சுதந்திர பரிசோதனைகள் அனைத்தும், மரபணு மாற்றுப் பயிர்கள்
தேவை இல்லை என்றே பரிந்துரைக்கின்றன. அதில் கடுகு, குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் தொழில்நுட்ப வல்லுனர் குழு மற்றும் பார்லி., நிலைக் குழு, மரபணு மாற்றுப் பயிர் இந்தியாவிற்கு தேவை இல்லை என கூறிய பின்பும், இதை சந்தைப்படுத்தத் தயாராக இருக்கும் நிறுவனங்கள், நம்மை மொய்த்தபடியே இருக்கின்றன. அப்படி என்ன நப்பாசை இதில்? 25 சதவீத அதிக உற்பத்தி கிடைக்குமாம்.
ஆனால், அதில் உண்மை இல்லை என்று, பல ஆய்வுகள் கூறுகின்றன. நம் பாரம்பரிய விதைகள், இன்றைய சில ஒட்டு விதைகள் மற்றும் செம்மை கடுகு சாகுபடியிலேயே, 25 சதவீத அதிக மகசூலை அடைய முடியும் என வல்லுனர்கள் கூறுகையில், இந்த பம்மாத்து வேலையை, மரபணு விஞ்ஞானிகளும், நிறுவனங்களும் கூற என்ன காரணமோ, அந்த
கடுகுக்கே வெளிச்சம்.
அப்படி ஒன்றும், அது பெரிய எண்ணெயை அள்ளித் தரும் வித்தும் அல்ல. இந்தியாவின் மொத்த எண்ணெய் கொள்
முதலில், வெறும், 14 சதவீதம்
மட்டுமே கடுகு எண்ணெய். மற்றபடி, 46 சதவீதம் பாமாயிலும், 16 சதவீதம் சோயா எண்ணெயும் தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த தில்லுமுல்லு பின்னணியில், தீபக் பென்டல் என்ற விஞ்ஞானி உள்ளதாகத் தெரிகிறது. அதாவது, மரபணு கடுகு குறித்த களப் பரிசோதனை தரவுகளையும், ஆய்வு முடிவுகளையும், மரபீனிப் பொறியியல் ஒப்புறுதிக் குழுவுக்கும், பொது தளத்தில் வைக்கும் பொறுப்பும், இந்தத் தொழில்நுட்பத்தில் சிறந்தவரான தீபக் பென்டலுக்குத் தரப்பட்டது.
ஆனால், அதை இவர் தவிர்த்து விட்டார். இந்த தில்லுமுல்லு குறித்து, சமீபத்தில், அப்பட்டமாய் விளக்கி விட்டார், நீடித்த, நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பின் தலைவர் கவிதா குருகன்டி. அதாவது, களப் பரிசோதனையின்போது, மரபணு மாற்றுக் கடுகே, ஒட்டு ரகக் கடுகையும், மரபணு அல்லாத கடுகையும் விட அதிக மகசூல் கொடுத்ததாகச் சொல்வதற்காக, தரவுகளை தவறாகக் காண்பித்தனர். மேலும், சமீபத்திய ஒட்டு ரகத்துடன் ஒப்பீடு செய்யாமல், 30 ஆண்டுகளுக்கு முந்தைய ரகத்துடன் ஒப்பிட்டு, தரவுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மகசூல் அதிகரித்துள்ளது போலிருக்க, பல தவறுகளை மறைத்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், 18 இடங்களில் பரிசோதனை நடந்துள்ளது. ஆனால் அவற்றில், தங்களுக்கு தோதான எட்டு இடங்களில் நடந்த சோதனையை மட்டுமே எடுத்து, மாதிரிச் சோதனைகளாகக் காட்டப்பட்டுள்ளன. அதுவும், தவறான ஒப்பீட்டு ரகங்களும், ஒப்பீட்டுமானியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் கவிதா,
அன்றைய தினம் விளக்கினார்.
வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், கடுகு ஆராய்ச்சி நிலையம் ஒன்று, ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ளது. அங்கு பல பரிசோதனைகள் கடுகிற்காக நடைபெற்ற வண்ணம் உள்ளது. பல ஒட்டு ரகங்களையும், பாரம்பரிய ரகங்களையும் சோதனை செய்ததில், - செம்மை சாகுபடியாக, மேலும் சில பாரம்பரிய யுக்திகளின் மூலம், 58 முதல் 130 சதவீதம் வரை, வெவ்வேறு ரகங்களுக்கு, அதிக மகசூல் கிடைத்திருக்கிறது.
இந்த உண்மைகளை வெளியில் சொல்லாமல், பல சோதனைகளில், 20 சதவீத மகசூல் கூட கிடைக்காத ஒரு விதைக்காக, இவ்வளவு செலவில் பரிசோதனை செய்வது தேவையா; வேண்டுமா? இந்த தில்லுமுல்லுகளை பற்றியும், நம்மிடம் வேறு சிறந்த ரக கடுகு உள்ளது என்றும், மரபணு தேவை இல்லை என்றும், சுற்றுச்சூழல் அமைச்சருக்கும், அமைச்சகத்திற்கும், ஷரத் பவார் என்ற விஞ்ஞானி கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரசும், பா.ஜ.,வும், ஏன் இந்த மன்சான்டோவுடனும், கேடுகளை மட்டும் விளைவிக்கும் தொழில்நுட்பங்களுடனும் உறவாட ஆசைப்படுகின்றனவோ, தெரியவில்லை!

Advertisement