தாழ்த்தப்பட்டோரின் முதல் இலக்கியம்| Dinamalar

தாழ்த்தப்பட்டோரின் முதல் இலக்கியம்

Added : மே 24, 2016
Advertisement
தாழ்த்தப்பட்டோரின் முதல் இலக்கியம்

சி.விஜயரங்கம் என்னும் தமிழ்ஒளி எழுதிய, 'கவிஞர் தமிழ்ஒளியின் காவியங்கள்' நூலை சமீபத்தில் படித்தேன். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு வெளியிட்டு உள்ளது.
தமிழில் காவியங்களின் படைப்பு அரிதாகி வரும் நிலையில், இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்ஒளி 41 வயது வரையே (1924 - 45) வாழ்ந்தவர். புதுவையில் பிறந்தாலும், சென்னையில் தான் அவரது வாசம். இந்நூல், மு.வ.,வின் முன்னுரையுடன்
துவங்குகிறது.
ஜாதி ஒழிப்பு, சமுதாய சீர்திருத்தம், பொதுவுடைமை, புரட்சி என, பலதரப்பட்ட தளங்களில், அவர் எழுதிய அனைத்தின் தொகுப்பாக, இந்நூல் உள்ளது. 'வீராயி' என்னும் தலைப்பில் வெளியாகி உள்ள பகுதியை, தாழ்த்தப்பட்டோரின் முதல் இலக்கியமாக கூறலாம். இந்த வரிசையில், 'மே தின ரோஜா'வையும் சேர்த்துக் கொள்ளலாம்.
'விதியோ? வீணையோ?' மற்றும் 'மாதவி காவியம்' ஆகிய இரண்டு பகுதிகளும், சிலப்பதிகாரத்தின் வழி வந்த புதிய சிந்தனைகள். இதில், மாதவியின் மாண்புகளையும், கோவலனின் குறைகளையும், ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். நூலில் இடம்பெற்று உள்ள, 'கண்ணப்பன் கிளிகள்' ஒரு உருவகக் கதைக் காவியமாக உள்ளது.
இந்த கதையில், ஆண் கிளியின் பெயர் 'குணம்'. பெண் கிளியின் பெயர் 'குற்றம்'. இவ்விரண்டும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பவை. குற்றம் உள்ள இடத்தில் குணம் இருக்கும் என்பதால், குற்றத்தை மன்னித்து, குணத்தைப் போற்ற மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது, இக்கதையின் சாரம்.
'கோசலக் குமரி' என்ற கதை, ராகுல்ஜியின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற வரலாற்று நூலில் வரும், 'பிரபா' என்ற சிறுகதையைத் தழுவி எழுதப்பட்டு உள்ளது. இந்த கதை நாயகனான கவிஞர் அஷ்வகோஷ், ஆரியமும், புத்தமும் முரண்பட்டு போராடிக் கொண்டிருந்த காலத்தில், நாட்டுக்காகவும், மக்களுக்காகவும், தன் காதலை துறக்கிறான்.
'புத்தர் பிறந்தார்' என்ற படைப்பு, வாழ்க்கை முற்றுப்பெறாத, நூலாசிரியர் தமிழ்ஒளி போலவே, முற்றுப்பெறாமல் நிற்கிறது. அது முழுமை அடைந்திருந்தால், நல்லதொரு கருத்து இச்சமூகத்திற்கு கிடைத்திருக்கும்.
பதிப்பக தொடர்புக்கு: 94440 82180

உதயை மு.வீரையன்
எழுத்தாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X