வாழ்க்கையை வீணாக்காதீர்கள்!| Dinamalar

வாழ்க்கையை வீணாக்காதீர்கள்!

Added : மே 24, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 வாழ்க்கையை வீணாக்காதீர்கள்!

ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரு முடிவு தவிர்க்க முடியாதது. சருகுகளே இல்லாவிட்டால் புதிய தளிர்களுக்கும், பூக்களுக்கும் எங்கே போவது? எல்லாவற்றிற்கும்
ஓர் எல்லை உண்டு. ஓட்டப் பந்தயத்தில் கூட ஓர் எல்லை இருப்பதால்தான் ஒவ்வொருவரும் உற்சாகமாக ஓடுகிறார்கள். எல்லையே இல்லாவிட்டால் யார்தான் ஓடுவார்கள்!வாழ்க்கையும் ஓர் ஓட்டப்பந்தயம் தான். இந்த ஓட்டப் பந்தயத்திற்கு எல்லை தான் மரணம் என்ற முற்றுப்புள்ளி. இந்த மரணம் எத்தனை மனிதர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கிறது. அதனால் மரணம் நேசிப்பிற்குரியது. காலத்தை யாராவது வெல்ல முடியுமா? வளர்ச்சி காலத்தின் கொடை என்றால் மரணம் அதன் இன்னொரு பரிமாணம். மரணம் தேவையில்லை என்றால் வளர்ச்சியும் நின்று போகும்.
ஒன்றின் மரணம் இன்னொன்றின் ஜனனம். புல்லாங்குழல், மரணம் தந்த ஜனனம். மூங்கிலின் மரணத்தில்தான் புல்லாங்குழல் ஜனனமாகிறது. பிள்ளை நண்டு ஜனனம். அதைப் பெற்றவுடன் பெற்றதாய் நண்டு மரணம். வாழையின் அடியில் ஒரு புதிய வாழை ஜனனம். அது வளர்ந்தவுடன் தாய் விழுந்து மரணம். பூ காயாகி, காய் கனியாகி, கனி விதையாகி, விதை மீண்டும் விருட்சமாகிறது. இது இயற்கை கற்றுத் தருகின்ற வாழ்வியல் பாடம்.
தீர்மானிக்கும் இயற்கை பிறப்பை மட்டுமல்ல; இறப்பையும் இயற்கைதான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான்; தற்கொலை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
மரணம் சீக்கிரமே வருவதாக இருந்தால்; ஐயோ வந்துவிடுமே என்ற கலவரம். வெகுதொலைவில் இருந்தால்; என்னை எவனும் இப்போதைக்கு அசைக்க முடியாது என்கிற கர்வம். எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றால் ஒவ்வொரு நொடியும் வாழலாம். அதனால் தான் மரணம் ரகசியமாகவே இருக்கிறது.
மரணம் இன்னார், இவர் என்று வித்தியாசமின்றி எல்லோருக்கும் வருகின்றது. எப்படி வரும், என்ன விதமாக வரும், அது வலிக்குமா என்பதில் தான் வித்தியாசம் உண்டு.
'மரணத்தைக் கண்டுதான், எல்லோருக்கும் பயம். எல்லா பயங்களும் கடைசியில் மரணத்தில் தான் முடிகின்றன. ஒவ்வொரு மரணமும் நமக்கு எச்சரிக்கை மணியை எழுப்புகின்றன. மரணத்தைப் புரிந்தவன் வென்றவனாகிறான்.
வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை' என்பார் இறையன்பு.மாண்டவர் மீண்டால்
ஒரு ஜென் ஞானியின் மனைவி காலமானார். ஞானியின் வீட்டில் துக்கம் கேட்க ஊரே திரண்டது. ஆனால், ஞானி கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் எந்த விதமான கவலையும் இல்லை.
எப்போதும் போல இயல்பாக இருந்தார். வந்தவர்களுக்கு அதிர்ச்சி. காரணம் கேட்டான் ஒருவன். அதற்கு ஞானி, பிறப்பில் சிரிக்கவோ இறப்பில் அழவோ என்ன இருக்கிறது. இரண்டும் நம்மிடம் இல்லை. என் மனைவிக்கு முன்பு உடலோ உயிரோ இல்லை. பிறகு உடலும் உயிரும் வந்தன. இப்போது இரண்டும் போய்
விட்டன. இடையில் வந்தவை இடையிலே போயின. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? அழுது புரண்டாலும் மாண்டவர் ஒரு போதும் மீண்டும் மண்ணில் வருவதில்லை, என்றார்.
பிறப்பு என்ற ஒன்று உண்டெனில் கண்டிப்பாக இறப்பு என்பதும் உண்டு. மகான்கள் முதல் மன்னர்கள் வரை மரணத்தை எவரும் வென்றதில்லை. திட்டமிட்ட வாழ்க்கை, திடீர் மரணத்தால் பொருளற்றுப் போகும். அதனால் இன்றே, இக்காலமே நல்ல விதமாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை மரணம் தான் நமக்குக் கற்றுத் தருகிறது.
துாக்கம் என்பது ஒரு வகையில்
மரணத்தின் சாயல். உடம்பு இருக்கும் போதே மரணத்தை ருசி பார்க்கிற விஷயம். பிளேட்டோ மரணப் படுக்கையில் இருந்தபோது, தன் நெருங்கிய நண்பரிடம் சொன்ன அனுபவ வார்த்தை இதுதான்... 'வாழும்போதே இறப்பதற்குப் பழகு” எவ்வளவு அர்த்தமுள்ள வார்த்தை.
ஞானி ஒருவரிடம் கற்றுக்கொண்ட வாழ்வியல் பாடம் இதுதான்: இன்றைய தினம் உனது இறுதி நாளாக இருக்கலாம் என்று அது உனக்கு நினைவூட்டுகிறது. அதை முழுவதுமாக ரசித்து அனுபவிக்குமாறு உன்னைத் துாண்டுகிறது. ஆனால் இது, சற்றே பயங்கரமான சிந்தனை போல உனக்குத் தோன்றலாம். காரணம் சாவைப்பற்றி அல்லவா நினைக்கச் சொல்கிறது. உண்மையில் இது வாழ்வைப் பற்றிய ஒரு தத்துவம். மரணப்படுக்கை மனநிலையை ஏற்றுக்கொள்ளும் போது, ஒவ்வொரு நாளையும் அதுவே இறுதி நாள் என்பது போல வாழ்கிறீர்கள்.
இன்றைய தினம் இன்றைய தினம் எனது இறுதிநாளாக இருந்தால் இன்று நான் என்ன செய்வேன். உன் குடும்பத்தினரை, சக பணியாளர்களை, ஏன் முற்றிலும் அறிமுகம்
இல்லாதவர்களைக் கூட, நீ எவ்வாறு நடத்துவாய் என்பதைப் பற்றி எண்ணிப்பார். ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக வாழ்வதற்கு எவ்வளவு உற்சாகமாய் இருப்பாய் என்று யோசி. மரணப் படுக்கை விஷயம் உனது வாழ்வை
மாற்றியமைக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. உனது நாட்களுக்கு சக்தியூட்டி, செய்கிற செயல்களுக்கெல்லாம் ஒரு உத்வேகத்தைத் தருகின்றது. தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த முக்கியமானவை எல்லாவற்றையும், கவனிக்கத்
தொடங்குவாய்.இந்தச் சிந்தனை உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், இதுதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் வாழ்வியல் சிந்தனை.
அனுபவ நிகழ்வு இதோ, ஒரு வெற்றியாளரின் அனுபவ நிகழ்வு.
'உங்களது வாழ்க்கைக்கான ஒவ்வொரு நாளையும், இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஏதாவது ஒரு நாளில் உங்கள் லட்சியம் நிச்சயம் நிறைவேறும், என்று பதினேழாவது வயதில் நான் படித்த வாசகம் இன்னமும் நினைவில் இருக்கின்றது. இதை நான் இப்போதும் கடைபிடிப்பேன்,' என்றார் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ்ஸ் ஜாப்ஸ்.
'நாள்தோறும் காலையில் கண்ணாடியில் முகம் பார்க்கும்போது, இன்றைய நாளே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக்கொண்டு வேலைகளைத் தொடங்குவேன். வாழ்க்கையின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு மரணம். உங்களுடைய நேரம் குறிப்பிட்ட வரம்புக்கு உட்படாது. எனவே வாழ்க்கையை வீணாக்காதீர்கள். மரணத்தை எதிர்கொள்ளும் நேரத்தில் வாழ்க்கையை கடைசி வரை வாழ்ந்து பார்த்து விட வேண்டும்,' என்றார்.
மரணம் இருப்பதால்தான் வாழ்க்கைக்கு மதிப்பு உண்டாகிறது. மதிப்புமிக்க வாழ்வைக் கற்றுத்தருகிற மரணத்திற்குப் பரிசு அளித்தார் ஒருவர். மரணத்திற்குப் பரிசா? இதோ அந்தப் பரிசு...
மரணம்உன் வீட்டுவாயிற் கதவைத் தட்டுகிறபோதுஎன்ன கொடுப்பாய்வெறுங்கையோடுஅனுப்ப மாட்டேன்தட்டு நிறையஎன் வாழ்க்கையைபரிசாகத்தருவேன்.பரிசு தந்தவர் வேறுயாருமல்ல நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூர் தான்.
இப்படி மரணத்திற்குப் பிறகும், மனிதர்களை வாழ்வாங்கு வாழச்சொல்வது மரணம்தான். அதனால் தான் மரணம் வாழ்வில் நேசிப்பிற்குரியது.
-பேராசிரியர் க.இராமச்சந்திரன்எழுத்தாளர்அருப்புக்கோட்டை 9942417103

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X