தேர்தலும் சட்டங்களும் 10: தேர்தல், வாக்குப்பதிவு குறித்த சந்தேகங்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

தேர்தலும் சட்டங்களும் 10: தேர்தல், வாக்குப்பதிவு குறித்த சந்தேகங்கள்

Added : மே 30, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

இந்தக் கட்டுரையைப் படிக்கின்ற நேரத்தில் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும். அனைவரும் வாக்களிக்கும் கடமையைச் செய்தீர்கள் தானே?நல்லது. செய்திருப்பீர்கள்.தேர்தல், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, NOTA, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இவை குறித்தெல்லாம் சமூக வலைதளங்களில் பரவும் புரளிகளைக் களைந்து உண்மையை வெளிக்கொண்டு வரவே இந்தக் கட்டுரைத் தொடர்.மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உடைந்தாலோ, உடைக்கப்பட்டாலோ, பழுதடைந்தாலோ மறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்து வாக்குப் பதிவு மீண்டும் ஆரம்பித்த நிகழ்வு சமீப தேர்தலில் நடந்ததாகச் செய்திகளைப் பார்த்தோம். 'அப்படி வேறு இயந்திரத்தில் தொடரப்பட்டால் ஏற்கனவே பழைய (உடைந்த) இயந்திரத்தில் பதிந்த வாக்குகள் கதி என்ன?' எனும் கேள்வி எழுகிறதல்லவா?


உடைந்தாலும் பழுதுபட்டாலும்

மின்னணு வாக்குப்பதிவுக் கருவிகள், ஒரு Control Unit -டன் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு கருவி உடைந்து, பழுது பட்டாலும் கூட அதுவரை பதியப்பட்ட ஓட்டுக்கள் மேல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் இயந்திரத்தில் பதிவாகி இருக்கும். வேறு இயந்திரம் கொண்டுவரப்பட்ட பின் அதில் பதியப்படும் ஓட்டுகளும் இதே போல தொடர்ந்து பதியப்படும். எனவே ஒரு இயந்திரம் பழுதடைந்தால் அதுவரை போட்டு ஓட்டுக்கள் வீணாவதில்லை.அதே போலவே மின்னணு இயந்திரத்தில் நாம் எந்த கட்சிக்கு ஓட்டளிக்கிறோமோ அதே கட்சிக்கு நமது ஓட்டு போகிறதா எனும் சந்தேகம்.அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட், தேர்தல் அதிகாரி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒரு வாக்குச்சாவடியில் பார்வையாளராக, வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த நபர்கள் இருக்கிறபடியால் இயந்திரத்தை அப்படி ஒரு கட்சிக்கு சாதகமாக ஓட்டளிக்கும்படி மாற்ற இயலாது.


64 வேட்பாளர்கள் வரை:

சமீபத்திய தேர்தலில் ஆர்.கே. நகரில் 45 வேட்பாளர்கள் நின்றதாக நாம் படித்தோம். பொதுவாக ஒரு மின்னணு வாக்கு இயந்திரத்தில் 16 வேட்பாளர் பெயர்களை மட்டுமே இணைக்க இயலும். ஆனால் இப்படி அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் இருந்தால் கூடுதல் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படலாம். மின்னணு வாக்கு இயந்திரத்தில் அதிகபட்சமாக 64 வேட்பாளர்கள் பெயர்களை இணைக்க இயலும். தேவைக்கேற்ப 16-ன் மடங்குகளாக இயந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வேட்பாளர் பெயர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவர்களின் பெயர்கள் ஆங்கில அகரவரிசைப்படி இணைக்கப்படும். அது பெயரின் முன்னெழுத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. உதாரணமாக P.A.Reddy என ஒருவர் பெயரும், P.K.Ramsamy என ஒருவர் பெயரும் இருந்தால் எனும் எழுத்துக்கள் கணக்கில் கொள்ளப்படாமல் பெயர்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு ராமசாமி என்பவரின் பெயர் முன்னால் வரும்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அமைப்பார்கள். உண்மையில் Psychologically முதலில் வரும் பெயர்களே மனதில் பதியும் எனும் எண்ணமும் இருப்பதாலேயே திரு, ஆர். வீரப்பன் அவர்கள் தனது பெயரை இராமவீரப்பன் எனக் குறிப்பிடுவதாக ஒரு செவி வழிச் செய்தி உண்டு.இதைப் போலவே, NOTA குறித்தும் புரளிகள். பலருக்கும் வரும் சந்தேகம் 49ஓ என்பதற்கும் NOTA விற்குமான வித்தியாசம். ஒரே செயலுக்கு இரு பெயர் ஏன்? எனும் கேள்விகள். நோட்டா ஓட்டுக்கள் அதிகம் விழுந்தால் என்ன ஆகும்?


நோட்டா ஒரு விளக்கம்:

NOTA என்பதன் விரிவாக்கம் None Of The Above என்பதே. இந்தப் பெயரில்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதை நேற்று ஓட்டுப் போட்டவர்கள் பார்த்து அறிந்திருப்பீர்கள். இதற்கு ஓட்டுப்போடுவதற்கான பட்டன் இயந்திரத்தின் கடைசியில் அமைந்திருக்கும். இதன் பொருள் மேற்சொல்லப்பட்ட வேட்பாளர் எவருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதே.49 ஓ என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of People Act)-ன் விதி எண் அது. இந்திய சட்டத்தின்படி எந்த ஒரு நபரும் ஓட்டுப்போடாமல் இருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அப்படி ஓட்டுப்போடாமல் இருந்தால், அந்த ஓட்டுக்கள் கள்ள ஓட்டாக மாறும் அபாயம் ஏற்படலாம்.மேலும் மேற்சொன்ன வேட்பாளர்களுக்கு எதனால் ஓட்டுப்போட விரும்பவில்லை எனும் தகவலையும் தேர்தல் ஆணையம் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பும் இருந்தால் அடுத்து வரும் தேர்தல்களில் மாற்றம் கொண்டு வர திட்டமிட நமது செயல் பயன்படலாம்.இதன் காரணத்தினாலேயே, மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் NOTA இடம் பெற்றுள்ளது.தெளிவாகச் சொல்வதெனில் நான் ஓட்டுப்போடவில்லை என்பதைச் சொல்வதன் பெயர் 49ஓ (இதை லீவ் லெட்டர் போலச் சொல்லலாம்) Right to remain absent.NOTA என்பது அதற்கான காரணத்தைச் சொல்வது போல. (இதை லீவுக்கான காரணம் எனலாம்) Right to reject.


ஓட்டளிப்பது கட்டாயமா?

அதே போல ஓட்டளித்தல் நமது ஜனநாயகக்கடமைதான். ஆனால் அதைச் செய்யாதவர்களுக்கு தண்டனை,தண்டம் கட்டச் சொல்வது, ரேஷன் கார்டு ரத்து போன்ற தண்டனைகளை சமூக தளங்களில் பலரும் பதிந்து வருகிறார்கள்.எப்படி இது இந்த சமூகத்தில் வாழ ஒரு கடமையோ, அதே போல இந்தச் சமூகத்தில் வாழ விருப்பம் இல்லாத, அல்லது இந்த வகையான அரசியலமைப்பில் வாழ விரும்பாத மற்றும் அந்தக் கடமையை செய்ய விரும்பாதவர்களும் இருக்க அவர்களுக்கும் உரிமை உண்டு என்பதே அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் கருத்து. எனவே தேர்தலில் ஓட்டளிப்பது என்பதை ஒரு அடிப்படைக் கடமையாக எவர் மீதும் சுமத்த இயலாது.தேர்தல் சமயத்தில் பணப் பட்டுவாடா செய்பவர்களை ஏன் தேர்தல் ஆணையம் தண்டிக்கவில்லை? தேர்தல் சம்பந்தமாக நடக்கும் குற்றங்களை ஏன் தேர்தல் ஆணையம் தண்டிக்கவில்லை எனும் கேள்வியும் சமூக ஊடகங்களில் கேட்கப்படுகின்றது.தேர்தல் சம்பந்தமான குற்றங்களைச் செய்பவர்கள் பிடிபட்டு அந்தக் குற்றம் நிருபிக்கப்பட்டால், அவர்கள் அதே குற்றத்தைச் செய்யாதபடி தடை மட்டும் செய்து விட்டு,தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதில் கவனம் செலுத்தத் துவங்கிவிடும். தேர்தல் முடிந்த பின்தான் அப்படிக் குற்றம் செய்தவர் தேர்தல் மனுவை உயர் நீதிமன்றத்தில் அளிப்பதன் மூலம் தான் அவ்வாறு குற்றத்தைச் செய்யவில்லை என தேர்தல் ஆணையத்தை எதிர்க்க இயலும்.ஏனெனில் தேர்தலை அமைதியாக நடத்த விடாமல் செய்யும் சக்திகளை முடக்கவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 329(b) தேர்தல் சமையத்தில் தேர்தல் சம்பந்தமான அனைத்து பொறுப்புகளையும் ஆணையத்திடம் கொடுக்கிறது.கிணற்றுக்குள் விழுந்த ஒருவனைக் காப்பாற்றும் முயற்சியில் நாம் இருக்கையில், 'இன்னார்தான்' தள்ளிவிட்டான் எனத் தெரிந்தால், அவனை தண்டித்துக் கொண்டிருக்க மாட்டோம். முதலில் தள்ளி விட்டவனை ஒரு கட்டுக்குள் வைத்துவிட்டு, கிணற்றில் விழுந்தவனைக் காப்பாற்றிவிட்டு, அதன் பிறகே, குற்றவாளியை போலிஸில் ஒப்படைப்போம் அல்லவா? அப்போது, “குற்றவாளியை ஏன் தண்டிக்கவில்லை?” என காப்பாற்றுபவனிடம் எவனும் கேட்கமாட்டான். ஏனெனில் அப்போது எது முக்கியமோ அதையே சரியாக அவன் செய்ததால். அதையே தேர்தல் ஆணையமும் செய்கிறது. சட்டமும் அதற்கு உதவுகிறது.


ஓட்டு எண்ணிக்கையில் தவறு ஏற்படுமா?

வாக்குகளை எண்ணுவதில் வேண்டுமென்றே தவறு செய்து பொய்யான முடிவுகளைச் சொன்னால்? எனும் கேள்வி வருகிறதா? வாய்ப்பே இல்லை. ஏனெனில் வாக்கு எண்ணுகையில் வேட்பாளர் சார்பில் அவரோ, அவரது முகவரோ கூட இருக்கும் உரிமை உடையவர்கள் என மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 64 கூறுகிறது.எண்ணுகையில் அந்த இயந்திரங்கள் முடிவினை அறிய இயலாதவாறு பழுதானால்(வாய்ப்பு குறைவு), களவாடப்பட்டால், அந்த செய்தியானது தேர்தல் பொறுப்பு ஆணையரால் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். ஆணையம் இதன் காரணமாக மறு தேர்தல் நடத்தலாம்.ஒரே எண்ணிக்கையில் இரு வேட்பாளர்கள் வாக்குகளைப் பெற்றிருந்தால்? இரு வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்கு பெற்றிருந்து அவர்களில் ஒருவருக்கு ஒரு வாக்கு கிடைத்தால அவர் வென்றதாகிவிடும் சூழ்லில், இருவர் பெயரிலும் குலுக்கல் முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு அந்த ஒற்றை வாக்கு கிடைத்ததாக அறிவித்து அதனால் வென்றதாக அறிவிக்கப்படுவார்.வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதி என்பது அவர் வென்றதாக தேர்தல் பொறுப்பு அலுவலரால் அறிவிக்கப்படுகிறாரோ அந்த தேதியே அவர் வேட்பாளரான தேதியாக சட்ட நடைமுறையில் கொள்ளப்படும். இதில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகள் 53 மற்றும் 66 வகையகங்கள் கைக்கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும்.எந்த துறையிலும் அந்தத் துறை வல்லுனர்களின் பார்வை வேறு, அதைப் பயன்படுத்தும் பொதுசனத்தின் பார்வை வேறு. ஆனால் பொது சனத்தின் தேவையை ஒட்டியே துறை வல்லுனர்கள் அத்துறை சார்ந்த நடவடிக்கையை அமைக்கவேண்டும் அமைக்கின்றனர். இந்நிலையில் பயனாளிக்கும் அத்துறைக்கும் இடையே ஒரு நல்ல புரிதலை அளிக்கவே இந்த கட்டுரைத் தொடர். தேர்தல் குறித்த வேறேதேனும் சந்தேகங்கள் இருப்பின் மேற்கன மெயில் ஐடி யில் கேட்கலாம்.சேர்ந்தே வளர்வோம். தொடருவோம்...-ஹன்ஸா (வழக்கறிஞர்)legally.hansa68@gmail.com

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X