ஆரோக்கியம் காக்க வழி : இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்| Dinamalar

ஆரோக்கியம் காக்க வழி : இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

Updated : மே 31, 2016 | Added : மே 30, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஆரோக்கியம் காக்க வழி : இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் மே 31ம் தேதி சர்வதேச புகையிலை இல்லா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை உலக சுகாதார நிறுவனம் 1887 ல் அறிவித்தது. உலக அளவில் புகைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புகையிலையை மெல்லுவது, புகையிலை பொருட்கள் கலந்த பான், பாக்கு, மூக்குப்பொடி, பீடி, சிகரெட் போன்றவற்றை நுகர்வதை காண முடிகிறது.புகையிலை பொருட்களால் ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். புகையிலையினால் ஏற்படும் வாய்புற்றுநோய், லட்சத்தில் 10 பேரை பாதிக்கிறது. 'வரும் 2020 ல் இந்தியாவில் 13 சதவீத மரணங்கள் புகையிலை பழக்கத்தால் அமையும்' என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.உலகில் 47 சதவீத ஆண்களும், 12 சதவீத பெண்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள்.
இந்தியாவில் 53 சதவீத ஆண்களும், 3 சதவீத பெண்களும் புகைப்பழக்கம் உள்ளவர்கள்.

மலட்டுத்தன்மை: எய்ட்ஸ், காசநோய், வாகன விபத்துக்கள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தை விட புகையிலை பழக்கத்தால் ஏற்படும் மரணம் அதிகம். புகை பிடிப்பதன் மூலம் வாய், நுரையீரல், சிறுநீரகம், மார்பகம் பாதிக்கப்பட்டு புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத்தன்மை, மலட்டுத்தன்மை போன்ற பல நோய்கள் வருகின்றன.
* வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.
* புகையிலையால் ஏற்படுகிற வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம்.
* இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களுக்கு, முறையே ௫௬ சதவீதம் மற்றும் ௪௫ சதவீதம் புகையிலை காரணமாக இருக்கிறது.
* 90 சதவீதத்திற்கும் மேலாக நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைப்பழக்கம் ஏற்படுத்துகிறது.
* இதயம் மற்றும் ரத்தக்குழாய் நோய்களான மாரடைப்பு, மார்புவலி, பக்கவாதம், கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்படும் புற ரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.
* இந்தியாவில் 82 சதவீத, நுரையீரல் சுவாசக்குழாய் அடைப்பு நோய் புகைப்பிடித்தல் மூலம் வருகிறது.
* புகையிலை மறைமுகமாக நுரையீரல் காசநோயை (டி.பி.,) ஏற்படுத்துகிறது. புகைப்பவர்களுக்கு டி.பி., ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.
* திடீரென ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது. இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவினை குறைக்கிறது.
* கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது.
* உடல் முழுவதும் உள்ள தமனி எனப்படும் ரத்தத்தை ஏந்திச் செல்லும் ரத்த குழாய் சுவர்களை சேதப்படுத்துகிறது.
* சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
* ரத்தத்தில் உள்ள நன்மை தரக்கூடிய கொழுப்பின் அளவை குறைக்கிறது.
* புகையிலை நுகர்வதால் ஒவ்வொரு 8 வினாடிகளிலும் ஒரு மரணம் நிகழ்கிறது.
* புகையிலையை தவிர்ப்பதால் ஒருவரின் ஆயுள் 20 ஆண்டுகள் கூடுகிறது.
* பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் விரைவாக நின்று விடுகிறது.
* புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் போது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* குறைந்த எடையுடன், வளர்ச்சியில் கோளாறு உள்ள, குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது. பிறந்த குழந்தை திடீரென இறக்க வாய்ப்பு உள்ளது.

2-வது இடம்
புகைப்பழக்கம், புற்றுநோய், இதய நோய் ஆகியவற்றை 30 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் ஆயுளில் தினமும் 5 நிமிடங்கள் குறைகிறது. புகைப்பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி புகையை நுகர்வதால் இருமல், சளி, உருவாகி ஆஸ்துமா வருகிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் புகைத்தால் அது மேலும் தீவிரமாகிறது. இறுதியில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கே உலை வைக்கிறது. புகைப் பழக்கம் கொண்டவர்களின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 'புகையிலை இல்லா தினம்' அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கம், புகையிலையினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் இறப்பினை பெருமளவு குறைக்க வேண்டும் என்பதுதான்.
உடனடி நிவாரணம் புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் என்ற ரசாயனம், மூளைக்கு சென்று 'நன்றாக இருக்கிறது' என்ற உணர்வை ஏற்படுத்தி, அதை பயன்படுத்துபவர்களை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால், எத்தனை வருடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. அவரவர் உடலமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து ஓரிரு வருடங்களில் அல்லது 20 முதல் 25 ஆண்டுகள் கழித்து கூட பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால், புகைப்பழக்கத்தை நிறுத்தியதும், உடனடியாக அதன் பாதிப்புகள் விலகத் தொடங்குகிறது. அதனால் புகையிலை பழக்கத்தை தவிர்ப்பது, நல்லது. அதனை விட்டொழிக்க, முதலில் மனதை கட்டுப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.சிகரெட்டை நிறுத்த
1. உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி 'நிக்கோட்டின் ரீப்பிளேஸ்மென்ட் தெரபி' சிகிச்சை பெறலாம்.
2 சிகரெட் பிடிப்பவர்களோடு சேராமல் எப்போதும் பிசியாக இருப்பதுபோல் வேலை வைத்துக் கொள்ள வேண்டும்.
3 வேறு வேலை இல்லாத நேரத்தில் தான் பெரும்பாலும் சிகரெட் புகைக்க தோன்றும். இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
3 சிகரெட் பிடிக்காத நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். இது, உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீக்கும்.
5 . பாக்கு போடும் எண்ணம் தோன்றும் போதெல்லாம், அதற்கு பதிலாக உடலுக்கு நலம் தரும் உலர் திராட்சை, பேரிச்சம்பழம், கிராம்பு போன்ற பொருட்களில் ஏதாவது ஒன்றை வாயில் போட்டு சுவைக்கலாம்.

சுய நன்மைகள்
புகையிலையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்
* உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.
* உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது.
* நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால் பாதிக்கப்பட மாட்டார்.
* புகைப்பழக்கத்தினால் ஏற்படும் சளி மற்றும் இருமல் மறையும்.
* உங்கள் பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாறும்.சமுதாய நன்மைகள்
* நீங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராக இருப்பின் சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.
* உங்கள் சுய தோற்றம், சுயநம்பிக்கை வளரும்.
* இப்போதும், எதிர்காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராக இருப்பீர்கள்.
* புகையிலை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
உலக மக்களின் ஆரோக்கியத்தை பாதிப்புள்ளாக்கும் புகையிலை பயன்பாட்டை நாம் எளிதாக தவிர்க்க முடியும். அதற்கு தேவை மன திடமும்,
தன்னம்பிக்கையும் தான். இதன் மூலம் நாம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவே, புகையிலை பயன்பாட்டை
தவிர்ப்போமாக!
-டாக்டர் பழனியப்பன்,நுரையீரல் சிகிச்சை நிபுணர், மதுரை 94425 24147

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை