காலில் விழுவது சுகமே! என்பார்வை| Dinamalar

காலில் விழுவது சுகமே! என்பார்வை

Added : ஜூன் 14, 2016 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 காலில் விழுவது சுகமே!  என்பார்வைசில நாட்களுக்கு முன், என் நண்பரை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் வீட்டில் இல்லை. மனைவியும் இல்லை. பிளஸ் 1 படிக்கும் மகன் மட்டுமே இருந்தான். என்னை பார்த்தும் பார்க்காதது போல் 'டிவி' பார்த்து கொண்டிருந்தான். இது ஒரு
அனுபவம். அவன் மேல் எனக்கு கோபம் வரவில்லை.இதேபோல், வேறொரு நண்பர் வீட்டிற்கு சென்றபோது, முற்றிலும் மாறுபட்ட அனுபவம் கிடைத்தது. நாங்கள் சென்றபோது, நண்பர் வீட்டின் உள்ளே ஏதோ வேலையை தீவிரமாக செய்து கொண்டிருந்தார். எங்களை
கண்டதும் வராண்டாவில் இருந்த அவரது மகள் ஓடி வந்தாள். அவளும் பள்ளி மாணவிதான். 'வாங்க அங்கிள், அப்பா உள்ளே இருக்கிறார். இதோ வந்துவிடுவார்' என எங்களை அமர சொன்னவள், உள்ளே சென்று தந்தையிடம் தகவல் சொல்லிவிட்டு கையில்
குடிநீருடன் வந்தாள்.இவ்விரு அனுபவங்களுக்கும் காரணமாக அமைவது பெற்றோர்களின் வளர்ப்பு முறைதான். பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எதை சொல்லி வளர்க்க வேண்டும் என்பதை
அறியாமலேயே இருக்கிறார்கள் என கருதவேண்டியுள்ளது. வீட்டிற்கு வந்தவர்களை 'வாருங்கள்' என வரவேற்க வேண்டும். புன்முறுவலுடன்
வந்தவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதலை பிள்ளைகளுக்கு நாம் சொல்லி கொடுப்பதில்லை.
பண்பாடு எது
பல வீடுகளில் பெரியவர்கள்கூட வீட்டிற்கு வந்தவர்களை பார்த்தும் பார்க்காதது போல் ஒதுங்கி போவதுண்டு. அவர்களை நாம் மாற்ற முடியாது. நம் பிள்ளைகளை டாக்டராக, இன்ஜினியராக ஆக்க நம் முழு சக்தியையும் செலவிடுகிறோம். ஆனால், நல்ல பழக்கவழக்கங்களை, பண்பாடுகளை அவர்களுக்கு போதிக்க
தவறிவிடுகிறோம். பண்பாடு சோறு போட்டு விடுமா என்ற எண்ணம்தான் அதற்கு காரணமா?
வீட்டில் மட்டுமல்ல, பொதுஇடங்களில்கூட பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற புரிதல் பலரிடம் இல்லை. பெரியவர்களின் காலில் விழுந்து வணங்குவது, நாம் அறிந்த பண்பாடு.
பெற்றோர், கற்பித்த ஆசான்கள், தத்தம் துறைகளில் சாதித்தவர்கள், நம்மைவிட வயதில் மூத்தவர்கள் ஆகியோர் கால்களில் விழுந்து வணங்குவதும், வாழ்த்து பெறுவதும் பாராட்டத்தக்க செயலாகும். வணங்குபவருக்கும், வணங்க பெறுபவருக்கும் அது பெருமை அளிக்கக்கூடியது. வடமாநிலங்களில் இப்பழக்கம் வெகுவாக உள்ளது.
மனித மனம் விழா நாட்களில் தாத்தா, பாட்டி கால்களில் பெற்றோர் விழுந்து வணங்குவதும், பெற்றோர் கால்களில் பிள்ளைகள் விழுந்து வணங்குவதுமாக ஒவ்வொரு தலைமுறையும் தன் முந்தைய தலைமுறையிடம் வாழ்த்து பெறுவது பார்த்து மகிழத்தக்க காட்சியாகும். அப்போது பெரியவர்கள் பூரித்து போகிறார்கள்.
தங்கள் குழந்தைக்காக எதையும் இழக்க தயாராகிறார்கள். தங்கள் பெற்ற இந்த மரியாதையாலும், அங்கீகரித்தாலும் அவர்கள் மகிழ்ந்து போகிறார்கள். அன்புக்காகவும், மரியாதைக்காகவும்,
அங்கீகாரத்திற்காகவும் மனித மனம் ஏங்கி நிற்கிறது என்கிறார் உளவியல் அறிஞர் மாஸ்லோ.கலாசார மாற்றங்கள், மனிதனின் அடிப்படை உணர்வுகளை மாற்றிவிடுமா என்ன? பெற்றோர் இப்பழக்கத்தை தனது குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே நயமாக சொல்லித்தர வேண்டும். இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பணியத் தெரிந்தவன்தான் பிறரை பணிய வைக்க முடியும். பணிவும், மரியாதையும் மனதில் இருந்தால்போதும் என்றுக்கூட சிலர் வாதிடவும் கூடும். ஆனால், வெளிப்படுத்தப்படாத அன்பும், மரியாதையும் உணரப்
படுவதே இல்லை அல்லவா?'எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து'பணிவுடையவராக ஒழுகுதல் பொதுவாக எல்லோருக்கும் நல்லதாகும். அவர்களுள் சிறப்பாக, செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும் என டாக்டர் மு.வ. அதற்கு உரை எழுதுகிறார்.
முன்மாதிரிகள்
அரசியல் வானில் புகழின் உச்சியை தொட்ட முன்னாள்
பிரதமர் வாஜ்பாய்கூட, ஒப்பற்ற சாதனை புரிந்த பெண்மணியான மதுரை சின்னப்பிள்ளையின் காலில் விழுந்ததை பலர் அறிந்திருக்கக்கூடும். கலைத்துறையில் தனக்கு வழிகாட்டியவர்களின் கால்களில், பொது மேடைகளில் எம்.ஜி.ஆர்., விழுந்து வணங்கி ஆசி பெற்றுள்ளார்.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின்போது ஐதராபாத் அணி வீரர் யுவராஜ் சிங், இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து வணங்கவில்லையா? வளர்ந்து வரும் இளைஞர்கள் இத்தகைய பெரியவர்களிடமிருந்து பண்பாட்டு பாடங்களை கற்க வேண்டும்.
அவ்வை சொன்ன பணிவு ஆத்திச்சூடி பாடிய நம் அவ்வை பாட்டியும் இப்படிதான் சொல்லி சென்றிருக்கிறார். 'ங' போல் வளை. இதன் பொருள்: ங எனும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது. அதைபோல் பெரியவர் முன் வணங்க வேண்டும்.
குழந்தைகள்தான் என்று இல்லை. யாராக இருப்பினும் தனக்கு மூத்தவர்களை வணங்கி எழுவது பண்பாடுள்ள செயலாகும். அதுவும் பொது இடங்களில் இவ்வாறு செய்வது நாம் போற்றி மகிழ்கின்ற பெரியவர்
களுக்கு பெருமை சேர்ப்பதாகும். இத்தகைய சின்ன சின்ன பழக்கங்கள்தான் நம்மை பண்பாட்டு தளங்களுக்கு இட்டு செல்கின்றன. அதை நோக்கி குழந்தைகளை வளர்ப்பது பெற்றோரின் கடமை அல்லவா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
- பேராசிரியர் தி.ரா. திருவேங்கடராஜ்,அருப்புக்கோட்டை94862 14341.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
15-ஜூன்-201620:07:39 IST Report Abuse
Krishnamurthy Venkatesan எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல விசயங்களைத்தான் சொல்லி கொடுக்கிறார்கள். சிறுவர்களாக (12 வயது வரை) இருக்கும்போது சொல்லி கொடுத்த நல்ல விசயங்களை பின் பற்றுவார்கள். ஆனால் வயது ஏற ஏற (அவன் தகப்பன் ஸ்தானம் அடையும் வரை) எல்லாம் தலை கீழ். அப்பாவான பிறகு அவன் தனது பிள்ளைக்கு சொல்லி தர துவங்குகிறான். இது ஒரு வட்டம். ஆரம்பமே முடிவு, முடிவே ஆரம்பம்.
Rate this:
Share this comment
Cancel
elango - Kovilpatti,இந்தியா
15-ஜூன்-201618:17:07 IST Report Abuse
elango ELANGO, (GVN 1995 ஸ்டுடென்ட்) பேராசிரியர் திருவேங்கடராஜ் அவர்கள் கூறியது மிகவும் சரியே, வெளிப்படுத்தப்படாத அன்பும், பணிவும் உணரப்படுவதே இல்லை, மிகவும் சரி. ஒவ்வொரு மனிதனுக்கும் பணிவு அவசியம் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஜூன்-201617:41:43 IST Report Abuse
Endrum Indian அருமையான கட்டுரை. ஆனால் ஒரு நெருடல். பாட்டி காலில் கூமூட்டைகள் விழுவதை சரி என்று சொல்வது போல் இருக்கின்றது. அரசியல்வாதிகள் காலில் எந்த காரணத்தைக்கொண்டும் விழக்கூடாது. ஏனென்றால் அவர்கள் உச்சிதலை முதல் உள்ளங்கால் வரை விஷம், மனஅழுக்கு கொண்டவர்கள். ஒருவரால் நமக்கு ஒரு காரியம் ஆகவேண்டுமென்று காலில் விழுவது தவ்று. ஆனால் மரியாதை காட்டும் விதத்தில் என்றால் அது தவறு இல்லை என்று இருக்க வேண்டும். எனக்கு 1972 ஞாபகம் வருகின்றது. பிலாயில் சம்மர் வெகேஷன் ட்ரைனிங்க். எனது ரூம்மேட் தந்தை வந்தார். மகன் உடனே அவர் காலை தொட்டு வணங்கினார். அய்யோ நான் என் தந்தையை ஒரு நாள் கூட இப்படி செய்யவில்லையே என்று நினைத்தேன். சில நிமிடங்களில் ஏதோ ஒரு விஷயத்துக்காக வாக்குவாதம், கண்டமேனிக்கு அப்பனை திட்டினான் அவன். அப்பொழுது தான் தெரிந்தது, காலில் விழுவது சம்பிரதாயம், மரியாதை நிமித்தம் அல்ல என்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X