குப்பையால் நாறி, விஷமாக மாறி தத்தளிக்குது ஓர் ஏரி: உள்ளாட்சி நிர்வாகமே கட்டுது சமாதி| Dinamalar

குப்பையால் நாறி, விஷமாக மாறி தத்தளிக்குது ஓர் ஏரி: உள்ளாட்சி நிர்வாகமே கட்டுது சமாதி

Updated : ஜூன் 24, 2016 | Added : ஜூன் 23, 2016 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நிர்வாக குளறுபடி, நிதி இல்லாமை போன்ற காரணங்களால், மூவரசம்பட்டு ஏரியில், 22 ஆண்டுகளாக மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றாததால், நிலத்தடி நீர் மாசடைந்து, தொற்று நோய் பரவுதல் அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மூவரசம்பட்டு ஏரி, 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நங்கநல்லுார், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மூவரசம்பட்டு பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்துக்கான முக்கிய ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. ஏரியைச் சுற்றி, குடியிருப்புகள், கல் குவாரிகள் உள்ளன. ஏரிக்கரை பகுதிகள் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி உள்ளன. இவற்றை மீட்க வேண்டிய பொறுப்பு, உள்ளாட்சி நிர்வாகத்துடையது.
துரதிருஷ்டவசமாக, மூவரசம்பட்டு ஊராட்சி நிர்வாகமே, இந்த ஏரியில் குப்பையைக் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு சமாதி கட்டி வருகிறது. இந்த ஊராட்சியிலுள்ள, 84 தெருக்களில் இருந்து, தினமும் சேகரிக்கப்படும், 8 டன் குப்பை, இந்த ஏரியில் கொட்டப்படுகிறது. கடந்த, 22 ஆண்டுகளுக்கு முன், கரையோரத்தில் கொஞ்சமாக கொட்டப்பட்ட குப்பை, இப்போது ஏரிக்கே, எமனாகி விட்டது.

தண்ணீரில் கழிவுகளும், குப்பையும் கொட்டப்படுவதால், ஏரி நீர் மட்டுமின்றி, நிலத்தடி நீரும் விஷமாக மாறி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகவும் ஏரி உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, இப்பகுதியில் பல விதமான நோய் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. குப்பை அருகில் வசிப்போரில், 10க்கும் மேற்பட்டோருக்கு யானைக்கால் நோய் பாதிப்பிருப்பதே, இதற்கு சாட்சி.குப்பையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு, 15க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன.
மேலும், டெங்கு, மலேரியா, மர்ம காய்ச்சல் என, ஏதாவது ஒரு வியாதி, மூவரசம்பட்டு மக்களை வதைப்பதும் சர்வ சாதாரணம். பல ஆண்டுகளாக மட்கியும், மட்காமலும் உள்ள குப்பையால், துர்நாற்றமும் துரத்தி அடிக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமென்பது, இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை.
அருகில் இருக்கிறது தீர்வு!இதற்கு தீர்வே இல்லையா என்றால், இருக்கிறது. மூவரசம்பட்டில் இருந்து, பெருங்குடி குப்பை கிடங்கு, வெறும், 3 கி.மீ., துாரத்தில் தான் இருக்கிறது. சென்னை மாநகராட்சி பராமரிப்பில் கிடங்கு உள்ளதால், அங்கு குப்பை கொட்ட ஊராட்சிக்கு அனுமதி இல்லை. ஒரு டன் குப்பை கொட்ட, 550 ரூபாய் ஊராட்சி செலுத்த வேண்டும். லாரி மற்றும் பொக்லைன் வாடகை என, மாதம், மூன்று லட்சம் ரூபாய்க்கு, ஊராட்சி செலவு செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால், ஊராட்சியின் ஆண்டு வருமானமே, 40 லட்சம் ரூபாய் தான். அதனால், 22 ஆண்டுகளாக, தீர்வு இல்லாத பிரச்னையாக இது தொடர்கிறது. கடந்த ஆண்டு, பெருங்குடி கிடங்கில் குப்பை கொட்ட மாநகராட்சி அனுமதி வழங்கியதாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், நன்றி போஸ்டர் அடித்து ஒட்டினர். மக்கள் எல்லாரும் மகிழ்வு அடைந்தனர்.
ஏற்கனவே, ஏரியில் குவிந்துள்ள, 3,000 டன் குப்பையை பெருங்குடி குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல, 11 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஒப்பந்ததாரருக்கு, நிதி பாக்கி வைத்ததால், குப்பை அகற்றும் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது, ஏரியில் பல ஆயிரம் டன், மலை போல குப்பை குவிந்து கிடக்கிறது.
முதல் கோணல்...
இவற்றில், குப்பையை அகற்றுவதற்கு, ஊராட்சி நிர்வாகம், 40 லட்சம் ரூபாயில் மதிப்பீடு தயாரித்துள்ளது. ஆனால், அதற்கான நிதி இல்லாமல், நிர்வாகம் திண்டாடுகிறது. தமிழகம் முழுவதும் ஒரே உள்ளாட்சி நிர்வாகம் தான். ஆனால், மாநகராட்சி, ஊராட்சி இடையே நடக்கும் நிர்வாக குளறுபடி, நிதி இல்லாமை போன்ற காரணங்களால் பாதிக்கப்படுவது என்னமோ, அப்பாவி மக்கள் தான்.
இன்றைக்கு எத்தனை கோடி ரூபாய் செலவழித்தாலும், இப்படி ஒரு ஏரியை உருவாக்க இயலாது. நீர்நிலைகளைப் பாதுகாக்க, நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன. கண் முன்னே, ஒரு ஏரிக்கு, இங்கே கல்லறை கட்டப்படுகிறது. ஒரு கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியோ, அல்லது மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு அனுமதித்தோ ஓர் அரசாணையை போடுவதில், இந்த அரசுக்கு என்ன தான் பிரச்னை?
விரிவாக்கத்தில் விடுபட்டது ஏன்?பெருங்குடி, ஆலந்துார் மண்டலம் மற்றும் பல்லாவரம் நகராட்சி மையப் பகுதியில், மூவரசம்பட்டு ஊராட்சி அமைந்துள்ளது. ஊராட்சி உறுப்பினர் பதவி பறிபோய் விடும் என்பதால், தி.மு.க., அ.தி.மு.க.,வினர் இணைந்தே, சென்னை மாநகராட்சியுடன் இதை இணைப்பதைத் தடுத்து விட்டனர். இணைத்திருந்தால், குப்பை, பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்கும் என்கின்றனர் மூவரசம்பட்டு நலச்சங்கங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள்.
ஊராட்சி துணைத்தலைவர் பக்தவத்சலம் கூறுகையில், ''ஏரியில் இருந்து குப்பையை அகற்ற, 40 லட்சம் ரூபாய் ஒதுக்க, மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். நிதி வந்தால், குப்பை அகற்றப்படும். மாநகராட்சியின் நிலைப்பாடு குறித்து நான் கருத்து சொல்ல முடியாது,'' என்றார்.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
26-ஜூன்-201608:02:23 IST Report Abuse
samkey இதற்கு காரணம் நீர் நிலைகளின் கரைகள் மற்றும் கரையோரங்கள் ஆக்கிரமிக்கப்படுவதுதான். இவைகளை ஆக்கிரமிக்கும் கூட்டம் முதலில் ஆளுங்கட்சி கொடியை நடுவார்கள் ஓட்டுக்காக ஜனாதிபதியைவிட சக்தி வாய்ந்த லோக்கல் பஞ்சாயத்து தலைவனான அரசியல் வியாதி கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு உதவுவான். பொதுப்பிணித்துறை சாலை அமைத்து கொடுக்கும். மின்கொள்ளைத்துறை மின் விநியோகம் செய்வான் இடத்தை மடக்கியவர்கள் சாமர்த்தியமாக ஒரு கோவிலையோ அல்லது மசூதி சர்ச் ஏதாவது ஒன்றை கட்டிவிடுவான் பிறகு விரைவில் லஞ்ச வருவாய் துறை பட்டா கொடுத்துவிடுவான் ஷாப்பிங் மால் வந்துவிடும் பிளாஸ்டிக் பைகள் பெருகி குப்பையாகிவிடும் ஆக ஏரி, ஏரியாவாக மாறி இறுதியில் கூவமாகிவிடும் இவனுகளை இயற்கையாக தண்டித்தால்தான் உண்டு
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201601:56:18 IST Report Abuse
மதுரை விருமாண்டிமசூதிகள் 99.9999 % தங்களின் சொந்த பட்டா நிலங்களில் தான் உள்ளது.....
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
25-ஜூன்-201622:32:24 IST Report Abuse
மதுரை விருமாண்டி பொதுப்பிணித்துறை மற்றும் மா நரக ஆட்சியாளர்களிடமிருந்து நீர் வளங்களை பாதுகாத்தல் மிக அவசியம்.. கமிஷன், மையப்படுத்தப்பட்ட ஊழல், வரைமுறையற்ற லஞ்சம், ஆயிரத்துக்கும், ஐநூறுக்கும் தங்களின் ஐந்தாண்டு ஜனநாயக உரிமையை விற்கும் துப்புக்கெட்ட நாதாரி ஜனங்கள், சுற்றுச் சூழல் பற்றி சிறு நல்லறிவும் சிந்தனையும் இல்லாத கூறுகெட்ட சமூகம் .. தீதும் நன்றும் பிறர் தர வாராது.. அறிவு கெட்ட சமுதாயம் அழியத்தான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
25-ஜூன்-201612:15:31 IST Report Abuse
kundalakesi 140 கோடி மக்களின் கழிவுக் குப்பைகளுக்கு அவர்களே முத்தரப்பு பொறுப்பு. பழக் கடை பட்சணக் கடையிலிருந்து, கையேந்தி கடை பார்சல் வரை பிளாஸ்டிக் பை கேட்டு வாங்குகிறோம். வாங்கிய பைகள், ஜர்தா பாக்கெட்டிலிருந்து hu தண்ணீர் பாட்டில் வரை தெருதான் குப்பைத் தொட்டி என கடாசுகிறோம். தட்டிக் கேட்டால் முறைக்கிறோம். ஒரு முறை யூரோப், கனடா, யூ எஸ் சென்ற பின் இங்கு வரின், சகிக்க முடியாத குப்பைக் கடல் என தோன்றும். தெருவில் எச்சில் துப்ப கண்டிப்புடன் அபராதமும், பிளாஸ்டிக் மெல்லிய பைகளுக்கு அரசியலை மீறி தடையும் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X