மனோபாவம் மாற வேண்டும்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனோபாவம் மாற வேண்டும்!

Added : ஜூன் 30, 2016 | கருத்துகள் (2)
Advertisement

சாரு நிவேதிதா - எழுத்தாளர்
இதை எழுதும் தருணத்தில், தமிழகத்தில் நடந்துள்ள இரண்டு கொடூரமான சம்பவங்களின் குற்றவாளிகள் பிடிபடவில்லை; விரைவில் பிடிபடலாம். ஆனால், இது எழுப்பும் கேள்விகளை, ஒவ்வொரு குடிமகனும் எதிர்கொண்டே ஆக வேண்டும். ஒரு சம்பவம், சுவாதி கொலை; இன்னொன்று, வினுபிரியாவின் தற்கொலை. இருவருமே இளம் பெண்கள்; இந்த இரண்டு சம்பவங்களுமே, நம் சமூகத்தின் புரையோடிய நோய்த்தன்மையை நம் காது கிழிபடும் அளவுக்கு உரக்கச் சொல்கிறது. நுங்கம்பாக்கம் என்பது, எங்கோ தொலைதுாரத்தில் உள்ள கிராமம் அல்ல. சென்னையின் மத்தியப் பகுதி. ரயில் நிலையம் என்பதும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் வந்து போகும் இடம். அங்கே ஒரு கண்காணிப்புக் கேமரா இல்லை.
பிணைக் கைதிகளைப் போல...: இருந்திருந்தால் இந்நேரம் குற்றவாளியின் தெளிவான உருவம் கிடைத்திருக்கும்; குற்றவாளியும் சிக்கியிருப்பான். இப்போதெல்லாம் ஒரு சாதாரண பெட்டிக்கடையிலும் காய்கறிக் கடையிலும் கூட கண்காணிப்புக் கேமராக்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு பெருநகரின் ரயில் நிலையத்தில் இல்லை. ஒரு பயங்கரவாதி தன்னிடம் சிக்கியுள்ள பிணைக் கைதிகளை நடத்துவதுபோல், அரசு தன் குடிமக்களை நடத்துகிறது. அடுத்த அவமானம், கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சடலம், ரயில் நிலையத்தின் நடைமேடையிலேயே இரண்டு மணி நேரம் கிடந்திருக்கிறது. சில வளர்ச்சியடையாத ஆப்ரிக்க நாடுகளைத் தவிர, வேறு எந்த தேசத்திலும் இப்படிப்பட்ட அவலத்தை நாம் காண முடியாது. உயிரோடு இருக்கும் போது, ஆடை சற்று விலகினாலும் பதற்றம் அடைகிற சமூகம், ஒரு பெண்ணின் சடலத்தை பலர் காண இரண்டு மணி நேரம் பொது இடத்தில் போட்டு வைத்திருக்கிறது. சமூகம் என்ன சமூகம்? காவல்துறையும் ரயில்வே நிர்வாகமும் தான் காரணம். நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான், போலீஸ் கமிஷனர், விசாரணையை, ரயில்வே போலீசிடமிருந்து நுங்கம்பாக்கம் போலீசுக்கு மாற்றியிருக்கிறார், அதுவும் இரண்டு தினம் கழித்து. இப்படி ஒவ்வொரு வழக்கிலும் நீதிமன்றம் தலையிட்டுக் கொண்டிருக்க முடியுமா? 'பேஸ்புக்' வீரர்களைப் போல் இங்கே நான், பொதுமக்களைக் குற்றம் சொல்ல மாட்டேன். ஒருவன் கையில் பட்டாக் கத்தியோடு, ஒரு பெண்ணை வெட்டுகிறான் என்றால், எப்படி அவனைத் தடுக்க முடியும்? நாம் என்ன கராத்தே வீரர்களா? அவன் ஓடிய பிறகும் கூட, அந்தப் பெண்ணின் சடலத்தின் மீது, துணியைப் போட்டு மூட முடியுமா? போலீஸ் நம்மை சும்மா விடுமா? 'நீ ஏன் மூடினாய்? கோர்ட்டுக்கு வா. தடயத்தை அழித்து விட்டாய். நீ குற்றவாளியின் நண்பன்' என்று சொல்லும். நம்முடைய சட்டத்தின் படி, நாம் தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். அதுவரை விசாரணைக் கைதியாகவே இருக்க வேண்டியது தான். இந்த நிலையில் எந்தக் குடிமகன் முன்வந்து, இதையெல்லாம் தடுக்க முடியும்? சுவாதி ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற காரணம் பெரிய ஆராய்ச்சிக்குரிய ஒன்று அல்ல. கொலை செய்தவனும் தீவிரவாதி அல்ல. ஆண்களிடம் உள்ள ஆதிக்க மனோபாவம் தான் கொலைக்குக் காரணம். 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று, ஒரு ஆண் சொன்னால், பதிலுக்கு அந்தப் பெண் தன் சம்மதத்தைச் சொல்லியே ஆக வேண்டும். மறுப்புத் தெரிவித்தால், முகத்தில், 'ஆசிட்' ஊற்றுவான்; பட்டப்பகலில் கொலை செய்து போடுவான். இந்த இரண்டுக்கும் தைரியம் இல்லாதவன், பெண்ணின் படத்தை முகநுாலிலிருந்து எடுத்து, 'மார்பிங்' செய்து, நிர்வாணப் படமாக வெளியிடுவான். பெண்ணின் தலையையும், வேறொரு நிர்வாண உருவத்தையும் இணைத்து, வெளியிட்டு விடுவான். இதற்குப் பயந்து கொண்டு, ஒரு பெண் தன் புகைப்படத்தை முகநூலில் போடாமலேயே இருக்க முடியுமா? அப்படியே மறைத்து வைத்தாலும் அலைபேசியில், அந்தப் பெண்ணே அறியாமல் புகைப்படம் எடுப்பது என்ன சிரமமான காரியமா! தற்கொலை செய்து கொண்ட வினுபிரியா சம்பவத்தில் நடந்தது அது தான். காதலைச் சொல்லியிருக்கிறான்; அந்தப் பெண் ஒத்துக் கொள்ளவில்லை என்றதும் நிர்வாணப்படம். அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் வினுபிரியா. ஆனால் ஒருநாளில் நடந்து விடவில்லை இந்தச் சம்பவம்.
அதிகாரியிடம் கெஞ்சல் : இளைஞன் வினுபிரியாவின் தந்தையிடம் பேசியிருக்கிறான். புகைப்படம் வெளிவந்த பிறகு, தந்தை, போலீசிடம் போயிருக்கிறார்; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாற்றி மாற்றி ஒவ்வொரு அதிகாரியையும் பார்த்துக் கெஞ்சியிருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரிக்குக் கூட, பிரச்னை எவ்வளவு ஆபத்தானது என்று தெரியவில்லை. அந்த அப்பாவித் தந்தையிடமிருந்து, லஞ்சமெல்லாம் வாங்கியிருக்கின்றனர். ஒரு அதிகாரிக்குக் கூட அந்தப் பெண் தன் மகளாக இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லை. ஏனென்றால், ஒட்டு மொத்த சமூகமே, பிரச்னை நம் கதவைத் தட்டாத வரை நம் தலைக்கு ஆபத்து இல்லை என்று நினைக்கிறது. ஒரு அதிகாரி நடவடிக்கை எடுத்திருந்தால் கூட வினுப்ரியாவின் தற்கொலையைத் தவிர்த்திருக்கலாம். சம்பந்தப்பட்ட ஆட்களின் முகநூல் பக்கத்தை முடக்குவது என்பது, ஐந்து நிமிட வேலை. போலீஸ் அதைச் செய்திருந்தால் வினுபிரியாவின் உயிர் போயிருக்காது.இன்னொரு விஷயமும் விவாதிக்கப்பட வேண்டும். இப்படி பெண்கள் மீதான குற்றம் செய்பவர்கள் அனைவரும் நரகத்திலிருந்தா அனுப்பப் படுகின்றனர்? அவர்கள் வேறு; நாம் வேறா! அவர்கள் அனைவருமே நம் வீட்டில்தான் இருக்கின்றனர். சிறு குழந்தையிலிருந்தே நாம், ஆணையும், பெண்ணையும் சமமாக வளர்ப்பதில்லை. வீட்டிலேயே பெண்களை பணிப்பெண்களைப் போல் தான் நடத்துகிறோம். இதற்கு பெண் குலமும் கொஞ்சம் பொறுப்பேற்கத்தான் வேண்டும். ஒரே பையன் என்று ஊட்டி ஊட்டி வளர்க்கப்படும் இளைஞர்கள், பெண்கள் மீது எந்த மரியாதையையும் இன்றிப் பொலிகாளைகளைப் போல் திரிகிறார்கள். பெண் குலம் மட்டுமல்ல; தகப்பனார்களும் இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். சிறு வயதிலிருந்தே பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்காததால் தான், நம் இளைஞர்கள் பெண்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் ஒரு ஆய்வு மாணவி சொன்ன சம்பவம் இது. அவருடைய பல்கலைக்கழகத்தில் சக மாணவியை ஒருத்தன் பின் தொடர்ந்து வருகிறான். அவளிடம் தன் காதலைத் தெரிவிக்கிறான். வெறும் காதல் அல்ல; திருமணமும் செய்து கொள்கிறேன் என்கிறான். தொல்லை தாங்க முடியாமல் அந்தப் பெண் தந்தையிடம் சொல்ல, அவர் அவளுடன் துணைக்கு வருகிறார். பையன் அவரிடமும், தன் விருப்பத்தைச் சொல்கிறான். அவர் அவனைக் கண்டித்து அனுப்புகிறார். 'என்னை விட நல்ல பையன் உன் பெண்ணுக்குக் கிடைத்து விடுவானா பார்க்கிறேன்' என்று மிரட்டுகிறான். இப்போதும் அவன் அந்தப் பெண்ணைப் பின் தொடர்வதை நிறுத்தவில்லை. அந்தப் பெண்ணின் நிலையை நினைத்துப் பாருங்கள். அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிட்டு அத்துமீறுகிறோம் என்பதை, ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்தால் தான் இந்தியா மனிதர்கள் வாழத் தகுந்த பூமியாக மாறும்.
எப்படி பயம் வரும்? : மற்றொரு முக்கிய பிரச்னை, மரண தண்டனை. இந்திய அறிவுஜீவிகள் அனைவரும் மரண தண்டனைக்கு எதிராகக் கூவிக் கொண்டிருக்கின்றனர். சிறு வயதிலிருந்தே சட்டத்தின் மீது எந்த மரியாதையும் இல்லாத குடிமகன்களையே நம் சமூகம் வளர்த்தெடுக்கிறது. ஒரு கொலையைச் செய்து விட்டு, சாட்சி இல்லை என்று வெளியே வந்து விடுகிறான் குற்றவாளி. அப்படியே தண்டிக்கப்பட்டாலும், ஏழு வருடத்தில் விடுதலை. அல்லது, அரசியல் தலைவர்களின் பிறந்த நாளில் பொது மன்னிப்பு. இப்படி இருந்தால் எப்படி பயம் வரும்? தண்டனை குறித்த பயம் இல்லாமல் இங்கே குற்றங்களைக் குறைக்க முடியாது.
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

Advertisement