சுதந்திரத்தை சுவாசிக்கும்போது சிதறடிப்பது நியாயமா?| Dinamalar

சுதந்திரத்தை சுவாசிக்கும்போது சிதறடிப்பது நியாயமா?

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

- பொன்.வாசுதேவன் - எழுத்தாளர்
நாகரிகமும், தொழில்நுட்பமும் ஒருபுறம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. மறுபுறம், மனிதன் நாகரிக காலத்திற்கு முந்தைய, கற்கால வாழ்க்கை மனநிலைக்குச் சென்று கொண்டிருக்கிறானோ என்ற ஐயமும், வினாவும் எழுகிறது. ஆதி மனிதனின் கட்டுப்பாடற்ற தன்மை, வெறித்தனமான வன்மம், வக்கிரம், ஒழுங்குமுறைக்கு உட்படாத வாழ்க்கை போன்ற சிக்கல்களையே அன்றாடம் நாம் வாசிக்கிற, கேட்கிற, பார்க்கிற செய்திகள் நினைவுபடுத்துகின்றன. எங்கு பார்த்தாலும் வன்முறை. பெரிய காரணங்கள் தேவையில்லை; சிறு காரணம், சிறிய தேவை, சின்ன மன வருத்தம். இது போதுமானதாயிருக்கிறது வன்மத்தோடு ஒருவரைத் தாக்க, ஒரு உயிரைப் பறிக்க… மனப் பிசகால் ஏற்படுகிற இந்த வன்ம வெறியின் கண்களுக்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என, யாரும் தனித்துத் தெரிவது இல்லை.
மன அழுத்தம் : உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. உண்மை தான்... கான்கிரீட் காடுகளுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு விட்ட வாழ்க்கை முறையில், உறவுச் சிக்கல்கள், தனிமை, மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால், சமூக வலைதளங்கள் அரக்கத் தனமாய், அனைவரையும் ஆட்கொண்டு விட்டது.எல்லாவற்றிலுமிருந்து சுதந்திரமான, கட்டற்ற வெளியாக நட்புகளையும், உறவு களையும் சமூக வலைதளங்களில் தேட ஆரம்பித்ததில், எல்லாச் சிக்கல்களும் துவங்கி விட்டன.l அருகிலிருக்கும் அம்மாவையோ, அப்பாவையோ, சகோதரியையோ, மனைவியையோ, பிள்ளைகளையோ, உறவுகளையோ கொண்டாடாத, அவர்களோடு உரையாடாத அதே மனம், தினத்துக்கொரு வாழ்த்தும், காலை வணக்கமும், இரவு வணக்கமும் சொல்லி மகிழ்கிறது. l மினுக்கும் எழுத்துகளிலும், படங்களிலும் தனக்கான சுதந்திர வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கிறது. l நட்பு, உறவு, காதல், திருமணம் என, எல்லாமும் சமூக வலைதளங்களின் வழியாகவே.எந்த நொடியும்...நீதிமன்றத்திற்கு வருகிற விவாகரத்து வழக்குகளுக்கான காரணங்களாக சமூக வலைதளப் பயன்பாடும் ஒன்றாகி இருக்கிறது. சமூக வலைதளச் சமூகம், ஒவ்வொன்றையும் நோக்கும் விதம், நிமிடத்திற்கு நிமிடம் மாறியபடி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒவ்வொரு கருத்து இருக்கிறது; உண்மை தான். அது வார்த்தைகளாகப் பரிமாறிக் கொள்ளப்பட்ட காலத்தில், குறிப்பிட்ட நபர்களுக்கிடையே மட்டும்; உறவு, நட்பு வட்டத்துக்கிடையே மட்டும் இருந்தது.இன்று? ஒவ்வொரு விரல்களிலும் முளைத்திருக்கும் ராட்சதக் கொடுக்குகள், எதையும் வன்மமாகச் சித்தரிக்கவும், விஷமாகப் பரவச் செய்யவும், எந்த நொடியும் தயாராக இருக்கின்றன. விபத்து, கொலை, அரசியல், ஜாதி, திரைப்படம், சமூகம் குறித்த எந்த நிகழ்வையும், எப்படி வேண்டுமானாலும் தன் இஷ்டத்துக்கு விமர்சித்து, அதை ஒரு சமூகக் கிருமியாகப் பரப்பி விடுகிற அபாயத்தை ஏற்படுத்துவதில் மிகப் பெரிய சந்தோஷத்தை இன்றைய சமூகம் அடைந்து விடுகிறது.காலம் காலமாக அழுத்திப் பிணைக்கப்பட்டிருக்கிற சங்கிலிகளை மெல்லத் தளர்த்தி, பெண்கள் வெளிவந்து கொண்டிருக்கும் காலம் இது. சமைப்பது, துவைப்பது, குழந்தையை, குடும்ப பாரத்தைச் சுமப்பது என்ற காலத்திலிருந்து மீண்டு, மன வலிமையும், பொருளாதார வலிமையுமாக, எழுச்சி கொண்டுஇருக்கும் கால மாற்றம் சாத்தியமானதன் தொடக்கப் புள்ளியில் தான் நாம் இருக்கிறோம். அந்தச் சிறு சுதந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுவாசித்து ஆசுவாசம் கொள்வதற்குள், வேரறுக்கும் அரிவாள்களாக பரவிக் கொண்டிருக்கிறது பெண்களின் மீதான வக்கிரமும், பலாத்காரமும், வன்முறையும், கொலைகளும். இப்படியான சம்பவங்களை நிகழ்த்து பவர்கள் தொழில்முறைக் குற்றவாளிகளோ, திருடர்களோ மட்டுமல்ல; கூடவே புழங்கி, உறவாடி, நல்ல முகம் காட்டிக் கொண்டிருந்தவர்களும் அடக்கம். இதற்கு முதல் முக்கியக் காரணம், சமூக வலைதளங்கள் தான். மாய உறவுகள் தருகிற மகிழ்ச்சியின் போலி மயக்கங்களுக்கு ஆட்பட்டு, நம்மை நாமே சிதைத்துக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. இதுமட்டுமா! இரவு, பகல் பாராமல் அலைபேசியும், கையடக்கக் கணினிக் கருவிகளும் கையுமாக பார்த்துக் கொண்டிருப்பதால், சிந்திக்கும் திறனையே முற்றிலும் இழந்து, கை போன போக்கில் விருப்பக்குறியிடலையும், கருத்திடலையும் செய்து கொண்டிருக்கிறோம். இது உடல் நலத்தையும், மன நலத்தையும் பாதிக்கிறது. உடலைப் பேணுவதில் அக்கறையின்மை, முறையற்ற உணவுப் பழக்கம், சரியான உறக்கமின்மை போன்ற பல நலக்கேடுகளையும், சமூக வலைதளங்களின் மூலமாக நாம் பெற்றிருக்கிறோம். தொலைபேசி, அலைபேசியாக உருவெடுத்ததும், அதன் பயன்பாடு அதிகரித்தது. ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களின் செயற்பாடுகளை பிணைக்கவும், வெளிப்படுத்தவும் என, உருவாக்கப்பட்டவையே சமூக வலைதளங்கள். முகம் தெரியாதவர்களோடும், முன்பின் அறிமுகமில்லாதவர்களோடும் யாரும் யாருடனும் நட்பு கொள்ளலாம்; எந்த அறிமுகமும் தேவையில்லாத, ஒருவரைப் பற்றித் தெரியாமல் அவர்களின் கருத்துகளுக்கும், படங்களுக்கும் விருப்பக்குறியிடலாம் என்ற சுதந்திரம், மனித மனங்களின் கீழ்மைத்தனமான எண்ணங்களுக்கும் வித்திட்டு இருக்கிறது.
சிந்திப்பது இல்லை : எப்போதாவது படங்கள் எடுத்த காலம்போய், கையிலேயே கேமரா இருக்கும் நிலையில், எங்கும், எந்த நொடியையும் உடனே படமெடுப்பதும், சமூக வலைதளங்களில் பகிர்வதற்காகவே படங்கள் எடுத்துப் பகிர்கிற மனமும், எல்லாருக்கும் வந்து விடுகிறது. குடும்ப நிகழ்வுகள், அலுவலக நிகழ்வுகள் என, நம்மைப் பற்றிய எல்லாவற்றையும், சமூக வலைதளங்களில் பகிர்வது சந்தோஷத்தைத் தந்தாலும், அதனால் ஏற்படக் கூடிய பின் விளைவுகளைப் பற்றி, யாரும் சிந்திப்பதே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் படங்களை எடுத்து, தொழில்நுட்ப ரீதியாக உருமாற்றி ஆபாசமாக உலவ விடுவதையும், சில வக்கிர மனங்கள் செய்கின்றன. அவமானங்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் அளவுக்கு இந்தச் செயல்கள் கொண்டு செல்கின்றன.
ஆரம்ப நிலையிலேயே...: இதைச் செய்கிறவர்களில் பெரும்பாலானோர், படித்தவர்கள் என்பது தான் வேதனைக்குரிய விஷயம். இணையம் சார்ந்த குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை ஏற்படுத்துவதன் மூலமே, இதைத் தடுக்க முடியும். ஆரம்ப நிலையிலேயே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.அதுவுமின்றி சமூக வலைதளங்களே கதியென்ற அளவுக்கு, அந்த போதைக்கு அடிமையாகி, முழு நேரமும் அதிலேயே விழுந்து கிடப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், வருங்காலத்தில், ஏன் இப்பொழுதே கூட, சமூக வலைதளங்கள் மனநோயர்களின் கூடாராமாகத் தான் இருக்கும். சமகால சமூக வலைதள சீர்கேடுகளைப் பார்க்கிறபோது, 'படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான் போவான் ஐயோன்னு போவான்' என்ற, பாரதியின் தீர்க்க தரிசன வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.

தொடர்புக்கு: pon.vasudevan@gmail.com

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.