குதூகலிக்க செய்யும் குழந்தைக்கவி| Dinamalar

குதூகலிக்க செய்யும் குழந்தைக்கவி

Added : ஜூலை 03, 2016
Advertisement
குதூகலிக்க செய்யும் குழந்தைக்கவி

குழந்தை பாடல்கள், நுால்களை படைப்பது ஒரு ரகம். குழந்தையாகவே மாறி, அனுபவித்து மகிழ்ந்து குழந்தை பாடல்களை படைக்கும் ரகத்தை சேர்ந்தவர் இந்த குழந்தைகவிஞர். மழலை தமிழ் செம்மல், குழந்தை கவிஞர் கோ, மழலைகவிஞர் என்ற பட்டங்கள் இவருக்கு சூட்டப்பட்டதிலிருந்து இவரது திறமையை அறியலாம்.முத்தாய்ப்பாக இவரது குழந்தை இலக்கியங்களை பாராட்டி சாகித்ய அகாடமியின் பாலபுரஷ்கர் விருது இவரை தேடி வந்துள்ளது. அவர் குழந்தை கவிஞர் குழ.கதிரேசன். தினமலர் வாசகர்களுக்காக அவருடன் பேசியதிலிருந்து...* படித்தது?புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரம் சொந்த ஊர். தாத்தா கதிரேசன்செட்டியார் கணித மேதை. ஏராளமான கணித புத்தகங்களை படைத்தவர். அவர் எஸ்.கே.டி., காந்தி பாடசாலையை துவக்கினார். அங்கு தான் படித்தேன். பட்டப்படிப்பை மதுரை தியாகராஜர் கல்லுாரியில் படித்தேன்.* கவிதை, இலக்கிய ஆர்வம் எப்படி?தியாகராஜர் கல்லுாரியில் தமிழறிஞர் தமிழண்ணல் தான் தமிழ் பேராசிரியர். இதனால் இயல்பாகவே கவிதை, இலக்கியங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது.* குழந்தை இலக்கியங்களில் ஈடுபாடு?பெரியவர்களுக்கு நுால்களை எழுத பலர் உள்ளனர். குழந்தைகளுக்கான நுால்களை எழுத எனக்கு அழ.வள்ளியப்பா துாண்டுதலாக இருந்தார். அதன் விளைவு குழந்தைகளுக்கான நுால்கள், கவிதைகளை எழுதத்துவங்கினேன்.* எத்தனை நுால்கள் எழுதியுள்ளீர்கள்?எலி கடித்த பூனை, பேசும் கிளியே, கூட்டாஞ்சோறு, மழலையர் தமிழ், மழலைகுழந்தைகள், சிரிக்கும் மழலை, பூச்செண்டு, பாட்டுத்தோட்டம், பாடுவோம் அறிவியல் என 32 புத்தகங்கள் எழுதியுள்ளேன். பெரியவர்களுக்கு மூன்று புத்தகங்களை எழுதியுள்ளேன். இதில் குழந்தைகளுக்கான நுால்கள் பள்ளி பாடப்புத்தகங்களாக வெளியாகியுள்ளன.* பதிப்பகமும் வைத்துள்ளீர்களாமே?ஐந்தினை பதிப்பகத்தை 1984ல் துவக்கினேன். இதன் மூலம் 300க்கும் மேற்பட்ட நுால்களை வெளியிட்டுள்ளேன். ஜெயகாந்தன், ஜானகிராமன், புதுமைபித்தன், டாக்டர் தட்சிணாமூர்த்தி, மதுசவிமலானந்தம் போன்றரது நுால்கள் அதிகம் வெளியிடப்பட்டுள்ளன.* வழிகாட்டி யாரும் உண்டா?கவிதையை பொறுத்தவரையில் கவிஞர் பொன்னடியான். குழந்தை கவிதை, இலக்கியங்களை பொறுத்த வரையில் கவிஞர் அழ.வள்ளியப்பா.* மறக்க முடியாத பாராட்டு?எலி கடித்த பூனை நுாலுக்கு 1979ல் தமிழக அரசு சார்பில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., பரிசு வழங்கியதை மறக்க இயலாது. பேசும் கிளியே நுாலுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு 1991ல் பரிசு வழங்கியது. சாகித்ய அகாடமி வழங்கும் பாலபுரஷ்கர் விருது எனக்கு கிடைக்கும் 15வது விருதாகும்.* மற்ற மொழிகளில் படைப்புகள் வெளிவந்ததாமே?என் பல குழந்தை இலக்கியங்கள், கவிதைகள் ரஷ்ய, போலாந்து, இந்தி, மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.*குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கம் எந்தளவுள்ளது?படிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாரிடமும் உள்ளது. அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வசதி படைத்தவர்கள் குழந்தைகளுக்கு தேவையான நுால்களை வாங்கி கொடுத்து விடுகின்றனர். ஏழை, நடுத்தரவர்க்க குழந்தைகளுக்கு ஆர்வம் உள்ளது. அவர்களும் படிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.* அங்கீகாரமாக கருதுவது?மலேசியா பல்கலை, அண்ணாமலை பல்கலை இணைந்து என் நுால்களை ஆய்வு செய்து 'குழந்தை கவிஞர் குழ.கதிரேசன்' என்ற தலைப்பில் நூலை வெளியிட்டுள்ளன. 'குழ.கதிரேசனும், அழ.வள்ளியப்பாவும் ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் ஆதிலட்சுமி என்பவர் பி.எச்டி., ஆய்வு செய்கிறார்.பாராட்ட 99414 60109.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X