 ரொனால்டோவின் காட்டில் மழை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

 ரொனால்டோவின் காட்டில் மழை!

Added : ஜூலை 12, 2016
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 ரொனால்டோவின் காட்டில் மழை!

சாம்பியன்ஸ் லீக் முடிந்துவிட்டது; கோபா அமெரிக்கத் தொடர் முடிந்து விட்டது; யூரோ கோப்பை முடிந்துவிட்டது; முடியவில்லை, யார் இந்த சீசனுக்கான, உலகின் சிறந்த வீரர் என்ற வாதம். முடியவில்லை என்பதை விட, இப்போது தான் இந்த வாதம் துவங்கி இருக்கிறது என்பதே உண்மை.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 'பேலன் டூ ஆர்' எனப்படும், உலகின் சிறந்த வீரர் விருது, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 2007ல் இருந்து போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்சி என, இருவர் மட்டுமே இந்த விருதை மாறிமாறி வாங்கி வருகின்றனர். 'பேலன் டூ ஆர் விருது, முன்கள வீரர்களுக்கே எழுதி வைக்கப்பட்டதா? இந்த விருதே ஒரு டிராமா...' என, அதிருப்தி நிலவுகிறது. கடந்த, 2014ல் உலக சாம்பியன், புண்டல்ஸ் லிகா சாம்பியன் பட்டம் வென்று, தேசிய அணி, கிளப் என இரண்டு தரப்பிலும் சாதித்திருந்த ஜெர்மனியின் கோல் கீப்பர் மேன்யல் நோயருக்கு, பேலன் டூ ஆர் கிடைக்கும் என, பலரும் நம்பினர். ஆனால் அந்த விருது, ரொனால்டோவின் கைகளில் தஞ்சமடைந்தது. கடந்த ஆண்டு, மெஸ்சி அதை தன்வசப்படுத்தினார்.ஆக, இந்த முறை ரொனால்டோவுக்கு அந்த விருது கிடைக்காமல் போனால் தான் ஆச்சரியம். ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் பட்டம், போர்ச்சுகல் அணிக்காக யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் என, சர்வ வல்லமை பொருந்திய ஆளுமையுடன் பேலன் டூ ஆர் விருதை நெருங்கி விட்டார், ரொனால்டோ. சாம்பியன்ஸ் லீக், யூரோ தொடர்களின் பைனல் வரை முன்னேறி, யூரோ தொடரில் சிறந்த வீரர் விருதை வென்ற, அட்லெடிகோ மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடும், பிரான்ஸ் வீரர் கிரீஸ்மன், ரொனால்டோவுக்கு சவால் அளிக்கலாம். ஆனால், ரொனால்டோவை முந்த முடியாது. காரணம், 'கோப்பை வென்றிருந்தால், பேலன் டூ ஆர் பற்றி யோசிக்கலாம். இரு தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் ரொனால்டோ இடம் பெற்றிருப்பதால், அவரை தவிர வேறு யாருக்கும் இந்த விருது கிடைக்க வாய்ப்பில்லை' என, கிரீஸ்மன் ஒப்புக் கொண்டார். லா லிகா ரிசல்ட்டை வைத்து, பார்சிலோனா ஜாம்பவான்களான மெஸ்சி, நெய்மர் பெயரை பரிசீலிக்கலாம். வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியவர்கள் என்பதால் இவர்கள் இருவர் மீதும், 'பிளாக் மார்க்' விழுந்துள்ளது. மாறாக, சாம்பியன்ஸ் லீக் தொடரில் கிடைத்த பணத்தை முழுமையாக தொண்டு நிறுவனத்துக்கு அளித்து, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின், 'குட் புக்கில்' இடம்பிடித்துள்ளார், சி.ஆர்., 7 என்றழைக்கப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ. களம் கடந்து வசீகரிக்கவில்லை என்றாலும் ஒழுக்கம் உள்ளிட்ட விஷயங்களும் முக்கியம் என கருதுகின்றனர், விருது தேர்வாளர்கள். 'நிதி விவகாரங்களை என் தந்தை கவனித்துக் கொண்டார்; கால்பந்து தவிர்த்து எனக்கு எதுவும் தெரியாது' என, மெஸ்சி நழுவினாலும், களத்துக்கு வெளியிலும் நல்ல, 'ரோல் மாடலாக' இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எழுகிறது. அதனால் தான், யூரோ கோப்பை பைனல் துவங்கும் முன், 'இதில் போர்ச்சுகல் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை; நாங்கள், முறையாக வரி செலுத்தி வருகிறோம்' என்றனர், சோஷியல் மீடியாவில் ரொனால்டோ ரசிகர்கள். நினைத்தது போல் அல்லாமல் போர்ச்சுகல் கோப்பை வென்றது, அவர்கள் அதிர்ஷ்டம். நடப்பதை எல்லாம் பார்க்கும் போது, ரொனால்டோ நான்காவது முறையாக, பேலன் டூ ஆர் விருதை வாங்குவதைத் தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். இந்த ஆண்டு, அவர் வாழ்வில் நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. வேறென்ன சொல்ல, இப்போதைக்கு ரொனால்டோவின் காட்டில் நல்ல மழை!
- த.ரமேஷ் -
ramesh86arun@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை