இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்!

Added : ஜூலை 12, 2016 | கருத்துகள் (2)
Advertisement
இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்!

எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியுமே அதற்கு உரிய சாதக பாதகங்களோடுதான் வரும். அதைப் புரிந்து கொண்டு பாதகங்களை அடையாளம் கண்டு, சாதகங்களைத் தனதாக்கிக் கொள்பவரே அதில் வெற்றி அடைய முடியும். காலையில் தன்னுடைய அழகான தோற்றத்தை, 'செல்பி' மூலம் படம் பிடித்து முகநுாலில் போடுகிறார் ஒரு இளம்பெண். பிறகு ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை, கைபேசியை எடுத்து, 'ஸ்டேட்டசை'ப் பார்த்தபடி இருக்கிறார். வெறும், 100, 'லைக்' மட்டுமே வந்தால் மனம் பதறுகிறது; முகம் வாடுகிறது. 'தோற்றத்தில் ஏதும் பிரச்னையோ... நாளையே பார்லருக்குப் போக வேண்டும். எப்போதும் படத்தைப் போட்ட அரை மணி நேரத்தில், 900 லைக்கைத் தாண்டி விடுமே! இப்போது ஏன், 100லேயே நிற்கிறது?'ஆனால், அந்தப் பெண் நினைப்பது போல் அப்படியெல்லாம் நடப்பதில்லை. எந்தப் பெண்ணின் புகைப்படம் வரும் என்று, தவமாய்க் கிடக்கிறது மாபெரும் இளைஞர் கூட்டம். ஒரு பெண்ணின் புகைப்படம் வந்தவுடன், மாறி மாறி, 'சரசர' வென்று லைக்குகள் குவிகின்றன. வெறும் லைக்குகள் மட்டுமல்ல. 'ஆசம்... அடடா என்ன அழகு, மனம் கிறங்குகிறது, அழகே உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை, உன்னைப் பார்த்ததால் நான் கவிஞ னானேன்...' என, நுாற்றுக்கணக்கான, 'கமென்டு'கள். இவ்வளவுக்கும் அந்தப் பெண் செய்த சாதனை என்னவென்று பார்த்தால், காலையில் எழுந்து தன் புகைப்படத்தைப் போட்டு, 'குட் மார்னிங்' சொன்னார்; அவ்வளவு தான். இத்தனை லைக்குகளையும், கமென்டுகளையும் பார்த்த பெண்ணின் மனம் குதுாகலிக்கிறது. சில பெண்கள், சில முக்கியமான கமென்டுகளுக்கு நன்றியும் தெரிவிக்கின்றனர். இங்கிருந்து தான் தொடங்குகிறது ஆபத்தின் இருள் பாதை. நுாற்றுக்குத் தொண்ணுாறு பெண்களுக்கு, இந்தப் பாதையின் பிரச்னைகள் தெரிந்தே இருப்பதால், இதோடு நிறுத்திக் கொள்கின்றனர்; நிறுத்தாதவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தான், நாம் தினசரி படித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு விஷயம் ஏன் பிரச்னையாகிறது என்பதற்கு, அது பற்றிய தெளிவான புரிதல் தேவை. எதார்த்த உலகில் ஒரு பெண்ணை, ஆண் எப்படி எதிர்கொள்கிறான்? எந்தப் பெண்ணிடமும் ஒரு ஆண் எடுத்த எடுப்பில், 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!' என்று சொன்னால், உதை தான் விழும். ஏன்... முன்பின் தெரியாத பெண்ணிடம் நாம் செல்லும் இடத்துக்கு வழி கூட கேட்க முடியாது. எதார்த்தத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும், அவ்வளவு பெரிய இடைவெளி இருக்கும் போது இணையம் என்கிற, 'சைபர்' உலகில் மட்டும், ஏன் இடைவெளியே இல்லாமல் போகிறது?ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். 'சாட்டிங்'கில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பழகி ஒரே மணி நேரத்தில் அவளை, 'வாடி, போடி' என்று அழைக்க முடியும். அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. 'செய்து காண்பிக்கவா?' என்றார். ஒரே மணி நேரத்தில், அந்தப் பெண்ணே இவரை, 'வாடா, போடா' என்று சொன்னாள். இவரும் அதற்கு ஏற்றாற்போல், 'வாடி, போடி!' ஆனால், வெறும் நட்பு தான்; தப்புத் தண்டா பேச்சு எதுவும் இல்லை. நண்பருக்கு, 30 வயது இருக்கும்; முகநுாலில் பிரபலமான ஆளும் இல்லை. வெறுமனே புகைப்படத்தையும், தன் பயோடேட்டாவையும் மட்டுமே கொடுத்திருந்தார். நண்பர் திருமணமானவர் என்ற விபரமும், அதில் இருந்தது. அந்தப் பெண் திருமணம் ஆகாதவர். இப்படியாக திருமணமான ஒரு ஆணோடு ஒரு பெண் ஒரே மணி நேரத்தில், 'வாடி, போடி' அளவுக்குப் பேசி விட முடிகிறது. 'சாட்டிங்'கின் முடிவில் அது, 'செல்லம்' வரை போய் விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இதற்கு ஒரே காரணம், இணையம் கொடுக்கும் கட்டற்ற சுதந்திரம். அந்த சுதந்திரம் எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இந்த வலைப்பின்னலில் மாட்டிக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்கலாம். 'ரியாலிட்டி' என்றால் நமக்குத் தெரியும்; எதார்த்தம்! அதேபோல் இன்னொரு, 'ரியாலிட்டி' இருக்கிறது. அதன் பெயர், 'ஹைப்பர் ரியாலிட்டி!' அதாவது, 'ரியாலிட்டி' போல் இருக்கும்; ஆனால், 'ரியாலிட்டி' இல்லை. சினிமாவில் நாம் சில உருவங்களைப் பார்க்கிறோம். அந்த உருவங்கள் நமக்குப் பரிச்சயமானவை. உருவங்கள் நகர்கின்றன; பேசுகின்றன; அழுகின்றன; சிரிக்கின்றன. ஆனால் அவற்றை நாம் தொட முடியாது. இது தான், 'ஹைப்பர் ரியாலிட்டி!' சாட்டிங்கின் போது, 'வாடா போடா, செல்லம்' என்று சொல்லத் தயக்கம் அடையாத பல பெண்கள் நேரில் முகம் பார்த்துப் பேசுவதற்குக் கூட தைரியம் இல்லாதவர்களாக இருப்பர். காரணம், இணையம், நிழல்; நேர் சந்திப்பு, நிஜம். இந்த நிழலுக்கும் நிஜத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால், இணையம் தரும் சுதந்திரத்தை, நாம் மேலும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Advertisement