கருத்துச்சுதந்திரம் - வரைமுறையுடன் அனுபவிப்போமே!| Dinamalar

கருத்துச்சுதந்திரம் - வரைமுறையுடன் அனுபவிப்போமே!

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
கருத்துச்சுதந்திரம் - வரைமுறையுடன் அனுபவிப்போமே!

பிரபஞ்சத்தின் நடுவில் சூரியன் இருக்கிறது. அதைச் சுற்றித்தான் எல்லாக் கிரகங்களும் வலம் வருகின்றன. இந்த உண்மை எல்லாருக்கும் தெரியும். இந்த உண்மையைக் கண்டறிந்து, அதைச் சொன்னதற்காக குற்றவாளியாக ஆக்கப்பட்டவர் கலீலியோ கலிலி. இந்தக் கருத்தைத் தனக்குள் வைத்துக் கொள்ள, ஆதரிக்க, கற்பிக்க தடை செய்யப்பட்டார். இதற்காக ரோமன் கத்தோலிக்கச் திருச்சபையால், சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, இறக்கும் வரை வீட்டுச் சிறையில் வைக்கபட்டார். இது நடந்தது, 1633ம் ஆண்டில். கருத்துச் சுதந்திரத்தின் மீதான, அதிகாரப் பிரயோகத்திற்கான ஆரம்பப் புள்ளியாக, இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.மனிதர்கள் அனைவருக்கும், எல்லாவற்றின் மீதும், ஏதாவது ஒரு கருத்து இருக்கிறது. இதில் பாலின பேதமோ, படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடோ இல்லை. கருத்துகள் இல்லாத மனிதர்களே இல்லை என்பது தான் உண்மை. தனி மனிதனுக்கென்று கருத்துகள் எப்படி உருவாகிறது? சமூகச் சூழல், வாழ்க்கை முறை, அனுபவம், சந்திக்கிற, கேட்கிற விஷயங்கள், இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவரது ஆழ்மனதிலும், கருத்துச் சித்திரங்கள் உள்ளீடாகின்றன. இந்தக் கருத்துகளை தன் வாழ்க்கையில், தேவையான இடங்களில் திட்டமிடவும், முடிவெடுக்கவும், சொல்லவும், எழுதவும் செய்கின்றனர். ஒவ்வொரு தனி மனிதரும், தன் கருத்தை வெளிப்படுத்த விரும்புவது இயல்பானது. அதுவும் கட்டற்ற தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சிக் காலத்தில், ஒவ்வொரு தனி மனிதனும், கிட்டத்தட்ட ஓர் ஊடகமாகவே செயல்படுகிறான். உடனுக்குடன் தன் கருத்தைப் பகிர்கிறான். அதற்கான எதிர் கருத்துக்களையும், வினைகளையும் பெறுகிறான். எல்லா விஷயங்களும் விவாதத்திற்கு உள்ளாகின்றன. இந்த கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சுய மதிப்பைத் தருகிறது. தன் கருத்துகளின் மீதான மதிப்பீடுகளை அறிந்து கொள்வதில், மனித மன அடுக்குகளில், ஆர்வம் மிகவும் மேலோங்கியிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-19-1-ஏ, பேச்சு சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் அடிப்படை உரிமை என்று தெரிவிக்கிறது. ஆனால், இதற்கான அளவுகோல் என்ன? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சொல்லலாமா, செய்யலாமா, எழுதலாமா என்றால், அங்கே அதிகாரத்தின் குறுக்கீடு உள்நுழைந்து கட்டுப்படுத்துகிறது. ஒரு விஷயத்திற்கான சுதந்திரம் என்பது, அது சரியான முறையில் கையாளப்பட வேண்டும் என்பதற்கான உறுதிப்பாடுகளையும் உள்ளடக்கியது. கருத்து சுதந்திரம் என்ற பெயரால் அவதுாறு பரப்புவது, தண்டனைக்குக்குரிய குற்ற நடவடிக்கையாக, இதன் மூலம் விவரிக்கப்படுகிறது. தவறான நோக்கத்துடன், பேச்சு, எழுத்து மூலமாக மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டால், அது குற்ற நடவடிக்கை என்கிறது, இந்திய தண்டனைச் சட்டம். சமூக வலைதளங்களில், தொலைத்தொடர்பு சாதனங்களின் வழியாக பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் கருத்துகளுக்கும், அவதுாறுகளுக்கும் தண்டனை உண்டு என்கிறது, தகவல் தொழில் நுட்பச் சட்டம். ஆக, பேச்சுரிமையும், கருத்துரிமையும் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள சம காலச் சூழலில், ஒவ்வொருவரும் சுயக் கட்டுப்பாட்டுடன் கருத்துகளைப் பகிர்வது அவசியமாகிறது. எனில், இதற்கு என்னதான் தீர்வு? காந்தியின் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, அந்தப் போராட்டத்திற்கான வழிநடைப் பாடலாக எழுதியது தான், 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாவும் சேருவீர்' என்ற பாடல். அந்தப் பாடல், இன்றைக்கு நாம் வாழ்கிற சமூக வலைதளக் காலத்திற்கும், கருத்து சுதந்திரம் என்ற பெயரால், நாம் வெளியிடும் கட்டுப்பாடற்ற கருத்துகளுக்கும் பொருந்துகிறது. உண்மையில், எழுத்துகளின் மூலமாகவும், கருத்துகளின் வாயிலாகவும் நாம் நடத்திக் கொண்டிருக்கிற எல்லாமும், கத்தியின்றி, ரத்தமின்றி நடத்திக் கொண்டிருக்கிற யுத்தங்கள் தான்.

இந்த ஆயுதங்களை முறையாகப் பயன்படுத்தி, அதன் ஆக்கப்பூர்வமான பலாபலன்களைப் பெற முயல்வதே, இன்று நம் முன்னே உள்ள சவால்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.