ஒன்றல்ல... பல கலாம்கள் உருவாக வேண்டும் : இன்று கலாம் நினைவு தினம்| Dinamalar

ஒன்றல்ல... பல கலாம்கள் உருவாக வேண்டும் : இன்று கலாம் நினைவு தினம்

Added : ஜூலை 27, 2016 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஒன்றல்ல... பல கலாம்கள் உருவாக வேண்டும் : இன்று கலாம் நினைவு தினம்

ஒருவர் சிறந்த ஆசிரியராக, அரசியல்வாதியாக, அறிஞராக, அமைச்சராக, வணிகராக, விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்றால், முதலில் அவர் சிறந்த மனிதராக இருக்க வேண்டும். நல்ல மனிதனாக இல்லையென்றால், யாரும் என்னவாக இருந்தும் பயனில்லை.
மறைந்த ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், எல்லா வகையிலும் ஒரு சிறந்த மனிதர் என்பதுபோல, ஒரு சிறந்த புத்தகமும் கூட. உலகில் பலரும், இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லோரும் படித்திருக்கிற திறந்த புத்தகம் அவர். இந்தியர் ஒருவர் இந்திய மக்கள் அனைவராலும் அறியப்பட்டிருப்பதும், அன்பு பாராட்டப்பட்டிருப்பதுவுமான அரிய மனிதர் என்றால், காந்தியடிகளுக்குப் பிறகு அனேகமாக அப்துல் கலாம் மட்டுமே. அப்துல் கலாமின் குடும்பம் சற்று வசதியான குடும்பம்தான் என்றாலும், பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கலம் செலுத்துகிற தொழில் நசியவே வறுமை சூழ்ந்து கொள்கிறது. கலாம் அவர்கள் படிக்கவும் வேண்டும், கொஞ்சம் பொருள் தேடவும் வேண்டும் என்ற இரண்டு கடமைகளை ஏற்க வேண்டியதாகிறது. செய்தித்தாள்களை வீடு வீடாக வினியோகிக்கிற வேலை.வெட்கமோ, விரக்தியோ இல்லாமல் வியர்வை சிந்துகிறார். அவருடைய உழைப்பும் தீர்க்க தரிசனமும் அவரை ஒரு சிறந்த விஞ்ஞானியாகவும், ஜனாதிபதியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும், தலைமுறை பலவற்றிற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் தன்னை உருவாக்கிக் கொள்ள உதவியுள்ளன. குழந்தைகள் கலாமை கொண்டாடியதற்குக் காரணமே அவர் குழந்தைகளைக் கொண்டாடியது தான். ஜனாதிபதியாக அவர் பணியாற்றியபோது தம் மாளிகையில் சனிக்கிழமை தோறும் ஏறத்தாழ 250 மாணவ மாணவியரைச் சந்தித்து அளவளாவி மகிழ்வார். குழந்தைகளோடு குழந்தையாக குழந்தை மனமே வேண்டும். அது அப்துல் கலாமிடம் நிரம்பவே உண்டு. ஒருமுறை இந்தியாவிலுள்ள எட்டு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி இன மாணவ, மாணவிகளை அவர் சந்தித்தார். 'நீங்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள்' என்றபோது 9ஆம் வகுப்பு மாணவன் ஸ்ரீகாந்த், 'நான் ஒரு மாற்றுத் திறனாளி. இந்தியாவின் முதல் மாற்றுத் திறனாளி ஜனாதிபதியாக நான் அமர விரும்புகிறேன்' என்றதும், அந்த மாணவனின் நம்பிக்கையைப் பாராட்டி மகிழ்ந்தார் கலாம்.அவரின் எண்ணற்ற கவிதைகளை நாம் வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஜனாதிபதி மாளிகையில் கவிஞர்கள் பலரை அழைத்து கவுரவித்திருக்கிறார். வாலி, அப்துல் ரகுமான், வைரமுத்து போன்ற பல கவிஞர்கள் அவரோடு கைகுலுக்கியும், அவரது கவிதைகளைக் கேட்டும் மகிழ்ந்துள்ளனர்.கலாம் ஓய்வு பெற்ற பிறகு ஒரு நாள் அவரை டில்லியில் நானும் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கமும் சந்தித்தோம். 'வெளிச்ச மலர்கள்' என்ற என் கவிதைத் தொகுப்பை அவருக்குத் தந்தேன். அதில் ஒரு கவிதை,
'காந்தி மீண்டும்பிறக்க வேண்டும்,ராட்டையோடு அல்லஒரு சாட்டையோடு'
இவ்வரிகளைப் பலரும் பாராட்டிய மகிழ்ச்சியில் நானி ருந்தேன். ஆனால் அப்துல் கலாமோ, 'ராட்டையோடு இருக்கிறவரைதான் அவர் காந்தி... சாட்டை இருந்தால் அவர் காந்தியாக முடியாது,' என்று மெல்லிய குரலில் சொன்னபோது அதுவும் எனக்கு சரியாகப்பட்டது. கவித்துவம் இருந்தால்தான் இப்படிக் கருத்துரைக்க முடியும். அடுத்தவர் உணர்வுகளை மதிப்பதில் கலாமுக்கு நிகர் கலாம்தான். ஒரு சிலிர்ப்பூட்டும் நிகழ்ச்சி. அப்துல் கலாம் அவர்களோடு 70 விஞ்ஞானிகள் பணியாற்றினர். அவர்களுள் ஒரு விஞ்ஞானி ஒருநாள் மாலை சற்றுச் சீக்கிரமாக வீடு திரும்ப அனுமதி பெற்றிருந்தார். ஆனால் இரவு மணி 8.30 வரை ஆய்வு முடியவில்லை. அவர் விடைபெறுமுன் அக்குழுவின் தலைவர் அப்துல் கலாமிடம் சொல்லச் சென்றபோது, கலாம் அறையில் இல்லை. மாலையில் குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போகவிருந்த அவர் குழந்தைகளை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்வோடு வீடு திரும்பிய போது ஓர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. கலாமே மாலை அந்த விஞ்ஞானியின் வீட்டுக்குப் போய் குழந்தைகளைப் பொருட்காட்சிக்கு அழைத்துப் போயிருக்கிற விவரத்தை அறிந்து சிலிர்க்கிறார். தன்னுடைய விஞ்ஞானியின் ஆராய்ச்சிக்கு இடையூறு செய்யாமலும், அவருடைய குழந்தைகளை ஏமாற்றாமலும் நடந்துகொண்டது கலாமின் சிறந்த பண்பாகப் பலரது மனதில் பதிந்தது. செய்தொழில் வேற்றுமைகூட அறியாத சிறந்த மனிதரான அப்துல் கலாம், ஒருமுறை கேரளா ராஜ்பவனில் நடந்த தமக்கான பாராட்டு விழாவுக்கு தன்னுடைய விருந்தினர்களாக சாலையோரத்தில் செருப்பு தைக்கிற ஒரு தொழிலாளியையும், சிறு உணவு விடுதி நடத்தும் ஒருவரையும் அழைக்கக் கூறினார். இருவருமே கலாம் திருவனந்தபுரத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியபோது பழகியவர்கள். எந்த நிலையிலும் யாரையும் நினைவில் வைத்துக் கொள்கிறவர் கலாம்.வாரணாசியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டபோதுகூட அவருக் கென்று போடப்பட்ட சிறப்பு இருக்கையில் துணைவேந்தரை அமரக் கேட்க, அவர் மறுக்க எல்லோருக்கும் ஒரே மாதிரியான இருக்கை போடப்பட்ட பிறகே விழா தொடங்க இசைவு தெரிவித்தார். உயரம் என்பது வாழ்க்கையில் எல்லோர்க்கும் வரும். பெரும் பாலான உயரங்கள் பிற காரணங்களால் அல்லது புறக்காரணங்களால் அமையும். பெரும்பாலான உயரங்கள் பிறரால் எனும்போது விழுவதும் அவர்களாலேயே நிகழும். ஆனால் உயர்வு என்பது நம்மிடமே நிரந்தரமாக இருக்கும். உயர்வு என்பது பண்பு நலன்களால் வருவது. அப்துல் கலாம் அவர்கள் தமது பேராற்றலால் உயரமும் பார்த்தவர், பண்பு நலன்களால் தமக்கு உயர்வும் சேர்த்துக் கொண்டவர். இப்படி ஒருவரிடம் உயரமும், உயர்வும் இருப்பது அபூர்வம்.கலாம் மீளாத் துயிலில் ஆழ்ந்தபோது உலகமே மீளாத் துயரில் ஆழ்ந்தது. யாரும் அழைக்காமலும் அறைகூவல் விடுக்காமலும் தமிழகத்திலிருந்தும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ராமேஸ்வ ரத்தில் மக்கள் வெள்ளம் திரண்டு, கடலையே வியக்க வைத்தது. இந்திய விஞ்ஞானம் ஒரு சிறந்த விஞ்ஞானியை இழந்திருக்கிறது. இந்திய அறிவியல் கல்வி ஒரு நல்ல ஆசிரியரை இழந்திருக்கிறது. இந்திய ஆட்சி ஒரு மேன்மையான ஜனாதிபதியை இழந்திருக்கிறது, நமது மாணவர் சமுதாயம் தமது வழிகாட்டியை இழந்திருக்கிறது. மொத்தத்தில் இந்தியா ஒரு மாமனிதரை இழந்திருக்கிறது. அதிகமாகக் கூட வேண்டாம், இன்னும் நாலைந்து ஆண்டு களேனும் அவர் தன்னுடைய நீண்ட நித்திரையைத் தவிர்த்திருந்தால் இந்தியா 2020ஐயும் பார்த்துப் பூரித்திருப்பார். ஒன்றல்ல பல அப்துல் கலாம்கள் அவர் ஊக்குவித்த உன்னதமா(ன)ணவர்களிலிருந்து உயர்ந்துவர அவரே அதற்குரிய உரத்தையும், திறத்தையும் தெளித்து நல்ல விதைகளாய் நம்பிக்கையைத் துாவியிருக்கிறார். ஒன்றல்ல... பல கலாம்கள் உருவாக வேண்டும். அதுதான் அவருக்கு நாம் செலுத்துகிற சிறந்த அஞ்சலி.
-ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்

9444107879

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
27-ஜூலை-201620:46:01 IST Report Abuse
S Rama(samy)murthy இறைவன் திரு காலம் அவர்களை அழைத்து சென்று நம்மை தனிமை படுத்தி தண்டித்து விட்டார் .சுப ராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
27-ஜூலை-201620:04:16 IST Report Abuse
Amanullah 'கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க அயராது உழைத்திடுங்கள்' என்று சொல்லி ஒற்றை வாக்கியத்தில் 120 கோடி இந்திய மக்களின் உள்ளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாமனிதர். அய்யா உங்களின் சொல்லை சிரமேற்கொண்டு உழைத்து நீங்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்குவோம்.
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
27-ஜூலை-201615:14:50 IST Report Abuse
Tamilnesan கலாமும் தமிழ் நாட்டில் தான் பிறந்தார்.கலாம் என்றால் "கலகம்" என்று சொன்னவரும் தமிழ் நாட்டில் தான் பிறந்தார்.ஒரே மாநிலத்தில் எப்பேற்பட்ட பிறவிகள்.முன்னவர் இந்தியாவே தன் குடும்பம் என்று வாழ்ந்து காட்டியவர்.பின்னவர் தன் குடும்பமே இந்தியா என்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் ...ஹூம்...பெருமூச்சு தான் வருகிறது...
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
27-ஜூலை-201614:46:52 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam ராமாயணத்தில் ரமேஸ்வரத்திலிருந்து ராமனுக்காக இலங்கை சென்ற ராக்கெட் விஞ்ஞானி ஆஞ்சநேயன் வாலில் இராவணன் பற்ற வைத்த நெருப்பு இலங்கையையே பற்றி எரிந்ததாக வரலாறு. அது போல் அதே ரமேஸ்வரத்திலிருந்து வந்த ராக்கெட் விஞ்ஞானி கலாம் இளைங்ஞர்களின் உள்ளத்தில் நீங்க்கள் விட்டுச்சென்ற 2020 தொலைநோக்குப்பார்வை , மேலும் அக்கினிச் சிறகுகள் இன்று சிறகடிக்க ஆரம்பித்ததனால் இந்தியாவின் முன்னேற்றம் கண்ட உலக நாடுகளின் வயிற்றில் பற்றிஎரிகிறது பொறாமை தீ இது நிகழ்கால வரலாறு. இனி இந்தியா வல்லரசாவதை யாராலும் தடுக்க முடியாது என்பதனால் உங்கள் பங்களிப்பு தேவை இல்லை என விண்ணுலகம் சென்றுவிட்டாய் போலும். உங்கள் கனவு நனவாகும் காலம் அருகில் தான் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
27-ஜூலை-201613:39:31 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam நாணயம் + நேர்மை+ தியாகம் = கடவுள் ( மனிதன்) (கட= உடம்பு, வுள் =உள்ளே ) மனிதனால் முடியாததால் தான் இறைவன் கற்பனைக்காக சித்தரிக்கப்பட்டான் , இவை அனைத்து மனிதன் தன்னுள் கொண்டால் அவன் இறைவனாவான் கலாம் ஐயா அவர்கள் நாணயம் மிக்கவர் நாணயத்டுடன் நேர்மை, நாணயத்துடன் நேர்மையான தியாகம் மொத்தத்தில் இவர் தான் இறைவன் இதில் எதையாவது யாராவது மறுக்க முடியுமானால் விளக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
abu lukmaan - trichy,இந்தியா
27-ஜூலை-201610:20:07 IST Report Abuse
abu  lukmaan .சூழ்நிலைக்கு தக்கவாறு ராட்டையும் சாட்டையும் கலந்து வேண்டும் . . ராட்டை மட்டும் வைத்து இருந்தால் நம்மை காலி பண்ணி விடுவார்கள் , சாட்டைமட்டும் வைத்து இருந்தால் அப்போதும் நம்மை காலி பண்ணி விடுவார்கள் . ராட்டையும் ,சாட்டையும் வைத்து இருந்தால் மக்களை ஆளும்,வழி நடத்தும் நல்ல தலைவனாகலாம் .
Rate this:
Share this comment
Cancel
annaidhesam - karur,இந்தியா
27-ஜூலை-201609:34:43 IST Report Abuse
annaidhesam அய்யாவின் நினைவு நாளில் முடிந்தவரை ஒரு மரக்கன்றையாவது ..நடவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Vijayakumar - Singapore,சிங்கப்பூர்
27-ஜூலை-201609:26:06 IST Report Abuse
Vijayakumar Dr.APJ.Abdul Kalam 1931 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாகவும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பாம்பன் தீவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தாலும் இந்தியாவின் சாதனையாளர் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ... இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி தொழில்நுட்ப வல்லுநர் மிகப்பெரிய பொறியியளாலர் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர் இந்திய ஏவுகணை நாயகன் இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை அனைத்து வயது மாணவர்களுக்கும் மிகச்சிறந்த ஆசிரியர் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர் வருங்கால இளைஞர்களின் எழுச்சி நாயகன் எதிர் கால கனவு நாயகன் என்று பல புனைப்பெயர்களுக்கு சொந்தக்காரர் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ... அவரது உழைப்பை பாராட்டி வழங்கப்பட்ட விருதுகள் பல 1981 ம் ஆண்டில் பத்ம பூஷன் 1990 ம் ஆண்டில் பத்ம விபூஷன் 1997 ம் ஆண்டில் பாரத ரத்னா 1997 ம் ஆண்டில் தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது 1998 ம் ஆண்டில் வீர் சவர்கார் விருது 2000 ம் ஆண்டில் ராமானுஜன் விருது 2009 ம் ஆண்டில் சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது 2009 ம் ஆண்டில் ஹூவர் மெடல் 2012 ம் ஆண்டில் சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது என்று பல விருதுகளுக்கு சொந்தக்காரர் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ... அவர் தன் குடும்ப ஏழ்மை நிலையை தாண்டிச்சென்று பல கஷ்டங்களை கடந்து வாங்கிய பட்டங்கள் பல 2007ம் ஆண்டில் அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் 2007 ம் ஆண்டில் கிங் சார்லஸ்-II பட்டம் 2008 ம் ஆண்டில் பொறியியல் டாக்டர் பட்டம் 2010 ம் ஆண்டில் பொறியியல் டாக்டர் பட்டம் 2012 ம் ஆண்டில் சட்டங்களின் டாக்டர் என்று பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ... ஏராளமான விருதுகளும் பல பட்டங்களும் பெற்ற போதும் இந்திய அரசு மாளிகையில் பல ஆண்டு காலம் வாழ்ந்த போதும் தன் ஏழ்மை நிலையில் இருந்து கடைசிவரை வாழ்ந்து காட்டியவர் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ... எழுத்துலகினில் அவரின் படைப்புக்கள் பல அக்னி சிறகுகள் இந்தியா 2020 எழுச்சி தீபங்கள் அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை என்று பல நூல்களை எழுதி அவைகளின் மூலமும் இளைஞர்களின் மனதில் எழுச்சியை தூண்டி விட்டவர் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ... கடைசி வரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து நாட்டின் நன்மைக்காக உழைத்தவர்.. தனக்கென்று ஒரு வீடு கூட அமைத்துக்கொள்ளாதவர்.. யாரிடமும் எந்த பொருளும் பரிசாக பெற்றுக்கொள்ளாதவர்.. எந்த சூழ்நிலையில் எங்கு வாழ்ந்தாலும் தன் குணம் மாறாத உன்னதமான மாமனிதர்.. கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள் என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்யும் படி வாழ்ந்து காட்டியவர்.. எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ... இப்படி உலகிற்க்கு ஒரு தனிமனிதனாக இளைய தலைமுறைக்கு முன் மாதிரியாக வாழ்ந்த எங்கள் அப்துல் கலாம் அய்யா அவர்கள் ஜூலை 27, 2015 ஆம் நாளில் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் மாணவர்கள் மத்தியில் மாணவர்களுக்காக பேசிக்கொண்டிருந்தபோதே அவரை படைத்தவன் அழைத்துக்கொண்டான். மாணவர்களுக்காகவே வாழ்ந்து மாணவர்களுடனே தன் உயிர் பிரிந்தார் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ... சரித்திர நாயகனே,, சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விண்கலம் பூமிக்கு கீழே ஏவப்பட்டது பிறப்பது ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பது ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்... என்கின்ற தன் வரிகளுக்கு உதாரணமாக தன் வாழ்க்கையை வாழ்ந்து தன் மரணத்தை கூட சரித்திரமாக்கியவர் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ... காந்தியடிகள் எங்களுக்கு தாத்தா என்றால் நேஹரு எங்களுக்கு மாமா என்றால் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் எங்களுக்கு தந்தை ... ஐயா, நீங்கள் எங்களை விட்டு சென்று விட்டதாக சொல்கிறார்கள் இல்லை . மண்ணில் மட்டுமே உங்கள் உருவம் மறையும் எங்களுக்குள் உங்கள் கனவை விதையாக விதைக்கப்பட்டுள்ளீர்கள். என் இந்த வரிகள் கலாம் அய்யாவுக்கு சமர்ப்பணம்....
Rate this:
Share this comment
Subash - Thanjai,இந்தியா
27-ஜூலை-201617:28:52 IST Report Abuse
Subashமாமனிதர், மனிதருள் மாணிக்கம் இந்தியத்திருநாடு போற்றும், போற்றிக்கொண்டிருக்கும் ஒரு உன்னதமான, ஒப்புவமையற்ற விஞ்ஞானி, தலைசிறந்த தன்னலமற்ற, தலைவனாக வாழ்ந்து எப்படி வாழ வேண்டுமென்று வாழ்ந்து காட்டிய அந்த அற்புத மனிதரைபற்றி மிகத்தெளிவாக எழுதியுள்ள விஜயகுமார், Singapore அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள்....
Rate this:
Share this comment
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
27-ஜூலை-201606:15:35 IST Report Abuse
Gopalakrishnan Dr APJ போன்ற நல்லவர்கள் மறைந்தும் மக்கள் மனதில் நிலைத்து வாழ்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை