புதுடில்லி: விடுதலை புலிகள் இயக்கத்தின் துணைத்தலைவராக பணியாற்றி வந்த மாத்தையா இந்திய உளவு அமைப்பான ரா உளவாளி என புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ராஜிவ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவரிடம் பேட்டியெடுத்த நீனா கோபால் என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில், கோபால்சுவாமி மகேந்திரராஜா என்ற மத்தையா என்பவர் ரா உளவாளியாக செயல்பட்டு வந்தார். பிரபாகரனுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்த அவரை நன்கு பயிற்றுவித்தது ரா அமைப்பு தான். அவர் விடுதலை புலிகளின் மிகவும் அசைக்க முடியாதவராக மாறி, கலகம் மூலம், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரபாகரன் நீக்கப்பட்டு, அந்த பதவியை ஏற்க மாத்தையாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த விடுதலை புலிகள் அமைப்பு, மாத்தையாவை கொன்று விட்டதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் குழந்தை பருவ நண்பரான கிட்டு பயணித்த கப்பல் விபத்தில் சாக மாத்தையா தான் காரணம் எனவும், அவர் ரா அமைப்புக்கு ரகசிய தகவல் அளித்ததாகவும் அந்த அமைப்பு சந்தேகப்பட்டது.
மேலும் அந்த புத்தகத்தில், ரா உளவாளி என கண்டுபிடிக்கப்பட்ட மாத்தையா தனி சிறையில் அடைக்கப்பட்டு, பல வாரங்கள் சித்ரவதை செய்யப்பட்டு, கடைசியில் 1994ம் வருடம் டிசம்பர் மாதம் கொல்லப்பட்டார். அவரது ஆதரவாளர்களாக இருந்த 257 பேரும் கொல்லப்பட்டு தீயில் போடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ராஜிவை விடுதலை புலிகள் கொன்ற பிறகு, தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ரா அமைப்பு, வி டுதலை புலிகள் அமைப்பின் தலைமையை மாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டது. ஈழப்போரின் கடைசி கட்டத்தில் பிரபாகரன் சரணடைவார் என ரா வட்டாரங்கள் எதிர்பார்த்தன. அப்போது தான் இலங்கை அரசின் விருப்பப்படி இல்லாமல் சர்வதேச அமைப்பிடம் ஒப்படைக்கப்படுவோம் என பிரபாகரன் எதிர்பார்த்தார் என ரா கருதியதாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் இந்திய ராணுவம் செயல்படுவது, விடுதலை புலிகள் ராஜிவுக்கு எதிராக திரும்பும் என்பதை ரா அமைப்பு கணிக்க தவறி விட்டது என கூறியுள்ள நீனா கோபால், இந்த விவகாரத்தில் நம்மீதுதவறு உள்ளது. கணிப்பதில் நாம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம். பிரபாகரனை தவறாக கணித்து விட்டோம்,. நமக்கு எதிராக இவ்வாறு அவர் திரும்புவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. நாம் ராஜிவை பாதுகாக்க தவறிவிட்டோம் என ரா அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.