உலகம் தோன்றிய காலம் தொட்டே மனித உயிரினங்களின் செயல்பாடு அனைத்தையும் ஒன்பது கிரகங்கள் செயல்படுத்தின. பிரபஞ்ச அறிவியல் ஆற்றலை அன்றைய தினம் அறிந்தவர்கள் மிகவும் குறைவே. 18 சித்தர்களும் அவற்றை நன்கு உணர்ந்திருந்தனர்.பதினெட்டு சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பல்வேறு ஜோதிட நுால்களை, மனித இனம் உணர்ந்து செயல்படுத்த வேண்டுமென்று எழுதியிருக்கிறார். இறைவன் படைப்பில் எந்த உயிரினமும் சிரமப்படக்கூடாது, எல்லா உயிரினமும் சந்தோஷத்துடன் வாழ வேண்டுமென்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையிலேயே, நுால் வடிவில் அகத்தியர் எழுதியுள்ளார்.பிரபஞ்ச வெளிப்பாடு, ஒன்பது கோள்கள் எவ்விதமான கதிர்களை ஒளிர்கிறது, இதன் மூலம் மனித உயிர்களின் செயல்பாடு எவ்வாறு அமைகிறது என்பதாகும்.ஜாதகம் என்பதே இந்த ஒன்பது கோள்களின் மின்காந்த அலைகள் எந்த அளவில் வந்து சேர்கிறது, என்கிற ஒரு கணக்கீடாகும். இறைவன் படைப்பில் துரதிருஷ்டம் உடையவர் என்று யாரும் கிடையாது.
மாறுபடும் ஜாதகம் : ஒன்பது கோள்களில் சந்திரன் மிகவும் முக்கியமானது. மனித உயிர் பிறக்கும்போது, சந்திரன் இருக்கும் வீட்டை கொண்டே, கிரகங்களின் தொடர்புக்கான கோச்சாரம் என்கிற பலன் சொல்கின்றனர்.கோச்சாரம் மூலம் 35 சதவீதம் பலனும், பிறப்பின் போதும், தற்போது நடைபெறும் திசாவை கணக்கிட்டு சொல்லும் 65 சதவீதத்தையும் சேர்த்து சொல்கின்ற பலன் தான் 100 சதவீதம் சரியாக இருக்கும். மனித உயிரில் இந்த கிரகங்கள் முதலில் மனதளவில் மாற்ற நிகழ்வை கொடுக்கிறது. இந்த மாற்றத்தின் அளவு ஒவ்வொரு ஜாதகத்திற்கும் மாறுபடுகிறது.கூலி வேலை செய்து கொண்டிருக்கிற ஒருவர் பெரிய முதலாளியாக வந்து விட்டார் என்றால், முதலில் இந்த ஒன்பது கோள்கள் கூலி வேலையாளின் மனதில் மாற்றத்தை கொடுக்கிறது. இதன் மூலம் அவரின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் அவர் பெரிய முதலாளியாக மாறி விடுகிறார். அத்தனை மனித செயல்பாடுகளுக்கும் கிரகங்கள் மனதினை கொண்டே செயல்படுத்துகின்றன.
கட்டுப்படுத்தும் கோள் : உதாரணமாக ஒரு கடைத்தெருவில், மோட்டார் பைக்கை, மனதை கட்டுப்படுத்தி சீராக செலுத்தினால், வண்டி குறிப்பிட்ட இடத்திற்கு, விபத்து இல்லாமல் சரியாகப்போய் சேருகிறது. மனக்கட்டுப்பாடு இன்றி வண்டியை செலுத்தினால் விபத்து ஏற்படுகிறது. நம்முள் ஏற்படும் சந்தோஷம், துக்கம், வெற்றி, தோல்வி அனைத்திற்கும் நம் உள்ளே இருக்கும் ஆழ்மனது காரணம்.அந்த ஆழ்மனதை முறையாக பயிற்சி செய்தால், ஒன்பது கோள்களையும் ஆழ் மனது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக எம்.ஜி.ஆர்., ஒரு சித்தர் என்று சொன்னால் அது மிகையாகாது. 'வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும், அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்' என்று குறிப்பிட்டதில் 'உன்னை' என்று தன்னுடைய ஆழ்மனதை குறிப்பிட்டார்.அவருக்கு எழுதப்படும் பாடல் வரிகள் அவர் வழிகாட்டுதலின் பேரிலேயே எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது கோள்களில் (கிரகங்கள்) சூரியன் தந்தை என்று சொல்லப்படும் உறவையும், அரசாங்கத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.சந்திரன் தாய் என்கின்ற உறவினையும், நீரினையும், மனதினையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.செவ்வாய் சகோதரன் உறவையும், பூமி, வீடு, மண் மற்றும் மனித உடலில் உள்ள ரத்தத்தையும் தன் கட்டுப்பாட்டில் இயக்குகிறது. புதன் மாமன் என்கிற உறவையும், உலகில் உள்ள கணக்கீடு முறைகளையும், கல்வி, இலக்கியம், தகவல் தொடர்பு போன்றவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது.
சுக்கிரன் மனைவி : என்கின்ற உறவையும், பசுக்களையும், பெண்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. குரு பணத்தையும், மங்கள நிகழ்வுகளையும், வாரிசு பெருக்கத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.சனி ஒரு மனிதன் உயிர் வாழக்கூடிய வாழ்நாளையும், மனிதனுக்கு வழங்க கூடிய உழைப்பையும், ஒரு மனிதனின் விதியையும் நிர்ணயிக்கிறது.ராகு உலகின் பெட்ரோலிய பொருட்களுக்கும், கூட்டு மரணங்களுக்கும் தொடர்புடையது. கேது திடீர் உடல் நோய்களையும், திடீர் முடக்கங்களையும், திடீர் தீமைகள் என அனைத்தும் செய்யக்கூடிய செயல்பாட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
அளவிட முடியாத சக்தி : இவ்வளவு ஆற்றல்களை ஒன்பது கிரகங்கள் பெற்றிருந்தாலும், ஆழ்மனதின் ஆற்றலுக்கு குறைவாகத்தான் சொல்ல வேண்டும். அதற்கு உதாரணமாக, அபிராமி பட்டர் பவுர்ணமி என்ற திதியை தவறுதலாக குறிப்பிட்டு, அபிராமியை நோக்கி அபிராமி, அந்தாதியை பாடியவுடன், அன்றைய தினம் பவுர்ணமியாகவே தோன்றியது. அது அவரின் ஆழ்மனதின் அளவிட முடியாத சக்திக்கு உதாரணம். ஒரு சாதாரண ஏழை, நாட்டின் மன்னராக மாறி விடுவதும், உயர்குடியில் பிறந்தவன் வாழ்க்கையின் எல்லாவித துக்கம், கஷ்டம், உணவு கூட கிடைக்காத கீழ் நிலைக்கு தள்ளப்படுவதும் சனி கிரகத்தின் செயல்பாடாகும். ஆக இந்த எல்லாவித கஷ்டங்களிலிருந்தும் மனிதன் வெளியே வரக்கூடிய ஒரே கருவி ஆழ்மனது தான்.
விதியை வெல்லலாம் : ஆழ்மனதை இயக்குபவர் சந்திரன் என்கிற கிரகமாகும். அதனால் தான் நம் முன்னோர்கள் 'விதியை மதியால் வெல்லலாம்' என்று குறிப்பிட்டார்கள். அது எதை குறிப்பிடுகிறது என்றால், விதி என்கிற சனி பகவான், சரியில்லை என்றாலும், மதி என்கிற சந்திரன் தன் கட்டுப்பாட்டில் இயக்குகின்ற ஆழ்மனதினை கொண்டு வாழ்க்கையில் எல்லாவித வெற்றிகளையும் பெறலாம்.18 சித்தர்களுமே ஆழ் மனதினை கட்டுப்படுத்தி ஆழ்மனதின் ஆற்றல் மூலம் எல்லாவித செயல்களையும் நிகழ்த்தினர்.அதனால் தான் சூட்சும பொருள்களாக வாழ்கின்றனர்.இவையெல்லாம் ஆழ்மனதின் மூலமே என்றால் அது மிகையாகாது. வெற்றி பெறுவோம், வெற்றி பெறுவோம் என்று தாரகமாக கொண்டு வாழ்ந்தவர்கள் இந்த உலகில் வெற்றி பெறாமல் இருந்ததில்லை, என்பதை 18 சித்தர்களும் உணர்த்துகின்றனர். சாதாரண மனிதர்களாக பிறந்து ஆழ் மனதின் பயிற்சியின் மூலம் இந்த 18 சித்தர்களும் சித்த நிலையை அடைந்தனர். எனவே உலகில் மனித உயிர்களில் பிரபஞ்ச ரகசியமாக ஆழ்மனது இயங்கி கொண்டிருக்கிறது.
டி.ஐங்கரன், விஞ்ஞான ஜோதிடர், காரைக்குடி
82208 87335