இறைவனுக்கென்ன இதுவா வேலை | Dinamalar

இறைவனுக்கென்ன இதுவா வேலை

Added : செப் 12, 2016 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
இறைவனுக்கென்ன இதுவா வேலை

இப்படி நான் கேட்பதால் அவசரப்பட்டு என்னை நாத்திகன் என்று நீங்கள் கருதிவிடக்கூடாது. நான் ஆத்திகன் என்பதை ஆயிரம் முறை எழுதிக் கையெழுத்திட்டுத் தருவேன். ஏனெனில் 'கடவுள் இருக்கிறார்' என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. ஆனால் எதையும் கேட்பதற்கான இடமாக இறைவனை வைத்துக் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.“இறைவன் நமக்குத் தருகிற பிரசாதம் என்பது மூச்சு மட்டுமே” என்கிறார் கபீர்தாசர். மற்றவையெல்லாம் நல்லதோ, கெட்டதோ நாம்தான் உழைத்தோ ஊரையடித்தோ பெறுகிறோம். எதையும் பெறுவதற்கும் இழப்பதற்கும் நாமே காரணமாக இருக்கிறோமே தவிர, பாராட்டையும் பழியையும் இறைவன் மீது போடமுடியாது. ஏனெனில் தேடிப்பிடித்துக் கொடுப்பதற்கும், தேவையில்லாமல் பறிப்பதற்கும் மனிதர்களுக்குள் அவனுக்கு எந்தத் தேர்வும் இல்லை. பாரபட்சமும் இல்லை.
அழிவதும், ஆளாவதும் : கவியரசர் கண்ணதாசன் ஒரு கவிதையில் நமக்கு எளிதில் புரியும் வண்ணம் இதை இப்படிப் புலப்படுத்துவார்.
'கடல்மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்கனிமீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்'
கடலில் விழுவதும் கனிகளில் சாய்வதும், துரதிர்ஷ்டமோ அதிர்ஷ்டமோ இல்லை. இரண்டிலும் இரண்டும் இருக்கிறது. ஏழையாகப் பிறந்த பலர், ஏகப்பட்ட கோடிகளுக்கு அதிபதியாவதும், செல்வந்தர்கள் வீட்டுப் பிள்ளைகள் சீரழிந்து போவதும் இறையருளாலா நிகழ்கிறது? எனவேதான் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கனியன் பூங்குன்றன் கணித்திருக்கிறான்.காலில் விழுந்து பெறுகிற பதவிகளுக்கும், கொள்ளையடித்துக் குவிக்கிற செல்வத்துக்கும், கடவுளே காரணமென்றுகூற முடியாது. அதுபோல படித்துப் பெறுகிற பட்டத்திற்கும் உழைத்துப் பெறுகிற உயரத்துக்கும் கடவுளை காரணமாகவும் கூற முடியாது. விதியென்று நாம் கருதுகிறவற்றைக்கூட, விடாமுயற்சியால் வென்றுவிட முடியும் என்பது தெய்வ நிந்தனை அல்ல.
'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்'
என்று விளையாட்டுக்குச் சொல்லவில்லை வள்ளுவர்.எதையும் கடவுளே தருகிறான் என்கிற நம்பிக்கையை ஊட்டிவிட்டு உழைக்கத் தேவையில்லை என்று உணர்த்தப்பட்டால், நாமெல்லாம் உலக மகா சோம்பேறிகளாகி விடுவோம். தேர்வு நேரங்களில் தேர்ச்சி பெறுவதற்காக, இங்கே சிறப்பான பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மகிழ்ச்சி. ஆனால் பிரார்த்தனையில் கலந்துகொள்கிற எந்தப் பிள்ளையாவது படிக்காமல் பரீட்சை எழுதப் போகிறதா? இல்லையே.தெய்வத்தை ஒரு நம்பிக்கையாக மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக அதைமட்டுமே நம்பி இருக்கவும் முடியாது. நம்பிக்கையோடு உழைப்பவருக்கே தெய்வம் துணையிருக்கும். வேண்டுவோரிடமும், கொள்ளையடிப்பதில் கொஞ்சம் பங்கு கொடுப்பவரிடமும் இறைவன் இலகுவாக ஏமாந்துவிடமாட்டான். நம்பிக்கை என்பது ஒரு சக்தி. ஏதோ ஒரு சக்தி என்று இறைவனைச் சொல்கிறோமே, அப்படி ஒரு சக்திதான் அது. அந்த சக்தியை நம்பி உழைப்பவர்க்கு எண்ணியவை ஈடேறும்.
ஒரு சிறிய கதை : தொழிலில் பெரிதும் நொடிந்துபோன ஒரு தொழிலதிபர் மன அமைதிக்காக பூங்காவில் தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக ஒரு பெரியவர் வருகிறார். கோட்டும் சூட்டுமாக அவர் ஒரு பெரிய பணக்காரர் போல இருந்தார். அந்த நொடிந்த தொழிலதிபரிடம் தன்னை ராக்பெல்லர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?” என்று கேட்கிறார் அவர். நலிந்த தொழிலதிபர் தன் நிலைமையை விவரிக்கிறார். “கவலைப்படாதீர்கள்… நான் உங்களுக்கு 5 லட்சம் டாலருக்கு செக் தருகிறேன். வட்டி எதுவும் வேண்டாம். நஷ்டத்திலிருந்து மீண்டபிறகு எப்போது முடியுமோ அப்போது திருப்பித் தந்தால்போதும்” என்று 5 லட்சம் டாலருக்கு ஒரு பெயரிடாத காசோலையைக் கொடுக்கிறார்.முன்பின் ராக்பெல்லரைப் பார்க்காவிட்டாலும், கேள்விப்பட்டிருந்த நமது நலிந்த தொழிலதிபர், அந்தக் காசோலையை பத்திரமாக இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு, தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டார். உற்சாகமாக மூலப் பொருட்களைக் கடன் வாங்குவதும், புதிய ஊழியர்களை நியமிப்பதும், புதுமையான விளம்பர யுத்திகளை அறிமுகம் செய்வதுமாக இரண்டொரு ஆண்டுகளில் வங்கிக் கடன்களை அடைத்தது மட்டுமில்லாமல் கோடிகள் குவிக்கத் தொடங்கி விட்டார். இத்தனைக்கும் அவருக்கிருந்த ஒரே நம்பிக்கை எந்த நேரத்தில் பணமுடை ஏற்பட்டாலும், இரும்புப் பெட்டியில் 5 லட்சம் டாலருக்கான காசோலை இருக்கிறது, எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான். ஆனால் அதற்கு அவசியமில்லாமலேயே எல்லாமும் நல்லபடியாக நடந்து விடுகிறது. ராக்பெல்லருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அந்தக் காலோலையைத் திருப்பித் தர நமது ஆள் பூங்காவுக்குச் சென்றபோது, அங்கே ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு வயதான பெண்மணியின் அருகில் அந்த ராக்பெல்லர் அமைதியாக அமர்ந்திருந்தார்.அவரிடம் சென்று பேச்சு கொடுத்தபோது “சாரிசார்… உங்க கிட்டேயும் இவர் தன்னை ராக்பெல்லர்ன்னு சொன்னாரா? செக் கொடுத்தாரா? பணம் இல்லேன்னு பாங்கிலேர்ந்து திரும்பிவந்ததா? எங்களை மன்னிச்சிடுங்க… இவர் என் கணவர். கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர். தினமும் சாயங்காலம் இங்கே வந்து இப்படித்தான் எல்லாருக்கும் செக் கொடுத்திட்டு இருக்கார். பாவம் நீங்களும் ஏமாந்திட்டீங்க போல இருக்கு” என்கிறார் அந்த பெண்மணி.
நம்பிக்கையே வெற்றி : போலியான காசோலை, வங்கியில் இருப்பில்லை, இருந்தாலும் அதை நம்பி எத்தனை முயற்சிகள், வெற்றிகள் என்று பெருமூச்செறிந்த அவர் நம்பிக்கைதான் வெற்றி என்று உணர்கிறார். ஏதோ ஒரு நம்பிக்கை… அது உழைப்பதற்கான உயர்வதற்கான உற்சாகத்தைத் தந்திருக்கிறதே என்று வியக்கிறார். நாம் நம்புகிற அந்த சக்திதான் கடவுள். அது உதவுகிறது என்றாலும் அது மட்டுமே உதவுவதில்லை. கடவுளுக்கு ஒவ்வொரு மனிதனுடைய தேவைகளையும் தெரிந்து வைத்திருக்க முடியாது. சக மனிதர்களாக இறைவன் நம்மோடு இருக்கிறான். ஒருவேளை அவர்களுக்கு நம் தேவைகள் தெரியலாம். நம்மிடமிருக்கிற அன்பு என்கிற இறைமையை வெளிப்படுத்துகிறபோது, மற்றவர்களிடத்திலிருக்கிற இறைமை (அன்பு) நமக்குத் தெரிகிறது. அது துன்பம் வரும்போது துணை வரும். தூக்க முடியாத தோள்களுக்கு பலம் தரும். ஆள் பலத்தைப் போலச் சிறந்த பலம் இல்லை. நம்மைச் சுற்றியுள்ள ஆள்களை நம்புவதும் அவர்களிடம் நேசம் வைப்பதுவும்தான் 'நானிருக்கிறேன் என்று அவர்களைச் சொல்ல வைக்கிறது'. நமக்கு அசுரபலம் வந்துவிடுகிறது ஆறுதல் கலந்த நம்பிக்கையாக.
நமக்குள்ளே நம்பிக்கை : சில நேரங்களில் மருத்துவர் சொல்வார் “நானிருக்கிறேன்” என்று. “அவர் இருப்பார் நாமிருக்க வேண்டுமே” என்று நாம் நினைக்கக்கூடாது. நல்ல மருத்துவர் கை ராசிக்காரர் குணமாக்கிவிடுவார் என்கிற நம்பிக்கை இருந்தால் மருத்துவமனையிலிருந்து நலமாக வெளியே வருவோம். இந்த நம்பிக்கைதான் நாம் வணங்குகிற கடவுள். இந்தக் கடவுள் வேறு யாரோ, வெளியே எங்கேயோ இருந்துகொண்டு பார்த்துக் கொண்டிருப்பவன் அல்ல. நமக்குள்ளேயே இருக்கிற நம்பிக்கை எனும் இறைவன்.யாரிடமும் சொல்லியழ முடியாத துயரங்களை, யாரிடமாவது சொல்ல எண்ணுகிறபோது, இறைவனே நம்முன்னே தோன்றிச் செவிமடுப்பதாக ஓர் உணர்வு. எந்த மதத்தவராயினும் அவர்கள் வணங்கும் தெய்வத்திடம் முறையிடுகிற போது மனத்திலிருந்து கொஞ்சம் பாரம் இறங்கிவிட்ட ஆறுதல் கிடைக்கிறது. நாம் பெறுகிற எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பு. உங்கள் செயல்களுக்கான பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும். தனித்தனியே உங்களுடன் செலவழிக்க அவனுக்கு நேரமில்லை. நீங்கள் கேட்டதைக் கொடுப்பதற்கும், நினைத்தவாறு நடப்பதற்கும் இறைவனை எதிர்பார்க்காதீர்கள். யார் யாருக்கு என்னென்ன தேவை என்று கேட்கவும் கொடுக்கவும், இறைவனுக்கென்ன இதுவா வேலை?
- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்எழுத்தாளர், சென்னை

94441 07879

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyamurthy - Chennai,இந்தியா
20-செப்-201621:47:07 IST Report Abuse
Sathyamurthy "இறைவன் நமக்குத் தருகிற பிரசாதம் என்பது மூச்சு மட்டுமே” என்கிறார் கபீர்தாசர" என்பது நிதர்சனமான உண்மை..மெய் ,வாய்,கண்,மூக்கு ,செவி என்ற ஐம்புலன்களில் மூச்சு தான் பிரதானமானது..மூச்சு நின்றால் உயிர் பிரிந்து இறப்பு ,மரணம் சம்பவிக்கிறது.கிடைத்தற்கரியது மானிடபிறவி..மரணம் நிச்சயம்.. மூச்சு நமது உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து இயங்குவதால் தான் உயிர் உடலில் இயங்குகிறது. மரணத்தை வெல்ல,தள்ளி போடா ஒரே வழி மூச்சினை தொடர்ந்து இயங்கச்செய்வது மட்டுமே.இன்றய சூழ்நிலையில் காற்று மாசுபாட்டால் சுவாச உறுப்புகள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது..நமதுமுன்னோர்கள் யோகம் செய்வதன் மூலம் மூச்சினை உள் இழுத்து நிறுத்தி மெதுவாக வெளியேற்றுவதை கடைபிடித்து வந்தனர்.... இன்று யோகா என்ற பெயரில் ஆசனமும் ,ப்ரணயமாவும் பிரபலமடைந்து உலக அளவில் பரவியிருந்தபோதிலும் இதன் பலன் வெகு குறைவே..காரணம், நுரையீரலில் படித்துள்ள மாசுகளை வெளியேற்றவோ அல்லது காற்றினை இழுத்து அடக்கி விடும் பயிற்சி போதுமானதாக இல்லை.. திருமூலர் அருளிய திருமந்திரத்தில் மூச்சினை 16 நொடி இழுத்து,64 நொடி நிறுத்தி ,32 நொடி மெதுவாக விடவேண்டும் என்பதே பிராணாயாமம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே நீண்ட மூச்சு நீண்ட ஆயுள் என்பது உணரப்படவேண்டியதாகும். வாழ்வது ஒருமுறைதான்..பிரபஞ்சத்தையும் அதில் எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்க கொடுத்துவைத்த மனிதக்குலத்தில் யாருமே ஆதி பகவானை மட்டும் கும்பிடவோ கோயில் கட்டவோ இல்லையே உலகில்.ஆயிரம் கோடிகளுக்கு மேல் மக்கள் இருந்தும்? "ஒன்றே குளம், ஒருவனே தேவன் "என்பது உணரப்பட்டால் மட்டுமே உலகம் உய்ய நிரந்தர வழி.
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
17-செப்-201608:11:58 IST Report Abuse
venkat Iyer நான் திருக்கடையூர் கோயிலுக்கு சென்ற போது ,அங்கு உள்ள அபிராமி அம்மனை வணங்கி செல்ல நேர்ந்த போது ,கூட்டத்தில் சத்தத்தில் பிரார்த்தனை செய்ய முடியவில்லை என்று ஒரு பெரியவரிடம் சொன்னேன்.அதற்கு,அந்த பெரியவர் வியக்கும்படியாக சொன்னதுதான் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது. பிரார்த்தனை என்பது,ஆன் முகத்தில் உள்ள பக்தி என்ற பயத்தினை பயன்படுத்தி மனதை ஒரு நிலை படுத்துவதாகும்.அந்த சமயம் பக்கத்தில் உள்ளவர்களின் சத்தம் உனது காதுக்கு எட்டாமல் கொண்டு செல்வதுதான் நிலையான பிரார்த்தனை. அது உனக்கு கிடைக்கும் வகையில் மனதை ஒரு நிலை படுத்தி கொண்டு செல்ல வேண்டும்.நீங்கள் நல்ல பயிற்சி எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினார்.நாம் இங்கு வருவதே பெரும்பான்மை கொண்ட மக்கள் நல்ல எண்ணத்துடன் வரும் போது அந்த அதிர்வு அலைகள் ,நம்மை மாற்றும் சக்தி படைத்தது என்றும் கூறினார்.அமைதியாக கோயிலுக்கு வருவது நம் சக்தியை உயர்வு அடைய செய்யும்.
Rate this:
Share this comment
Cancel
razik - bangkok,தாய்லாந்து
14-செப்-201611:26:45 IST Report Abuse
razik கட்டுரையாளர் உள்ள உறுதியையும் உழைப்பையும் உண்மையாக நம்பும் அதே வேளையில் கடவுளின் அபரிமிதமான ஆற்றலை பலஹீனப்படுத்துகிறார். கடவுள் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் வங்கியில் பணமில்லாத அந்த காசோலைபோல் கடவுள் வெறும் நம்பிக்கையாக மட்டும் உள்ளார் என்பது கடவுள் இல்லையென்பதை விட படுபயங்கரமான கடவுள் மறுப்பாகும். 'கடவுளுக்கு ஒவ்வொரு மனிதனுடைய தேவைகளையும் தெரிந்து வைத்திருக்க முடியாது. சக மனிதர்களாக இறைவன் நம்மோடு இருக்கிறான்' என்று சொல்வது கடவுளை கையாலாகாதவனாக காட்டி, சக மனிதன்தான் கடவுள், நம் மனம்தான் கடவுளென்று வாதிடுவது , கடவுளென்று தனியான சக்தியாகவோ அல்லது பிரமாண்டமான படைப்பாளியாகவோ,அனுதினமும் கணப்பொழுதும் நம்மை கண்காணிப்பவனாகவோ காப்பவனாகவோ இருக்கின்ற கடவுளின் அத்துணை பண்புகளையும் மறுப்பதாகும் . உலகம் என்பது ஓர் சோதனை களம். அதில் மனிதனுக்கு கடவுள் கொடுக்கும் இன்பம் அல்லது துன்பம் இரண்டுமே சோதனைகள். இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை கடவுள் தீர்மானிப்பார் அதட்கான பரிசோ தண்டனையோ வழங்குவார். இந்த சோதனையில் வெற்றிபெற கடவுளை நம்பி அவர் இட்ட கட்டளைகளை ஆதாரப்பூர்வமான அடிப்படைகளிலிருந்து தெரிந்து உள்ள உறுதியோடு செயலாற்ற வேண்டும் . இந்த இறைவழி வெற்றியை பெற கடுமையாக கட்டுப்பாட்டுடன் உழைதே ஆகா வேண்டும் .இந்த அடிப்படைகளை உணர்ந்தாள் கடவுள் மறுப்பும் இல்லை ,கடவுளை பலகினப்படுத்தவுமில்லை, மூடநம்பிக்கைகளை செயல்படுத்தவுமில்லை ,சோம்பேறித்தனமுமில்லை
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
14-செப்-201601:20:01 IST Report Abuse
Manian கடவுள் மனிதனுக்கு முழு சுதந்திரம் தந்திருக்கிறார். நம்முள்ளே இருந்து (கட உள்) அதை நம்முள்ளேயே நாம் நம்ப வேண்டும். உனது கடமையை செய்ய மட்டுமே உனக்கு உரிமை உள்ளது, பலனில் உன் உரிமை இல்லை என்று கீதையில் கூறுகிறார் கண்ணன். ஏன் என்றால் பலன் கிடைக்க எல்லா வகையிலும் எல்லாம் சரியாக இருக்க வேண்டும். தினம் ஒரு கடையில் பழம் வாங்க செல்கிறோம். ஆனால் ஒரு நாள் பழம் கிடைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வழக்கம் போல் கிராமத்திலிருந்து பழம் வந்து சேரவில்லை, வண்டி பழுது, பாதையில் வெள்ளம், வண்டிக்காரனுக்கு உடல் நிலை சரி இல்லை, வண்டி கவிழ்ந்து விட்டது.. இது போன்ற பல காரணங்களால் பழம் கிடைக்கவில்லை. இதுபோலவே நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் நமக்கு தெரியாத , புரிந்து கொள்ள முடியாத நிகழிச்சிகளின் தாக்கம் இருக்கும். ஆகவே 50% பலனையே எதிர் பார்க்க முடியும். இதை ஆண்டவன் செய்வதில்லை . நம் சூழ்நிலைகளே காரணம். நம் கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்போது, நம்மை அறியாமலேயே வேண்டுதலுக்கு காரணமா நிகழ்ச்சியை நோக்கி முன்னேறுகிறோம். உள் இருக்கும் கடவுள் இந்த நம்பிக்கையை தருகிறார். ஆனால் முன் வினைப் பயனை தடுக்க முடியாது. நல்ல எண்ணம் தரும் கட்டுரை. கல்லில் காசு வாங்காத மனோ தத்துவ நிபுணராக இருந்து நமது துக்கத்தை சிந்திக்க வைக்கிறார். ஆணா, பெண்ணா, இரண்டும் இணைத்த ஒன்றா என்பது தேவை இல்லை. இருப்பதும் , இல்லாதகித்துவும் அதுவே. ஒரு நாணயத்தின் இருபுறமே கடவுள். நாத்திகத்தை இந்து மதம் ஏற்க்கிறது. எல்லா குணங்களும் இல்லாதது (நிகுணம்), எல்லா குணங்களும் உள்ளது (சற்குணம்) . நமது மனித நிந்தனை அல்லது சிந்தை அந்த பரம் பொருளை பாதிப்பதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Bala - Chennai,இந்தியா
13-செப்-201620:18:59 IST Report Abuse
Bala ஒரு உன்னத இடத்திற்கு/பதவிக்கு 10 சம தகுதியுடையவர்கள் போட்டியிட்டாலும் ஒருவருக்கு தான் அது கிட்டும். அந்த தருணத்தில் தான் நீங்கள் கேட்ட இறைவனின் வேலையை உணர முடியும். ஆனால் அந்த 10 பேரும் அந்த தகுதியை அடைய அவர்களின் கர்ம வினைகள், செயல்பாடுகள், நற்பண்புகள், நீங்கள் கூறிய தன்நம்பிக்கை (ஆனால் அந்த நம்பிக்கை மட்டும் அல்ல), தீவினைகள், குண நலன்கள் அனைத்துமே காரணம். ஒவ்வொரு மனிதனுடைய தேவைகள் இறைவனுக்கு தெரியும். கௌரவர்களின் தேவை பாண்டவர்களின் தேவை அனைத்துமே இறைவனுக்கு தெரியும். ஆனால் அங்கு இறைவன் செய்த வேலை பாண்டவர்களை ஜெயிக்கவைத்தது. பலம் மற்றும் தன்னம்பிக்கை இருவருக்குமே இருந்தது. சொல்ல போனால் கௌரவர்களுக்கு கூடுதல் பலமே இருந்ததது. ஆனால் ஏன் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இப்போதாவது புரிந்ததா உங்களுக்கு கடவுளின் வேலை ?
Rate this:
Share this comment
Cancel
Shekar Raghavan - muscat,ஓமன்
13-செப்-201618:51:24 IST Report Abuse
Shekar Raghavan வாவ் இது நான் எழுதியது போல உள்ளது, அருமை அருமை
Rate this:
Share this comment
Cancel
kandhan. - chennai,இந்தியா
13-செப்-201618:48:50 IST Report Abuse
kandhan. நன்றி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களே , இதை வெளியிட்ட தினமலருக்கு நன்றி என்றாலும் நம் மக்கள் மூளையில் மூடநம்பிக்கை என்ற விலங்கை உடைத்தால் தான் இது சாத்தியம் ஆகும் அதை உடைக்க மனிதனுக்கு பகுத்தறிவு தேவை அதை பற்றி சிந்திக்கும் மனிதன்தான் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும் வெறும் கோவில் கடவுளால் இது சாத்தியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் அதை ஒப்புக்கொள்ள நம் மக்களும் பார்ப்பனர்களும் தயாரா ??? சொல்லுங்கள் மக்களே சிந்தியுங்கள் உண்மை புரியும் அதுதான் சிந்திக்கும் பகுத்தறிவு ... கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Bala - Chennai,இந்தியா
13-செப்-201619:51:01 IST Report Abuse
Balaபார்ப்பனர்களும் நம் மக்கள் தான், இப்படி பிரித்து பார்ப்பதை நிறுத்த நீங்கள் தயாரா முதலில்? இப்படி செய்து செய்து தான் நாடே கெட்டுக்கிடக்கிறது....
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
18-செப்-201602:49:49 IST Report Abuse
கதிரழகன், SSLC@kandhan. - chennai,இந்தியா " அதை ஒப்புக்கொள்ள நம் மக்களும் பார்ப்பனர்களும் தயாரா ".................. பார்ப்பனர்கள் ஒத்துக்கிட்டா என்ன இல்லாட்டி என்ன? ஒங்க பேச்சுல தெரியுது நீங்க அய்யிருங்கள ஒசத்தியா நெனக்கலைன்னு. அப்பால அவிங்க ஒத்துக்கணுமின்னு ஏன் கவலை படுரீக? நீங்க பகுத்தறிவை நம்புங்க. பக்தியை நம்புங்க. நம்பாதீக. அய்யிரே கூப்பிட்டு பூசை செய்யுங்க. கூப்பிடாத பூசை செய்யுங்க. பூசையே செய்யாத போங்க. யாருக்கு என்ன கவலை? அய்யிரு சாமி பேர சொல்லி ஊர ஏமாத்தினா, அந்த பாவம் அவருக்கு. அத தெய்வம் தண்டிக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
13-செப்-201617:08:38 IST Report Abuse
Ramamoorthy P யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும். எதை பிடுங்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும். கொடுப்பதும் அவனே எடுப்பதும் அவனே, நம் உயிரையும் சேர்த்து. நல்லது நினை. நல்லது பேசு. நல்லது செய். நல்லதே நடக்கும். முதலில் நம்ப வேண்டியது நர நாராயணனாக உங்களை மட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
D.k.tharan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-201614:50:03 IST Report Abuse
D.k.tharan excellent சூப்பர் sir
Rate this:
Share this comment
Cancel
Vijayabaskar Ramacha - Hong Kong ,சீனா
13-செப்-201614:24:31 IST Report Abuse
Vijayabaskar Ramacha மிக நன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை