கபாலி நாயகியுடன் நடிக்க ஆசை - சொல்கிறார் நடிகர் லட்சுமன் நாராயன்| Dinamalar

கபாலி நாயகியுடன் நடிக்க ஆசை - சொல்கிறார் நடிகர் லட்சுமன் நாராயன்

Added : செப் 18, 2016
Advertisement
கபாலி  நாயகியுடன் நடிக்க ஆசை - சொல்கிறார் நடிகர் லட்சுமன் நாராயன்

கிரிக்கெட் பேட், பந்தும் கையுமாக விளையாடி திரிந்த தேனி லட்சுமன் நாராயன், சினிமா கதாநாயகன் வாய்ப்பு கிடைத்ததை பயன்படுத்தி இரு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தேனி தொழிலதிபர்-- -- டாக்டர் தம்பதியினரின் ஒரே மகன். இவர் பிறந்தது சென்னை. லயோலாவில் பட்டப் படிப்பு, எம்.பி.ஏ., முடித்துள்ளார். கிரிக்கெட்டில் இந்தியா சிமென்ட்ஸ் அணிக்காக விளையாடினார்.எத்தனையோ பேர் சினிமா வாய்ப்பு கிடைக்காதோ என ஏக்கத்தோடு காத்திருப்பர். ஆனால் லட்சுமன் நாராயனுக்கு கதாநாயகன் வாய்ப்பு வீடுதேடி வந்தது. அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடிகை கார்த்திகாவுடன் கதாநாயகனாக நடித்தார். இயக்குனர் சுசீந்திரனின் ஜீவா படத்தில் இரண்டாவது ஹீரோ.நடிப்பின் ஆர்வம் குறையாமல் அதே நேரத்தில் தேனியில் சொந்த தொழிலை நிர்வகிக்கும் 'பிசி'யில் இருந்த அவர் 'தினமலர் சண்டே ஸ்பெஷல்' க்காக மனம் திறந்தார்.* முதல்பட வாய்ப்பு எப்படி...இயக்குனர் பாரதிராஜா 2012ல் எங்கள் வீட்டிற்கு வந்தபோது என் போட்டோவை பார்த்து சினிமாவில் நடிக்கிறாயா என கேட்டார். எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியும், நடிக்க தெரியாது என்றேன். 'அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உன் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது,' எனக் கூறி, யோசிக்க கூட அவகாசம் தராமல் சினிமாவில் நடிக்க வைத்தார். முதல்படமான அன்னக்கொடியில் கேமரா பயம் தெரியவில்லை.* முதல்பட தோல்வியை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்...முதல்படம் சரியாக ஓடவில்லையே என்ற மன வருத்தம் இருந்தது. அதில் இருந்து மீள்வதற்குள் இரண்டாவது படம் நடித்தேன். அதில் நல்ல பலன் கிடைத்தது. ஜீவா படத்தில் நடிப்பதற்கு முன், முதல்வன் படத்தில் கதாநாயகன் அர்ஜூனுக்கு அம்மாவாக நடித்த கலைராணியிடம் சில மாதங்கள் பயிற்சி பெற்றேன். இரண்டாவது ஹீரோவாக இருந்தாலும் ஜீவாவில் ரசிகர்களின் மனதில் இடம் பெறும் வகையில் நடித்த திருப்தி ஏற்பட்டது. * கார்த்திகாவுடன் நடிக்கும் போது உங்கள் மனநிலை...அவர் நல்ல நண்பராக நடித்தார். இன்றும் எங்கள் நட்பு தொடர்கிறது.* அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகிறதா ...இரண்டு பெரிய படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளனர். நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. ஆனால் சிறந்த கதை அம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். அடுத்து நல்ல படத்திற்காக காத்திருக்கிறேன்.* சினிமாவிற்கு வராவிட்டால் என்ன செய்திருப்பீர்கள்...கிரிக்கெட் ரஞ்சி கோப்பையில் விளையாடியிருப்பேன். தற்போது மில் நிர்வாகத்தையும் கவனிக்கிறேன். அதில் உற்பத்தி, மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்துகிறேன்.* உங்களைக் கவர்ந்த நடிகை யார்...கபாலியில் ரஜினிக்கு கதாநாயகியாக நடித்த ராதிகாஆப்தே தான் என்னைக் கவர்ந்தவர். அவர் பெங்காலியில் நிறைய குறும்படங்கள் நடித்துள்ளார். சம்பந்தப்பட்ட கதாபாத்திரமாகவே மாறி நடிப்பார். அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன்.* திருமணம் எப்போது....அதை பெற்றோர் பார்த்து முடிவு செய்வர். திருமணத்திற்குள் நடிப்பு மற்றும் தொழிலில் சாதிக்க வேண்டும் என்பது ஆசை.தொடர்புக்கு: lakshmannarayan@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X