பெண்களே... உள்ளாட்சியில் உங்களாட்சி!| Dinamalar

பெண்களே... உள்ளாட்சியில் உங்களாட்சி!

Added : செப் 28, 2016 | கருத்துகள் (7)
Advertisement
பெண்களே... உள்ளாட்சியில் உங்களாட்சி!

“மனிதன் தனக்குத் தானே உருவாக்கிக்கொண்ட அனைத்துத் தீவினைகளிலும் கொடுமையானது எது என்று பார்த்தால் தனக்கு இணையாகவுள்ள பெண் இனத்தைத் தவறாக நடத்துவதேயாகும். என்னைப் பொறுத்தவரையில் பெண்பாலினம் வலிமையற்ற பாலினம் அல்ல. ஒரு பெண் ஆணைப் போன்றே தனது சொந்த எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை படைத்தவள்" என்று "யங் இந்தியா"வில் 1921- ல் காந்திஜி எழுதினார்.“பெண்கள் உரிமை விஷயத்தில் நான் எந்த சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை. மகள்களையும், மகன்களையும் நான் ஒரே இடத்தில் வைத்து மிகச்சமமாகவே நடத்துவேன்.” என்ற காந்திஜியின் எண்ணங்களும் கோட்பாடுகளும் கிராமப் பகுதியோடு நகர்புறப் பெண்களையும் ஈர்த்தது. சரோஜினி நாயுடு, லக்ஷ்மி மேனன், சுசீலா நய்யார், ராஜ்குமாரி அம்ரித் கவுர் என பலர் அவரது விசுவாசிகள் ஆனார்கள். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள காந்திஜி விடுத்த அழைப்பு பெண்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போராட்டத்தில் முழு வீச்சில் கலந்து கொண்டனர்.ஆனால் சுதந்திர இந்தியாவில் பெண்களின் அரசியல் பங்களிப்புக் குறித்து யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. 2001-ம் ஆண்டை 'பெண்களுக்கு அதிகாரமளித்தல்' ஆண்டாக ஐ.நா. கொண்டாடியது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூகம், பொருளாதாரம், அரசியல் என்ற மூன்று நிலைகளிலும் வேண்டும். "பெண்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பெரும்பாலும் சமூக, பொருளாதார விடுதலை அடிப்படையாக இருந்தாலும், பெண்களை அதிகாரப்படுத்துவதற்கான உயர் படிநிலை என்பது அரசியல் விடுதலை" என்று சமூக நோக்கர்கள் வலியுறுத்தினார்கள்.பெண்களுக்கு ஒதுக்கீடு பல்வந்த் ராய் மேத்தா குழு (1957), அசோக் மேத்தா குழு (1978), ஜி.வி.கே. ராவ் குழு (1985) மற்றும் எல்.எம். சிங்வி குழு (1986) உள்ளிட்ட பல குழுக்கள் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் விஷயத்தை ஆய்வு செய்தன. பின்னர் 73 மற்றும் 74-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள், ஜனநாயக அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தின. அதுவும் உள்ளாட்சிகளில் மட்டுமே அது சாத்தியப்பட்டது. அதிலும் ஒதுக்கீடு 33 விழுக்காடு மட்டும்தான். ஆனால் சில மாநிலங்கள் "மக்கள் தொகையில் 50 விழுக்காடு உள்ள பெண்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு" என அறிவித்து நடைமுறைப்படுத்தத் துவங்கின. தற்போது அந்தப் பட்டியலில் தமிழகமும் சேர்ந்திருக்கிறது. 55 சதவிகித ஒதுக்கீட்டை பெண்களுக்கு உத்தரகண்ட் மாநிலம் அளித்துள்ளது.தமிழகமும் வாக்குரிமையும் இங்கிலாந்து நாட்டில் எம்மெலைன் பன்கர்ஸ்ட் தலைமையில், 1903 துவங்கி நடைபெற்ற பெண்கள் ஓட்டுரிமை இயக்கத்தின் காரணமாக, அங்கு 1928-ல் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் "பெண்களும் ஓட்டளிக்கலாம்" என்று சட்டம் 1921ல் நாட்டிலேயே முதன்முதலாக, நம் மதராஸ் மாகாணத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால், சொத்து வைத்துள்ள பெண்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்புக் கிட்டியது. ஜனநாயக நாடுகள் சில நமக்குப் பின்புதான் பெண்களுக்கு ஓட்டுரிமை தந்தன.அதுமட்டுமல்லாமல், தமிழக பெண்கள் அரசியலில் ஈடுபடுவதும் புதிதொன்றுமில்லை. தென் ஆப்ரிக்காவில் காந்திஜியோடு சிறைவாசம் ஏற்று, சிறைக்குள்ளேயே இறந்த தில்லையாடி வள்ளியம்மை தமிழகத்தைச் சேர்ந்தவர். மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்ணான, புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துலெட்சுமி ரெட்டி 1927 ல், சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்தியாவிலேயே சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட முதலாவது பெண் மற்றும், உலகச் சட்டமன்றங்களின் வரலாற்றிலேயே துணைத்தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட முதலாவது பெண் ஆகிய பெருமைகளும் அவருக்கு உண்டு. பெண்களும் போராட்டமும் "தமிழகத்தில் கள்ளுக்கடை மறியலை நிறுத்துகின்ற முடிவு என் கையில் இல்லை; ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்கள் கையில் இருக்கின்றது' என்றார் மகாத்மாகாந்தி. அதில் ஒருவர், ஈ.வே.ரா பெரியாரின் மனைவி நாகம்மையார். மற்றொருவர் தங்கை கண்ணம்மையார். 1923 ல் காங்கிரசில் சேர்ந்தார் சென்னை ருக்மணி. 1930-ல் உப்புக் காய்ச்சும் போராட்டத்தில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார். அந்த அறப்போரில் கைது செய்யப்பட்ட முதலாவது பெண் இவர். 1934 ல் சென்னை மாகாணச் சட்டமேலவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். 1946--47 ல், பிரகாசம் அமைச்சரவையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். சென்னை மாகாண அரசில் அமைச்சரான முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.சுதந்திர இந்தியாவின் தமிழக அமைச்சரவைகளில் கணிசமான பெண்கள் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். சாதித்திருக்கிறார்கள். சில நாட்கள் முதல்வராக இருந்த ஜானகி ராமச்சந்திரன், ஆறாவது முறையாக அரியணையேறியிருக்கும் ஜெயலலிதா என தமிழக பெண் முதல்வர்களின் பதிவுகளும் நமக்குண்டு. பெண்களுக்கே உரிமை தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 2.88 கோடி ஆண் வாக்காளர்கள், 2.92 கோடி பெண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 584 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 5.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.இதில் ஊரக பகுதிகளில் 1.59 கோடி ஆண் வாக்காளர்கள், 1.60 கோடி பெண் வாக்காளர்கள், 1,629 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 3.19 கோடி வாக்காளர்களும், நகர்ப்புறங்களில் 1.29 கோடி ஆண் வாக்காளர்கள், 1.32 கோடி பெண் வாக்காளர்கள், 2 ஆயிரத்து 955 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 2.61 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆக, மொத்த வாக்காளர்களிலும் சரி, நகர்புறங்களிலும் சரி, கிராமப்புறத்திலும் சரி, பெண்களே அதிகம். அப்படியிருக்கையில் பெண்களுக்கு 50 சதவிகிதத்துக்கும் அதிகமான ஒதுக்கீடு அல்லவா வழங்கியிருக்க வேண்டும்? உள்ளாட்சி தேர்தல் மூலம், 1 லட்சத்து 18 ஆயிரத்து 974 ஊரக உள்ளாட்சி பதவிகளும், 12 ஆயிரத்து 820 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளும் என மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 794 பதவி இடங்கள் நேர்முக தேர்தல் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் சுமார் 65 ஆயிரம் பதவிகளுக்கு அதிகமாக பெண்களுக்குக் காத்திருக்கின்றன. ஆண்களுக்கு ஒதுக்கீடு ஏதுமில்லை. ஆனால், பெண்கள் நுாறு சதவிகித பதவிக்கும் போட்டியிடமுடியும். எனவே உள்ளாட்சியில் பெண்களாட்சி என்பது தான் நிஜம்.பெண்களின் ஈடுபாடு நாட்டை தலைமையேற்று நடத்தும் திறன் பெண்களுக்கு உண்டு என்பதை "பெண்களின் நிலை முன்னேறாமல் உலகம் நலமுடன் வாழ்வதற்கு வாய்ப்பில்லை. ஒரு பறவை தன் ஒரு இறகை மட்டும் வீசிக்கொண்டு பறக்கமுடியாது" என்பார் சுவாமி விவேகானந்தர்.நார்வே, நிறுவனங்கள் சட்டத்தைத் திருத்தி, அனைத்துப் பொது வரையறை செய்யப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களிலும், பெண்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில், 2020க்குள் பெண்கள் 40 சதவிகிதம் இருக்கவேண்டுமென கட்டளையிட்டிருக்கிறது. நம்நாட்டிலும் இந்த நிலை வரலாம். இதற்கு உள்ளாட்சி நிர்வாகத்தை, பெண்கள் அடித்தளமாகக் கருதலாம். அனுபவப் பாடமாகப் பார்க்கலாம்.உள்ளாட்சி அமைப்பில் பெண்கள் பொறுப்புக்கு வருவதன் மூலம் கிராமத்தின் கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்றவற்றை கண்காணித்து சரி செய்வதில் அதிக ஈடுபாடு கொள்வார்கள். "ஒரு கிராம பஞ்சாயத்தில் 50 சதவிகித பெண்கள் அப்பகுதியிலுள்ள ஒரு மதுக்கடையை மூடவேண்டுமென்று தீர்மானம் இயற்றினால், அது மாவட்ட ஆட்சியரைக் கட்டுப்படுத்தும்" என மகாராஷ்டிர அரசு, உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலை இங்கும் வரலாம். அப்போது பெண்கள் பொறுப்புகளில் இருந்தால்தானே அது சாத்தியமாகும்? பெண்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதில் ஆண்களும் ஆர்வம்காட்டவேண்டும். பெண்கள் அதிகாரம் பெறுவது என்பது ஆண்களுக்கும் நன்மையளிப்பதாகவே இருக்கும்.
- ப. திருமலை, பத்திரிகையாளர், மதுரை

84281 15522

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X