ஆசிரியப்பணி எனும் அறப்பணி - இன்று(அக்.5)- உலக ஆசிரியர் தினம்| Dinamalar

ஆசிரியப்பணி எனும் அறப்பணி - இன்று(அக்.5)- உலக ஆசிரியர் தினம்

Added : அக் 04, 2016 | கருத்துகள் (3)
Advertisement
ஆசிரியப்பணி எனும் அறப்பணி - இன்று(அக்.5)- உலக ஆசிரியர் தினம்

'வெள்ளத்தால் அழியாது வெந் தழலால்வேகாது வேந்த ராலுங்கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்நிறைவன்றிக் குறைவு றாதுகள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கோமிக எளிது கல்வி யென்னும்உள்ளத்தே பொருளிருக்கப் புறம்பாகப்பொருள்தேடி யுழல்கின் றாரே'
கல்வியின் சிறப்பைப் பற்றிக் கூறக்கூடிய மிகச்சிறந்த பாடல் இதைத்தவிர வேறு இருக்க முடியாது. இத்தகைய சிறப்புமிக்க கல்வியை நமக்குக் கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள்.தன் மாணவனை ஒரு மருத்துவன் , பொறியாளன், உழவன் , வழக்கறிஞன் ஆட்சியாளன் என மாற்றக்கூடிய வல்லமையும் , ஆற்றலும் ஆசிரியர்களிடம் உண்டு. ஆசிரியப் பணி என்பது மிகச் சவாலாகக் கருதப்படும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பயந்த காலம் மறைந்து, இன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயப்படும் காலமாக மாறிக் கொண்டு வருகிறது. மாணவர்களின் நலனுக்காகச் சில நேரங்களில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் போது, அதனைப் புரிந்து கொள்ளாத மாணவர்கள் விபரீத செயல்களில் ஈடுபடுவதும், பெற்றோர்கள் மாணவரைக் கண்டித்து நல்வழிப்படுத்தாமல் ஆசிரியர் மீது கோபம் கொண்டு நடவடிக்கை எடுக்கச் செய்வதும் மாணவர் மேல் நலனுள்ள பல ஆசிரியர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.ஆசிரியரின் ஒவ்வொரு கண்டிப்பும் தன்னுடைய வளர்ச்சிக்காக என்பதை மாணவர் புரிந்து கொள்ளும் பக்குவத்தை வளர்ப்பது நம் அனைவரின் கடமையாகும்.வகுப்பறையில் ஓர் ஆசிரியர் , "நான் அடுத்த மாதம் ஓய்வு பெறப் போகிறேன் " இது இறந்த காலமா? நிகழ்காலமா? எதிர் காலமா? என வினவ, ஒரு மாணவன் எங்களுக்கு விடிவு காலம் சார் எனக்கூறுகிறான்.
ஆசிரியர்களுக்கு மரியாதை : சில ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர்களை மரியாதையாகவும் , முன்மாதிரியாகவும் பார்த்த சமுதாயத்தின் பார்வை இன்று மாறிவிட்டதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். பல கிராமங்களில் ஆசிரியர்கள் பல்வேறு குடும்ப மற்றும் ஊர்ப்பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் நீதிபதி பணியினைச் செய்ததை நினைக்கும் போது, ஆசிரியர்கள் மீது சமுதாயம் வைத்திருந்த நன்மதிப்பை நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.ஆசிரியர்கள் மீதான தற்காலப் பார்வை என்பது முற்றிலும் இதற்கு மாறுபட்டு உள்ளது. வேறு தொழில் செய்யும் ஆசிரியர், வட்டிக்கு விடும் ஆசிரியர் என சேவை மனப்பான்மையற்ற ஒரு சில ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆங்காங்கே ஒரு சில கறுப்பு ஆடுகள் : தவறாக நடக்கும் போது, அது ஒட்டு மொத்த ஆசிரியர்களின் மீது எதிர்ப்பினை ஏற்படுத்தி விடுகிறது.சீர்மிகு ஆசிரியருக்கான தகுதிகள் ஆசிரியர்கள் கீழ்க்காணும் பண்புகளைப் பெற்றிருப்பதன் மூலம் இழந்த மரியாதையையும், மாண்பினையும் நாம் மீட்க முடியும்.ஒவ்வொரு நாளும் மகிழ்வுடனும், ஆர்வத்துடனும், புன்னகை பூத்த முகத்துடனும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். பள்ளியையும், மாணவனையும் நேசிக்கும் நல்லாசிரியர் பள்ளிக்குச் சென்ற உடனே தன்நோய் நீங்கி நலம் பெற்றதை உணர்வார். மாணவரை நேசிப்பவராக மட்டுமல்லாமல் , மாணவராலும் நேசிக்கப் படுபவராகவும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை மட்டுமே கூறாமல் , புதுப்புதுத் தகவல்களை , செய்திகளைப் புன்னகையுடன் கூற வேண்டும். குறைவாகப் பேசி நிறையக் கற்கச் செய்பவரே சிறந்த ஆசிரியர். வகுப்பறையில் நான் எனும் ஆணவத்துடன் தான் மட்டுமே பேசாமல், மாணவரையும் பேச வைக்கும் மாணிக்கமாகத் திகழ வேண்டும். ஆசிரியரின் திறன் என்பது மாணவருக்குக் கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே ஆகும். புயல் வேகத்தில் கற்பிக்காமல் , செயல்வழியே புரியும்படி செய்து காட்ட வேண்டும். பகைவரையும் கவரக்கூடிய வகையில் நகைச்சுவையாகப் பேச வேண்டும். காலத்திற்கேற்ற கண்ணியமான உடை அணிபவராக இருக்க வேண்டும். இதில் ஆண் ஆசிரியர்களை விட பெண்ணாசிரியர்கள் பெரும்பாலோரால் கவனிக்கப் படுவதால், அவர்கள் ஆடை விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவர்கள் மீது மதிப்பை அதிகரிக்கச் செய்யும்.
கற்பித்தல் முறை : பாடக்கருத்துகளுடன் பொது அறிவுத் தகவல்கள் , நடப்பு நிகழ்வுகள் , பழங்கால நிகழ்வுகளையும் எடுத்துக் கூற வேண்டும். பாடப்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட பாடத் திறன்களை மாணவர்பெறும் வண்ணம் கற்றுக் கொடுக்க வேண்டும். நோய்க்கு ஏற்ற வைத்தியத்தைப் போல, மாணவரின் தகுதிக்கேற்றவாறு கற்பித்தல் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். காலம் பொன் போன்றது என்பதை மாணவருக்கு உணர்த்தும் வண்ணம் காலந்தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு நாம் எஜமானர் என எண்ணாமல் , நமக்கு ஊதியம் அளிக்கும் எசமானர் மாணவர்தாம் என்று உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். நோயுற்ற மாணவரிடம் உடல் நலம் குறித்து அக்கறையுடன் விசாரிக்க வேண்டும். மாணவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும். மாணவர்களிடம் அலைபேசி எண்ணைப் பகிர்ந்து,எந்நேரமும் நம்மைத் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையினை ஏற்படுத்தும் போது நல்லிணக்கம் உருவாகும்.
பள்ளியென்னும் பல்கலைக் கழகம் : சிறந்ததொரு பள்ளி என்பது மாணவனுக்குப் பாடத் திறன்களை மட்டும் கற்றுக் கொடுக்காமல், பல் திறன்களையும் கற்றுக் கொடுக்கும் பல்கலைக்கழகமாகத் திகழ வேண்டும். இக்காலச் சூழலில் கல்விக்கும் அறிவிற்குமான இடைவெளி அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது. மின்சாரவியலில் பட்டம் பெற்ற மாணவரால் தனது வீட்டில் உள்ள மின் இணைப்பில் ஏற்படும் சிறு பழுதினைச் சரிசெய்ய இயலாத நிலைமையினையும், இயந்திரவியல் முடித்த மாணவன் தனது. வாகனத்தில் உள்ள பழுதிற்கான காரணத்தைக் கூட அறிய இயலாத நிலையினைப் பார்க்கும் போது, மாணவர்கள் பணியிடத்தில்தான் தங்கள் செய்முறைத் திறன்களை வளர்த்துக் கொள்கின்றனரோ என்ற ஐயம் எழுகிறது. ஆகவே மாணவர்கள் வெறும் ஏட்டுக் கல்வியினை மட்டும் கற்றுக் கொள்ளாமல், வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.
முன்மாதிரியாகத் திகழுங்கள் : சாலையில் நடந்து செல்லும் விதத்தையும், வாகனம் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய சாலை பாதுகாப்புப் பற்றியும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும். புவி வெப்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்களின் அவசியம் பற்றி எடுத்துரைக்க வேண்டும். குழந்தைகள், பெண்கள், பெரியோர்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். காலணி அணிவதன் அவசியம், கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் பற்றி விளக்க வேண்டும். அவை தொடர்பான குறும்படங்கள், நாடகங்களைப் பார்க்கச் செய்ய வேண்டும். நீரின் அவசியத்தையும், சிக்கனத்தையும் , விவசாயத்தையும், விவசாயிகளையும் மதிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் ஆசிரியர்தான் செய்ய வேண்டுமா என வெறுப்பாக வேண்டாம். ஆசிரியர்களால் மட்டுமே இச்செயல்களைப் பொறுப்பாக செய்ய முடியும் என சமுதாயம் நம்மை நம்புவது நம் திறமைக்கான சான்று. கற்றது கடுகளவு என்பதை உணர்ந்து ஆசிரியர் என்பவர் எப்பொழுதும் கற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும். அறிவைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். தொழில் நுட்பப் பயன்பாட்டினை அறிந்து , அவற்றைக் கற்பித்தலுக்குப் பயன்படுத்த வேண்டும்.மாற்றவும் ஏற்றவும் ஆசிரியர்களால் முடியும்.நாளைய உலகு மாணவர்களால் விடியும்!நம் பாரத நாட்டை வல்லரசாகவும், நல்லரசாகவும் மாற்றுவோம் !
--பெ.த.மோசஸ் மங்களராஜ்ஆசிரியர்,மதுரை -

98434 42090

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X