சமுதாயத்தில் சமூக வலைதளங்கள்!| Dinamalar

சமுதாயத்தில் சமூக வலைதளங்கள்!

Added : அக் 07, 2016 | கருத்துகள் (3)
Advertisement
சமுதாயத்தில் சமூக வலைதளங்கள்!

இன்று ஒரு 'கிளிக்'கில் பல்லாயிரம் கி.மீ., தொலைவில் வாழ்பவரை பார்க்க சாத்தியமாக்கி, மனங்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது இணையம்.
இது மக்களுக்காக புழக்கத்தில் வந்தது 1990களில் தான். 2004ல் கண்டுபிடிக்கப்பட்ட பேஸ்புக், 2006 ல் 'டுவிட்டர்', பின்னர் வந்த அலைபேசி வழி 'வாட்ஸ்ஆப்' என அனைத்துமே அசுரவளர்ச்சிப் பெற்றது சமீப ஆண்டுகளில் தான்! எந்தஒரு தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டாலும், உடனே நம் நாட்டில் பொருளாதாரத்தால் சற்று தாமதித்தே உள் நுழையும். ஆனால், இந்த தகவல் தொழில்நுட்பமும், அலைபேசிகளும் பல விஷயங்களுக்கு தீனியாக, பன்னாட்டு நிறுவனங்களின் முக்கிய வியாபார தலமாக மாறிப்போனது. விளக்கெரியும் குடிசையிலும் '20 ரூபாய் நெட்கார்டு தாங்கண்ணே' என்று வாங்கிப்போய், அதில் மாய உலகில் கனாக்காணும் அளவிற்கு வளர்ந்துள்ளது இன்றைய தொழில்நுட்பம். 'ஆடி'க்கார் அருகில் நின்றும், 'ஓசி' பைக்கில் கால் வைத்தப்படியே போட்டோ போட்டும் மாயத்தோற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கும் வித்திட்டது இந்த வலைதளங்கள். லிபியாவில், எகிப்தில் ஏற்பட்ட புரட்சியுடன், இன்று லெபனாலிலும், ஜோர்டா னிலும் புரட்சி தீ கொழுந்து விட்டு எரியவும் காரணம் 'சோஷியல் மீடியாக்கள்' எனும் சமூக வலைதளங்கள்.
அவசியம் தானா வலைதளங்கள் : 2015 டிசம்பரில் வரலாறு காணாத வெள்ள அழிவை சென்னை எதிர்கொண்டது. எங்கே முளைத்தன இத்தனைக் கைகள்? இந்த இளைஞர் கூட்டத்தைக் கண்டு உலகமே மிரண்டுதான் போனது. மிரட்சியுடன் இன்று வரை பேசிதான் மாய்ந்துப்போகிறது.புரட்சியை பரப்பி அதனால் அதிபரை கவிழ்த்த நாடுகளுக்கு மத்தியில், உயிரைக்காப்பாற்ற அணி திரண்ட இளைஞர் சக்தியின் மூலக்காரணம் 'பேஸ்புக்' 'டுவிட்டர்', 'வாட்ஆப்' எனும் சமூக வலைதளங்கள்தான் என்பதும் அவைக் கண்டுபிடிக்கப்பட்டதற்கான நற்கதியைப் பெற்றன.டுவிட்டரில் நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை நாடலாம் என்ற நிலையும், சமீபத்தில் வெளிநாட்டில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் சவுதியிலிருந்தும், லிபியாவிலிருந்தும் காப்பாற்றப்பட்டார்களே. உயிருக்குப் போராடிய சவுதி அரேபிய பணிப்பெண்ணின் நிலையை, வெளிச்சம் போட்டுக்காட்டியதுடன், அவரை நல்லபடியாக தாய்நாடுதிரும்பவும் வைத்ததே.இன்றைக்கும் வெளி நாட்டில் சிக்கியுள்ள பலரது உண்மை நிலையை வெட்டவெளிச்சமாக்கி, பலரை தூதரக அதிகாரிகளின் துணையுடன் மீட்கவும் உதவி வருவது மறுக்கமுடியாத உண்மையாயிற்றே!
வரமா சாபமா : தினம் ஒரு வழக்காக 'சைபர் கிரைமில்' பதிய வைக்கப்பட்டும், அறிமுகமில்லாதவர்களுடன் பழக வேண்டாம் என காவல்துறையினரின் 'அட்வைஸ்'களும் பழகிப்போன, காக்கா-- பாட்டி வடை கதையாகிப் போனது. எதைப்பகிரலாம்? எதை பகிர்ந்தால் சமூகத்திற்கு ஆபத்து? என்பதை மறந்துப்போனோம். மறக்காமல் கிடைத்ததை, பகிர பழகிப்போனோம்!பொது வெளியில் பைக்கில் பயணிக்கும் பெண்களையும், கையை உயர்த்திப் பிடித்து பஸ்சில் பயணித்து அன்றாடம் வேலைக்கு செல்லும் பெண்களின் உருவத்தையும், புகைப்படம் எடுத்து அதை பதிவேற்றி, அதன் கீழே மன வக்கிரங்களைக் கொட்டி ரசிக்கும் கூட்டத்தையும் அடையாளம் காட்டியதும் இதே தளங்கள் தான்.
பெண்களுக்கு பாதிப்பு : உன்கூட அக்கா தங்கச்சி பொறக்கலையா? உன்னைப் பெத்தவளும்ஒரு தாய் தானே என்றெல்லாம் இவர்களிடம் கேட்க முடியாது. ஏனெனில் தாய், சித்தி, அக்கா, ஆண்டி என யாரையும் இந்த சமூக சீரழிவுகள் விட்டுவைப்பதில்லை. 'என்னை நம்புங்கம்மா' என்று எழுதிவைத்து உயிர்விட்ட சேலம் விஷ்ணுப்ரியா பாதிக்கப்பட்டதும், இதே சமூக வலைதளத்தில் தான். செய்யும் தீவிரவாதத்தையும், அலைபேசியில் படம்பிடித்து, அதை சாட்டிலைட் சேனல்களுக்கு அனுப்பி வளர்ந்த, உலக தீவிரவாதங்களுக்கு சற்றும் சளைத்ததில்லை, இங்கு நடந்த சில சம்பவங்கள். 'வதந்தீயின்' நாக்குகள் காட்டுத்தீயைவிட அதிக சேதங்களை உருவாக்கிக் கொளுத்தக்கூடியது.
நாலு வயது குழந்தைக்கு ஊற்றிக்கொடுத்ததோ, காதல் தோல்வி என ஒரு பள்ளி மாணவி டாஸ்மாக் போனதோ, நம் வீட்டுபிள்ளைகளுக்கு இப்படி ஆனால் செய்வோமா என்ற அடிப்படை சிந்தனையை அகற்றிப் பார்த்து, வீடியோவாக்கி பகிரவைத்தது எது?இதற்காகவா தொழிற் நுட்பம் என அதிர அல்லவா வைத்தது.
பரவும் பொய்கள் : பலரையும் இறந்ததாகசெய்தி வெளியிட்டு அவர்களே, நான் நல்லாத்தானே இருக்கேன் என அறிக்கைவிடும்படி, பரபரப்பை ஏற்படுத்தி பொய்யான செய்தியை வெளியிடுவதும் யாரோ ஒருவர் அல்ல. நம்மிடையே உள்ள ஒரு படித்தவர் தான். திரைப்படம் பார்க்காமலே, அதை தவறாக விமர்சித்து, எப்படியாவது பரபரப்பை ஏற்படுத்தவேண்டும், உலகமே நம்மை உற்றுப்பார்க்கவேண்டுமென செயல்படுபவர்கள் அறிவார்களா, இதனால் பாதிக்கப்படுபவர்களின் மன நிலையை இந்தமன பிறழ்வு, இத்தளங்கள் வரமா என்றே கேள்விக்குறி முடிச்சுகளை சிந்தனையில் சிக்கலாக்கி விடுகின்றன.கூரான கத்தி சமையலறையிலும், மருத்துவத்தில் பல உயிர்களைக் காப்பாற்றும் உயிர்சக்தி. ஆனால் அதே கத்தி உயிர் பறிக்கும் ஆயுதமாகவும் மாறிப்போகிறது.எதுநடந்தாலும் சரி நான் நினைத்ததை பொதுவில் வைப்பேன் என்ற சுய நலமா? பரபரப்பை உண்டாக்கி, திரும்பிப் பார்க்க வைத்து அதன்மூலம் புகழடைய நினைக்கும் அல்ப மனோபாவமா அல்லது தன் மன வக்கிரங்களை மற்றவர் மனதிற்கும் ஏற்றுமதி செய்யும் உயர்குணமா?
சிந்திப்பது நல்லது : பெண்கள் பொது வெளியில் வந்தால் தானேகருத்துக்கள் வெளியாகி சமதர்மம் தழைக்க முடியும். ஆனால் யாரிடம், எங்கு எப்படி நம் கருத்துக்களை வெளிப்படுத்துகிறோம் என்ற அடிப்படையான நாசுக்கான அறிவுடன் வெளிவரவேண்டும்.தன்னைத்தானே காத்துக் கொள்ளும் முறைகளை தெரிந்து வரவேண்டும். ஆசை வார்த்தைகளும் போலிப் புகைப்படங்களும் ஆட்களை திரித்துக் காட்டலாம். ஆனால் ஏமாறாமல் கடந்துச் செல்ல தெரியவேண்டிய அவசியம் பெண் சக்திக்கு வேண்டும்.சாதிக்கப் பிறந்தவர்கள் சோதித்தலுக்கு ஆட்படக்கூடாது! அநாவசிய துாண்டுதலுக்கும் இனவெறி, மொழி வெறி, ஜாதி வெறி முதலிய முதலைகளுக்கு இரையாகாமல் இருப்பது அவசியம்.இன்றைய நவீன உலகில் துளி நிமிடத்தில் மக்களை இணைக்கும் சமூக வலைதளங்கள் எத்தனை வரம். அதனை நாமே சாபமாக்கிக்கொள்ளலாமா. எதையுமே பகிர்வதற்கு முன் சற்று சிந்திப்போம். இனிநற்சிந்தனை எனும் விதைகளை நட்டால் கனிகளை உண்ணலாம். விஷ விதைகளை துாவி வைத்தால், விஷத்தையே நம் அடுத்த தலைமுறைக்கும் விட்டுசெல்கிறோம். விஷமா, அமிர்தமா நம் கையில்?
- சுமிதா ரமேஷ்வானொலி அறிவிப்பாளர் துபாய்.

ramesh.sumitha@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X